2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மக்களுக்கு புரியாத ‘மாபியா’ அரசியல்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விரான்ஸ்கி

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ் பிரதேசங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.   

பரவுகின்ற கொரோனா வைரஸிலும் பார்க்க, படுவேகமாகத் தங்களின் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்று, கட்சிப் பிரமுகர்கள் மின்னல் வேகத்தில் செயற்பட்ட வண்ணம் உள்ளனர்.  

முக்கியமாக, இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக, தமிழ்க் கூட்டமைப்பின் மாற்றுச் சக்தியாகத் தங்களை முன்நிறுத்தியுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர், எப்படியாவது மக்களின் மனங்களில் புதிய விதைகளைத் தூவி, கூட்டமைப்பினருக்கான விசுவாச மரங்களை அடியோடு தோண்டியெறிந்துவிட வேண்டும் என்று படாதபாடுபடுகிறார்கள்.  

முக்கியமாக, விக்கி அணியின் முன்னணி பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியின் சுரேஷ் பிரேமசந்திரன், ஊர் ஊராகச்சென்று அரசியல் சங்கெடுத்து ஊதுகின்ற வேலையை, வெகு சிரத்தையோடு செய்துவருகிறார்.  

இதேவளை, ஏனைய கட்சிகளும்கூட, தங்கள் பங்குக்கு ஒவ்வொரு வடிவங்களில் தங்களது அரசியல் வேலைகளை மக்கள் மத்தியில் கொண்டோடுகிறார்கள்.  

இன்று, இந்தப் பத்தி அலசப்போவது, இந்த நாடாளுமன்ற அரசியலின் பின்னணியில் இருக்கின்ற முற்றிலும் வேறுபட்டதொரு பகுதியாகும்.  

அதாவது, தமிழர் அரசியல் எனப்படுவது, குறிப்பாக நாடாளுமன்ற அரசியல் எனப்படுவது, எல்லோரும் வெளியில் இருந்து பார்ப்பதைப்போலத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா?   

இதன் பின்னணியில், சூட்சுமமான பாதையில், சிக்கல் நிறைந்த வேற்றுக் கணியங்களோடு, அது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதா?  

இன்னொரு வடிவத்தில், இந்தக்கேள்விகளைக் கேட்பதால், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, பல நாடாளுமன்றத் தேர்தல்கள் வருகின்றபோதும், முன்னைய தேர்தல்களில் வெளிப்படையாகக் கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றாமலும்கூட, ஒரே அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் எவ்வாறு வெற்றிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது?  

இவர்களைவிடப் பொருத்தமான, தகுதியான, மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய, அரசியல்வாதிகள் வேறு யாரும் சமூகத்தில் இல்லையா?   

இவர்களுக்குத் திரும்பத் திரும்ப வாய்ப்புகளைக் கொடுத்தால், எப்படியாவது அந்த விடிவைப் பெற்றுக்கொடுக்கக் கூடியவர்களாக இவர்கள் சளைக்காத போராளிகளாகக் காணப்படுகிறார்களா?  
அதுதான் இல்லை.  

இங்கு பேசப்படப்போகின்ற விடயங்கள், காணமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்திலும் காணிமீட்புப் போராட்டத்திலும் நின்று தொண்டை வற்றக்கத்துகின்ற எவருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.  

இங்கு பேசப்படப்போகின்ற விடயங்கள், ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று கண்கள் சிவக்க இன்னமும் அடிக்குரலெடுத்துக் கூவுகின்றவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

ஏன், இங்கு பேசப்படப்போகின்ற விடயங்கள், முறையான அரசியலை முன்னெடுக்கின்ற சில தூய அரசியல்வாதிகளுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

தமிழ் அரசியல் தரப்பின் முக்கால்வாசிப்பேர் இப்போதெல்லாம், கிட்டத்தட்ட ‘மாபியா’ வர்த்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன் நகர்த்துகின்ற மிகப் பாரதூரமானவர்களாக ‘வளர்ச்சி’ அடைந்து விட்டார்கள்.  

இந்த ‘மாபியா’ வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கு, அவர்கள் பல்வேறு சூட்சுமங்களோடு களத்தில் தங்கள் காய்களை நகர்த்திக் கொண்டிக்கிறார்கள்.  

இந்த அரசியல் தரப்போடு நெருக்கமாகச் சேர்ந்தியங்குபவர்களுக்கும், குறிப்பிட்ட அரசியல் தரப்புக்குத் தொடர்ந்தும் நாடாளுமன்ற வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதும்தான், அவர்களுக்குக் கீழ் நின்று பெருந்தொகையான சலுகைகளையும் வாழ்வாதாரங்களையும் பெற்றுக்கொள்பவர்களுக்கான ஒரே தேவையாகவும் வழியாகவும் உள்ளது.  

இந்தமுறையானது ஓரளவுக்கு பாரம்பரியமான, அரசியல், அடிமைத்தனம் என்றாலும்கூட, இப்போது தமிழர் தரப்பில் இது மிக நவீனமுறையில் கூர்மையடைந்து வருகிறது.  

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் எப்படியெல்லாம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?   

எதிர்காலங்களில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் எவ்வாறான ‘ஆரோக்கியமான முதலீடுகளாக’ பயன்படுத்தப்படப் போகின்றன என்பதையும் மெல்லிதாக அறிந்துவைத்துக் கொள்வது முக்கியமானது. 

எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்காக, அடிமைகளாக, வேலைசெய்து தேர்தல் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துசென்று, ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கிணங்க, அங்கேயே விட்டுவிட்டு வருகிறார்கள் என்று பாமர மக்கள் யாருக்காவது தெரியுமா?  

இவ்வாறு, அடிக்கடி அழைத்துச்சென்று திரும்பவும் அழைத்து வரப்படுபவர்கள், ஒரு கட்டத்தில் தனியாகவே வெளிநாடுகளுக்கு சென்று, தஞ்சமடைவதற்குரிய பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று எந்தப் பாமர வாக்காளனுக்காவது தெரியுமா?  

இந்த மாதிரியான, உள்நாட்டில் வசிக்க முடியாதவர்களை, தேர்தல்க் கால அடிமைகளாகப் பயன்படுத்தும் கெட்டித்தனமான செயற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க, உள்நாட்டிலேயே வசிக்க முடியும் என்ற வலுவோடுள்ள ஏனையவர்கள், வேறு வகைகளில் தேர்தல்கால ஏவல்நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள்.  

உதாரணத்துக்கு, தமிழர் தரப்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமக்கான முழு ஆதரவையும் அள்ளி வழங்குபவர்கள் பலருக்கு வரப்போகும் மாகாண சபைத்தேர்தலுக்கான ஆசன வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளது.  

அவ்வாறு தவறினால், பிரதேச சபையில் முக்கிய இடங்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.  

அதுவும் தவறினால், அவரவர் பணிபுரிகின்ற அரச உத்தியோகங்களில் இருப்புகள் உறுதிசெய்யப்படும். அல்லது, உயர்பதவிகளுக்கான பாதைகள் ‘கிளியர்’ செய்துகொடுக்கப்படும் என்று சத்தியம் செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது.  

இவ்வாறு உறுதிசெய்து கொடுக்கப்பட்டிருப்பவர்கள் அநேகமானவர்கள் அரச உத்தியோகத்தர்கள். இவையெல்லாமே, கிள்ளியெடுத்த சில உதாரணங்கள் மட்டுமே ஆகும்.  

இதைத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள் என்று, கடந்த காலங்களில் தமிழ்த்தரப்பு மிகக்கேவலமாக விமர்சித்து வந்தது. ஆனால், இப்போது, அதைவிடக் கேவலமான வழிமுறைகளில், தமிழர் தரப்பு இறங்கி இருக்கிறது.  

இவ்வாறானதொரு பாதையில்தான், இன்றைய நாடாளுமன்ற அரசியலானது ஒரு ‘மாபியா வர்த்தகமாக’ மக்கள் மத்தியில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.  

இது சலுகை அரசியல் என்பதற்கு ஒருபடி மேலே சென்று, ஆட்களை விலைக்கு வாங்குவதற்கு, ஜனநாயக நிறுவனத்தைப் பயன்படுத்துகின்ற படுபோக்கிரித் தனமான செயற்பாடு ஆகும்.  

இதற்காகத்தான், ‘மூத்த அரசியல்வாதிகள்’ எனப்படுபவர்களையும் தொடர்ந்தும் இந்த ‘மாபியா வர்த்தகத்தை வெற்றிகரமாகச் செய்துகொண்டு வருபவர்களையும்’ இந்த வர்த்தகத்தில் ‘தவறிழைக்காத அனுபவம் வாய்ந்தவர்களையும்’ அவர்களைச் சார்ந்தவர்கள் தெரிவுசெய்கிறார்கள்.   

இந்த வர்த்தகம் தொடர்ந்தால்தான், தங்களுக்கு கிடைப்பது கிடைக்கும் என்ற அங்கலாய்ப்போடு அவர்களிடம் மீண்டும் மீண்டும் போய் விழுகின்றார்கள்.  

இப்படியானதோர் அரசியல் வியாபாரம் காதும் காதும் வைத்தாற்போல, நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எவ்வாறு புதிய அரசியல் தலைவர்களை உருவாக்குவது, தூய தலைவர்களை உற்பத்திசெய்வது, என்ற கனவெல்லாம் தமிழர் மண்ணில் நிறைவேறும்?  

புதிய அரசியல் சிந்தனைகளைச் சமூகத்தில் கொண்டுவரவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எவ்வாறு கைகூடும்?  

போன வாரம் இந்தப் பத்தியில் குறிப்பிட்டதைப்போல, பத்து வருடங்களுக்கு மேல், ஒரு சமூகம் தீராக் கனவுகளோடு எரிந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு விடைகாண்பதற்கு வருபவர்கள் புதிய சிந்தனை உடைவர்களாக இருக்கவேண்டும்; புதிய விடைகளோடு களமாட வருபவர்களாக இருக்கவேண்டும்; புதிய போராட்ட உத்திகளோடு முன்வருபவர்களாக இருக்கவேண்டும்.  

தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம், ஆயுத வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே, அதன் மீது அப்போது முன்வைக்கப்பட்ட விமர்சனமும் இப்போது முன்வைக்கப்படுகின்ற விமர்சனமும் இதுவாகத்தான் உள்ளது.   

ஒரே தலைமையுடன் ஒரே சிந்தனையோடு ஒரு பொதுநோக்கத்துக்காக போராடுபவர்களுக்கென்று ஒரு காலக்கெடு உள்ளது. அதற்குப் பிறகு, போராட்ட வடிவங்கள் மாத்திரமல்ல, போராளிகளும் புதியவர்களாகவே எதிர்பார்க்கப்படுகிறார்கள்.  

ஆனால், தமிழர் அரசியல் மாத்திரம் போருக்கு பின்னர், இன்று பத்து ஆண்டுகள் முடிந்த பின்னரும், அதே பழைய வேட்டிகளுக்கு பின்னால் சென்று மறைந்து கொள்வதற்கு, ஒரு ‘மாபியா’ வர்த்தகத்தைத் தேவையாக வைத்துக்கொண்டு நகர்கிறது.  

இது ஒரு சமூகத்துக்கான புற்றுநோய். ஒருபோதும் முன்னோக்கி நகரவிடாமல் ஒரே சேற்றுக்குள் சுழன்று கொண்டிருப்பதற்கு மக்களே மக்களுக்குப் போட்டிருக்கின்ற மிகப்பெரிய சுழல்தடம். தாங்களே தங்களைக் கூவிக்கூவி விற்கின்ற மிகப்பாரதூரமானதொரு செயன்முறை. 

சலுகை அரசியலிலும் பார்க்கக் கொடூரமானதொரு தீயாகக் கொழுந்துவிட்டு சமூகத்தை எரித்துக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளை, பாமர மக்கள் மாத்திரமல்லாது படித்தவர்களும் விரும்பி ஏற்றுக்கொள்வது, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செருகிவிடுகின்ற கொள்ளிகளாகும்.  

முப்பதாண்டு ஆயுதப் போராட்டமானது, அது முடிந்த பத்து ஆண்டுகளுக்கு எவ்வாறு தன் சூடு தணியாத தேசிய வெப்பத்தை மக்களுக்குள் வைத்திருந்ததோ, அதற்கு எதிர்மாறானதொரு செயலையே இந்த விலைபோகின்ற அரசியல் செய்துமுடிக்கும்.   

தமிழருக்கென்றோர் அரசியல் துணிபினை இல்லாமல் செய்து, இன்னும் பத்து வருடங்களுக்குள் முற்றுமுழுதாகவே ஒரு சூனியத்துக்குள் தள்ளிவிடுகின்ற செயன்முறையாக இது நடந்து முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .