2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மோடியின் ‘தேசிய ஜனநாயக கூட்டணி மொடலுக்கு’ அச்சுறுத்தலா?

எம். காசிநாதன்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் 288 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மஹாராஷ்டிரா மாநிலத்தில், புதிய கூட்டணி ஆட்சி உருவாக இருக்கிறது. “புதிய கூட்டணி மட்டுமல்ல” வித்தியாசமானதொரு கூட்டணியாக இது உருவெடுக்கும் என்று தெரிகிறது.

“அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை” என்ற இலக்கணத்தை, “நிரந்தரப் பகைவர்களாக” இருந்த கட்சிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ள முன்வந்திருப்பது, இந்திய அரசியலில் புதிய பரிணாம வளர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

மஹாராஷ்டிராவைப் பொறுத்தமட்டில் “தீவிர இந்துத்வா” “தீவிர மராத்தா” முகத்துடன், சிவசேனா கட்சியை மறைந்த பால்தாக்ரே வளர்த்தார். “இந்துத்துவா” என்ற அடையாளத்தை, மஹாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை சிவசேனாவின் தயவின்றி பெறமுடியாது என, பா.ஜ.க.வே நினைக்கும் நிலை ஏற்பட்டது. அதனால்தான், தொடர்ந்து சிவசேனாவின் “எதிர்த் தாக்குதல்களை” எல்லாம் மீறி, பா.ஜ.க அக்கட்சியுடன் ஆட்சியிலும் தேர்தலிலும் பங்கெடுத்து வந்தது.  

“இந்துத்துவா” என்றால், அது மஹாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை “பா.ஜ.க - சிவசேனா” கூட்டணி என்றும் “மதச் சார்பின்மை” என்றால்: அது “காங்கிரஸ் - தேசியவாத கூட்டணி” என்றும், அம்மாநில வாக்காளர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதன் தேர்தல் இலாபத்தை, இரு கட்சிகளுமே - குறிப்பாக பா.ஜ.க.வும் சிவசேனாவும் தொடர்ந்து அறுவடை செய்து வந்தன.

அதிலும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, சிவசேனா கட்சிக்கு மிகப்பெரிய சொத்தாகவும் சிவசேனாவின் இமேஜ், பா.ஜ.கவுக்கு பெரிய சொத்தாகவும் மாறி மாறி இருந்து வந்தது. இந்த நிலை, தற்போது மாறுகிறது. “முதலமைச்சர் பதவி தர மறுத்த பா.ஜ.க.வுடன் இனி உறவில்லை” என்ற நிலைப்பாட்டுககு,  சிவசேனா வந்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு, குறுகியகால அவகாசத்தை ஆட்சி அமைக்க கொடுத்து, அவர்களால் முடியாது என்பதை நிலைநாட்டி, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, மஹாராஷ்டிர மாநில ஆளுநர் பரிந்துரை செய்துவிட்டார். அந்தப் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சியும் மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டு விட்டது.  

இதன் பின்னனியில், காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி, விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறது. பேச்சுவார்த்தையில், “சிவசேனா இந்துத்துவா முகத்தைக் காட்டக் கூடாது” என்பதே முதல் நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது என்றாலும், முதலமைச்சர் பதவியை சிவசேனாவே வைத்துக்கொள்ளலாம் என்று, காங்கிரஸும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியும் விட்டுக்கொடுக்க முன்வந்துவிட்டன.

“முதலமைச்சர் பதவி” என்பதை முன்னிறுத்தி, பா.ஜ.க.வுடன் தனது பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்ட சிவசேனா, இது விடயத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு பஞ்சாயத்து செய்வார் என்றும் நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை, இனிமேல் அர்த்தமில்லை என்று புரிந்துகொண்டுள்ள சிவசேனா, சோனியாவின் உதவியை நாடியிருக்கிறது.  

ஆனால், நேரடியாக சோனியாவை அணுகாமல், மஹாராஷ்டிரா பெருந்தலைவர்களில் ஒருவரான சரத்பவார் மூலம் அணுகி, ஏறக்குறைய “டீல்” முடிந்து விட்டது என்றே கூறமுடியும். சரத்பவார், அரசியல் இராஜதந்திரி. அவர் பார்க்காத அரசியல் வியூகங்கள் இல்லை என்று கருதும் அளவுக்கு அனுபவமிக்கவர். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, எதிரும் புதிருமாக இருக்கும் மூன்று கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்திருக்கிறார். இதை “மஹாராஷ்டிராவுக்கான கூட்டணி” என்றே பெயர் சூட்டப் போகிறார்கள். இது, இந்திய அரசியலில் பா.ஜ.க தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாதையில், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.  

“சோனியா இந்துத்துவாவுக்கு விரோதி” என்பதுதான் பா.ஜ.க மற்றும் சிவசேனா போன்ற கட்சிகளின் இதுவரையிலான பிரசாரமாக இருந்தது. ஆனால், தீவிர இந்துத்துவா பேசும் கட்சியான சிவசேனாவுக்கு காங்கிரஸ் கொடுக்கும் ஆதரவு, அந்தப் பிரசாரத்தை மழுங்கடிக்கும் சக்தியாக இருக்கும். “காங்கிரஸ் கட்சிக்கு நாட்டுப்பற்று இல்லை”, “பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேசுகிறது”, “இந்துத்துவாவுக்கு காங்கிரஸ் எதிரானது” போன்ற பா.ஜ.க பிரசாரங்களின் தாக்கம், அகில இந்தியளவில் மாறும் நிலை உருவாகும். இது, சோனியா காந்திக்கு மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகளால் கிடைத்த வெற்றி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல், மஹாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தில், காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் இணைந்து ஆதரவு கொடுப்பதன் மூலம், முதன் முதலில் சிவசேனாவின் ஆட்சி மஹாராஷ்டிரத்தில் உருவாகக் காரணமாக அமையும். அது, அம்மாநிலத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் வலுவுள்ளதாக இருக்கும். “ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது” என்பதற்கு உதாரணமாக வெளியே வந்திருக்கும் சிவசேனா, தனது ஆட்சியின் மூலம், மஹாராஷ்டிராவில் “இந்துத்துவாவின்” முகம் சிவசேனாதான் என்பதை நிலைநிறுத்த முயற்சிக்கும். அதற்கான முழு முயற்சியில், சிவசேனாவின் சார்பில் முதலமைச்சராகப் பதவியேற்க வற்புறுத்தப்படும் உத்தவ் தாக்கரே ஈடுபடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  

“மதச் சார்பின்மைக்கு எந்த ஆபத்தும் வரும் வகையில் ஆட்சி நடத்தக் கூடாது” என்பது மட்டுமே தற்போதைக்கு காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும், சிவசேனாவுக்கு வைக்கும் முக்கிய நிபந்தனையாகும். அதை, மஹாராஷ்டிராவின் நலன் கருதி, சிவசேனாவும் ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது. இதற்கு முன்மாதிரி இருக்கிறது.

பிரதமர் பதவியில் இருந்த அதல்பிஹாரி வாஜ்பாய், 1999இல் ராமர் கோவில் விவகாரம், பொதுச் சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 அரசியல் சட்டப்பிரிவு” ஆகிய மூன்றையும் ஒத்தி வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளிடையே ஒரு பொது செயற்றிட்டத்தை உருவாக்கினார். அந்தப் பொதுச் செயற்றிட்டத்தின் அடிப்படையில், காஷ்மீரில் உள்ள பரூக் அப்துல்லா, தமிழ்நாட்டில் உள்ள கருணாநிதி உள்ளிட்டோர், பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றார்கள். அதே நிலைப்பாட்டைத்தான், இப்போது சிவசேனாவும் முன்வைக்கிறது.  

மஹாராஷ்டிரா மக்கள், சிவசேனாவுக்கு தனித்து ஆட்சியமைக்கும் பலத்தைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து, “குறைந்தபட்ச செயற்றிட்டம்” ஒன்றை உருவாக்குகிறது. அதற்கான பணிகள், ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன என்பதே தற்போதைய நிலைவரம். முழுக்க முழுக்க “மஹாஷ்டிரா மொடல்” முன்னெடுத்துச் செல்வதற்காக, “இந்திய மொடலை” கைவிட்டு, தங்கள் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகி, ஒரு பொதுக் கொள்கையை வகுத்து ஆட்சியமைக்கும் இந்த மஹாராஷ்டிரா அரசியலானது, மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, மாதிரி அரசியல் பா.ஜ.க தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கும். சில கட்சிகள் வெளியேறுவதற்குக்கூட முதல் படிக்கட்டாக சிவசேனாவின் “வெளிநடப்பு” அமையலாம். அதற்கான அறிகுறிகள், ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியில் தெரிகிறது.

அவரது மகன் சிராக் பாஸ்வன், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க.வின் “பெரியண்ணன்” அணுகுமுறையில் அப்செட் ஆகிப் போயிருக்கிறார். “தேசிய ஜனநாயக் கூட்டணியில் எங்கள் கருத்துகள் எப்போதும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருக்கும் என்று, உத்தரவாதம் தரமுடியாது. ஆகவே, ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை அவசியம் அமைக்க வேண்டும்” என்று குரல் எழுப்பியுள்ளார். இதே மனநிலையில்தான் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவற்றை, பிரதமர் மோடியும் உணர்ந்திருக்கிறார். 

அதனால்தான், பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “வெவ்வேறு அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் அடங்கிய ஒரு குடும்பமே தேசிய ஜனநாயகக் கூட்டணி. ஆகவே, சிறிய மனஸ்தாபங்களால் குடும்பம் சிதறி விடக்கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு, கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தமட்டில் செயல்வடிவம் பெறாவிட்டால், “மஹாராஷ்டிரா மொடல்” வாஜ்பாய் உருவாக்கி, இன்றைக்கு நரேந்திரமோடியால் வழிநடத்தப்படும் “தேசிய ஜனநாயகக் கூட்டணி மொடல்” அரசியலுக்கு, எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடும்!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .