2021 ஜனவரி 23, சனிக்கிழமை

யாழ் பல்கலைக்கழக விவகாரம்: வலிந்த திணிப்பு

Thipaan   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகவேல் சண்முகன்
shanmugan10@gmail.com

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்களை, இரண்டாமாண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சம்பவமே, இனி வரும் சில காலங்களுக்கு பல்வேறு மட்டங்களிலும் பேசு பொருளாக நிச்சயம் இருக்கும்.

எமது உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஓர் அணியின் வீரருக்கு மத்தியஸ்தரினால் சிவப்பு அட்டை காட்டப் பெற்றாலோ அல்லது ஓர் அணியின் 'ஓஃப் சைட்' மத்தியஸ்தரினால் கண்டு கொள்ளப்படவில்லையென்றோ மத்தியஸ்தருடன் அடுத்த அணி வீரர்கள் முரண்பட்டுக் கொள்ளுதல் அல்லது அணியின் ஆதரவாளர்கள் மத்தியஸ்தருடன் முரண்பட்டுக் கொள்ளுதல், அதனைத் தொடர்ந்து இரண்டு அணியின் ஆதரவாளர்கள் முரண்பட்டுக் கொள்ளுதல் வகையறாவான சம்பவமே யாழ்.பல்;கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இலகுவாகப் பேசித் தீர்க்கப்படக் கூடிய விடயத்தை, வெளிப்புற சக்திகள், தாம் குளிர் காய்ந்து கொள்வதற்காக பெரிதாக ஊதிப் பெருப்பிக்க முற்படுவதோடு, தாமும் கருத்து சொல்கிறோம் பேர்வழி என்று, எம்மிடையே நல்லிணக்கவாதிகளாக (‚) தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரும் இவ்விடயத்துக்கான அதிக வெளிச்சத்தை வழங்கி எந்தெந்த மட்டங்களுக்கு குறித்த விடயம் செல்லக் கூடாதோ, அவ்விடத்துக்கெல்லாம் இந்த விடயத்தைக் கொண்டு செல்லும் பணியில் செம்மையாக ஈடுப்பட்டிருக்கின்றனர்.

எனவே, எங்கு இவ்வாறான முரண்பாடு தோன்றும் அதை வைத்து தமது இருப்புக்கான காரணங்களை உறுதிப்படுத்தி, ஏனைய தேவையான விடயங்களை மழுங்கடிக்கச் செய்து தாம் நகர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைப்போருக்கு, குறித்த யாழ். பல்கலைக்கழக விவகாரம், அல்வா போல கிடைத்திருக்கிறது. ஆகவே, இவர்கள் இப்படியானதொரு சம்பவத்தை ஏற்படுத்துவதற்கு, மறைமுகமாக பின்னால் உதவினார்களா என்பதும் சந்தேகத்துக்குரியதொன்றாகவே இருக்கின்றது.

மேற்குறித்த வகையானோரை தவிர்த்தாலும், ஏனையவர்களும் இந்த விடயத்தை தத்தமது நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டே நோக்குகின்றனர். நமது நாட்டில் கடந்த ஒரு வருடமாக அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லான பொறுப்புக்கூறலை, இந்த விடயத்தில் பிரயோகித்துப் பார்க்க எவரும் விரும்பவில்லை. அல்லது அவ்வாறு பிரயோகித்தால், அது, அவரவர் நலன்களை பாதிக்கும் என்ற படியால் அவர்கள் அதற்குள் செல்ல விரும்பவில்லை. எல்லோருக்கும் தற்காலிக போலி இணக்கம் ஒன்றே தேவையாக இருக்கிறது தவிர, குறித்த விடயத்தை ஆழ்ந்து நோக்கி, குறித்த சம்பவத்துக்கான அடிப்படை காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் அல்லது குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு காரணமாக நிகழ்வுகளையொத்த வேறு நிகழ்வுகள் ஏனைய பல்கலைக்கழகங்களில் எவ்வாறு இடம்பெறுகின்றது என்று நோக்க எவரும் விரும்பவில்லை. ஏனெனில், அவற்றையெல்லாம் நோக்கினால், யதார்த்தத்தின்படி ஒரு தரப்பின் நியாயங்கள் சரியாகிவிடுவதோடு அடுத்த தரப்பின் செயற்பாடுகள் பிழை போன்றதாகி விடும். ஆனால்,  நம் போலி நல்லிணக்கவாதிகளுக்கு இத்தகையதொருநிலை பிரதிகூலமாய் அமைந்து விடும். எனவே, எவ்வாறு பூசி மெழுகலாம் என்றே அவர்கள் நோக்குகின்றனர்.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவமானது, திடீரெனவே ஏற்பட்டது என்றே அனைவரும் அடித்துக் கூற முற்படுகையில், சம்பவம் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வையொட்டி மற்றும் அதன் முன்னர் நடந்த ஒரு சில சம்பவங்களை மட்டும் நோக்கினாலே குறித்த சம்பவமானது திடீரென தோன்றியதா அல்லது பல நிகழ்வுகளின் தொடர்ச்சியா என்பதை ஊகிக்க முடியும்.

தற்போது, யாழ். பல்கலைக்கழகத்தின் சில பீடங்களில், சிறுபான்மையின மாணவர்களுக்கு சரிக்குச்சமனாக பெரும்பான்மையின மாணவர்களும் காணப்படுகின்ற நிலையில், இந்த வருட வெசாக் பண்டிகையின்போது, யாழ். பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் பெரும்பான்மையின மாணவர்கள், வெசாக் கூடுகளால் அலங்கரித்திருந்தனர். அதன்போது எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெற்றிருக்கவில்லை. அவரவர் மதத்திற்குரிய பண்டிகைகளை நடாத்துவதற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே சகிப்புத்தன்மை இல்லை என தற்போது கூறுவோர் இதனையும் சற்று நோக்க வேண்டும். இதேவேளை, குறித்த வெசாக் கொண்டாட்டங்களின்போது தமிழில் காணப்பட்ட பதாதைகளில் எழுத்துப் பிழைகள் காணப்பட்ட நிலையில், தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிலை காணப்பட்டது, சிறிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பதாதைகளை, பொது மொழியான ஆங்கிலத்தில் வைப்போம் என்று தமிழ் மாணவர்கள் கூறிய நிலையில், தமிழ், சிங்கள மொழிகளில்தான் பதாகை வைக்க வேண்டும் என பெரும்பான்மையின மாணவர்கள் அடம் பிடித்த நிலையில், இறுதியாக அந்தக் கோரிக்கையும் தமிழ் மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இது தவிர, கடந்த வருடம் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் இடைநடுவிலேயே அந்த நிகழ்வினை புறக்கணித்து வெளியேறிய அப்போதைய இறுதியாண்டு பெரும்பான்மையின மாணவர்கள், இம்முறை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிருந்த நிலையிலும், சம்பவம் இடம்பெற்ற இவ்வருட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர். தவிர, சம்பவம் இடம்பெற்ற நிகழ்வுக்காக குறித்த தொகைப் பணம் சேர்க்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையின மாணவர்களிடையே எக்கச்சக்கமான பணம் புழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, சம்பவம் இடம்பெற்ற நிகழ்வினையொட்டி மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற மேற்கூறப்பட்ட சில சம்பவங்களை உற்று நோக்குவீர்களானால், இடம்பெற்ற சம்பவமானது, திடீரெனத்தான் இடம்பெற்றதா அல்லது வேறு பல நிகழ்வுகளின் கோர்வையா அல்லது திட்டமிடப்பட்டதா என நிச்சயம் உங்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்திருக்கும்.

அடுத்து, குறித்த புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், கடந்த ஐந்து வருடங்களாக, அரங்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கண்டிய நடனம் இடம்பெற்றே வந்திருக்கின்றது. இந்நிலையிலேயே, தமிழர் பண்பாட்டின் மையமாகத் திகழும் யாழ்ப்பாணத்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில், பாரம்பரிய கலாசாரமான, மேளதாள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்படுகையில், கண்டிய நடனத்தையும் வரவேற்பில் இணைக்க வேண்டும் என குறித்த நிகழ்வுக்கு முந்தைய தினமே பீடத்தலைவரிடம் கோரிக்கை விடப்பட்டு, அந்த கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையிலும் கண்டிய நடனத்தை வலிந்து திணிக்க முற்பட்ட நிலையிலேயே கலகமாகியிருக்கிறது.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று காலையிலிருந்தே சம்பவம் இடம்பெற்ற இடம் கொதிகளம் போலவே இருந்த நிலையில், வரவேற்பின்போது கண்டிய நடனத்தை நடத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, முன்னர் கூறப்பட்ட, பல்கலைக்கழகத்துக்கு வெளியே சென்ற மாணவர்கள், வேறு பீட மாணவர்களுடன் பெரும்பான்மையின மாணவர்கள் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, பெரும்பான்மையின மாணவர்களுடன் பேசச் சென்ற பேராசிரியருடன் கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன் பெரும்பான்மையின மாணவர்கள் முரண்பட்டதுடன், அவரின் முன்னால் ஆவேசமான நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே மாணவர்களிடையே மோதல்கள் இடம்பெற்றதுடன், சிறுபான்மையின மாணவர் ஒருவரே கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் கல் வீச்சில் மாறி மாறி ஈடுபட்டதுடன், அதனைத் தொடர்ந்து விரிவுரை அரங்குகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதிலேயே பெரும்பாலான பெரும்பான்மையின மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்குறித்த சம்பவங்கள் மதியம் ஒரு மணிக்கு முதலே இடம்பெற்று நிலைமை அமைதியாகியிருந்தது. அதற்கு பின்னர் சம்பவ இடத்தில் எதுவுமே இடம்பெற்றிருக்கவில்லை என்பதுடன், மேலும் முறுகல்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டே, விடுதிகளிலிருந்த பிற மாவட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதில், பெரும்பான்மையின மாணவர்களுடன் இணைத்து, பிற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுமே வெளியேற்றப்பட்டிருந்தனர்.

எவ்வாறெனினும், பெரும்பான்மையின மாணவர்கள் கட்டாயமாக பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என பிரபலம் தேடும் இணையத்தளங்களும் இனத்துவேஷம் கக்கும் தரப்புக்களும் கருத்திடவே குறித்த சம்பவம் தீயாக பற்றிக் கொண்டதுடன், தற்போது இலகுவாக தமக்கேற்ற கருத்துக்களை பரப்பக்கூடிய சமூக ஊடகங்களில் மோசமான இனப்பிளவு போன்றதான கருத்துக்கள், குறித்த சம்பவத்தின் காணொளிகள், புகைப்படங்களுடன் பரப்பப்பட்டன. வெறுப்புப் பேச்சுத் தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாத நமது நாட்டில், மேற்கூறப்பட்டவாறான கருத்துக்களை தடுப்பது கடினமே, எனவே வெறுப்பு பேச்சு தொடர்பான பரிசீலனை அவசியம் ஆகும்.

மேற்குறித்தவாறாக சம்பவங்கள் இடம்பெற்று முடிந்திருக்கையில், அனுமதி வழங்கப்பட்டிருக்காத கண்டிய நடனத்தை, வரவேற்பின்போது வலிந்து திணித்தமையே இதற்கான பிரதான காரணியாகும். மொரட்டுவை பல்கலைக்கழகத்திலோ அல்லது பேராதனைப் பல்கலைக்கழக்திலோ இடம்பெறும் விழாக்களின் வரவேற்பின்போது கண்டிய நடனமே பயன்படுத்தப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட  எண்ணிக்கைகளில் காணப்படும் மாணவர்கள், வரவேற்பின்போது மேளதாள வாத்தியங்கள் இடம்பெறவேண்டும் என்று தமிழ் மாணவர்கள் அடம்பிடிப்பதில்லை. அவர்கள் அவ்வாறு கோரினாலும் ஒரு போதும் மேளதாள வாத்தியங்கள் ஒருபோதும் வரவேற்பிலும் இடம்பெறப்போவதில்லை. வீண் முரண்பாடே ஏற்படும். எனவே இடம், பொருள், ஏவல் அறிந்தே அம்மாணவர்கள் நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் பண்பாட்டு கலாசாரத்துடன் இருக்கின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிகழ்வொன்றின் வரவேற்பில் கண்டிய நடனத்தை கோருவது எவ்வாறு நியாயமாகமுடியும். அதுவும் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அதை வலிந்து திணிப்பதை எவ்வாறு நோக்குவது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பல வகையான மாணவர்கள் பயிலுகின்ற நிலையில், அந்தந்த மாணவர்கள், அவரவர் சமூகம் சார்ந்த நிகழ்ச்சியினை தனித்துவமாக நிகழ்த்துகின்றனர். அதற்குள் எவரும் மூக்கை நுழைப்பதில்லை. பின்னர் பொதுவான நிகழ்வொன்றில், குறித்த பல்கலைக்கழகத்தில் பாரம்பரியமாக காணப்படும் வழங்கங்களை, தமக்கேற்றவாறு மாற்றி வலிந்த திணிப்புக்களை மேற்கொள்வது எப்போதும் பொருத்தமாகாது. இங்கே ஆரம்பிக்கும் சிறிய முரண்பாடுகளே, பின்னர் பாரிய அதிர்வலையாக மாறுகின்றது. எனவே, தாமிருக்குமிடம் அறிந்து அனைவரும் செயற்பட்டால் நன்று.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .