2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

‘ராகுல் காந்தி ஒரு பெரிய கோமாளி’

எம். காசிநாதன்   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைக் கூட்டம் 22 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றது. அதற்குள், தெலுங்கானா அமைச்சரவையைக் கலைத்து, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் தெலுங்கானா ராஷ்ரிய சமிதிக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகரராவ்.

தென் மாநிலங்களின் ஐந்தாவது மாநிலமான தெலுங்கானா, ஆந்திராவிலிருந்து 2.6.2014 அன்று பிரிக்கப்பட்டு, இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்தார் சந்திரசேகரராவ். தெலுங்கானா தனி மாநிலம் கேட்டுப் போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்றவர் சந்திரசேகர்ராவ். ஆனால், தனி மாநில அந்தஸ்தை அளித்த காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரசேகரராவுக்கும், ஏழாம் பொருத்தமாக அமைந்துவிட்டது.   

294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய தென்னிந்திய மாநிலமான ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிறந்தது. அங்கு, மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில், 105 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கிறார்.

இந்தியாவின் 29ஆவது மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த “ஆட்சிக் கலைப்பு” அஸ்திரம், எதிர்வரும் நவம்பரில், ஒரு “மினித் தேர்தலை” இந்தியாவில் புகுத்தியுள்ளது. ஏற்கெனவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஷ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், வருகின்ற நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற வேண்டியுள்ளன. இந்நிலையில், இப்போது தெலுங்கானா மாநிலம், ஐந்தாவது மாநிலமாகச் சேர்ந்திருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, “ஐந்து மாநிலங்களின்” தேர்தல்கள், இந்திய அரசியலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கூட்டியே பிரசாரக் களமாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  
அரசியல் கட்சிகள், “முன்கூட்டித் தேர்தல்” நடத்தியதில், பல நேரங்களில் வெற்றிபெற முடியாமல் போயிருக்கிறது. சில நேரங்களில், வெற்றிபெற முடிந்திருக்கிறது.

உதாரணமாக, தமிழகத்தில் 1971இல். முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றார் கருணாநிதி. அப்போது இருந்த 234 சட்டமன்றத் தொகுதிகளில், 185 சட்டமன்றத் தொகுதிகளில், தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால், அந்த அஸ்திரத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய், 2004இல் முன்னெடுத்துச் சென்றார். “இந்தியா ஒளிர்கிறது” என்ற முழக்கத்தை வைத்து, 2004 நாடாளுமன்றத் தேர்தலை, முன்கூட்டியே நடத்தினார்.

ஆனால் அந்தத் தேர்தலில், பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆகவே, “முன்கூட்டியே தேர்தல்” என்ற வியூகம், எப்போதும் “ஃபிப்டி- ஃபிப்டி” வெற்றி வாய்ப்புள்ள வியூகமாகவே, இந்திய அரசியலில் பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படியொரு வாய்ப்பைத்தான் இப்போது தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தேர்வு செய்திருக்கிறரார்.  

இதற்காக அவர், கடந்த சில வருடங்களாகவே, பிரதமர் நரேந்திர மோடியையும் பகைத்துக் கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வையும் பகைத்துக் கொள்ளவில்லை.

“முன்கூட்டியே தேர்தல்” நடத்தும் மனவோட்டத்தில் இருந்ததால், தெலுங்கானா முதலமைச்சர், எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, “மாநிலக் கட்சிகளின் கூட்டணி” உருவாக்குவோம் என்று முன்னெடுத்தார்.

ஆனால் அவர் மீது, மாநிலக் கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதோடு, அதே அணியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இருப்பது, பெரிய தலைவலியாக இருந்தது. இந்நிலையில், “மாநிலக் கட்சிகளின் கூட்டணி” அமைப்பதில், மிகப்பெரிய ஆர்வம் காட்டாமல் - தன் கட்சியை மீண்டும் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்கு வர வைப்பதற்கு என்ன செய்வதென்பதில் சீரியஸாக கவனஞ்செலுத்தத் தொடங்கினார் சந்திரசேகர்ராவ்.   

அதன் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள மின் பற்றாக்குறையைப் போக்குவது, சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையின் மொத்த உருவமாக இருந்த மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவது, மத அடிப்படையிலான வன்முறைகளுக்கு இடந்தராமல் “மத நல்லிணக்கத்தை” உருவாக்குவது, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் என்று தெலுங்கானா மாநில முதலமைச்சருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.“நல்லாட்சி நடத்துகிறார்” என்ற இமேஜ், அவருக்குக் கிடைத்தது.

ஆனாலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கிறது. அது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதிக்கு ஆபத்தாக முடியலாம் என்பதை, சந்திரசேகர்ராவ் கணிக்கத் தவறவில்லை. ஆகவே இப்போது “முன்கூட்டியே தேர்தலை” அவர் சந்திப்பதன் இரட்டைக் காரணங்களில் ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியாகும்.

இரண்டாவது, தன் ஆட்சிக்கு இருக்கும் “நல்லாட்சி” என்ற இமேஜ். ஆகவே, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் அளவுக்கு, காங்கிரஸ் வளர்வதற்குள் நாம் இன்னொரு முறை ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டுமென்று கணக்குப் போட்டு, இந்தக் காயை நகர்த்தியுள்ளார் சந்திரசேகர்ராவ்.  

இந்த வியூகத்துக்கு “வெளிச்சம்” கொடுக்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமானார். தன் மாநில “ஆட்சிக் கலைப்பு” தீர்மானத்தைப் போடுவதற்கு முன்பே, முதலில் பா.ஜ.க.வுக்கு “மறைமுக நண்பரானார்”. பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அப்படி கொண்டு வரப்பட்ட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிக்காமல், ஒதுங்கி நின்றது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி. அது மட்டுமல்ல, அக்கட்சியின் உறுப்பினர்கள், மக்களவையில் “தெலுங்கானா மாநிலத்தை வஞ்சித்தது காங்கிரஸ் கட்சி” என்ற ரீதியில், கடுமையான தாக்குதலை காங்கிரஸ் கட்சி மீது தொடுத்தார்கள்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தது தான், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதியின் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்றாலும், தெலுங்கானாவில் முன்கூட்டியே தேர்தலைச் சந்திப்பதற்கு, பா.ஜ.க.வை தங்களின் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வியூகமே அது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எடுத்த நிலைப்பாடு, பா.ஜ.க மீதான நம்பிக்கையை, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சிக்கு வலுப்படுத்தியது.

பிறகு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவை, பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டிப் பேசினார். ஒரு பிரதமர், தன்னுடன் கூட்டணியில் இல்லாத ஒரு கட்சியின் முதல்வரைப் பாராட்டுகிறாரே என்று, பலரது புருவங்களை உயர்த்தினாலும், பா.ஜ.கவுக்கும் - தெலுங்கானா ராஷ்டிரிய சமீதிக்கும் உள்ள நெருக்கத்தின் ஆழத்தை, இது வெளிப்படுத்தியது.

இந்தப் பாராட்டுதலுக்குப் பிறகு, பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார் சந்திரசேகர்ராவ். தன்னைப் பாராட்டியமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், அந்தச் சந்திப்பில், “தெலுங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு” பிரதமருடன் விவாதித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுத் திரும்பிவிட்டார் என்றே தோன்றுகிறது.  

பிரதமருடன் சந்திப்பு முடிந்து திரும்பி வந்ததும், “தெலுங்கானா மாநிலத் தேர்தல் விவகாரம்” சூடுபிடித்தது. சந்திரசேகர் ராவ் அதற்கான சமிஞ்ஞைகளை வெளியிடத் தொடங்கினார். குறிப்பாக, மாபெரும் பேரணி ஒன்றை நடத்தி, அதில் “முன்கூட்டியே தேர்தலைச் சந்திப்பது” என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டார்.

இதன் பிறகுதான், “ஆட்சியைக் கலைக்க” 22 நிமிடம் தனது அமைச்சரவையைக் கூட்டினார். அதில், “தெலுங்கனா அமைச்சரவை கலைக்கப்படுகிறது” என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதை, ஒன்றுபட்ட ஆந்திர மாநில ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.

பழம் நழுவி பாலில் விழுந்தது போல், உடனடியாக அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், “இடைக்கால முதல்வராக சந்திரசேகர்ராவே தொடரலாம்” என்று அனுமதித்தார். இதுவரை, பா.ஜ.க.வின் நட்பு அவருக்குக் கைகொடுத்திருக்கிறது.  

ஆனால் இந்த நட்பு, நடைபெறப்போகும் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் கை கொடுக்குமா? ஏனென்றால், தெலுங்கானா மாநிலத்தில், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், அதிக சதவீதம் இருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தை விட, இங்கு அதிகம் என்பதுதான் உண்மை.

அந்த வாக்காளர்கள், சந்திரசேகர் ராவின் பா.ஜ.க நட்பை, நிச்சயம் “பொஸிட்டிவாக” எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதே இப்போதுள்ள நிலைமை. ஆனால், “காங்கிரஸ் மீதான கடும் தாக்குதலை” முன்வைத்து, நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று ராவ் கணக்குப் போடுவது போல் தெரிகிறது. 

அதனால் தான் “இடைக்கால முதல்வராக இருங்கள்” என்று ஆளுநர் அனுமதி அளித்தவுடன், “ராகுல் காந்தி ஒரு பெரிய கோமாளி” என்று வெகு கடுமையான “பெர்ஷனல்” தாக்குதலை, காங்கிரஸ் மீது தொடுத்திருக்கிறார்.  

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள், ஓரணியில் சேர்ந்து தெலுங்கானாவில் கூட்டணி அமைத்தால், அது சந்திரசேகர் தலைவலியாக மாறும் அபாயம் இருக்கிறது. ஏற்கெனவே, பா.ஜ.க.வின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், காங்கிரஸும் - ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து வாக்களித்துள்ளது.

டெல்லியில் அவர்களுக்குள் நட்பு உருவாகி விட்டது. ஆகவே “காங்கிரஸ்- தெலுங்கு தேசம்” கூட்டணியைச் சமாளிக்க, பா.ஜ.க.வுடன் நேரடியாகக் கூட்டணிவைக்க வேண்டிய நிர்பந்தமும் நெருக்கடியும், ராவுக்கு ஏற்படலாம். ஒருவேளை, பா.ஜ.க கூட்டணி இல்லாமலேயே தனித்து வெற்றிபெற்று விடலாம் என்று, அவர் தனிக் கணக்குப் போட்டால், பா.ஜ.க.வின் நட்பால், சிறுபான்மையினச் சமுதாய வாக்குகள், சிந்தாமல் சிதறாமல் கிடைக்காமல் போகலாம்.

எந்த வகையில் பார்த்தாலும், தெலுங்கானாவில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தல் என்று ராவ் எடுத்துள்ள முடிவு- பாஸா, பெயிலா என்பது இனி தெலுங்கானா மக்கள் கையில் இருக்கிறது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--