2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வினாக்களுடன் கடந்து சென்ற மகளிர் தினம்

எம். காசிநாதன்   / 2020 மார்ச் 09 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகளிர் தினம் 2020; இந்தியாவில் உள்ள மகளிருக்கு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மகளிர் தினமாகவே கடந்து போயிருக்கிறது.   

இந்திய அரசியல் நிர்ணய சபையில், 13 பெண் உறுப்பினர்கள் அங்கம் வகித்து இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குத் துணை நின்றுள்ளார்கள்; நாட்டின் குடியரசுத் தலைவராக பிரதீபா பட்டீலும் பிரதமராக இந்திரா காந்தியும் பொறுப்பேற்றுப் பணியாற்றி இருக்கிறார்கள்.   

ஆனால், இந்தியாவின் மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் ‘மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு’ வழங்கும் சட்டமூலம் மட்டும், இன்னும் கரை சேரவில்லை. இந்த முறையாவது சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்ற ஏக்கம் நாடுமுழுவதும் பரவி இருந்தது.   

பெண்கள் மத்தியில் மட்டுமல்ல, பெண்களுக்குச் சட்டங்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 33 சதவீதம் இடம் பெற வேண்டும் என்ற அந்த எதிர்பார்ப்புக்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை.  

 அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் ‘மகளிர் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம்’ என்று தாராளமாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். இந்த வாக்குறுதி இல்லாத தேர்தல் அறிக்கைகள் ‘அரிதிலும் அரிது’.   

மகளிர் தினம் வரும் போதெல்லாம் தங்களின் வாழ்த்துச் செய்தியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால், உதட்டளவில் எழும் அந்தக் கோரிக்கைகளுக்கு, உணர்வு ரீதியாக வடிவம் கொடுத்து, ‘மகளிர் இட ஒதுக்கீட்டு’ச் சட்டமூலத்தை நிறைவேற்ற இயலவில்லை.   

வாக்குறுதிகளும் வேண்டுகோள்களும் சம்பிரதாயமான முயற்சிகளாகவே இன்னும் தொடருகின்றன. இவ்வாறான அரசியல் செய்வது, எல்லா அரசியல் கட்சிகளுக்குமே பொதுவான அணுகுமுறையாகவே இருப்பது, ஜனநாயகத்தில் காணப்படும் அபத்தமாகவே காட்சியளிக்கிறது. மகளிர் சட்டமூலத்தை, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் நிறைவேற்றவில்லை. அதுவும் 2004 முதல் 2014 வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், சோனியா காந்தியே ஆட்சியின் வழிகாட்டுக் குழுத் தலைவராக இருந்தும் முடியவில்லை.   

இதேபோல், 2014இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.கவும் தற்போது இரண்டாவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தும் நிறைவேற்ற இதுவரை முன்வரவில்லை.   

குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து போன்றவற்றை இரு அவைகளிலும் நிறைவேற்றிக் கொள்ளும் பலமுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் மட்டும் ஆர்வம் காட்டவில்லை.   

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் ‘33 சதவீத இட ஒதுக்கீடு’ மட்டும் எட்டாக் கனியாகவே நீடிக்கிறது. 1996இல் முதன் முதலில் ‘மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும்’ சட்டமூலம் கொண்டு வரப்பட்டு, இன்றுவரை நிறைவேற்றாமல் ஏறக்குறைய 24 வருடங்கள் நகர்ந்து ஓடி விட்டன.  

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மாநிலங்கள் அவையில் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2010இல் நிறைவேற்றப்பட்டு, பத்து வருடத்தைத் தொட்டு விட்ட போதிலும், இன்னும் அந்த 108 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை.   

கீதா முகர்ஜி தலைமையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு நியமிக்கப்பட்டு, அதன் ஏழு பரிந்துரைகளில், பழங்குடியினம், பட்டியலினம் ஆகிய இனங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, மகளிர் இட ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு என்று சேர்க்கப்பட்ட நிலையிலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களின் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில், கருத்தொற்றுமை ஏற்படாததால், இன்றளவும் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பெயரளவில் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.  மகளிர் தினம் தொடங்கிய நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘டெல்லிக் கலவரம்’ போன்றவற்றை முன் வைத்து, ரகளையும் ‘பேப்பர்’ கிழிப்புச் சம்பங்களும் நிகழ்கின்றன. 

இரு அவைகளின் பேரவைத் தலைவர்களும் சபையை நடத்தாமல் ஒத்தி வைக்கிறார்கள். மக்களவை பெண் உறுப்பினர்கள், சக உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகப் பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கிறார்கள். அதுவும் போட்டி போட்டுக் கொண்டு, காங்கிரஸ் பெண் உறுப்பினர் புகார் கொடுத்தால், உடனே பா.ஜ.க பெண் உறுப்பினரும் புகார் கொடுக்கிறார்.   

அவையில் ரகளை செய்ததற்காக, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு  உள்ளார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ‘நேரம் விரயம்’ ஆகிறதே தவிர, மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை  நிறைவேறவில்லை. 

‘என்ன ஆயிற்று அந்தச் சட்டமூலத்துக்கு?”  என்று எந்தக் கட்சியின் சார்பிலும்  ஆக்கபூர்வமான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. “சபை ரகளையைக் கைவிடுங்கள்; மகளிருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை விவாதிப்போம்” என்று பிரதமரும் வேண்டுகோள் எதையும் விடுக்கவில்லை.  எதிர்க்கட்சிகளும் முயற்சி எடுக்கவில்லை. 

ஏன், ஒரு பெண்ணாகக் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் சோனியா காந்தி கூட, “நாங்கள் டெல்லிக் கலவர விவகாரம் பற்றி விவாதம் கோரி முழங்குவதை ஒத்தி வைக்கிறோம். மகளிர் சட்டமூலத்தை நிறைவேற்றக் கூடிப் பேசுவோம்” என்று கூறவில்லை. ஆகவே, ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் ‘மகளிர் சட்டமூலம்’ பற்றி விவாதிக்க நேரமும் இல்லை; நிறைவேற்ற மனமும் இல்லை.  

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஏறக்குறைய பத்து வருடங்களாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு, அரசியல் கட்சிகளின் மனதில் குடிகொண்டிருக்கும் ‘ஆணாதிக்க’ எண்ணவோட்டமோ காரணம் என்ற சிந்தனை மகளிருக்கு ஏற்பட்டுள்ளது. 

பெண்கள் குறித்தும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பல கூட்டங்களில் பேசுகிறார். “பெண்கள் இன்றி, நாட்டில் முன்னேற்றம் இல்லை” என்று அடித்துக் கூறியுள்ளார்.   

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்துக்கு இருக்கும் ஆளுமைக்கு, மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்றி, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33 சதவீத பெண் உறுப்பினர்களை அமர வைப்பது, இமாலயப் பணி அல்ல. 

பா.ஜ.க அரசாங்கம் நினைத்திருந்தால், 2014இல் ஆட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றி, 2019இல் தேர்தலில் பெண்களின் அதிகாரத்தை, நாட்டின் திருக்கோவிலான நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.  

 ஆனால், அதை செய்யத் தவறி விட்டதோடு மட்டுமின்றி, அப்படியொரு சட்டமூலம் இருக்கிறதா என்பது குறித்தே, ஆளுங்கட்சியினரோ, அக்கட்சிக்கு உதவும் கூட்டணிக் கட்சியினரோ குரல் கொடுக்க மறுத்து நிற்கிறார்கள். இது, மகளிருக்கு அதிகாரமளிப்பதை எந்த அரசியல் கட்சியும் விரும்பவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதுவரை மகளிருக்குக் கிடைத்த ஏமாற்றம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள இட ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில் இன்னும் தொடருகிறது. 

ஆட்சி அதிகாரத்தில், மகளிர் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு முன்னோடித் திட்டங்கள் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு, ஆண்கள் போலவே பெண்களுக்கும் சொத்துரிமையில் சம பங்கு, சொந்தக் காலில் நிற்பதற்கு மகளிர் சுய உதவிக்குழு போன்றவை இருந்தாலும் மகளிருக்கு உள்ளூராட்சி அமைப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு என்பதை ஓர் அதிகாரப் புரட்சியாகவே பார்க்க வேண்டும்.   
1993இல் நாடு முழுவதும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் விளைவாக இன்று, கிராம ஊள்ளூராட்சிகள், ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றில் மகளிர் தலைவர்களாக அங்கத்தவர்களாக இருந்து, மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மாநிலத்துக்குக் குறைந்தது 50 ஆயிரம் பேர், உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள், இந்த 30 சதவீதத்தையும் தாண்டி, 50 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளுராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.   

 உள்ளூராட்சி அமைப்புகளில் இடம்பெற்றுள்ள மகளிர், பல அமைப்புகளில் சாதனைச் சிற்பிகளாக் செயற்பட்டு வருகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் கிளைக் கழகங்களில் இருந்து, உயர் மட்ட அமைப்பு வரை, பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, கட்சி அமைப்புகளில் அதிகாரம் செலுத்துகிறார்கள்.   

ஆனால், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இதுவரை கிடைக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்றத்தின் மக்களவையில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மொத்த எண்ணிக்கையில் 33 சதவீதம் கிடைக்கவில்லை. குறிப்பாக, முதல் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து சதவீதமே இருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 14 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது, தற்போது 78 பெண் எம்.பிக்கள் இருக்கிறார்கள். ஆனால், 175க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டிய மக்களவைக்கு, இன்னும் அந்த எண்ணிக்கையில் பெண் எம்.பிக்கள் தெரிவு செய்யப்படவில்லை.  

 சட்டமன்றங்களிலும் 33 சதவீதம் வர முடியவில்லை. ஆகவே, உள்ளூராட்சி அமைப்புகளில், அதாவது கிராமம் முதல் மாநில தலைநகரம்,  டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்துக்கு ‘முன்’ வரை சென்று விட்ட மகளிர் அதிகாரம், இன்னும் மாநில தலைநகரங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் டெல்லி தலைநகரில் உள்ள மக்களவையிலும் இடம்பெற இந்த மகளிர் தினமும் வாய்ப்பளிக்கவில்லை.

மகளிர் இட ஒதுக்கீட்டை இந்திய ஜனநாயகம் வென்று எடுக்குமா? ‘மகளிர் தினங்கள்’ இந்தச் சட்டமூலத்துக்கு ‘விடை’ தெரியாமலேயே கடந்து போய் கொண்டிருக்குமா?  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .