Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஜனவரி 11 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்சயன்)
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பரிமாறப்பட்ட தகவல் குறிப்புகள் சில அண்மையில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்துள்ளன.
அவற்றில் ஒன்று- வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை வாங்க முற்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு ஆயுதங்களை வாங்கினால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை உள்ளடக்கியிருந்தது.
இன்னொன்று- ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவில்லை என்று இலங்கை தெரிவித்த மறுப்பையும் அதுபற்றிய அமெரிக்கத் தூதுவரின் கருத்தையும் உள்ளடக்கியிருந்தது.
அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒருவித இராஜதந்திர நெருடல் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இது அவ்வப்போது அறிக்கைகளாகவோ அல்லது வேறு நகர்வுகளாகவோ தொடர்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் இதன் பரிமாணம் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அமெரிக்காவுடனான உறவுகளில் நெருடல்கள் நீடிக்கின்ற அதேவேளை, ஈரானுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த உறவுகளின் நெருக்கத்தின் விளைவாகவே அமெரிக்காவுடனான இந்த இராஜதந்திர நெருடல் தொடங்கியது. இது இப்போது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
வளைகுடாவில் அணுசக்தி தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் நாடாக கருதப்படும் ஈரானைத் தான் அமெரிக்கா இப்போது வன்மையாக எதிர்த்து வருகிறது.
ஈரானின் அணுத் தொழில்நுட்பம் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் கையில் சிக்கி விட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் அமெரிக்காவுக்கு உள்ளது.
அதேவேளை பாகிஸ்தானின் அணுத் தொழில்நுட்பத்தையிட்டு அமெரிக்கா கவலைப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு சவாலாக செயற்படும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருப்பதால் இப்போதைய நிலையில் சீனாவை விடவும் அதிகமாக வெறுக்கும் நாடாக அதுவே உள்ளது.
அப்படிப்பட்ட ஈரானுடன் இலங்கை உறவுகளை வைத்துக் கொள்வதுடன் இன்னும், இன்னும் அது நெருங்கிக் கொண்டே போகிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கிய இந்த உறவாடலின் விளைவாக, 2008இல் ஈரானிய ஜனாதிபதி கொழும்பு வந்தார். அதுபோலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றார்.
இப்போது அடிக்கடி ஈரானிய அமைச்சர்களும் இராஜதந்திரிகள் கொழும்பு வந்து போகின்றனர்.
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிக்கும் திட்டம், உமாஓயா மின்சக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஈரான் உதவிகளை அள்ளி வழங்கியுள்ளது. இப்போதும் கூட இலங்கைக்கு ஈரானிய உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.
இலங்கைக்கு உதவிகளை வழங்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக ஈரான் மாறியிருக்கிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது இலங்கை.
அதுபோல ஈரானுக்கு இங்கிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. இதைவிட வேறும்பல வர்த்தகத் தொடர்புகளும் பேணப்படுகின்றன. இந்த உறவுகள் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. இந்த உறவுகள் இராணுவ மட்டங்களிலும் தொடர்வதாக அதற்குச் சந்தேகங்கள் உள்ளன.
அவ்வப்போது ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்புக்கு வந்து செல்வதை அமெரிக்கா சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது இலங்கை அரசுக்கு நிதி நெருக்கடியும் ஆயுத தளபாடப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அப்போது ஈரான் கடன் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஈரானிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்க முனைந்ததான தகவலும் வெளியாகியிருந்தது.
இலங்கைக் கடற்படையின் படகுகளில் நவீன ஆயுதங்கள் பொருத்தும் உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு ஈரானிய நிறுவனம் ஒன்று முன்வந்தது பற்றிய தகவலை அறிந்து கொண்டே அமெரிக்கா அந்த எச்சரிக்கையை விடுத்தது.
அதேநேரத்தில் வடகொரியாவிடம் இருந்து பல்குழல் பீரங்கிகளையும், ஆர்பிஜி றொக்கட் லோஞ்சர்களையும் வாங்க முனைந்ததாகவும் இலங்கையை அமெரிக்கா எச்சரித்தது.
ஆனால் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை குறித்து இலங்கை அரசு அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
2009 மே மாதம் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை வழங்கிய போதும், ஒக்ரோபர் மாதமே இலங்கை அரசு அப்படி ஆயுதங்கள் வாங்க முனையவில்லை என்று பதில் கூறியுள்ளதாம். அதுவும் ஈரானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கவில்லை என்றே கூறியுள்ளது.
வடகொரியா பற்றி மூச்சுக் கூட விடவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. ஈரான், வடகொரியா, சீனா போன்ற நாடுகள் இன்றைக்கும் அமெரிக்காவினால் வெறுக்கப்படுபவை.
வடகொரியாவுடன் தாம் எந்தத் தொடர்பையும் பேணவில்லை என்று இப்போது இலங்கை அரசாங்கம் கூறினாலும், சீனா, ஈரான் ஆகிய நாடுகளுடனான உறவுகளை அது வெளிப்படையாகவே பேணுகிறது.
புலிகளுக்கு எதிரான போருக்கு அமெரிக்காவோ மேற்குலகமோ உதவவில்லை- சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா போன்ற நாடுகள் தான் உதவின என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருக்கிறது.
எனவே அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு ஈரானுடனான உறவுகளைக் குறைத்துக் கொள்வதற்கு இலங்கை அரசு தயாரில்லை.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும்இ அழுத்தங்களையும் மேற்குலக நாடுகள் கொடுத்த போதும் ஈரான் போன்ற நாடுகளின் உதவிகள் இருந்ததால் தான் இலங்கை தப்பிக் கொண்டது.
இந்தக் கட்டத்தில் அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு ஆட மறுப்பதால் தான் இலங்கை அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
ஈரான்இ வடகொரியாவுடனான ஆயுதக் கொள்வனவுகள் பற்றிய கேள்விகளுக்கு இலங்கை அரசு அசமந்தமான முறையில் பதில் கொடுக்க முனைந்ததில் தொடங்கிய இந்த இராஜதந்திர நெருடல் இப்போது வரை நீடிக்கிறது.
ஈரானிடம் இருந்து இலங்கை அரசு அணுசக்தி தொழில் நுட்பத்தைப் பெறுவது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளதா என்ற சந்தேகமும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு உள்ளது. இதுவும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் குறிப்பில் இருந்து அறிய முடிகிறது.
இதன் விளைவாகவே இலங்கை அரசுக்கு மோசமான நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்து வருகிறது. போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும் காரணம் இதுவாக இருக்கலாம்.
இன்னொரு பக்கத்தில் பிரித்தானியாவும் கூட அதையே கூறிவருகிறது.
பொதுவாகச் சொல்லப் போனால் மேற்குலகம் தனக்கு உதவும் என்று நம்புகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை.
கடந்தவாரம் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, பெரும்பாலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகவே செயற்படுகின்றன என்று அவர் சுpனார்.
அதுமட்டுமல்ல தன்னை போர்க்குற்றம்சாட்டி மின்சாரக் கதிரையில் ஏற்ற சில வெளிநாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், புலிகளின் அனுதாபிகளும் முனைவதாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.
மேற்குலகுடனான உறவுகள் எந்தளவுக்கு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளன என்பதையும், இது இலங்கை அரசை எவ்வளவுக்கு விரக்தியடையச் செய்துள்ளது என்பதையும் வெளிப்படுத்த இவையே போதுமான சான்றுகள்.
அதுமட்டுமன்றி எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடக்கவுள்ளது.
அதில் அமெரிக்கா அழுத்தங்கள் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கிறது இலங்கை.
இந்தக் கூட்டத்தில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக பிரேரணை ஒன்று விவாதத்துக்கு வரலாம் என்றும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் கூட சமர்ப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இவையெல்லாம் இலங்கை அரசுக்கு சார்பற்ற போக்கு ஒன்று சர்வதேச மட்டத்தில் நிலவுவதையே சுட்டிக் காட்டுகின்றன.
புலிகளை அழிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்ட இலங்கை அரசு நண்பர்களைத் தெரிவு செய்வது, தக்க வைப்பது போன்ற விடயங்களில் சரியாக செயற்படத் தவறியுள்ளதா என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையினால் தான் பல்வேறு சிக்கல்களை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானிய உறவுகளில் தொடக்கிய அமெரிக்காவுடனான முறுகல் இலங்கைக்கு கசப்பான பாடங்களைக் கொடுப்பதாகவே அமைந்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலத்தை சமாதானப்படுத்த வெளிநாடுகளில் உள்ள தூதுரகங்களை உசுப்பி விடும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசாங்கம். ஆனால் இது ஒன்றும் இலகுவான காரியமாக இருக்காது.
இதற்காக இலங்கை அரசு பெரிய விலைகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒன்றில் ஈரான் போன்ற மேற்குலகத்தால் வெறுக்கப்படும் நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க வேண்டியிருக்கும்.
அல்லது மேற்குலகம் கோருவது போன்று போர்க்குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்ற்ற விசாரணைகளுக்கு திறந்த மனதுடன் இணங்க வேண்டியிருக்கும்.'
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் செய்யக் கூடிய நிலையில் இலங்கை அரசு இல்லை.
எனவே இலங்கை அரசுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான நெருடல் நிலை தீர்வதற்கு இப்போதைக்கு வாய்ப்புகள் குறைவே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
9 hours ago