2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய கனவு கலைந்தது ஏன்?

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கே.சஞ்சயன்)

டுத்த பொதுநலவாய உச்சி  மாநாட்டை 2013ஆம் ஆண்டில் நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நழுவ விடாமல் பாதுகாத்த இலங்கை, 2018இல் பொதுநலவாய  விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்தும் முயற்சியில் தோல்வி கண்டுள்ளது.

சென்.கிட்ஸ் அன் நெவிஸ் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, அனைத்துலக இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசியல் வேறு, விளையாட்டு வேறு, இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று கணக்கிட முடியாது- எல்லாமே அரசியல் விளையாட்டுத் தான்.

இந்தப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு பெரும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதன் பின்னணியில் அரசியல் நலன்கள் இல்லாமல் இல்லை.

இதற்காக கோடி கோடியாகப் பணம் கொட்டப்பட்டது. எல்லாமே இப்போது வீணாகியுள்ளது.

சென்.கிட்ஸ் அன் நெவிஸ் தீவில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாகவே 160 பேர் கொண்ட பெரியதொரு அணியுடன் சென்று இறங்கியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வரலாற்றில் அதுதான் முதலாவது மிக மிக நெடுந்தூரப் பயணம்.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டு, டுபாயில் எரிபொருள் நிரப்பிக் கொண்ட அந்த விமானம் 23 மணிநேரம் பறந்து சென்.கிட்ஸ் தீவை அடைந்தது.

தனியானதொரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, 160 பேருடன் சென்று, சுமார் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டும் கிடைத்தது ஒன்றுமில்லை.

ஆனால், வெறும் 20 பேருடன் வந்திறங்கிய அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் அணி, இந்தளவுக்குச் செலவு எதையும் செய்யாமலேயே போட்டிக்கான வாய்ப்பை மிகச் சுலபமாகத் தட்டிக் கொண்டு போனது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா அணியில், நாமல் ராஜபக்ஷ, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா, அனார்க்கலி ஆகர்ஷா என்று பிரபலங்கள் பல இடம்பெற்றிருந்தனர் .

 இவர்களுடன் வர்த்தகப் புள்ளிகள், கலைஞர்களும் இடம்பிடித்திருந்தனர். களியாட்ட நிகழ்வுகள், இரவு விருந்துகள் என்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை மயக்கும் வித்தைகளையெல்லாம் இலங்கை அணி செய்து பார்த்தது.

ஆனாலும் 27 நாடுகளுக்கு மேல், ஒரு நாட்டைக் கூட மசிய வைக்க முடியவில்லை. இலங்கை குறைந்தபட்சம் 34 வாக்குகளை எதிர்பார்த்தது. ஆனாலும் அந்த எதிர்பார்ப்புக் கூட ஏமாற்றம் தான்.

கோல்ட்கோஸ்ட், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா நகரம்.  தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் மிகவும் பாதுகாப்பான இடமாக கோல்ட்கோஸ்ட் கருதப்படுகிறது.

அம்பாந்தோட்டை பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகளும் சாதகமாகவே இருந்தன. ஆனாலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்க இடமாக கோல்ட்கோஸ்ட் கணிப்பிடப்பட்டது. இது ஒரு காரணம், அம்பாந்தோட்டையின்  வாய்ப்பு பறிபோவதற்கு.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடக்கப் போகின்ற கொமன்வெல்த் மாநாட்டைத் தக்க வைத்துக் கொண்ட இலங்கைக்கு, இன்னும் 7 ஆண்டுகள் கழித்து நடக்கப் போகின்ற இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பறிபோனது ஏன்? இதற்குப் பின்னால்அரசியல் காரணங்கள் இருந்தனவா- இல்லையா? என்ற கேள்விகள் முக்கியமானவை.

ஏற்கனவே நான்குமுறை பொதுநலவாய போட்டிகளை நடத்தியுள்ள அவுஸ்ரேலியாவுக்கு நியாயமாகப் பார்த்தால் இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டது தவறு. போரினால் சீரழிந்துபோன இலங்கையைப் பொருளாதார ரீதியாக நிமிர்த்தி விடுவதற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். - இவ்வாறு தான் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

அம்பாந்தோட்டை சுனாமியால் பாதிக்கப்பட்ட நகரம். ஏற்கனவே கடும் வெப்பமும் வறுமையும் பாதிக்கும் இடம். அதனை அபிவிருத்தி செய்வதற்கு இந்தப் போட்டி வாய்ப்பாக அமையும் என்று இலங்கை அரசாங்கம் கூறியது.

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் விமானநிலையம், துறைமுகம் என்பன இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு கைகொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், இலங்கை அரசு அனுதாப வாக்குகளால் அம்பாந்தோட்டைக்கு வாய்ப்பைப் பெறுவதற்கு முயன்றது. அது பலிக்கவில்லை.

சிலவேளைகளில் வடக்கில் அல்லது கிழக்கில் எங்காவது இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை அரசாங்கம் கேட்டிருந்தால், கிடைத்திருக்கக் கூடும். போரினால் சீரழிந்த பகுதிகளை முன்னேற்றுவதற்கு எந்த நாடும் இடையூறாக நின்றிருக்காது. அப்படி நின்றிருந்தால் கூட, இந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் நிலை வந்திருக்காது.

அம்பாந்தோட்டையில் வசதி வாய்ப்புகளை உருவாக்கலாம் என்றால் ஏன், இன்னும் ஏழு ஆண்டுகளில் வடக்கு அல்லது கிழக்கில் அந்த வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியாது.

ஆனால், அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அதன் தேவை வேறு விதமாக இருந்தது.

அம்பாந்தோட்டையில் இருந்து புதியதொரு அரசியல் தளத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டது. நாமல் ராஜபக்ஷவை அடுத்த அரசியல் வாரிசாக முன்னிலைப்படுத்துவதற்கும் இந்தப் போட்டியை பயன்படுத்த அரசாங்கம் முயன்றது.

அவர் இந்தப் போட்டிக்கான வாய்ப்பைப் பெறும் நகர்வுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அம்பாந்தோட்டையில் இருந்து சென்.கிட்ஸ் அன் நெவிஸ் வரை அவரே முன்னிலை வகித்து வந்தார்.

இந்த வாய்ப்புப் பறிபோனதால் நாமலை அரசியலில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு சற்றுப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருத்து உள்ளது.

அதேவேளை இந்த வாய்ப்பு பறிபோனதற்கு அரசியல், பொருளாதார காரணங்கள் பல உள்ளன.

அடுத்த பொதுநலவாய  மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஆதரவளித்து- உறுதி செய்த இந்தியா கூட இந்தமுறை அம்பாந்தோட்டை வாய்ப்பு கைநழுவிப் போக காரணமாகி விட்டது.

கடந்த ஆண்டு பொநலவாய போட்டிகள் புதுடெல்லியில் நடைபெற்றன.  அந்தப் போட்டிகளுக்கான மைதானங்கள் சரிவர அமைக்கப்படாதது, இறுதிவரை கட்டுமானப்பணிகள் முடியாமல் இழுபறி ஏற்பட்டது, வீரர்களுக்குப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதது,  கட்டுமானப் பணிகளில் இடம்பெற்ற பெரும் ஊழல்கள் எல்லாமே பெரும் பாதகமாக அமைந்தன.

புதுடெல்லியைப் போன்றதொரு நிலை அம்பாந்தோட்டையில் ஏற்பட்டு விடக்கூடாது என்று பெரும்பாலான நாடுகள் கருதின.

ஏனென்றால் அம்பாந்தோட்டையிலும் போட்டிகளை நடத்துவதற்கான எந்தக் கட்டமைப்புமே இன்னமும் உருவாக்கப்படவில்லை. எல்லாமே வாக்குறுதி நிலையில் தான் உள்ளன.

வெறும் மாதிரி வடிவமைப்புகளையும், வரைபடங்களையும் காண்பித்து இலங்கையால் பொதுநலவாய உறுப்பு நாடுகளைக் கவர முடியவில்லை.

ஆனால் கோல்ட்கோஸ்ட் அவ்வாறு இல்லை. அது ஏற்கனவே ஒரு சுற்றுலா நகரம். அங்கு போதிய வசதிகள், வாய்ப்புகள் உள்ளன. அதை அபிவிருத்தி செய்வதும் இருக்கின்ற வசதிகளை அதிகரிப்பதும் தான் அவுஸ்ரேலியாவுக்கான வேலை.

ஆனால் அம்பாந்தோட்டைக்கு எல்லாமே 'அ' வில் இருந்து தொடங்கப்பட வேண்டியுள்ளது. போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற வசதிகள் சுத்தமோசம் என்று அம்பாந்தோட்டைக்கு ஒரு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இப்படியான நிலையில் 'றிஸ்க்' எடுப்பதற்கு கொமன்வெல்த் சம்மேளனத்தில் உள்ள நாடுகள் விரும்பவில்லை.

இந்தியாவே முன்னுதாரணமாக்கப்பட, இலங்கையின் தலையில் விழுந்தது அடி அல்ல இடி.

இதைவிட யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொள்வது போன்ற ஒரு காரியத்தை இலங்கையும் செய்தது.

மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் முப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதே அந்த விவகாரம்.  கடந்த முதலாம் திகதி தொடக்கம் சூரியவெவ மைதானம் இராணுவத்திடமும், பல்லேகல மைதானம் கடற்படையிடமும், ஆர்.பிறேமதாச மைதானம் விமானப்படையிடமும் ஒப்படைக்கப்பட்டன.

இவற்றை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட்டது. கிரிக்கெட் சபையிடம் இந்த மைதானங்களைப் பராமரிக்கப் போதிய நிதி வசதி இல்லை என்பதால் தான் அவை படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நியாயம் கூறப்பட்டது.

ஆனால் அது இந்தளவுக்குப் பாரதூரமான விவகாரமாகும் என்றோ, பொதுநலவாய  கனவுக்கு ஆப்பு வைக்கும் என்றோ அரசாங்கம் நினைக்கவில்லை.

இந்த ஒப்படைப்பை இரண்டு வாரங்கள் கழித்துச் செய்வதால் என்ன பாதிப்பு நிகழ்ந்திருக்கப் போகிறது? அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்தது தான் மிச்சம்.

இலங்கையின் முதன்மை விளையாட்டான கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் மைதானங்களையே பராமரிக்க முடியால் படையினரிடம் ஒப்படைக்கப்படும் நிலையில், பொதுநலவாயப் போட்டிக்காக மிகப்பெரிய விளையாட்டுக் கிராமத்தை, மைதானங்களை, அரங்குகளை எவ்வாறு அமைக்க முடியும், எப்படிப் பராமரிக்க முடியும் என்ற கேள்வி எழுந்ததில் நியாயம் உள்ளது.

இதுவும் கூட வாய்ப்பு பறிபோனதற்கு ஒரு காரணமதாக இருக்கலாம்.

கடைசியாக இந்தப் போர்க்குற்றச்சாட்டு விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் மட்டுமன்றி அடுத்து இலங்கையில் நடக்கப் போகும் மாநாட்டிலும் எதிரொலிக்கப் போகிறது.

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுதல் அல்லது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

ஆனாலும் இது விளையாட்டு. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை, இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது என்று கூறியிருந்தார் நாமல் ராஜபக்ஷ. அவ்வாறு இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை என்று கூறுவதை முற்றிலும் சரியானதென்று ஏற்க முடியாது.

ஏனென்றால் ஏற்கனவே நிறவெறிக் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டினால், தென்னாபிரிக்கா - சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் தடுக்கபட்ட வரலாறு உள்ளது.

ஆனால் போர்க்குற்றச்சாட்டுகளால்  அம்பாந்தோட்டையில் பொதுநலவாய  போட்டியை நடத்தும் வாய்ப்பு பறிபோகாது என்றே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை அரசின் தரப்பினர் அனைவரும் நம்பியிருந்தனர்.

நாமல்ராஜபக்ஷ  சென்.கிட்ஸ் அன் நெவிசில் அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றில்,

"பேர்த்தில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், 2013 இல் அடுத்த  மாநாட்டை இலங்கையில் நடத்துவதென்று முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் போர்க்குற்றசாட்டுகள் தொடர்பாக எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று தெளிவாகியுள்ளது.

பேர்த் மாநாட்டில் பங்கேற்ற  தலைவர்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல கடினமான கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்குத் திருப்திகரமான பதில்களை எனது தந்தையார் வழங்கியிருந்தார். அவர் தெளிவான பதிலைத் தெரிவிக்காது விட்டிருந்தால் அடுத்த உச்சி மாநாட்டை நாங்கள் இலங்கையில் நடத்தியிருக்க முடியாது.

அது பொதுநலவாய மாநாட்டுக்குப் போதுமானதாக இருந்ததால் பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் போட்டிகளுக்கும்  போதுமானதாக இருக்க வேண்டும்.

ஆகவே, 2018 இல் அம்பாந்தோட்டையில் போட்டியை நடத்துவதற்கு போர்க்குற்றச்சாட்டுகளால் எந்தப் பிரச்சினையும் வராது...“ என்று கூறியிருந்தார் நாமல்.

இப்போது அம்பாந்தோட்டையில் போட்டிகள் நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.

ஆனால், இதற்கும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பில்லை என்று எந்த வகையிலும் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேர்த்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜூலியா கிலாட்டும் சந்தித்த போது, கொமன்வெல்த் போட்டிக்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அந்த மாநாட்டைக் களமாக பயன்படுத்துவதில்லை என்று ஓர் இணக்கம் காணப்பட்டது.

எனினும்  மாநாட்டின் நிறைவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  அம்பாந்தோட்டைக்காக ஆதரவு கோரினார். அப்படி வாய்ப்புக் கேட்டபோதும், அம்பாந்தோட்டையில் கொமன்வெல்த் போட்டியை நடத்த முடியாமல் போய் விட்டது.

இதற்கு என்ன காரணம்- எதற்காக அம்பாந்தோட்டைக்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவில்லை- இந்தக் கேள்விகளுக்குப் பல காரணங்களைக் கூறலாம். இவை எல்லாம் சேர்ந்தே அரசின் கனவை தகர்த்து விட்டன.

சர்வதேசப் போட்டி ஒன்றை நடத்தும் இலங்கையின் வாய்ப்பை கோல்ட்கோஸ்ட் தட்டிப் பறித்ததாக கூறுவதை விட, தங்கத் தாம்பாளத்தில் வைத்து அது கொடுக்கப்பட்டது என்று கூறுவதே பொருத்தம்.

பலவீனமான அடித்தளத்தை வைத்து ஒரு மாபெரும் கட்டடத்தை நிறுவ முடியாது என்பதை அரசாங்கம் இனிமேலாவது உணர வேண்டும்.


  Comments - 0

 • thivaan Tuesday, 15 November 2011 10:45 AM

  மனித உரிமை மீறல் போர் குற்றம் என்பது சாதாரண விடயம் அல்ல.

  Reply : 0       0

  Mohd Tuesday, 15 November 2011 08:54 PM

  இங்கு நீங்கள் சொல்வதைப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. ஆனால் ஸ்ரீலங்காவின் வாக்குறுதியை யாரும்நம்ப தயாராக இல்லை என்பதையும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் வெற்றி பெறுவோம் என்று நினைப்பதும் தவறு என்பதையும் இங்கு உணர்த்தப்படுகின்றது.

  Reply : 0       0

  Jay Wednesday, 16 November 2011 02:56 AM

  முதலில் ஆசிய விளையாட்டுப்போட்டியை நடத்த முயற்சிக்கட்டும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .