2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பிணையில் வந்தார் கனிமொழி: கரடுமுரடான பாதையில் பயணிக்கும் காங்கிரஸ் உறவு

A.P.Mathan   / 2011 நவம்பர் 29 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அலைக்கற்றை ஊழல் வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார் தி.மு.க. ராஜ்ய சபை எம்.பி. கனிமொழி. இவர் பிணையில் வந்திருப்பது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து நெருக்கடி கொடுக்கவே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற மானேஜர்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யூ.பி.ஏ) அரசின் இரண்டாவது அத்தியாயத்தில் காங்கிரஸ் கட்சி பலமாகவே திரும்ப ஆட்சிக்கு வந்தது. அதாவது 2004இல் ஆட்சி அமைத்த போது கூட்டணிக் கட்சிகளின் தயவு எவ்வளவு தேவை என்று இருந்ததோ அதை விட குறைவான தேவையே போதும் என்ற துணிவுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைத்தது அக்கட்சி.

அதைப்போல், முதல் கட்டத்தினைவிட கொஞ்சம் நம்பிக்கையுடனேயே அரசை நடத்தினார் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மன்மோகன்சிங். அதனால், முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர்களான சரத்பவார், மம்தா பானர்ஜி, கருணாநிதி உள்ளிட்டோருடன் முக்கிய பிரச்சினைகளில் கூட பெரிய அளவில் ஆலோசனை நடத்தவில்லை.

"எங்களுக்கு பலம் இருக்கிறது. ஆகவே நீங்கள் உப்புக்குச் சப்பாணி போல் எங்களுடன் இருந்தால் போதும்" என்ற "பெரியஅண்ணன்" நிலைப்பாட்டிலேயே காங்கிரஸ் மேலிடத் தலைமை உறுதியாக இருந்தது. குறிப்பாக யூ.பி.ஏ-2 காலத்தில் காங்கிரஸின் வருங்கால தலைவர் என்று போற்றப்படும் ராகுல் காந்தி கட்சிக்குள் அதிக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

அவரோ மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு இந்த கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கொடுப்பதை பணயமாக வைத்து அக்கூட்டணிக் கட்சிகள் செல்வாக்குள்ள மாநிலங்களான மேற்குவங்கம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என்றே கணக்குப் போட்டார். ஏனென்றால் இந்த மூன்று தலைவர்களிடம்தான் காங்கிரஸ் இந்த மாநிலங்களில் தங்கள் செல்வாக்கை இழந்துள்ளன.

இப்படியொரு சூழ்நிலையில்தான் முதலில் தி.மு.க.வை கையாள காங்கிரஸ் கட்சிக்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கையில் கிடைத்தது. அந்த ஊழல் விவகாரம் வெடித்தவுடனேயே "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றே காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்கள். "ஸ்பெக்ட்ரம் ஊழல் தி.மு.க.விற்கு சொந்தமானது. அதில் காங்கிரஸுக்கு எந்த பங்கும் இல்லை" என்பது காங்கிரஸின் போக்காக சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்தது.

ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விலையை நிர்ணயிப்பதில் சிதம்பரமும் ராஜாவுடன் பங்கேற்றார் என்ற ஆதாரங்கள் வெளிப்பட்டவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து காங்கிரஸையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை அக்கட்சி தலைவர்களுக்கு வந்தது. இப்படிப்பட்ட நேரத்தில்தான், ஆறு மாதங்கள் கழித்து தி.மு.க. ராஜ்ய சபை எம்.பி. கனிமொழி - ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார்.

கனிமொழி ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் 63 தொகுதிகளைப் பெற காங்கிரஸ் கட்சி பல யுக்திகளை கையாண்டது. குறிப்பாக தொகுதி பங்கீடு பற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அணியினர் தி.மு.க. தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

அங்குள்ள "கலைஞர் டி.வி" அலுவலகத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், மகளும் ராஜ்ய சபை எம்.பி.யுமான கனிமொழியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இப்படி தி.மு.க.வின் கையை முறுக்கி 63 சட்டமன்ற தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ் கட்சி. அதன்பிறகு தேர்தலில் தி.மு.க. தோற்று, அ.தி.மு.க. வெற்றி பெற்றதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச் சொன்னார் சோனியா காந்தி. 2-ஜி வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க.விடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் ராகுல்காந்தியுடையது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சோனியா காந்தி - அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு வாழ்த்துச் சொன்னார். அத்துடன் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான கனிமொழி -திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த ஆறு மாத காலமாக கனிமொழிக்கு பிணை வழங்க தி.மு.க.வே தனிப்பட்ட முறையில் சட்டப்போராட்டத்தை நடத்தியது என்றே சொல்ல வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ "ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தி.மு.க. அமைச்சர் ராஜாவை கைது செய்திருக்கிறோம்" என்றது.

அதேபோல் பிரதமர் மன்மோகன் சிங் கூட இது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. கையிலெடுக்கும் போதெல்லாம் "ஊழலுக்கு எதிராக நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம். எவ்வளவு உயர்வான பதவியில் இருந்தாலும் அதுபற்றி கவலையில்லை" என்றே கூறி வந்தார். காங்கிரஸின் காரியக்கமிட்டி கூட்டத்தில் ஊழலுக்கு எதிரான ஐந்து அம்ச திட்டங்களை சோனியா காந்தியே அறிவித்தார்.

இதெல்லாம் "காங்கிரஸுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை. தி.மு.க. செய்த ஊழலுக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்" என்ற ரீதியிலேயே போனது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரின் பேச்சுக்கள் எல்லாம் தி.மு.க. மீதான சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்கு மேலும் உரம் போட்டது. அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி போன்றோர் சிறையில் இருந்து பெயிலில் உடனடியாக வர விடாமல் இருப்பதற்கான "பப்ளிக் சென்டிமென்டை" வளர்க்க உதவி செய்தது.

இப்படி ஒரு போராட்டத்திற்குப் பிறகு வெளியே வந்துள்ளார் கனிமொழி எம்.பி. ஆகவே இனி தி.மு.க.வின் நிலைப்பாடு மத்திய அரசு விடயத்தில் கொஞ்சம் கறாராகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. "மத்திய அரசில் இருந்தால் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்" என்ற நினைப்பு கனிமொழி விடயத்தில் தி.மு.க.விற்கு பொய்த்துப் போனது. ஆகவே மத்திய அரசு விவகாரத்திலேயே காப்பாற்ற முடியாத நிலையில் மாநிலத்தில் நடக்கும் விடயங்களில் எப்படி இனி நமக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யப் போகிறது என்ற எண்ணம் தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் மனதிலேயே தோன்றியிருக்கிறது.

இதனால்தான் மத்திய அரசை எடுப்பது இப்போது கடுமையாகி இருக்கிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக இருக்கட்டும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை தொடர்பாக மத்திய அரசின் கடலோர காவல்படை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை கண்டிப்பதாக இருக்கட்டும்- காங்கிரஸ் எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் தீவிர கருத்துக்களில் எதிரொலிக்கிறது. அது மட்டுமல்ல முரசொலி மாறன் நினைவு தினத்தன்று சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் வழக்கமாக அஞ்சலி செலுத்துவார்கள்.

அது எப்போதும் தி.மு.க.வின் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் முதல் பக்கத்தில் வரும். ஆனால் இந்த முறை அந்தப்படங்கள் எல்லாம் இரண்டாம் நாள் கடைசிப் பக்கத்திலேயே வந்ததும் கவனிக்கத்தக்கது. கனிமொழி பிணையில் வந்த நிலையில் திகார் ஜெயிலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு "அதைப்பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை" என்று கூறியிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் என்றே ராஜா ஏற்கனவே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து டாக்டர் சுப்ரமண்யம்சுவாமி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு "நான் வாயைத் திறந்தால் பலர் சிக்குவர்" என்று ராஜா சொன்னதாக செய்திகளும் கசிந்தன.

இதுபோன்ற சூழ்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேட்டி, ராஜாவிடமிருந்து தி.மு.க. விலகிச் செல்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்படி நிகழ்ந்தால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா சொல்லப்போகும் விடயங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தி.மு.க. இப்போதே அறிவிப்பது போலிருக்கிறது. இது இந்த 2-ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கே பெரும் பிரச்சினையை எதிர்காலத்தில் உருவாக்கும். ஆகவே கனிமொழி பிணையில் வந்திருப்பது தி.மு.க-காங்கிரஸ் உறவில் மேலும் கரடுமுரடான அத்தியாயத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்றே எண்ண இடமிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .