Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 30 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே. சஞ்சயன்
நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்ற நினைவு தமிழ் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அரசாங்கம் கருதினாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதனை நினைவுபடுத்தியுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திறப்பு விழா கடந்த 27ஆம் திகதி தான் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நவம்பர் 27 என்றதும் வீட்டை விட்டு வெளியே வராமல் கலங்கியபடி இருந்த காலத்தை மறக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மாவீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நாளுக்காக, ஒரு வாரத்துக்கு குழந்தைகளைப் பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர் என்றும், அந்த யுகம் இப்போது மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளால் பிரகடனம் செய்யப்பட்ட மாவீரர் நாளை இப்போது இலங்கையில் எங்குமே பகிரங்கமாக அனுஷ்டிக்க முடியாது.
அவசரகாலச்சட்டம் இல்லாது போனாலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து எந்த நிகழ்வையும் தனிப்படவோ பொதுப்படையாகவோ செய்ய முடியாது. முப்பதாண்டு காலப்போரின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போரிட்டு மடிந்தனர். அவர்களின் நினைவாகவே இந்த மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வில், இருந்து தமிழ்மக்களை அந்நியப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் இன்னமும் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்ட பின்னர், அவர்களால் நிறுவப்பட்ட போர் நினைவுச்சின்னங்கள் படையினரால் அழிக்கப்பட்டன. புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் அமைந்த துயிலும் இல்லங்கள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. கோப்பாயில் ஆயிரக்கணக்கான கல்லறைகள் அமைந்திருந்த துயிலும் இல்லத்தை அழித்து விட்டு அதன்மீது தான் 51வது டிவிசன் தலைமையகத்தை அமைத்துள்ளது இராணுவம்.
விடுதலைப் புலிகளின் எந்தவொரு சின்னமோ அடிச்சுவடோ எதிர்காலத்தில் தெரிந்து விடக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் மிகத் தீவிரமாகவே இருந்து வருகிறது.
விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிப்பது எதிர்காலத்தில் மற்றொரு போருக்கு வழிவகுத்து விடலாம் என்ற அச்சம் அரசுக்கு இருக்கிறது. அதனால் தான், கடந்தகால வரலாற்றை மறைக்க முனைகிறது.
ஆனால், இந்த முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியைத் தரும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மூன்று மாவீரர் தினங்கள் வந்து போயுள்ளன.
இம்முறை வடக்கு கிழக்கில் முழுமையான இராணுவ சூழலுக்குள்ளேயும் அங்காங்கே மாவீரர்களை நினைவு கூரும் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
காரைநகரில் உள்ள ஆலயங்களில் மணி ஒலி எழுப்பக் கூடாது, தீபம் ஏற்றவோ, ஒலிபெருக்கி போடவோ கூடாது என்று கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டது.
தமிழ்மக்கள் மாவீரர் தினத்தை நினைவில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, படையினருக்கு அது நன்றாகவே நினைவில் உள்ளது.
இப்படியானதொரு காரியத்தின் மூலம் கடற்படையினரும் மாவீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடிந்ததா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் பொதுமக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது மட்டும் உண்மை. அதைவிட இந்தத் தடை மூலம் மாவீரர் நாளை நினைவுபடுத்தி விட்டது தான் மிச்சம்.
மாவீரர் நாளுக்கு முன்னதாகவே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அன்றைய நாள் வழக்கமானதொரு நாள் தான் என்றாலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக கூறியிருந்தார் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகஹிந்த ஹத்துருசிங்க.
மாவீரர் நாளில் முன்னரைப் போன்று எந்தவொரு சம்பவமும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்பது படையினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எந்தவொரு நினைவு கூரும் நிகழ்வும் நடந்தேறி விடக் கூடாது என்பதற்காகத் தான் பாதுகாப்பை அதிகரித்தனர்.
இந்தப் பாதுகாப்பு அதிகரிப்புகளையெல்லாம் மீறி யாழ்.பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளிலும் வேறுபல இடங்களிலும், மாவீரர்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டதாகவும், மணிகள் ஒலித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
உண்மையில் சொல்லப் போனால், போர் முடிவுக்கு வந்த பின்னர், இம்முறை மாவீரர் தினம் அழுத்தமானதொன்றாகவே அமைந்துள்ளது.
கடந்த ஆண்டில் கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளில் தீபம் ஏற்றியவர்கள் பலர் யாழ்ப்பாண நகரில் தாக்கப்பட்டனர். வீடுகளின் முன்பாக ஏற்றப்பட்ட தீபங்கள் பிடுங்கியெறியப்பட்டன.
அது ஒரு இந்துகளின் மரபுசார்ந்த ஒரு வழிபாடு. இதுபோன்ற நிகழ்வுகள், தடைகள், மூலம் அரசாங்கமும் படைத்தரப்பினரும் தமிழ் மக்களின் வெறுப்பைத் தான் சம்பாதிக்க நேரிடுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து போராடி உயிரிழந்தவர்கள் அரசாங்கத்தைப் பொறுத்தவரை தீவிரவாதிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினரைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவர்கள்.
தாய்மாருக்குப் பிள்ளைகள், மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்கு தந்தை, தம்பி, தங்கைமாருக்கு அண்ணன், இப்படியான உறவுப் பிணைப்பை எந்த சட்டமும் அறுத்து விட முடியாது.
இவர்களால் நிச்சயம் இறந்து போனவர்களை மறந்து போய் விடவோ அவர்களை நினைவு கொள்ளும் வழக்கத்தைக் கைவிட்டு விடவோ முடியாது.
போரில் கொல்லப்பட்டவர்கள் ஒரு சில நூறு பேர்களல்ல. 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள். இந்த 25ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் குடும்பங்கள், உறவுகள் என்று பார்த்தால், அது இலட்சக்கணக்கில் வரும்.
தடைகள் விதிக்கப்பட்டாலும் இவர்கள் தமது உறவுகளை இந்த நாளில் நினைவு கொள்ளாமல் இருந்திருக்கமாட்டார்கள். எனவே, தடைகளின் மூலம் சம்பாதித்துக் கொள்வது வெறுப்பையே தான்.
எதுவுமே அடக்கும் போது தான் இன்னும் இன்னும் வீரியமாக வெளிக் கிளம்பும் என்பது இயற்கையின் விதி. இந்த விடயத்தில் அடக்குதல் என்பது இன்னொரு வெடித்தலுக்கான காரணமாகி விடக் கூடாது.
இப்போது நல்லிணக்கம் பற்றி அதிகளவில் பேசப்படுகிறது. போரில் எந்த மீறல்களும் இடம்பெறவில்லை என்று கூறி வந்த காலம் மாறிவிட்டது. மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம், அவ்வாறான மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவர் என்று கூறுகிறது அரசாங்கம்.
இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி. நல்லிணக்கம் என்பது பல படிமுறைகளைத் தாண்டி வரவேண்டியது. அதற்கு விட்டுக்கொடுப்புஇ சகிப்புத்தன்மை, நம்பிக்கை என்று பல படிக்கட்டுகளில் இறங்கித் தான் நல்லிணக்கத்தை எட்ட முடியும்.
இறந்தோரை நினைவு கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது கூட நல்லிணக்கத்துக்கான ஒரு தடையாக அமையலாம்.
போரில் இறந்து போனவர்களை நினைவு கொள்வது, நடுகற்கள் மூலம் நினைவுபடுத்து என்பன தமிழர்களின் மரபு.
தன்னுடன் போரிட்டு மடிந்த எல்லாள மன்னன் நினைவாக துட்டகெமுனு நினைவுச்சின்னம் அமைத்த வரலாறு இலங்கையிலேயே உள்ளது. அது நல்லிணக்கத்துக்கு துட்டகெமுனு கொடுத்து உயர்ந்தபட்ச பெறுமானம்.
உலக அளவில் கூட, இந்த மரபு உள்ளது. எதிரியாயினும், போரில் இறந்தவர்களுக்கு மதிப்புக் கொடுக்கும் வழக்கம் எங்கும் உள்ளது. போர் விதிகள் பற்றிய ஐ.நா சாசனங்களில் கூட இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
இப்போது அரசாங்கம் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறத் தயார் என்று கூறுவதால் மட்டும் நல்லிணக்கம் வந்து விடாது. போரில் மரணமானவர்களை நினைவு கொள்வதற்கான தடைகளை அகற்றுவது, தமிழ்மக்களை இன்னும் நெருங்கி வர வைக்கும்.
அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய ஜேவிபி உறுப்பினர்களுக்காக கார்த்திகை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ, விளக்கீட்டுக்குக் தீபமேற்றினால் கூட நெருக்கடிகள் வருகின்றன. இது வடக்கே ஒரு நீதி, தெற்கே ஒரு நியாயம் என்று கூறுவதற்கு வழிவகுக்கும்.
போரின் வெற்றிக்குப் பின்னர், இனி எல்லைகள் ஏதும் கிடையாது. நாட்டை ஒன்றுபடுத்தி விட்டோம் என்று கூறியது அரசாங்கம். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் முடியவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கூறியுள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதும், பிரிவினைவாதம் வலுவிழந்து போகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக பிரிவினைவாதத்தை தோற்கடித்து விட்டதாக அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் போர் மூலம் பிரிவினைவாதத்துக்கு முடிவு கட்டப்படவில்லை என்பதை அரசாங்கம் ஏற்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களைப் பிரிவினைவாதத்தில் இருந்து விலக்குவதற்கு அதிவேக நெடுஞ்சாலைகளால் முடியாது. அதற்குத் தேவைப்படுவது நல்லிணக்கம் மட்டும் தான்.
இறந்தோரை நினைவு கொள்வதைத் தடுப்பதன் மூலம் சாதிக்கக் கூடியதை விடவும், மிகப்பிரமாண்டமாகச் சாதிப்பதற்கு நல்லிணக்கம் கைகொடுக்கும்.
நல்லிணக்கத்தை உருவாக்கி விட்டால், இன்னொரு போர் பற்றிய அச்சம் ஏதும் கொள்ள வேண்டியதில்லை. எனவே, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு தடையான விடயங்களை மடியில் கட்டிக் கொள்ளும் போக்கில் இருந்து அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
1 hours ago
8 hours ago
19 Oct 2025
19 Oct 2025
asker Thursday, 01 December 2011 03:55 PM
புலிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மாவீரர் தினத்தன்று குளிர் காய முடியாது. ஆகவே புலிகளின் உறவினர்கள் தமது வீடுகளில் மணி ஒலிக்கலாம் தீபம் ஏற்றலாம் ...... புலிகளை மறுபடியும் வளரவிட முடியாது.
Reply : 0 0
Dumeel Dum Saturday, 03 December 2011 07:24 PM
மூன்று தசாப்தங்களாக பட்ட துன்பம் போதுமே போதும் ......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
19 Oct 2025
19 Oct 2025