2021 ஜனவரி 20, புதன்கிழமை

தமிழ்ப்பெண் இராணுவத்தினரை தமிழ்ச் சமூகம் ஏற்குமா?

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}-கே.சஞ்சயன்

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் முதன் முதலாக 109 தமிழ்ப் பெண்கள் கடந்தவாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் நிலைகொண்டுள்ள 6ஆவது பெண்கள் படைப்பிரிவில், இவர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்வு பெருமெடுப்பிலான பிரசாரங்களுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது.

வன்னியில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பின் மூலம் 18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட 350 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அதில் 240 பேர் மருத்துவ சோதனைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். மருத்துவ சோதனைகளிலும் தேறிய 109 பெண்களே கடந்தவாரம் தொண்டர் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப்பரிவில் தமிழ்ப் பெண்கள் எவருமே இருக்கவில்லை. இப்போது தான் முதல் முறையாக தமிழ்ப் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இது
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அரசாங்கம் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

அதேவேளை, இந்த நடவடிக்கை குறித்து பலரும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவம், பெரும்பாலும் சிங்களவர்களையே கொண்டது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. குறைந்தளவிலான முஸ்லிம்களும், விரல் விட்டு எண்ணிவிடத்தக்க தமிழர்களுமே இலங்கை இராணுவத்தில் இருந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தில் அல்லது கடற்படை, விமானப்படையில் உயரதிகாரிகளாக இருந்த தமிழர்கள் பலரும், புலிகள் தொடர்பான அச்சத்தினால் வெளியேறினர் அல்லது, அவர்களையும் புலிகளாகவே பார்க்கும் கெடுபிடிகளால் வெறுத்துப்போய் விலகிக் கொண்டனர்.

இதனால், போரின் ஆரம்ப காலங்களில் இலங்கை இராணுவத்தில் தமிழ் அதிகாரிகள் சிறியளவில் இருந்த போதிலும், கடைசிக்கட்டத்தில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவர்களாக அவர்கள் குறைந்து போயினர்.

இனரீதியாக கூர்மைப்படுத்தப்பட்டிருந்த போரில், இராணுவம் அதிகம் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிட்டதற்கு, முற்றுமுழுதாக அது சிங்கள மயப்படுத்தப்பட்டிருந்ததும் ஒரு காரணம். போரில் இராணுவம் எதிர்கொண்டது முற்றிலும் தமிழர்களான புலிகளை என்பதும், புலிகள் எதிர்கொண்டது முற்றிலுமான சிங்களவர்களைக் கொண்ட இராணுவமாக இருந்தது என்பதாலும், மீறல்கள் அதிகளவில் இடம்பெற வாய்ப்பாகியது.

அதைவிட, போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் எங்கும் சிங்களம் பேசும் இராணுவத்தினர் வியாபித்திருந்தது, தமிழர்களிடத்தில் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இன்றும் கூட இது ஒரு சர்வதேச அளவில் பேசப்படும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

வடக்கில் மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத்தினரின் தலையீடுகள் உள்ளதான குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்தாலும், அதை அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஏற்கத் தயாராக இல்லை. இந்தச் சிக்கலான நிலைமைக்குக் காரணம், முற்றிலும் சிங்களவர்களைக் கொண்ட இராணுவம் தான் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது.

அரசாங்கம் போரில் வெற்றி பெறுவதற்கு தனிச்சிங்களவர்களைக் கொண்ட இராணுவம் தேவைப்பட்டது. ஆனால், அமைதியை வென்றெடுப்பதற்கு – தமிழர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அந்த தனிச்சிங்கள இராணுவத்தினால் முடியாது என்பதை அரசாங்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். அதனடிப்படையில் தான், இராணுவத்தில் இணைய தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சொல்கிறது.

ஆனாலும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மீது பல்வேறு கேள்விகளும் இருக்கவே செய்கின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர்களுக்கு உரிமைகள், அதிகாரங்களை வழங்குவதற்குப் பின்னடித்து வரும், அதுசார்ந்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் காலம்கடத்தி வரும் அரசாங்கம், தமிழ்ப் பெண்களை படைகளில் சேர்ப்பதில் மட்டும் அக்கறை காட்டியுள்ளது என்பது குறித்து பெண்உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் பொலிஸ் சேவைக்கு சுமார் 1000 வரையான தமிழர்களை சேர்த்துக் கொண்டது. அதன் பின்னர், வன்னியில் சுமார் 2500 வரையான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இப்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத் தொண்டர் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்கள், இராணுவத்தில் எத்தகைய பங்கை வகிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது.

ஏனென்றால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அத்தகைய கேள்விகளை எழுப்ப வைக்கின்றன. மூன்று மாதகால சிங்களமொழிப் பயிற்சி உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்ற பின்னர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சொந்த இடங்களிலேயே சிவில் பணிகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இராணுவத்தில் பொதுவாக எந்தப் படைப்பிரிவுக்கும், சொந்த இடங்களில் தொடர்ந்து வேலை வழங்கப்படுவது வழக்கமும் இல்லை, அது சாத்தியமும் இல்லை.

இராணுவப் படைப்பரிவுகள் ஒருபோதும் ஒரேயிடத்தில் நிறுத்தப்படுவதில்லை. அவை காலத்துக்குக் காலம் இடமாற்றம் செய்யப்படும். அத்தகைய சூழ்நிலையில், இந்த வாக்குறுதி எவ்வாறு காப்பாற்றப்படும் என்பது கேள்வியாக உள்ளது.

அடுத்து, இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்படமாட்டாது என்றும் ஆனால், இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களும் தம்மை சிவில் பணிகளுக்காகவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவப் பயிற்சி பெற விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனாலும், இராணுவத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு இராணுவப் பயிற்சி, ஆயுதப்பயிற்சி என்பன அடிப்படையானவை. எந்தப் படைப்பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றேயாக வேண்டும்.

இராணுவப் பேச்சாளர் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ளதன் மூலம், அவர்களை இராணுவம் இன்னும் நம்பவில்லை என்றே கருத வைக்கிறது. ஏனைய படையினரைப் போன்று இவர்களையும் சரிசமமாக நடத்துவதற்கு தயாரில்லாத அரசாங்கம், இதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று எவ்வாறு நம்புகிறது என்று புரியவில்லை. அடுத்து, இராணுவத்தில் தமிழ் ஆண்களுக்கு வாய்ப்பளிக்க முன்னர் பெண்கள் தெரிவு செய்யப்பட்டதும், சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறது. இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்கள், பலருக்கு இராணுவத்தில் இணையும் ஆர்வம் இருந்திருக்கவில்லை. அவர்களின் குடும்பச் சுமையும், கணிசமான சம்பளம் கிடைக்கும் என்று இராணுவத்தரப்பில் காட்டப்பட்ட ஆசைவார்த்தைகளும் தான் அவர்களை இணைய வைத்துள்ளன.

ஆட்சேர்க்கப்பட்ட பெண்களில் பலர், தந்தையை இழந்தவர்கள், தந்தையால் தொழில்செய்ய முடியாதளவுக்குப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபா சம்பளம், ஏனைய படிகள், வசதிகள் என்று காட்டப்பட்ட கவர்ச்சி, இராணுவத்தின் பிரசாரங்களுக்கு வசதியாகிவிட்டது. ஆனால், இவர்கள் இராணுவத்தின் கடைநிலைச் சிப்பாயாகவே காலத்தைக் கழிக்க முடியும். இவர்களால் இராணுவத்தில் அதிகாரம்மிக்க பதவிகளைப் பெற முடியாது.

இலங்கை இராணுவம் நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையை வெளியிடுவதானால், தமிழர்களை அதிகாரம்மிக்க பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டும். அதற்கு இலங்கை இராணுவம் இன்னமும் தயாராகவில்லை.

இந்தப் பெண்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டதன் மூலம், இலங்கை இராணுவம் தன் மீதுள்ள சில கறைகளை - சிங்கள இராணுவம் என்ற பெயரை கழுவிக்கொள்ளப் பார்க்கிறது. பலரும் எதிர்பார்ப்பது போன்று இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் உடனடியாக அதை செய்துவிட முடியாது. இந்த ஆட்சேர்ப்பையும் – இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களையும் தமிழ்ச் சமூகம் எந்தளவுக்கு அங்கீகரிக்கும் என்பதைப் பொறுத்தே, அது நடைமுறைச் சாத்தியமாகும்.

தமிழ்ச் சமூகம் இராணுவத்தில் சேர்ந்த தமிழ்ப் பெண்களை, சிங்கள இராணுவத்தின் ஓர் அங்கமாகவே பார்ப்பார்களாயின், அரசாங்கத்தின் இந்த முயற்சியால் எந்தப் பெறுபேற்றையும் அடைய முடியாது.

அது அவர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் தனிமைப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .