2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வடக்கு முதலமைச்சர் பதவி; கருகிப்போன கனவுகள்

A.P.Mathan   / 2013 ஜூலை 31 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
வடக்கு மாகாணசபைத் தேர்தல் களம் வேட்பாளர் பட்டியல்கள் சமர்ப்பிப்புடன் இந்தவாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல்கள் பலரது எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் தகர்த்து விட்டுள்ளதாகவே தெரிகிறது.
 
வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்ற கனவுடன் இருந்த பலரையும், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பலரையும் இந்தத் தேர்தல் வெகு தொலைவுக்குத் தள்ளிவிட்டது தான் முக்கியமானது.
 
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே, எவரும் வேட்பாளர்கள் குறித்து அலசவோ ஆராயவோ இல்லை. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்று தான் பேசப்பட்டது.
 
அவ்வாறு பேசப்பட்டவர்களில் அரசதரப்பில், கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தயா மாஸ்டர் ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளராக கனவு கண்டவர்கள் அல்லது அவ்வாறு எதிர்வு கூறப்பட்டவர்கள் பலர். மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், பேராசிரியர் சிற்றம்பலம், சி.வி.கே.சிவஞானம், ந.வித்தியாதரன் என்று பலர் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட விரும்பினர், அல்லது அவ்வாறு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
 
ஆனால் கடைசி நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுமே ஆலோசிக்கப்பட்டனர். அவர்களில், மாவை சேனாதிராசா போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள, நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஒருமனதாகத் தெரிவானார்.
 
முதலமைச்சர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் அல்லது ஊடகங்களால் எதிர்வு கூறப்பட்டவர்களில், சி.வி.கே.சிவஞானம் மட்டுமே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கின்றனர்.
 
எனினும், வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஊடகவியலாளர் வித்தியாதரனும், கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கழற்றி விடப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் கனவில் இருந்தவர்களை அல்லது அவ்வாறு கனவு காண வைக்கப்பட்டவர்களை ஓரங்கட்டி விட்டு, அத்தகைய கனவைக் கொண்டிராத ஒருவரை போட்டிக்களத்தில் இறக்கி விட்டுள்ளது.
 
இந்தத் தேர்தலில் இவர் தான் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் என்று ஒருவரை நிறுத்தும் கட்சியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கப் போகிறது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சி.வி.விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளர் என்று களமிறக்கியுள்ளது. ஆனால் அரசதரப்பு அவ்வாறு யாரையும் முதலமைச்சர் வேட்பாளர் என்று களமிறக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
 
யாரை தமது முதலமைச்சராகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற வடக்கு மக்களின் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பறித்து விட்டதாக, அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளதுடன், தாம் அவ்வாறு யாரையும் முன்நிறுத்தப் போவதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளார்.
 
எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாரையுமே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமலேயே போட்டியில் குதிக்கப் போகிறது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போட்டியில் குதித்திருப்பாரேயானால், நிச்சயமாக அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டிருக்காது. அவரையே முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து முன்னிலைப்படுத்த முயன்றிருக்கும்.
 
இப்போதைய சூழலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், ஈபிடிபியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசாவே யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் யாழ்.மாவட்ட முதல்மை வேட்பாளரே தவிர, வடமாகாணசபைத் தேர்தலுக்கான முதன்மை வேட்பாளரோ, முதல்வர் பதவிக்கான வேட்பாளரோ அல்ல.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியுள்ள முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இணையாக, போட்டியைக் கொடுக்க கூடிய ஒருவரை அரசதரப்பினால் போட்டியில் நிறுத்த முடியாதுள்ளதால், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரை நிறுத்தவில்லை என்று அரசதரப்பு ஒதுங்கிக் கொண்டுள்ளது.
 
இந்தக் கட்டத்தில், சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பதிலாக, வேறோரு அரசியல்வாதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக முன்னிலைப்படுத்தியிருந்தால், நிச்சயமாக டக்ளஸ் தேவானந்தாவும் அத்தகைய வேட்பாளராக களமிறங்கியிருப்பார்.
 
கடந்தவாரம் இதே பத்தியில் குறிப்பிட்டதைப் போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியுள்ள சி.வி.விக்னேஸ்வரனால், அரசதரப்புக்கு வேட்பாளர்கள் பற்றிய தீர்மானம், அதன் தேர்தல் மூலோபாயம் எல்லாவற்றையுமே மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போலவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஈபிடிபி கூட்டணியின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கனவு கண்டவர்களும் அவ்வாறு ஊடகங்களால் எதிர்பார்க்கப்பட்டவர்களும் ஒட்டுமொத்தமாகவே தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
 
அமைச்சர் பதவியை துறந்து விட்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று நெடுங்காலமாகக் கூறிவந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
 
ஒருகட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதனை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு அரசாங்கம் முன்னிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஊடகப் பேச்சாளராக இருந்து, அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தயா மாஸ்டரை (இவராகச் சென்று இணையவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்) முதலமைச்சர் வேட்பாளராக அரசதரப்பு நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகின.
 
இவர்களைத் தவிர, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனுக்குக் கூட முதலமைச்சர் கனவு இருந்தது தான். ஆனால், இவர்களில் எவருமே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. கே.பி தேர்தலில் போட்டியிடவே மறுத்து விட்டார். தயா மாஸ்டர், நேர்முகத் தேர்வு வரை சென்று, தகுதியற்றவர் என்று நிராகரிக்கப்பட்டுள்ளார்.
 
அதுமட்டுமல்ல, ஆறு முன்னாள் போராளிகளை அரசதரப்பு தேர்தலில் நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. தயா மாஸ்டரைப் போலவே, விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினியையும் அரசதரப்பு வளைத்துப் போட முனைந்தது. அவர் ஒதுங்கிக் கொண்டதால், கடைசி நேரத்தில் தயா மாஸ்டர் எதிர்கொண்டதைப் போன்ற ஏமாற்றத்தை தவிர்த்துக் கொண்டார்.
 
வெற்றிபெறத் தகுதியானவர்களை மட்டுமே யாழ்ப்பாணத்தில் தமது பட்டியலில் சேர்த்துக் கொண்டதாக, அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷவும், சுசில் பிறேம் ஜெயந்தவும் குறிப்பிட்டுள்ளதானது, தயா மாஸ்டர் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.
 
முன்னாள் போராளிகளை அரசதரப்பு வேட்பாளர் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக முன்னர் கூறப்பட்டு வந்த போதிலும், அவர்களில் யாரையுமே சேர்த்துக்கொள்ளவில்லை. எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அரசதரப்பு இன்னமும் வெளிப்படுத்தவும் இல்லை. இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளர் ஒதுக்கீடு, வேட்பாளர் தெரிவு என்று இரண்டு கண்டங்களை வெற்றிகரமாகத் தாண்டி விட்டது. அடுத்து பிரசாரம், தேர்தல் ஆகிய கண்டங்களை தாண்டினால் மட்டும் போதாது.
 
மாகாணசபைத் தேர்தலில் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பலம் கிடைத்தாலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு கண்டம் இருக்கத் தான் செய்யும். ஏனென்றால், இந்தத் தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்களும், மருத்துவர்கள், சட்டதரணிகள், அரசியல்வாதிகள் என்று முக்கிய பிரமுகர்கள் பலரும் போட்டியில் உள்ளனர்.
 
மாகாணசபையில் நான்கு அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்ற வரையறையுள்ள நிலையில், இவர்களில் வெற்றி பெறுபவர்களில் இருந்து அமைச்சர்களைத் தெரிவு செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
 
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுபோன்று நித்திய கண்டம் இருந்தாலும், ஆயுள் என்னவோ முழுமையானதாகவே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு, அவர்களை அறியாமலேயே இயக்கும் ஒரு சக்தியும், பொறுப்புணர்வும் தான் அந்தப் பலத்தைக் கொடுத்துள்ளது போலும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--