2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

யாருக்கு எதிராக சர்வதேச விசாரணை?

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடமாவது ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவே தெரிகிறது அதனை தடுக்க அரசாங்கத்திற்கு ஒரு வருட கால அவகாசம் இருந்த போதிலும் நாட்டில் நடப்பவற்றைப்பார்க்கும் போது அரசாங்கம் அதனை தடுத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.
அரசாங்கத்திற்கு அந்த நோக்கம் இருந்தால் ஐ.நா. மனித உரிமை பேரவை ஜெனிவாவில் கூடியிருக்கும் போதே பாதுகாப்புத் துறையினர் மனித உரிமை ஆர்வளர்கள் இருவரை கைது செய்திருக்க மாட்டார்கள். அவர்களை விடுதலை செய்துவிட்டு நீதிமன்றங்கள் மூலம் அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் தடைகளை போட மாட்டார்கள். எனவே தான் உள்நாட்டு தேர்தல் வெற்றிகளை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஆத்திரமூட்டி சர்வதேசத்திடமிருந்து பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ள முயற்சிக்கிறது என ஐக்கிய தேசிகட்சி கூறுகிறது.

இந்த சர்வதேச விசாரணை யாருக்கு எதிராக நடைபெறும்? இலங்கை அரச படைகளுக்கு எதிராகவா? அல்லது அரச படைகளுக்கும் அவற்றுக்கு கட்டளையிட்ட அரசியல் தலைவர்களுக்கும் எதிராகவா? அல்லது அவ் விருசாராருக்கும் (அதாவது பொதுவாக அரசாங்கத்திற்கும்) தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் எதிராகவா?

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நகல் பிரேரணைகளிலும் சர்வதேச விசாரணை என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதேயொழிய யாருக்கு எதிராக என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அரசாங்கமும் புலிகளும் என்ற இரு சாராரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறகிறது.

கடந்த 14ஆம் திகதி அதாவது அமெரிக்கா இலங்கை தொடர்பான இவ் வருடத்திற்கான தமது முதலாவது நகல் பிரேரணையை சமர்ப்பிததன் பின்னர் அது தொடரபாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் கையெழுத்திட்டு ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். அதில் சர்வதேச விசாரணை என்று வரும் பல இடங்களில் 'இரு சாராரினதும்' மனித உரிமை மீறல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நேரடியாக கூறாவிட்டாலும் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர் சர்வதேச சமூகமும் 'இரு சாராரினதும்' மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியது. இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூனினால் நியமிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் கடும் விர்சனத்திற்குள்ளான தருஸ்மான் குழுவும் 'இரு சாராருக்கும்' எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே கூறியது.

கைது செய்யப்பட்டவர்களை கொன்றமை, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியமை, பொது மக்கள்; தங்கியிருந்த இடங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அதில் அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்ததோடு புலிகளுக்கு எதிராக சாதாரண மக்களை கேடயமாக பாவித்தல், அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த மக்களை கொலை செய்தல், மக்கள் மத்தியில் இருந்து இராணுவ தளபாடங்களை உபயோகித்தல், சிறுவர்களை பலவந்தமாக படையில் சேர்த்தல், தற்கொலை குண்டுகளை பாவித்து சாதாரண மக்களை கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பட்டியலொன்றே அதில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தைத் தான் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நகல் பிரேரணைகளிலும் சர்வதேச விசாரணை என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இந்த விசாரணை 'இரு சாராருக்கும்' எதிராகவே நடைபெறப் போவதாகவே ஊகிக்க வேண்டியுள்ளது.

ஆனால் அண்மைக் காலத்தில் சர்வதேச சமூகம் புலிகளுக்கு எதிரான எந்தவோரு குற்றச்சாட்டையும் எந்தவொரு ஆவணத்திலும் துல்லியமாக குறிப்பிடவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்கள் தான் அடிக்கடி அவ் ஆவணங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சிச் சேவை போன்ற வெளிநாட்டு ஊடகங்களும் அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கான உதாரணங்களை மட்டுமே வழங்கி வருகின்றன.

அதேவேளை அரசாங்கமும் சிங்கள அமைப்புக்களும் சர்வதேச விசாரணை என்ற கருத்தை அடியோடு மறுத்து வந்துள்ளன. இக் காரணங்களினால் உலகெங்கம் தமிழ் அமைப்புக்கள் சர்வதேச விசாரணையொன்றை மென்மேலும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஊடக அறிக்கையில் இரு சாராரும் செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறகிறது. இது கூட்டமைப்பு இக் கருத்தை முன்வைத்த முதலாவது முறையல்ல. இதற்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம.; ஏ. சுமந்திரன் தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போதும் இக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலுக்காக சமர்ப்பித்திருந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இக் கருத்து உள்ளடக்கட்டு இருந்தது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் குழப்பமடைந்து இருப்பதாகவும் தெரிகிறது. உதாரணமாக அண்மையில் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வட மாகாண சபையில் சர்வதேச விசாரணை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இரு சாராரினதும் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து இருக்கவில்லை. அது அரசாங்கத்திற்கு எதிரான விசாரணையை கோரும் பிரேரணையாகவே அமைந்திருந்தது. அது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறான கருத்தாகும்.

அதேவேளை புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் அழிக்கப்படும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளின் சகல நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டு புலிகளை தமிழ் மக்களின ஏகப் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு இருந்தது. அதே கூட்டமைப்பு புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறும் போது அது விந்தையாகத் தான் இருக்கிறது.

புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி தேர்தலில் குதித்த கூட்டமைப்பு உண்மையிலேயே புலிகளின் பெயரிலேயே மக்களிடம் வாக்குக் கேட்டது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டமைப்பின் வேட்பாளர்களினாலும் பேச்சாளர்களினாலும் ஆதரவாளர்களினாலும் புலிகள் போற்றிப் புகழப்பட்டார்கள்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான விக்னேஸ்வரன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது புலிகளும் பிரபாகரனும் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அவர்கள் விடுதலைப் பொராளிகள் என்றும் கூறினார். இது ஊடகங்களில் வெளியான போது அவ்வாறாயின் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் கடமையாற்றும் போது எந்த அடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை தண்டித்தார் என சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகள் கேள்வி எழுப்பியிருந்தன. அண்மையில் பிரபல தமிழ் ஊடகவியலாளரான டீ.பி.எஸ். ஜெயராஜூம் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

இந்த தேர்தல் பிரசாரத்தின் சுபாவத்தின் காரணமாகவோ என்னவோ புலிகளின் ஆதரவாளர்கள் பலர் மாகண சபைக்குத் தெரிவானார்கள். புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக கூடுதலான விறுப்ப வாக்குகளைப் பெற்றார். அவ்வாறானவர்களின் செல்வாக்கினாலேயே சர்வதேச விசாரணைக்கான பிரேரணை மாகாணசபையில் இலகுவாக நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமல்லாது சர்வதேச விராரணையை வலியுறுத்த ஆனந்தியை ஜெனிவா நகருக்கு அனுப்பவும் மாகண சபை முடிவு செய்தது.

இப்போது அரசாங்கத்தினதும் புலிகளினதும் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என சம்பந்தனும் விக்னேஸ்வரனும் கொழும்பில் இருந்து அறிக்கை விடுகிறார்கள். ஜெனிவாவில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் எழிலனின் மனைவி ஆனந்தி புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவாரா?

நாம் முன்னர் கூரியதைப் போல் சர்வதேச் விசாரணையை தடுத்துக் கொள்ள அரசாங்கத்திற்கு அக்கறை இருப்பதாக தெரிவதில்லை. முதலாவது அமெரிக்கப் பிரேரணையின் மூலம் சர்வரேதச அரங்களிலும் சர்வதேச ஆவணங்களிலும் இருந்து நீக்கப்பட்டு இருந்த சர்வதேச விசாரணை என்ற பதம் கடந்த வருட அமெரிக்கப் பிரேரணையின் மூலம் மீண்டும் சர்வதேச அரங்குக்கு வருவதற்கும்ட அதுவே காரணமாகியது.

ஆனால் அரசாங்கம் அதன் பாரதூரத் தன்மையை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக தொழிற் சங்கங்கள் தொடரந்து தாக்கப்பட்டு வந்தன. சமயத் தலங்கள் தொடரந்தும் தாக்கப்பட்டு வந்தன. அரசாங்கம் அவற்றை கண்டும் காணாததைப் போல் இருந்தது. எனவே தான் இலங்கை தொடர்பான சர்வதேச் விசாரணை என்ற விடயம் இப்போது மிக கடுமையாக ஆராயப்பட்டு வருகிறது.

அந்த சர்வதேச விசாரணை அடுத்த வருடமளவில் வரும் போல் தான் தெரிகிறது. நடைமுறை நிலைக்கு வந்தால் தாம் எதற்காக இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்த முற்பட்டோம் என்று சரவதேச சமூகம் பழைய ஆவணங்களை புறட்டிப் பார்க்கும். அப்போது விசாரணை அனேகமாக இரு சாராருக்கும் எதிரானதாக அமையலாம்;. ஏனெனில் அது அந்த விசாரணையின் சமபகத் தன்மைக்கு அத்தியாவசியமானதாக இருக்கும்.

நவி பிள்ளைக்கு முன்னர் மனித உரிமை ஆணையாளராகவிருந்த லுவி ஆபரும் அண்மையில் இக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். சர்வதேச விசாரணை மூலம் புலிகளின் நடவடிக்கைகளும் ஆராயப்படும் பட்சத்தில் தமிழர்கள் புலிகளை போற்றிப் புகழும் நிலை தடுக்கப்படும் என்றும் அதன் மூலம் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குகிறது என்று கூறி தமது இராணுவ மயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்திற்கு கடினமாக அமைந்துவிடும் என்றும் அவர் வாதிடுகிறார்.

இரு சாராருக்கும் எதிரான விசாரணையாக அமைந்தால் மட்டுமே சர்வதேச விசாரணையானது நமபகத் தன்மையடையதாக அமையும். அப்போது அதனை தென் பகுதி மக்களாலும் எதிர்க்க முடியாது போய்விடும். 'இரு சாரார்' தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டது அந்த இடிப்படையில் என்றால் அதை ஏனைய வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும் எதிர்ப்பது கடினமாகும். ஏனெனில் வடக்கில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களுக்கு அரசாங்கமும் தெற்கில் பஸ், ரயில் குண்டுத் தாக்குதல்களுக்கு புலிகளும் குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவிக்கும் நிலை வந்தால் மட்டுமே நல்லிணக்கம் என்பது அர்த்தப்புர்வமாக அமையும்.  
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .