2021 மார்ச் 06, சனிக்கிழமை

சுமந்திரனுக்குள் சுருங்கிவிடப்போகிறதா சுதந்திரப் போராட்டம்?

Thipaan   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ப.தெய்வீகன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் பின்னர் அவரது பேட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக்களத்தில் கலந்துகொண்ட நேயர் ஒருவர், சுமந்திரன் இறக்கும் தினத்தை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.

இலங்கையின் இன்றைய தேர்தல் நிலைவரத்தை எடுத்துநோக்கினால், சுமந்திரன் எனப்படும் ஒற்றைச்சொல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிகமானதும் ஆழமானதும் ஆகும். அந்தத் தாக்கம் சாதகமானதா, பாதகமானதா என்பது விவாதத்துக்குரியது.

தமிழ்த் தேசிய அரசியல் களத்தைப் பொறுத்தவரை, நெருங்கிவரும் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் எனப்படுவது மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சிப் பிடியிலிருந்து விடுபட்ட சுதந்திரமான காலப்பகுதியில் நடைபெறுகின்றது என்ற விடுதலை உணர்வினைத் தருகின்றது என்பதற்கு அப்பால், சுமந்திரன் என்கின்ற அரசியல் புள்ளியை எதிர்ப்பதற்குக் கிடைத்திட்ட மிகப்பெரும் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

சுன்னாகம் தண்ணீர் பிரச்சினை முதல் சுதந்திர தின நிகழ்வுவரை சுமந்திரன் எனப்படுபவர் என்ன கூறினார்? கூறாவிட்டால் ஏன் கூறவில்லை? கூறினால், ஏன் அப்படி கூறினார்? என்ற பாசித்தாள் பகுப்பாய்வு சோதனையின் ஊடாகத்தான் இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் பெரும்பகுதி பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் போக்கின் பாதை குறித்து ஆராய்வதுதான் இந்த பத்தியின் நோக்கம்.

போர் முடிவுற்று ஆறு ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஏகபோக ஆணையைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்காத வெற்றுக்கட்சியாகப் பார்க்கப்பட்டுக்கொண்டுவந்த விரக்தியின் விளிம்பில்தான் இம்முறை தேர்தல் அறிவிப்பு வெளியானது.

முன்னர் குறிப்பிட்டது போல, ஜனநாயத்தின் குரல்வளைக்கு மூச்சு விடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தில், அரசியல் கட்சிகள் பெருமெடுப்பில் தேர்தலில் குதித்துவிட்டன.

ஆனால், அதுவரை சிங்கள தேசத்தில் எதிரியைக் காட்டிக் காட்டி மிரட்டி வாக்கு வசூலித்த இந்தக் கட்சிகள், இம்முறை அதே வாக்காளர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரியை எதிரியாகக் காண்பித்து வாக்குக் கேட்க முடியாத நிலை. 'திரும்பவும் மஹிந்த வந்துவிடக்கூடாது என்பதற்காக எம்மைப் பலப்படுத்துங்கள்' என்று கூறி வாக்குக் கேட்டாலும்கூட, உள்ளூர் தேர்தல் களத்தில் ஜனவசியம் மிக்க எதிரி ஒருவர் இல்லாமல் தமிழர் தேர்தல் களம் என்றுமே முனைப்படையாத பராம்பரிய தேர்தல் பரணிகளை திடீரென மாற்றமுடியாத நிலை.

மக்களை வாக்களிப்பு நிலையத்தை நோக்கி விரட்டிய கடந்த கால காரணிகளை எடுத்துநோக்கினால், அங்கு ஏதாவது ஒரு பொது எதிரி இருந்துகொண்டேதான் இருந்தான்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மக்கள் தேர்தலை புறக்கணித்தாலும் கலந்துகொண்ட தேர்தல்களில் அரச சார்பு கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டினார்கள். அதன்பின்னர், இடம்பெற்ற தேர்தல்களில் விடுதலைப் புலிகளின் வழிநடத்தலின்பேரில் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தினார்கள். விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், மக்களின் வாக்குகள் மஹிந்தவுக்கு எதிரான பழிவாங்கும் வாக்களிப்பாகவும் அந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது.

ஆனால், இம்முறை தமிழர் தேர்தல் களம் தமக்குள்ளேயே ஒரு எதிரியை சுமந்திரன் வடிவில் உருவாக்கிக்கொண்டதுதான் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட - மிகவும் துரதிர்ஷ்டவசமான - அரசியல் வங்குரோத்து நிலை. அது எவ்வளவு முரண்நிலையானது என்பதை சற்று ஆராய்ந்தால்,

இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் களமானது தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஜனநாயக வெளியாக மிளிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

வடக்கு, கிழக்கை கட்சி சார்பாக எடுத்து நோக்கினால், தமிழ் மக்களின் அழிவுக்கு துணைபோன கட்சிகளும் அழிவை ஏற்படுத்திய கட்சிகளும் எந்த குற்ற உணர்வுமின்றி மக்களிடம் வந்து வாக்குக் கேட்டு நிற்கின்றன.

தனிநபர்களை எடுத்து நோக்கினால் -இவ்வளவு காலமும் அரச சார்பு கட்சியில் - சரணாகதி அரசியல் நடத்தியவராக குற்றஞ்சாட்டப்பட்ட - ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மக்களிடம் வாக்கு கேட்டு நிற்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பங்காற்றிய அரசியற்புள்ளி அலிஸாகீர் மௌலானா, மக்களிடம் வந்து வாக்குக் கேட்டு நிற்கிறார். இவர்களைவிட, காலா காலமாக அரசுடன் இணைந்து ஒட்டுக்குழுக்களாக செயற்பட்ட பல அமைப்புக்கள் இன்று ஜனநாயக வழியில் வந்து நின்று, 'நீங்கள் பழையவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு எமக்கு வாக்களிக்கவேண்டும்' என்று துணிச்சலுடன் கோரிக்கை விடுத்து நிற்கின்றன. (இவ்வாறானவர்கள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே)

ஆனால், வரலாறு காணாத இனஅழிப்புக்கு முகங்கொடுத்தபின்னரும், தமது பூர்வீக நிலங்களின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தொலைந்து போன உறவுகளைக் கண்டுபிடித்து தரக்கோரியும் தங்களுக்கான நீதி மறுக்கப்படுவதை தொடர்ந்தும் ஜீரணிக்கமுடியாத உச்சத்துக்கு சென்றபோதெல்லாம் பல்வேறு போராட்டங்கள் ஊடாக கிளர்தெழுந்த மக்கள் -

தேர்தலுக்காக தங்கள் பிரதேசங்களுக்கு இந்த அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ள படையெடுப்புக்களுக்கு எந்த எதிர்ப்பையும் காண்பிக்காதது இந்த நாட்டில் அரசியல் கட்டமைப்பில் மிகபெரிய ஜனநாயக வெளியை இன்று காண்பித்திருப்பவர்கள் தமிழ் மக்களே என்ற யதார்தத்தைத்தான் வெளிக்காட்டி நிற்கிறது.

ஆனால், இவ்வாறான விசாலமான ஜனநாயக வெளியில் இன்று சுமந்திரனது தேர்தல் களம் மட்டும் மிகப்பெரிய சத்திய சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் அவர் சார்ந்த கட்சி இம்முறை தேர்தலில் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பது எனப்படுவதும் -ஏன்?

தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் மாற்றத்தை கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற வளர்ச்சியடைந்துவரும் புதிய அரசியல் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் வெற்றி எனப்படுவது சுமந்திரனின் தோல்வியின் ஊடாக மட்டுமே உறுதிசெய்யப்படமுடியும் என்ற நியதி இருவரும் போட்டியிடும் ஒரே தேர்தல் தொகுதியில் சவாலை ஏற்படுத்தியிருப்பது.

விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் கடும் தேசிய வாதக் கொள்கை கொண்டவர்களின் வளர்ச்சியையோ அவர்களுக்கான மக்கள் ஆதரவையோ விரும்பாத சர்வதேசம் மற்றும் சிங்கள தரப்புக்களால் சமாளிக்கப்படக்கூடியவர் என்று புதிய முன்னணியினரால் கருதப்படும் சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதியாக அனுப்புவதில்லை என்று புதிய முன்னணியினர் உறுதிபூண்டிருப்பது, தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தி பேரம் பேசுவதின் ஊடாக மட்டும் தமிழ் மக்களின் சக்தியை சமரசம் செய்திருக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் கிடைத்திருந்தபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மித மிஞ்சிய மிதவாதப்போக்கினால் அவை தவறவிடப்பட்டதினால் ஏற்பட்ட விரக்தியும் அந்த விரக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகார பொறுப்பாளர் என்றவகையில் சுமந்திரன் மீது முழுமையாக பொறிந்திருப்பது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளின் பின்னணிகளோ அவற்றின் உணர்பூர்வமான தாற்பரியமோ அறியாத 'கொழும்பு பிள்ளையாக' வளர்ந்த சுமந்திரன் எனப்படுபவர், போருக்கு பிந்திய மக்களின் மனவடுக்களை சரியாக புரிந்துகொள்ளாது எல்லா விடயங்களையும் - தனது தொழில் கண்ணாடி ஊடாக சட்டபூர்வமாக அணுகுகின்றபோது, தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் பாமரமக்கள் முதல் ஊடகங்கள் வரை எவரையும் திருப்திப்படுத்தாத தொடர்பாடல்முறையை கொண்டிருப்பது போன்ற காரணங்களின் ஊடாக சுமந்திரன் எதிர்ப்பு படலம் எனப்படுவது விரிந்து செல்கிறது.

இந்த எதிர்ப்பு எனப்படுவது தாயகத்திலும் விட, புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் மத்தியில் எவ்வாறு விரிந்து செறிந்து கிடக்கிறது என்பதற்கு, இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வானொலிச் சம்பவம் மிகச்சிறந்த உதாரணம்.

ஆனால், இப்போது எழுந்துள்ள கேள்வியெல்லாம், சுமந்திரன் எதிர்ப்பு என்ற புள்ளியில் இம்முறை குவியப்படுத்தப்பட்டிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் ஆரோக்கியமானதா?

இம்முறை தேர்தலில் பிரசாரங்களும் கட்சிகளின் கொள்கை முன்னெடுப்புக்களும் மக்கள் பிரச்சினைகளையும் அவர்களின் இயல்பு வாழ்க்கையில் இன்னமும் சீர் செய்யப்படாத தேவைகளையும்விட கொள்கை அரசியல் சார்ந்ததாகவே அதிகம் பயணப்பட்டுக்கொண்டிருப்பதை காணலாம்.

தனிநபர் சேறடிப்புக்களும் துரோகி பட்டமளிப்புக்களும் எங்களில் யார் இந்த மக்களை வைத்து அரசியல் செய்வதில் அதிக வல்லமை உள்ளவர்கள் என்ற பலப் பரீட்சைக்குரிய களமாகவே இத்தேர்தல் அணுகப்படுகிறது.

தாங்கள் செய்த சாதனைகளைப் பட்டியல்படுத்தி ஆளுக்காள் முகப்புத்தகங்களிலும் இதர ஊடகங்களிலும் வெளியிட்டு மக்களுக்கு ஞாபகமூட்டுமளவுக்குத்தான் இந்தக் கட்சிகளின் மக்களுக்கு சேவை செய்யும் சீத்துவும் கிடக்கிறது.

இம்முறை சுமந்திரன் வென்றாலோ தோற்றாலோ இரண்டுமே தமிழர் அரசியல் களத்தில் தொடர்ச்சியான பிளவுகளையும் பிரிவுகளையும் முரண்பாடுகளையும் தேர்தலுக்கு பின்னரும் ஏற்படுத்தப்போவது நிச்சயம்.

சுமந்திரனின் தோல்வி எனப்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாகக் கருதப்படும். அதன் பின்னர், ஓங்கப்போகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவு அலை, தமிழ்த் தேசியத்தை தீவிரமான பாதையில் அழைத்துச் செல்லும் பண்புகள் நிறைந்ததாக இருக்கும் என்பதை இப்பொழுதே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு களயதார்த்தங்கள் ஒத்துழைப்பு வழங்குமா? மக்கள் அதற்கு தயாரா என்பது ஒரு கேள்வி.

ஆனால், எந்த விகிதாசாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் தோற்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முழுமையான பிடி இந்த தேர்தலில் தளர்ந்துபோகுமாக இருந்தால், இனிவரும் காலங்களில் அதன் அரசியல் எதிர்காலம் இறங்குமுகமாகவே இருக்குமே தவிர, மீட்சிக்கு இடமிருக்கப்போவதில்லை. தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால தோல்வி வரலாறுகள் அதையே எழுதிவிட்டுப்போயுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .