2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

சுமந்திரன்- கஜேந்திரகுமார் போட்டி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்தப்  பொதுத்  தேர்தலானது  தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை முன்னிலைப்படுத்துவதைக் காட்டிலும், எம்.ஏ.சுமந்திரன்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் அதிகமாக முன்னிறுத்தியிருக்கின்றது. அதாவது, கட்சி- கொள்கை அரசியலைத் தாண்டி, 'சுமந்திரன் எதிர் கஜேந்திரகுமார்'  எனும் போக்கினைக் காட்டுகின்றது. இப்படியான நிலை ஏன் ஏற்பட்டிருக்கின்றது. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களா?' என்றொரு கேள்வியை கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

இந்தக் கேள்விக்கான பதில்கள் இரண்டு விடயங்களிலிருந்து கிடைக்கின்றன. முதலாவது, தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலத் தலைமை யார் என்பதை அவசர அவசரமாக தீர்மானிக்க வேண்டும் என்கிற முனைப்பு. மற்றையது, சமூக ஊடக தளங்களில் பொதுத் தேர்தலை வைத்து நிகழும் கருத்தாடல்கள். (இதற்குள் அவதூறுகள், பொய்யுரைகள், புழுகுகள் தான் அதிகம்)

தமிழ்த் தேசிய அரசியல் இயங்குதளம் நீண்ட காலத்துக்குப் பின்னர் தன்னுடைய பிரதான எதிரியான பௌத்த சிங்கள பேரினவாதத்தை இந்தப் பொதுத் தேர்தலில் இரண்டாம் நிலை எதிரியாக தரமிறக்கியிருக்கின்றது. அத்தோடு, தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான கூறுகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஒன்றையொன்று முதன்மை எதிரிகளாகவும் கொள்ள வைத்திருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள் இரண்டு தேர்தலொன்றில் எதிரெதிர் தரப்பில் இவ்வளவு வீரியத்தோடு களமாற்றுவது நீண்ட காலத்தின் பின் நிகழ்வது. இது, இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு புதிதான ஒன்று. அப்படியான நிலையில், சமூக ஊடகத்தளத்தில் அதிகமாக புளங்கும் இளைய தலைமுறை இந்தத் தேர்தலை தம்முடைய தெரிவுகளையும், யோசனைகளையும் முனைப்போடு முன்வைக்கும் யுத்திகளை அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கின்றன. அதற்கு, எந்தவித வரைமுறையும் இருப்பதில்லை. அதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட ஆதரிக்கின்றன. அல்லது, கண்டும் காணாமல் விடுகின்றன.

ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல்- போராட்ட இடைவெளி என்பது விரக்தி மனநிலையின் போக்கில் சில காலம் நீண்டிருந்தது. அதன் பின்னரான காலம், சரியான தலைமை அல்லது ஆளுமையுள்ளவர்களை இனங்கண்டு தலைவர்களாக ஏற்பது தொடர்பிலான யோசனைகளின் போக்கில் தட்டிக்கழிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த இடைவெளியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் பூர்த்தி செய்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை குறைநிரப்பு தரப்பாகவே மக்கள் கருதி வந்திருக்கின்றார்கள். அதுவே, தவிர்க்க முடியாமல் இன்னமும் நீடித்தும் வருகின்றது.

அப்படியான நிலையில் தான், அவசர அவசரமாக எல்லாமும் அறிந்துணர்ந்த- நீடித்து நிற்கும் தலைமையொன்றை பெற்றுக் கொள்வது தொடர்பிலான ஆர்வத்தினை தமிழ் மக்கள் கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். அதுதான் 'சுமந்திரன்- கஜேந்திரகுமார்' என்கிற தனி ஆளுமைகளை முன்வைத்து தேர்தல் காலத்தில் நிகழும் வாதப் பிரதிவாதங்களில் பெரும்பாலும் தெரிவது. ஆனால், இவர்கள் இருவரும் தம்முடைய கடந்த கால அரசியலில் தம்மை தலைமைத்துவத்துக்கான கூறுகளாக பெரிதாக நிருபித்திருக்கவில்லை. (குறிப்பாக, மக்களை சரியான புள்ளியில் ஒருங்கிணைப்பதிலும்- அரசியலுரிமை பற்றிய களமாடுதல்களில் வெற்றிகரமான தலைவனாக தம்மை முன்னிறுத்துவதிலும்.) ஆக, புதிய தலைவன் பற்றிய ஆர்வ மிகுதி என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியது. அதற்கு, இன்னமும் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆக, அந்த முனைப்புக்களோடு சுமந்திரனும்- கஜேந்திரகுமாரும் முன்னிறுத்தப்படுவதை ஓரளவுக்கு தள்ளிப்போடலாம்.

உண்மையான கொள்கை, எதிர்கால திட்டங்கள், மக்களுக்கான அரசியல் இலக்குகள் பற்றிய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கும் தேர்தல் களத்தினை அரங்கேற்றுவதற்குப் பதில் தனிநபர்களை இலக்கு வைத்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் ஆராயுமளவுக்கான கீழ்த்தரமான கட்டத்தையும் காட்டியிருக்கின்றது. கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பிலான கருத்துக்களை மக்களிடம் முன்வைப்பதும், தவறான கொள்கைகள்- கோட்பாடுகள்- கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படையான விவாதங்கள்  முன்னெடுக்கப்படுவதும் ஆரோக்கியமான அரசியலுக்கு அவசியமானவை.

இதில், இன்னொரு விடயமும் வெளித் தெரிய ஆரம்பித்திருக்கின்றது. ஊடகங்களின் சார்பு நிலை. உள்ளூர் ஊடகங்கள் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமும் புலம்பெயர் சார் ஊடகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கமும் தம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு நிலைப்பாட்டு சண்டைகளிலும் 'சுமந்திரன்- கஜேந்திரகுமார்' விடயம் முன்மைப்படுத்துவதற்கும் இதுதான் காரணம்.

தமிழ் ஊடகங்களிடமுள்ள பெரும் குறைபாடு எப்போதுமே சார்பு நிலைப்பாட்டில் இயங்குவது. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையே முன்வைப்பது. இதனால், பல நேரங்களில் உண்மையான நிலைப்பாடு வெளிப்படுத்தப்படுவதில்லை. அது, தமிழ் மக்கள் மீதே பெரும் சுமைகளாக இறங்கிய வரலாற்றினையும் பெரும் வடுவினையும் நாம் கண்டிருக்கின்றோம். புலத்திலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைத் தேவைகளுக்கும் புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைத் தேவைகளுக்கும் இடையில் குறிப்பிட்டளவான வித்தியாசங்கள் உண்டு.

விடுதலை எனும் உணர்வினால் இரு தரப்பும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும், அதனை அடைவது தொடர்பிலான முனைப்புக்கள், நடைமுறைச் சிக்கல் தொடர்பிலான ஒப்புநோக்கல்களில் தாம் இருக்கும் இடங்கள் அனுமதிக்கும் அளவுக்கு ஏற்ப சிந்திக்கின்றார்கள். அதுவும் பெரும் இடைவெளிக்கு காரணமாகியிருக்கின்றது. அதுவும் கூட இந்தப் பொதுத் தேர்தலில் பெருமளவில் பிரதிபலிக்கின்றது. சுமந்திரன்- கஜேந்திரகுமார் முன்னிறுத்திய நிலைப்பாடு என்பதும் புலம்- புலம்பெயர் இடைவெளியின் போக்கிலும் (அது மட்டுமல்ல) இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது.

தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு அதற்கு இசைவாக்கப்பட்ட 'ஏக பிரதிநிதிகள்' எனும் நிலைப்பாட்டோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 'மாற்றம்' பற்றிய அறிவித்தலோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தல் களமாடினாலும் சாதாரண மக்களின் தெரிவு எது என்பதுதான் பெரும்பாலும் முடிவினைத் தீர்மானிக்கப் போகின்றது. சமூக ஊடகங்களில் நிகழ்த்தப்படும் கருத்தாடல்கள் தேர்தல் முடிவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு இருந்தாலும், அது பெரும் பாய்ச்சலை ஏற்படுத்துமளவுக்கு இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சனங்களோடுதான் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றுத் தரப்பாக தன்னை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்மை மக்களிடம் நிரூபிப்பதற்கான செயற்திட்டங்களை சரியாக செய்திருக்கவில்லை. அல்லது, அந்த முயற்சிகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவில்லை. இப்படியானதொரு நிலைப்பாடு, விமர்சன ரீதியிலான அரசியலின் பக்கமே அதிகம் நகர்த்தி விட்டிருக்கின்றது. அது, இரண்டு தரப்புக்குள்ளும் தனிநபர்களை இலக்கு வைக்கும் அரசியலை முதன்மைப்படுத்தியிருக்கின்றது.

தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்களில் தென்னிலங்கையோடு அதீத ஊடாடல்களை  மேற்கொண்டிருப்பது இரா.சம்பந்தனும்- எம்.ஏ.சுமந்திரனும். (சுதந்திரதின நிகழ்வுகளில் வேறு கலந்து கொண்டு தம்முடைய நல்லிணக்கத்துக்கான(‚) செய்தியை வெளியிட்டு வைத்திருக்கின்றார்கள்.) அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வெற்றி தோல்விகளின் போக்கில் அதீத பொறுப்புக்களை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய வரும். அதுதான், அவர்களை தொடர்ந்தும் முதன்மை பேசுபொருளாக வைப்பதற்கு காரணம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் முனைப்பு என்பது ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிவிட்டது என்று ஏற்கனவே என்னுடைய பத்தியொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரனை முதன்மையாக குறிவைக்க வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும்- அதன் ஆதரவுத் தளங்களுக்கும் உண்டு. அதுதான், சுமந்திரனை முன்னிறுத்திய அரசியல் களமாடல் எனும் நிலையினைத் தோற்றுவித்திருக்கின்றது. இந்த நிலையானது, இயல்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்துக் கொண்டு சுமந்திரனுக்கு எதிரான நிலைப்பாட்டோடு இருந்த அதிகமானவர்களை சுமந்திரன் பக்கத்திற்கு நகர்த்திவிட்டிருக்கின்றது. இது, வீம்புத்தனமான சண்டைகளின் போக்கில் நிகழ்த்தப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது.  அதுதான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளிருந்து கட்சி எனும் நிலைப்பாட்டினைத் தாண்டி கஜேந்திரகுமாரினை தனி ஆளுமையாக முன்னிறுத்துவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் சூழல் இரண்டாம் மட்டத் தலைவர்களை உருவாக்குவது தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில், இளம் தலைவர்களை உருவாக்குவது என்பது தமக்கான அச்சுறுத்தல் என்ற கருத்தியலை தமிழ்த் தேசியத்துக்கான கட்சி அரசியல் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், புதிய தலைமை பற்றி கேள்விக்கான தேடல்கள் இந்தத் தேர்தலினூடும் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், நம்பிக்கையான பதில்கள் கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் தான் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .