2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் தளத் தடை ஆரோக்கியமானதா?

Thipaan   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

பாலியல் தளங்கள் 857இனை, இந்திய மத்திய அரசு தடை செய்த செய்தியைத் தொடர்ந்து, அதற்கெதிரான எதிர்ப்புகளும் ஆதரவும் பெருகிய வண்ணமிருக்கிறது. அந்தத் தடைக்கெதிராகக் கிடைக்கப்பெற்ற எதிர்ப்பைத் தொடர்ந்து, அதை ஒரு சில நாட்களிலேயே இந்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆனால், அதனைத் தொடர்ந்தான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இந்தத் தடை சம்பந்தமாக இரண்டு விடயங்கள் ஆராயப்பட வேண்டிய தேவையிருக்கிறது. ஒன்று, பாலியல் தளங்கள் தேவையானவையா, இல்லையா என்பது. அடுத்தது, அவற்றைத் தடை செய்வதற்கு அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்பது. இரண்டும் முக்கியமான வினாக்கள். ஆனால், இரண்டும் தனித்தனியாக அணுகப்பட வேண்டிய வினாக்கள்.

பாலியல் தளங்களால் அதற்கு அடிமையான சமூகமொன்று கட்டியெழுப்பப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, முழுமையாகக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலுள்ள வயதுக்கு முன்னராக, இவ்வாறான தளங்களும் காணொளிகளும் புகைப்படங்களும் சிறுவர்களுக்குக் கிடைக்கப்பெற்றால், அவை நிச்சயமாக அந்தச் சிறுவர்களை ஏதொவொரு விதத்தில் பாதிக்கும். ஆனால், இதற்காகவே இத்தளங்களைத் தடைசெய்வது தான் ஒரே தீர்வா என்ற வினா எழுகிறது. தளங்களைத் தடை செய்தால், வட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ, இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் பகிரப்படத் தான் போகின்றன. ஏற்கெனவே இவை இடம்பெற்றுவருகின்றமை பலரும் அறிந்தது. ஆக, இவ்விடயங்களைப் பெற விரும்பும் சிறுவனொருவனால், இவற்றை நிச்சயமாக அணுக முடியும். அவற்றைத் தடை செய்வதனூடாக, அவற்றின் மீதான ஆர்வத்தையே அதிகரிக்க முடியும்.

அடுத்தது, கலாசாரச் சீரழிவு என்கிற வாதம். இது சிறிது சிக்கலான வாதம். தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆரம்பத்தில் பின்பற்றிய மதமான இந்து மதத்தில், இவ்வாறான பாலியல் விடயங்கள் சாதாரணமாகப் பகிரப்பட்டன. இந்தியாவிலுள்ள கோவில்கள் பலவற்றில், பாலியல் விடயங்களைச் சித்திரிக்கும் சிலைகளும் காணப்படுகின்றன.

இலங்கையோடு கலாசார ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள இந்தியா, காம சூத்ராவை உலகுக்குத் தந்த நாடு. அத்தோடு, முன்னைய காலங்களில், தேவதாசி முறை மூலமாக பாலியல் தொழிலையும், உலகின் முதல் தொழிலென வர்ணிக்கப்படும் விபசாரத்தையும் எமது மூதாதையர்கள் மேற்கொண்டதற்கான வரலாறுகளும் ஆதாரங்களும் உள்ளன. திடீரென இவ்வாறான கலாசாரப் போராட்டம் எங்கிருந்து வந்ததென்பது முதலாவது ஐயம். அடுத்ததாக, கலாசாரமென்பது எப்போதும் மாற்றமடைந்து கொண்டிருப்பது தான். சில தசாப்தங்களுக்கு முன்னர் கலாசாரமெனக் கருதப்பட்டது, இப்போது கைவிடப்பட்ட ஒரு நடைமுறையாக இருக்கும்.

ஆகவே, காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்த நாம் தவறுவோமாயின், பின்தங்கிய சமூகமொன்றாக மாறிவிடுவோம் என்பது தான் உண்மை. ஆகவே, கடந்த காலங்களில் இவ்வாறு காணப்பட்டது என்பதற்காக சில முடிவுகளை எடுப்பதை விட, அந்தந்தக் காலத்துக்குப் பொருத்தமான முடிவுகளை எடுப்பது தான் சாலச்சிறந்தது.

பாலியல் திரைப்படங்களிலும் புனைவுகளிலும் பொதுவாகவே மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளே வெளிப்படுத்தப்படுகின்றன. இலங்கை போன்ற பாலியல் பற்றிய போதிய விழிப்புணர்வற்ற நாடுகளில், இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் வெளிப்படுத்தப்படும் போது, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை இளைஞர்களும் யுவதிகளும் ஏற்படுத்த முடியும். எதிர்கால திருமண வாழ்விலோ காதல் வாழ்விலோ இது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

அதேபோல, பாலியல் திரைப்படங்களென்பன போதை மருந்தைப் போல, புகைப்பிடித்தல் போல அதிகமாக அடிமைப்படுத்தப்படக்கூடிய ஒரு பழக்கமாகவே காணப்படுகிறது. ஆகவே, இதுவொன்றும் கொண்டாடப்பட வேண்டிய பழக்கமும் கிடையாது.

ஆனால் மறுபுறத்தில், பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், பாலியல் திரைப்படங்களின் வரவு அதிகரித்த பின்னர், பாலியல் குற்றங்களின் அளவு குறைந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.அமெரிக்காவில் பெறப்பட்ட தரவுகளில், திரையரங்குகளில் மாத்திரம் பாலியல் திரைப்படங்கள் கிடைக்கப்பெற்ற 1970களில் காணப்பட்ட பாலியல் குற்றங்களோடு ஒப்பிடுகையில், 1990களில் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்தபோது, பாலியல் குற்றங்கள் 85 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.

இதற்கு பாலியல் திரைப்படங்கள் மாத்திரமே காரணமெனக் குறிப்பிடுவதற்கான தனித்த ஆதாரங்கள் இல்லையென்ற போதிலும், பாலியல் திரைப்படங்கள் அவற்றில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்ற உண்மையை மறுக்க முடியாது. அத்தோடு குறிப்பாக, 20-34 வயதுப் பிரிவினரிடையே பாலியல் குற்றங்கள் குறைவடைந்த நிலையில், 1990களில் இணையம் அவ்வயதுப் பிரிவினராலேயே அதிகம் பயன்படுத்தியிருந்த நிலையில், அதன் தாக்கம் குறிப்பிடத்தக்களவு இருந்திருக்க முடியும்.

அதேபோல, திருமணமாகிய தம்பதியினரிடையே பாலியல் திரைப்படங்கள் நெருக்கத்தை அதிகரிப்பதாகவும் மேற்கைத்தேய கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.

இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றதா என்ற கேள்வி இருந்தாலும், அதன் சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை. இதன் மறுபக்கமாக, போதுமான புரிந்துணர்வில்லாத தம்பதியினரிடையே பாலியல் திரைப்படங்கள் திருமண முறிவை ஏற்படுத்துமளவுக்குச் செல்லுமென்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இவற்றினையெல்லாவற்றையும் விட, நான் என்னுடைய வீட்டுக்குள் வைத்து எதைப் பார்க்க வேண்டுமென்பதை என்னுடைய அரசாங்கம் தீர்மானிப்பதென்பதோ அல்லது அதை வரவேற்பதென்பதோ, சாதாரண பொதுமகனைப் பொறுத்தவரை ஆபத்தானது. நான் மது அருந்துவதைத் தடை செய்வதை, நான் சிகரெட் பிடிப்பதைத் தடை செய்வதை, நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதை அரசாங்கம் தீர்மானிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் தான் இதுவும். அரசாங்கங்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மக்கள் மீது வெளிப்படுத்தவும் மக்களை ஒரு வட்டத்துக்குள் வைத்திருக்கவும், இவ்வாறான கலாசார விடயங்கள் மிகவும் பயன்படுகின்றன.

பாலியல் திரைப்படங்களை இன்று தடை செய்யும் அரசாங்கங்கள், நாளைய தினம் தங்களுடைய கொள்கைகளுக்கெதிரான திரைப்படங்களைத் தடை செய்யும். நாளை மறுதினம், தான் விரும்பியவற்றை மாத்திரம் பார்வையிடச் சொல்லும். இவ்வாறு தான், மக்களின் சிந்தனைகளையும் நடத்தைகளையும் அரசாங்கங்கள் கட்டுப்படுத்த முயலும். இவற்றையெல்லாம் வரவேற்பது, நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமற்றதாகவே அமையும்.

அதற்காக, அளவுக்கு மீறிய பாலியல் திரைப்படங்கள் ஆரோக்கியமானவையென்று சொல்லிவிட முடியாது. ஆனால், அதற்காக அவை தடைசெய்யப்பட வேண்டுமா? இல்லை.

 உண்மையில் மக்கள் மீதும் அவர்களது நலன் மீதும் அக்கறையிருந்தால், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மக்களை அடிமைக் குணத்திலிருந்து வெளியேற்றுவதை உதவுவதற்கான வழிமுறைகளிலும் அரசாங்கங்கள் ஈடுபட முடியும். அதைவிடுத்து, தடை என்ற முட்டாள்த்தனமான முடிவையெடுப்பது, அந்தத் தளங்கள் மீதான கவனத்தை அதிகரிக்கவே செய்யும்.

பாலியல் திரைப்படத் துறையென்பது, ஏனைய துறைகளைப் போலவும், பெண்களைக் காட்சிப் பொருட்களாகப் பயன்படுத்தும் துறையாகவும் பெண்களைச் சுரண்டும் துறையாகவுமே இருக்கிறது.

அதைக் கட்டுப்படுத்த வேண்டியதும் அதில் பெண்களும் சிறுவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்படுவதைத் தடுப்பது என்பதும் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், அரசாங்கத்தின் குற்றத் தடுப்புப் பிரிவுகளுக்கான பொறுப்பே இவை தவிர, கலாசாரத்தைக் காப்பாற்றும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பமல்ல.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .