2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தமிழ்ப் பாடசாலைகளை தரமுயர்த்தி அத்திட்டத்துக்கு கலாமின் பெயரை சூட்டுவேன்: குகன்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகன் முருகவேல்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை தரமுயர்த்தி, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு சர்வதேச உதவியுடன் கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி, பெற்றோரின் சுமையை குறைக்கவுள்ளேன்.இவ்வாறான ஒரு திட்டம் வரும்போது எனது ரோல்மொடலான அப்துல் கலாமின் பெயரை சூட்டவுள்ளேன் என மேல்மாகாணசபை உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாருமான சண் குகவரதன் -தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

கே:  மேல் மாகாணசபை உறுப்பினராக இருந்து மக்களுக்காக நீங்கள் ஆற்றிய சேவைகள் என்ன?

நான் மேல்மாகாண சபை உறுப்பினராக வருவதற்கு முன்னரே பாடசாலைகளுக்கு கணினி, புரஜெக்டர், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்துக்கள், போசாக்குணவுகள் என்பவற்றை வழங்கியுள்ளேன். மாகாணசபை உறுப்பினராக வந்த பின்னர், கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளின் 70 சதவீதமான ஆசிரியர் பற்றாக்குறையை எனது தலைவர் மனோ கணேசனின் உதவியுடன் நிவர்த்தி செய்திருந்தேன். மேலும் க.பொ.த சாதாரண தர பாடசாலைகள் மூன்றை, உயர்தரப் பாடசாலைகளாக தரமுயர்த்தி உள்ளேன். மேலும், பாடசாலைகளிலிருந்து வறுமை காரணமாக இடைவிலகிய சுமார் 100 மாணவர்களை, மேல் மாகாணசபையில் உள்ள தொழிற்பயிற்சி நெறிகளில் இலவசமாக சேர்த்திருந்தேன்.

நான் மாகாணசபை உறுப்பினரான பின்னர், பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளின் பிள்ளைகளுக்கே பெரும்பாலும் பெரிய பாடசாலைகளில் இடம் கிடைக்கும். சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு அனுமதி கிடைக்காது. எனவே, அவ்வாறான பிள்ளைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் தரமுயர்த்த வேண்டிய பாடசாலைகள் என்றதொரு கனவிருக்கின்றது. எனது அண்ணன் தலைவர் மனோ கணேசனின் கனவும் அதுதான். அந்தவகையிலேயே, மாகாணசபையில் அதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தோம். எனினும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியில் இருந்ததால் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. எனவே, புதிய ஆட்சியில் அந்தக் கனவை நனவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து, நகரசபைக்குச் சொந்தமான இடமொன்று இருந்தும் நீண்டகாலமாகவே வத்தளையில் தமிழ்மொழி மூல பாடசாலையொன்று இல்லை. எனவே, அங்கு தமிழ்மொழிமூல பாடசாலையை உருவாக்குவது எனது தலைவரின் நீண்ட கால கனவாகும். நாம் அதை நிச்சயமாக செய்வோம். அதேபோல, கொலன்னாவை பிரதேசத்திலும் ஒரு தமிழ்மொழிமூல பாடசாலையேனும் இல்லை. அங்குள்ள தமிழ் மாணவர்கள் கூட, சிங்கள மொழியிலேதான் கல்வி கற்கின்றார்கள். நாளடைவிலே கொழும்பு மாவட்டத்திலுள்ள இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், கொலன்னாவை பகுதியிலும் ஒரு தமிழ்மொழி மூல பாடசாலையை நிறுவ தீர்மானித்திருக்கிறோம். மாகாண சபையில் இது சம்பந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. முக்கியமாக கப்பித்தாவத்தையிலே தொண்டர் வித்தியாலயம் என்று ஒன்று இருக்கின்றது. அந்தத் தொண்டர் வித்தியாலயத்தில் மாணவர்களின் வரவு குறைவாகக் காணப்படுவதால் அதை இராணுவ தேவைக்காக எடுக்க கடந்த அரசாங்கம் முயற்சித்தது. நான் முதலமைச்சருடன் பாரிய தர்க்கத்தில் ஈடுபட்டு அந்தச் செயற்பாட்டை நிறுத்தியிருந்தேன். இப்பொழுது மாணவர்கள் அங்கு படிப்படியாக அதிகரித்து வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் ஒருகொடவத்தையிலிருந்து தொண்டர் வித்தியாலயத்துக்கான பஸ் சேவையை நாம் ஏற்படுத்தியிருந்தோம். அதேபோல தனிநாயகம் அடியார் பாடசாலைக்கும் ஒருகொடவத்தையிலிருந்து இலவச பஸ் சேவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்னும் பல பாடசாலைகளுக்கு இலவச பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டபோதுதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. எனவே, தேர்தலின் பிற்பாடு இந்தத் திட்டத்தையும் முன்னெடுப்போம். இவ்வாறாக, நாம் செய்த சேவைகளை கூறிக்கொண்டே போகலாம். ஆனால், இவற்றையெல்லாம் நான் வெளியே சொல்லிக்கொண்டு திரியும் அரசியல்வாதி அல்ல. மக்களுக்குச் சேவை செய்தவர்களை, அவர்கள் நிராகரித்ததாக வரலாறு இல்லை.

கே: கொழும்பில் இரு தமிழ்ப் பிரதிநித்துவத்தைத் தாண்டி வேறு எந்தவொரு திட்டங்கள் பற்றியும் நீங்கள் அறிவிக்கவில்லையே?

நிச்சயமாக கொழும்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் என்பது எமது உரிமை. கொழும்பில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அதிலே ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரம் பதியப்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றார்கள். பதியப்பட்ட தமிழ் வாக்காளர்கள் அனைவரும் சரியாக வாக்களித்தால் உண்மையில் மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும். ஆனால், நாம் இம்முறை கேட்பது இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான். நாங்கள் கொழும்பு மாவட்டத்தில் நான்கு பிரதான திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

முதலாவது வீட்டுப் பிரச்சினை. கொழும்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருக்கின்ற மக்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை போய்ப்பார்த்தால் தலை சுற்றுகிறது. 300 சதுர அடியிலே மூன்று குடும்பங்கள் எவ்வாறு வாழ்வது? நான் போகும்போது ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் நான்காம் மாடியில் படியேறிக்கொண்டிருந்தார். நான் கேட்டேன் எத்தனையாம் மாடியில் வசிக்கின்றேன் என்று, அவர் சொன்னார் 11ஆம் மாடியில் என்று. எனவே, இவ்வாறான குறைபாடுகளுடன் தொடர்மாடிகளை அமைத்து தனியே தமது கமிஷனுக்காக முன்னைய அரசாங்கம் ஏமாற்றிவிட்டது.  புதிய அரசாங்கத்திலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சம் வீடுகளை வழங்குவதாக கூறியிருக்கின்றார். அதில் கொழும்பு மாவட்டத்தில் எங்களுக்குரிய பங்கைப் பெறும்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் அதிக வீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு வழங்கப்படும் வீடுகள் நிச்சயம் 700 சதுரஅடிக்கு அதிகமாகவே இருக்கும்.

இரண்டாவது, கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சமுர்த்தியைப் பெற்றுக்கொடுப்பதே எமது இரண்டாவது திட்டமாகும். கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் அடிப்படை வசதி குறைபாடுகளை தீர்க்காமல் உரிமை பற்றி பேசிப் பயனில்லை. அதிகப்படியான விருப்பு வாக்குகளால் மனோ கணேசன் வெற்றிபெறுவார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவே அவர் நாடாளுமன்றம் செல்வார். ஆகவே, அவர் வீட்டுப் பிரச்சினை, சமுர்த்தி பிரச்சினைகளை பார்த்துக்கொள்வார். அடுத்த இரண்டு திட்டங்களையே எனது பொறுப்பில் விட்டிருக்கின்றார்.

அதில் மூன்றாவது, இளைஞர், யுவதிகளுக்கான நிரந்தர தொழில்வாய்ப்பாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் படித்த தராதரத்துக்கு ஏற்ப ஓய்வூதியத்துடன் அரசாங்கத் தொழில்வாய்ப்பு வழங்கப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை  வழங்கவிருக்கின்றார். இதில் கொழும்பு மாவட்டத்தில் எமது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோட்டாவைப் பெற்று, இங்கு வேலையற்று இருக்கும் தமிழ் இளைஞர்களில் 70 சதவீதமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் பணியை தலைவர் எனக்கு ஒப்படைத்திருக்கிறார். இது தவிர, நான் முதலே சொன்னது போல பாடசாலைகளை தரமுயர்த்தி, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு சர்வதேச உதவியுடன் கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி பெற்றோரின் சுமையை குறைக்கவுள்ளேன். இவ்வாறான ஒரு திட்டம் வரும்போது எனது ரோல்மொடலான அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட தலைவரை அனுமதி கேட்டிருக்கிறேன்.

கே: சிங்கள பிரதேசங்களில் சிங்களத்தை முன்னிறுத்தி வாக்குக் கேட்பது இனவாதமாக கருதப்படுகையில், நீங்கள் தமிழை முன்னிறுத்துவது இனத்தை முன்னிறுத்துவதாக கருதப்படாதா?

இனவாதம் - மதவாதம் என்பது வேறு, உரிமை என்பது வேறு. தமிழ் மொழியென்பது, இந்த நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட மொழியாகும். தமிழர்கள் இந்த நாட்டின் மக்கள். எமது உரிமைகள் மறுக்கப்பட்டு, எங்களை அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என பேரினவாதம் நினைத்தபோதுதான் அகிம்சைப் போராட்டம் வெடித்தது. அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்தபோதுதான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. ஆயுதப் போராட்டங்களை சர்வதேசம் தமக்கு சாதகமாக பயன்படுத்திவிட்டு, கரும்பை பிழிந்து சாறை எடுத்து விட்டு சக்கையை எறிவது போல, மீண்டும் சர்வதேசத்துக்கு பிரச்சினைகள் வரும்போது சிங்கள இனவாதத்துடன் இணைந்து அதை தோற்கடித்த பின்னர் எமக்கு இருக்கின்ற ஓர் ஆயுதம் தான் வாக்கு. இதை வைத்துத்தான் நாம் பேரம்பேசவேண்டும். கொழும்பில் எமது பிரதிநிதித்துவம் எமது உரிமை. ஆனால், குருநாகல் மாவட்டத்தில் இவர்கள் கதைக்கும் இனவாதம் என்பது போலியான பிரசாரம். தமிழர்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்பதையே மறைமுகமாக இதன்மூலம் சொல்கிறார்கள். 

கே: தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் நீங்கள், உங்கள் கட்சி சார்பாக தேசியப் பட்டியலில் ஏன் ஒரு சிங்களவரை பிரேரித்துள்ளீர்கள்?

இது ஒரு நல்ல கேள்வி. கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த சிங்கள முற்போக்குவாதிகள் உள்ளார்கள். ப்ரியாணி குணரட்ண என்பவர் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிங்கள முற்போக்குவாதி. ரவிராஜ் அவர்களுடன் இணைந்து மனிதஉரிமைகளுக்காக குரல்கொடுத்தவர். அவ்வாறானவர் எமது கட்சியின் நிர்வாகச் செயலாளர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர். எனவே, தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் முற்போக்குவாதிகளை வரவேற்பது பிழையல்ல.

கே: தொடர்ச்சியாக பெரும்பான்மை கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் உங்கள் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான கூட்டணிகளிலேயே போட்டியிடுவது ஏன்?

பச்சையோ, நீலமோ, சிவப்போ ஏதுவாக இருந்தாலும் அந்த ஆட்சிக்குள் நாங்கள் பலமாக இல்லாவிட்டால் அவர்கள் எதையும் தரமாட்டார்கள் என்று எமது தலைவர் கூறுவார். யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதி என்றால் நாங்கள் நிச்சயம் சேர்ந்திருக்கமாட்டோம். யுத்தத்துக்கு பின்னர் அபிவிருத்தி நோக்கிய காலப்பகுதி என்பதாலேயே புதிய நல்லாட்சிக்கான கூட்டமைப்பில் சேர்ந்திருந்தோம். தனியாக ஏணி சின்னத்தில் கேட்டால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே பெறமுடியும். நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.ம.சு.கூ தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் பேச்சுவார்த்தைக்குள்ளே குருநாகல் மாவட்டத்தில் சிவப்பு துணி விழுந்துவிட்டது. எனவே தூரநோக்குடன் செயற்பட்டு நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .