2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சிறந்த பயண வழிகாட்டிக்கான தங்கப்பதக்கம் வென்ற இலங்கையர்...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , மு.ப. 05:29 - 2     - {{hitsCtrl.values.hits}}

 

உல்லாசப் பயணிகளுக்கான சிறந்தவொரு பயண வழிகாட்டியாகத் திகழ்ந்து, சர்வதேச விருதான 'வொன்டலஸ்ட் வேர்ல்ட் கைட் 2011' இல் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த ஒரு துடிப்புள்ள இளைஞர் நொயல் புரூனோ டவ்சன்.

ஹப்புத்தளை, தங்கமலை தோட்டத்தைச் சேர்ந்த இவர், 9பேர் கொண்ட அழகிய குடும்பமொன்றின் குல விளக்காகத் தோன்றக் காரணம் அவருக்குள் மறைந்திருந்த திறமையே. தங்கமலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர், தனது பாடசாலைக் கல்வியின் பின்னர், ஒல்லாந்தரான ஹெரியாஸ் என்ற திருத்தந்தையால் பண்டாரவளையில் 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த 'வுட்லன்ட் நெட்வேர்க்' என்ற நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார். 

பதுளை மாவட்டம் தொடர்பில் உல்லாசப் பயணிகளுக்கு எடுத்துரைக்கும் தேவை - குறித்த நிறுவனத்தின் நிறுவுனரான திருந்தந்தைக்கு இருந்தது. இதற்காக இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் ஹோலன்ட் போன்ற நாடுகளிலிருந்து வருகை தரும் மாணவர்களுக்கு இந்த பதுளை மாவட்டத்திலுள்ள இயற்கை எழிலைப் பற்றிக் கற்றுக்கொடுக்க அவர் எண்ணியிருந்தார். இந்நிலையிலேயே மேற்படி நிறுவனத்தின் இணைப்பாளராக கடந்த 99ஆம் ஆண்டு புரூனோ இணைந்துகொண்டார்.

இக்காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 'இன்ட்ரபிட் டிரவல் ஏஜன்சீஸ்' (பயண முகவர் நிறுவனம்) நிறுவனத்தினால் 'வுட்லன்ட் நெட்வேர்க்' நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பொன்று விடுக்கப்பட்டது. அவுஸ்திரேலிய குழுவொன்று இலங்கை வரவுள்ளதாகவும் அவர்களுக்கான உல்லாசப் பயண வழிகாட்டுதல்களை செய்ய முடியுமா? என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேற்படி கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த நிறுவனம், அந்த வேலையையும் புரூனோவிடமே ஒப்படைத்தது. அதன்பின்னர் இரண்டு நாட்களாக மேற்படி ஆஸி குழுவுக்கான பயண வழிகாட்டியாக புரூனோ செயற்பட்டுள்ளார்.

இது நடந்தது 2003ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலாகும். அக்காலப்பகுதியில் நாட்டில் யுத்தம் நிலவியதால் உல்லாசப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இதன்போது மேற்படி அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் 'வுட்லன்ட் நெட்வேர்க்' நிறுவனத்துக்கு அரியதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு பயண வழிகாட்டியொருவரை நியமிக்க தமது நிறுவனம் எண்ணியுள்ளதாகவும் அந்த நேர்முகப் பரீட்சையில் புரூனோ இணைந்துகொள்ள வேண்டும் எனவும் இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆஸி நிறுவனத்தின்  உயரதிகாரி ஒருவரே இலங்கைக்கு வந்து நேர்முகப்பரீட்சையை நடத்தி அதில் புரூனோவை தெரிவு செய்துள்ளார்.

அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அந்நிறுவனத்தினரால் இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட புரூனோ உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 70 பேருக்கான 3 மாதகால பயிற்சிகள் அங்கு வழங்கப்பட்டன. பயிற்சியின் பின்னர் மேற்படி நிறுவனத்தின் இலங்கைக்கான பயண வழிகாட்டியாக புரூனோ நியமிக்கப்பட்டார்.  2004ஆம் ஆண்டு அந்த நியமனத்தைப் பெற்றுக்கொண்ட அவர் அன்று முதல் இன்று வரை குறித்த நிறுவனத்தின் இலங்கைக்கான ஒரேயொரு பயண வழிகாட்டியாக செயற்பட்டு சர்வதேச அளவில் சிறந்த பயண வழிகாட்டி என்ற சாதனையையும் படைத்துவிட்டார்.

அவருடனான தமிழ்மிரரின் முழுமையான நேர்காணலை இங்கு காணலாம்...

கேள்வி        :- உங்களது பணியை தொடர்வதற்கு விசேடமான சில விடயங்களைக்  கையாள்கின்றீர்களா?

பதில்            :- ஆம், அவுஸ்திரேலியாவின் 'இன்ட்ரபிட் டிரவல் ஏஜன்சீஸ்' நிறுவனமானது, 120 நாடுகளுடன் தொடர்புகொண்ட நிறுவனமாகும். இந்நிலையில், உலகளவில் நடைபெறும் உல்லாசப் பயண வழிகாட்டிகளுக்கான போட்டியில் தொடர்ந்து 8 வருடங்களாகவே இந்த நிறுவனம்தான் வெற்றி பெற்று வருகின்றது. இப்படியானதொரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்பதை எண்ணும்போது எனக்கு பெருமையாக உள்ளது.

இலங்கையானது கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் கடல் வளத்தை மாத்திரமே மையமாக வைத்தே உல்லாசப் பயணத்துறையை நடத்தி வந்தது. இந்நிலையில், இலங்கைக்கு வருகை தந்திருந்த உல்லாசப் பிரயாணிகளும் கடல் வளத்தை மாத்திரமே பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். ஆனால், இன்றைய சூழ்நிலை அப்படியானதல்ல. இலங்கையின் அனைத்து எழில்மிகு பிரதேசங்களையும் கண்டுகளிக்க வேண்டும். அவை தொடர்பான விடங்களை அறிந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டுடனேயே இலங்கைக்கான பயணத்தை உல்லாசப் பிரயாணிகள் மேற்கொள்கின்றனர்.

அந்தவகையிலேயே, எமது பணியைத் தொடர்கின்றோம். வெளிநாடுகளில் காணப்படாத சமூகவியல் என்ற பண்பாட்டினை அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்தே அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றோம். அவர்களை பொதுப் போக்குவரத்து வசதிகளிலேயே அழைத்துச் செல்கிறோம். எமது கலாசார மற்றும் எமது நாட்டுக்கே விசேடமான உணவுகளை உண்ணக் கொடுக்கின்றோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவர்களுக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சமூகவியல் என்றால் என்ன? என்பதை அவர்கள் நன்றாக உணர்கின்றார்கள். அதனால் எமது நாட்டுடன் ஒன்றிவிடுகின்றார்கள். இதுவே, நாம் உல்லாசப் பயணிகளுக்காக விசேடமாகக் கையாளும் விடயங்களாகின்றன. இந்த விசேட அம்சங்களே, எனக்கும் எமது நிறுவனத்துக்கும் வெற்றியை அளித்துள்ளது எனலாம்.
 
கேள்வி    :- இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கான அடிப்படை வசிதிகளை எவ்வாறு ஏற்பாடு செய்கின்றீர்கள்?


பதில்         :- இலங்கைக்கு வருகை தர விரும்பும் உல்லாசப் பயணிகள் சுமார் இரண்டு இல்லது மூன்று வருடங்களுக்கு முன்னரே எமது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்டிருப்பார்கள். பின்னர், அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கான நிகழ்ச்சி நிரலை நானே தயார் செய்து எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துவைப்பேன். 15 நாட்களுக்கு ஏற்றவகையில்,  செல்லுமிடங்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றால் போல் அவர்களும் தயாராகி வருவார்கள். 

கேள்வி        :- இலங்கையைப் பொறுத்தவரையில், எந்த நாட்டைச் சேர்ந்த உல்லாசப்   பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்படுகிறது?

பதில்        :- இலங்கையைப் பொறுத்தவரையில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளின் வருகையே அதிகமாகக் காணப்படுகின்றது. காரணம் அந்நாட்டைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு சுமார் ஒரு மாத கால விடுமுறை காணப்படுகின்றது. அந்த விடுமுறையைப் பயன்படுத்தி அவர்கள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்கின்றார்கள். ஆனால், இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் ஓரிரு வாரங்கள் மாத்திரமே விடுமுறை கிடைக்கின்றது. அதனால் அதற்கு ஏற்றவகையில் அவர்கள் தங்களது பயணங்களை முடிவு செய்துகொள்கின்றார்கள்.

இதேவேளை, எமது நிறுவனமானது ஆங்கிலேயர்களை மையமாக வைத்தே இந்த உல்லாசப் பயண வழிகாட்டி பணியைத் தொடர்கின்றது. அதனால், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சுமார் 2 வாரகால விடுமுறையை அடிப்படையாக வைத்தே நாம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த குறுகிய காலப்பகுதியை மையமாக வைத்து முழு இலங்கையிலும் உள்ள இயற்கை அழகின் சுமார் 78 வீதமானதை அவர்களுக்கு காண்பித்து வருகின்றேன்.

கேள்வி        :- இலங்கைக்கான உல்லாசப் பயணத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் எத்தகைய இடங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்?

பதில்        :- இலங்கையைப் பொறுத்தமட்டில், இயற்கை, கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்கள் என்ற மூன்று அடிப்படை அம்சங்களை மையமா  வைத்தே இந்த உல்லாசப் பயண வழிகாட்டிப் பணியினைத் தொடர்ந்து வருகின்றேன். அவர்களும் இவ்வகையான இடங்களையே விரும்பிப் பார்க்கின்றார்கள். இந்நிலையில்,  அநுராதபுரம், பொலன்னறுவை, சீகிரியா, தம்புள்ளை போன்ற வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  இடங்களை முதல் வாரத்திலும், ஏனைய இயற்கை மற்றும் கலாசார ரீதியான பிரதேசங்களை அடுத்தடுத்து வரும் வாரங்களிலும் காண்பிக்கின்றோம். இதனால் அவர்கள்  மிகவும் திருப்தியுடன் தமது நாடுகளுக்கு திரும்புகின்றார்கள். 

கேள்வி        :- உங்களது பணியைத் தொடர்வதில் ஏதேனும் சவால்களை எதிர்நோக்கியுள்ளீர்களா?


பதில்        :- ஆம், பலவாறான சவால்களை எதிர்நோக்கியுள்ளேன். அவை தற்போது மிகவும் சுவாரஷ்யமான விடயங்களாகவே காணப்படுகின்றன. சில இடங்களை நாம் நடந்தே செல்ல வேண்டி ஏற்படும். வாகனங்கள் செல்ல முடியாத பல இடங்கள் காணப்படும். அவ்வாறானதொரு இடத்துக்குச் சென்ற போது ஒரு பயணியால் நடக்க முடியாமல் போய்விட்டது. சுமார் 14 கிலோமீற்றர் நடக்க வேண்டிய இடத்தில் அவர் 6 கிலோமீற்றர் மாத்திரமே நடந்தார். எஞ்சிய 8 கிலோமீற்றரையும் அவரை என் தோளில் சுமந்துகொண்டே நடக்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான சவாலை எதிர்கொண்டே நாம் எமது பணியினைத் தொடர வேண்டும்.

அடுத்ததாக, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் போது நானும் உல்லாசப் பிரயாணிகள் சிலரும் அதில் அகப்பட்டு பலியாகவிருந்தோம். ஆனால், எங்களுடைய அதிர்ஷ்டமோ என்னவோ, எமது பயணம், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டதை விட இரண்டு நாட்களுக்கு முன்னரே முடிவடைந்தது. அதனால் அதிலிருந்து தப்பித்துக்கொண்டோம்.

மூன்றாவதாக, கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு அருகில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவமொன்று நடைபெற்றது. 30 செக்கன்களால் நானும் உல்லாசப் பயணிகளும் உயிர்த்தப்பினோம். காரணம், அவ்விடத்துக்கு அருகிலிருந்த சோதனைச் சாவடியொன்றில் வைத்து நாம் சென்ற பஸ்ஸினை சோதனை செய்தார்கள். அப்படி அவர்கள் சோதனை நடத்தியிருக்காவிட்டால் நாமும் அந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்திருப்போம். இப்படியான சில சவால்களை எதிர்கொண்டே நான் எனது பணியினை தொடர்ந்தேன்.

கேள்வி        :- இவ்வாறான சம்பவங்களின்போது, விசேடமாக யுத்த சூழ்நிலையின் போது இலங்கைக்கு வருகை தந்திருந்த உல்லாசப் பயணிகளின் மனோநிலை பெரிதும் பாதிக்கக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களை எவ்வாறு வழிநடத்தினீர்கள்?


பதில்        :- நான், ஏற்கனவே மேற்குறிப்பிட்ட ஆபத்துக்கள், நாம் சற்றும் எதிர்ப்பாராது இடம்பெற்றவை. அதனால் அவர்களை சமாளிப்பதில் எனக்கு பிரச்சினை ஏற்படவில்லை. இலங்கையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. உல்லாசப் பயணிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்ற எமது நிறுவனத்தின் குறிக்கோளை மையமாக வைத்தே எமது பணியினை நாம் தொடர்ந்தோம். பாரியதொரு சவாலுக்கு மத்தியிலேயே நானும் எனது பணியினை முன்னெடுத்தேன். நாம் அளித்த தைரியத்தில் பெருந்தொகையானோர் வருகை தந்தனர்.

'வடக்கு கிழக்கிலேயே பிரச்சினை காணப்படுகின்றது. நாம் அங்கு செல்லவேண்டியதில்லை, ஏனைய இடங்களை எந்தவொரு பிரச்சினையுமின்றி கண்டுகளிக்கலாம்' என்று கூறியே அவர்களை நாம் சமாளித்து வந்தோம். எமது இந்த நடவடிக்கை எமக்கு விசேடமாக எனக்கு பாரியதொரு வெற்றியை அளித்துள்ளது.

கேள்வி        :- சில உண்மை விடயங்களையும், ஆபத்துக்களையும் மறைத்து உல்லாசப் பயணிகளை வழிநடத்த வேண்டிய தேவை ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

பதில்        :- உண்மை, உதாரணமாக சீகிரியாவுக்கு நான் அவர்களை அழைத்துச் செல்லும்போது, சிங்கத்தின் பாதம் வரை மாத்திரமே அவர்கள் பயணிப்பார்கள். அதற்கு மேல் செல்ல முடியாது. பயமாக உள்ளது என்றெல்லாம் கூறி பயணத்தை இடைநிறுத்த முற்படுவார்கள். ஆனால், அவர்களது பயணத்தை முழுமையாக்க வேண்டும். பயணத்தின் எல்லை வரை சென்று இயற்கையையும் எமது சரித்திரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிடிவாத மனப்பான்மை எனக்கிருந்தது.

அதனால் அவர்களை நான் பாட்டுப் பாடியோ அல்லது நகைச்சுவையான கதைகளையோ கூறி எப்படியாவது பயணத்தை முழுமையாக்குவேன். இதில் முக்கியமாக ஒரு விடயம் என்னவென்றால், அவர்கள் தங்களது பயணத்தை முழுமையாக்கிக் கொண்டதன் பின்னர் அவர்களுக்கு ஏற்படும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஆபத்தையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளுமாறு கூறுவேன். அவர்களும் அப்படியே நடந்துகொண்டு ஒவ்வொரு விடயத்தையும் ரசிப்பார்கள். கடவுள் புண்ணியத்தில் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்பட்டதில்லை.

கேள்வி        :- இலங்கையில், எவ்வகையான இடங்களை உல்லாசப் பயணத்துக்கு உகந்தவையாக வழிகாட்டுகின்றீர்கள்?


பதில்        :- எமது நிறுவனத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில இடங்களை மாத்திரமே உல்லாசப் பயணப் பிரதேசங்களாக வழிகாட்டி வருகின்றோம். குறிப்பாக, அநுராதபுரம், பொலன்னறுவை, சீகிரியா, தம்புள்ளை, கண்டி, பதுளை, மஹியங்கனை, காலி, நுவரெலியா போன்ற பிரதேசங்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில், யுத்தம் நிலவியதால் வடக்கு, கிழக்கில் உல்லாசப் பயணத்தை மேற்கொள்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்தவில்லை. தற்போது, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடம் முதல் (2012) திருகோணமலைக்கான பயணத்தை தொடர்வதற்கு எண்ணியுள்ளோம். 

கேள்வி        :- வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்கள் என எவற்றை கருதுகின்றீர்கள்?

பதில்        :- யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் கட்டப்பட்ட அரண்மனைகள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றார்கள். திருகோணமலையில் இயற்கை துறைமுகம் காணப்படுகின்றது. அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பழமைவாய்ந்த கோயில்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு அம்சங்களையும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்களையும் இலங்கை கொண்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு உல்லாசப் பயணத்தை மேற்கொள்பவர்கள் பரந்தளவிலான விடயங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், பார்த்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதனால் இயற்கை, கலாசாரம், வரலாற்றப் பிரசித்தம் என்ற மூன்று அடிப்படை அம்சங்களையும் எம்மால் பூர்த்தி செய்ய முடிகின்றது. இதுவே, இந்தியாவுக்கு செல்வோமாயின், அங்கு கலாசார ரீதியான விடயங்களை மாத்திரமே கண்டுகளிக்க முடியும். அந்தவகையில், உல்லாசப் பயணத்துக்கு இலங்கை ஒரு பொக்கிஷம் என்றே கூற வேண்டும்.

கேள்வி        :- சில இடங்களைப் பொறுத்தவரையில், அவ்விடத்தினதும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளும் மறைக்கப்பட்டு வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வகையான விடயங்களை கையாள்கின்றீர்கள்? 

பதில்        :- இங்கு நான் ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் உல்லாசப் பயணிகளை அழைத்துச் செல்லும் இடங்கள் தொடர்பில் நன்றாகப் படித்து அறிந்து, அவ்விடங்களின் வரலாறுகள் குறித்து தெரிந்துகொண்டதன் பின்னரே அவ்விடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறேன். அதனால் அவ்விடங்கள் தொடர்பான உண்மையான விடயங்களையே அவர்களுக்கு வெளிப்படுத்துவேன். இது எமது நாட்டின் வரலாற்றின் உண்மைத் தன்மையை அவர்கள் அறிந்துகொள்ள சந்தர்ப்பமாக அமையும். 

இன்னுமொரு விடயம் என்னவென்றால், நாம் சில விடயங்களைச் சொல்லும் போது, உல்லாசப் பயணிகளின் நாடுகளில் உள்ள சில விடயங்களோடு ஒப்பிட்டு சொல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் நான் கூற வருவதை இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். அதோடு, நாம் சொல்வதை அனைவரும் கேட்கக்கூடிய வகையில், அவர்களை ஓரிடத்துக்கு அழைத்து சொல்ல வேண்டும். அதிலும் உண்மையைச் சொல்ல வேண்டும். எமது துறையைப் பொறுத்தவரையில், ஒரு கேள்வியை அவர்கள் நூறு முறை கேட்டாலும் நாம் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

கேள்வி        :- இலங்கையைப் பொறுத்தவகையில் பயண வழிகாட்டி என்பவர், உல்லாசப் பயணிகளிடம் பல்வேறான மோசடிகளில் ஈடுபடுவதான குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன? இதைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்        :- 
உண்மையான விடயம், இலங்கையைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைய பயண வழிகாட்டிகளும் காரணகர்த்தாக்களாக விளங்குகின்றார்கள். காரணம், ஒருமுறை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணியொருவர் மற்றுமொருமுறை இலங்கைக்கு வர முடியாத வகையில், அவரை சூறையாடி, துடைத்து அனுப்பும் பணியில் பயண வழிகாட்டிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கு ஒருவகையில், பயண வழிகாட்டிகள் பணிபுரியும் நிறுவனத்தினர் அவர்களுக்குரிய சம்பளத்தை கொடுக்காமையும் ஒரு காரணமாகிறது. இவ்வாறான நிலைமை மாறுமாயின், இலங்கையின் சுற்றுலாத்துறையில் வளர்ச்சியடையும், பயண வழிகாட்டிகளும் நன்மையடைவார்கள்.

கேள்வி     :- பயண வழிகாட்டியொருவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது தொடர்பில் இலங்கையில் வழிகாட்டுதல்கள் உள்ளனவா?


பதில்         :- ஆம், சுற்றுலாச்சபையில் அவ்வாறான வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், இலங்கையில் காணப்படும் சுற்றுலாத் தளங்கள் தொடர்பில் மாத்திரமே அங்கு விளக்கமளிக்கப்படுகின்றன. இதைத்தவிர, சுற்றுலாப் பயணிகளிடம் பயண வழிகாட்டிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பிலோ அதற்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்தோ அங்கு குறிப்பிடப்படுவதில்லை.

உண்மையில், ஒரு பயண வழிகாட்டி என்பவர், சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாகவும் அவகளுக்கு சிறந்த ஆலோசகராகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, அவர்களை ஓரிடத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், அவ்விடத்துக்குத் தேவைப்படும் சகல விடயங்களும் அவர்களிடம் உள்ளனவா? என்று பார்க்க வேண்டும். சிகிரியா குன்றில் ஏறி முடித்ததற்கு பின்னர், உல்லாசப் பயணி அவரது கெமராவை தங்குமிடத்திலேயே வைத்துவிட்டு வந்ததாகக் கூறினார் என்றால், பயண வழிகாட்டியாக இருந்து எந்த பயனும் இல்லை.

அதனால் அதற்கேற்ற வகையில் பயண வழிகாட்டிகள் முன்கூட்டிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் செல்லும் விடயம் முழுமையாக அமையும், பயணமும் சிறப்புறும். அதனால், பயண வழிகாட்டிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் சுற்றுலாச்சபை அறிவுறுத்த வேண்டும். அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

கேள்வி     :- பயண வழிகாட்டிகளுக்கான 'வொன்டலஸ்ட் வேர்ல்ட் கைட் 2011' என்ற சர்வதேச விருது வழங்கல் விழாவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளீர்கள்? இந்த விருது பற்றியும் இவ்விருதினைப் பெற்று மாபெரும் வெற்றியை எவ்வாறு சுவீகரித்துக்கொண்டீர்கள் என்பது பற்றியும் கூற முடியுமா?

பதில்         :- போல் மொரிசன் மற்றும் அவரது மனைவி லீன் ஹியூகஸ் ஆகிய இருவரும் பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் செய்து அந்நாடுகளைச் சேர்ந்த பயண வழிகாட்டிகளைத் தெரிவு செய்து அவர்களது பயண முடிவில் சிறியதொரு பரிசை வழங்கிவிட்டு வந்துள்ளார்கள். இப்படி தொடர்ந்தும் செய்துவந்த அவர்கள், ஏனைய துறைகளைப் போன்று பயண வழிகாட்டிகளுக்கான போட்டியொன்றை நடத்தில் அதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பாரியளவில் பரிசொன்றை வழங்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

இந்நிலையில், இவர்கள் 2004ஆம் ஆண்டு 'போல் மொரிசன்' என்றொரு விருது வழங்கலை ஆரம்பித்தார்கள். இவர்களது இந்த முயற்சி வெற்றியளித்ததன் பயனாக 'வொன்டலஸ்ட்' என்றொரு சஞ்சிகையை ஆரம்பித்து அதன் மூலம் இந்த விருதினை 'வொன்டலஸ்ட் வேர்ல்ட் கைட்' விருது என்று பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார்கள்.

இவ்வாறாக, ஒவ்வொரு வருடமும், இந்த விருது வழங்கலுக்காக அனைத்து நாடுகளிலும் உள்ள டிரவல் ஏஜன்சீஸ் (பயண முகவர் நிறுவனம்) களுக்கு தங்களது போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பி வந்தார்கள். ஆனால் இந்தப் போட்டியில் பங்குகொள்ளும் நிறுவனத்தைச் சேர்ந்த பயண வழிகாட்டியானவர், அந்த நிறுவனத்தில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்தவராகக் காணப்பட வேண்டும் என்பது மேற்படி விருது குழுவின் முடிவாகும். இதற்கமைய நானும் எமது 'இன்ட்ரபிட் டிரவல் ஏஜன்சீஸ்'இல் முதல் 10 இடங்களில் இடம்பிடித்திருந்தேன். இதற்கமைய 1500 போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்குபற்றினார்கள்.

அதன்பின்னர், நான் பயண வழிகாட்டியாகச் செயற்பட்ட உல்லாசப் பயணிகள், எனக்காக வாக்களிக்க வேண்டும். அதிலும் 150இற்கு மேற்பட்ட வாக்குகள் எனக்கு கிடைக்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறைகளாகின்றன. பின்னர், எனக்கு வாக்களித்தவர்களுக்கு மேற்படி விருது குழுவினரால் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் எதற்காக குறித்த நபருக்கு நீங்கள் வாக்களித்தீர்கள்? என்று எழுத்துமூலமாக அறிவிக்குமாறு அவர்கள் கோரப்படுவார்கள்.

பயண வழிகாட்டியின் குணாதிசயங்கள் உள்ளிட்ட அவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பது பற்றி அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தெரிவுக்குழுவினரால் கேட்கப்படும் கேள்விகளுக்கு மேற்படி வாக்களித்த உல்லாசப் பயணிகள் எழுத்து மூலமாக பதிலளிக்க வேண்டும். இவர்களின் பதில்களுக்கு அமைய தெரிவுக்குழுவினரால் 5பேர் தெரிவு செய்யப்படுவார்கள். அந்த ஐந்து பேரில் நானும் இடம்பிடித்தேன்.

அதன்பின்னர், தெரிவு செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் தெரியாத வகையில், அவர்களின் நாடுகளுக்கு உல்லாசப் பயணிகள் என்றவகையில் ஐந்து நடுவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த நடுவர்களால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு தெரிவுக்குழுவிடம் அறிக்கையொன்று ஒப்படைக்கப்படும். அந்த அறிக்கையின் பிரகாரம் முதல் மூவர் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களில் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களுக்கு உரித்தானவர்களை 8பேர் கொண்ட நடுவர் குழுவினரே தெரிவு செய்வார்கள்.

இந்நிலையிலேயே நான் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டேன். தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்துக்கொண்டேன். இதே விருது விழாவின் போது 2010ஆம் ஆண்டுக்கான வெண்கலப் பதக்கத்தையும் நானே சுவீகரித்துக்கொண்டேன். அதிலும் தங்கப் பதக்கம் தான் கிடைத்தது. என்னால் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் போனதால் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் இம்முறை எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

காரணம், நான் போட்டியை எதிர்ப்பார்த்து பணியாற்றவில்லை. உண்மையில், இப்படியானதொரு போட்டி இருக்கின்ற விடயமே கடந்த வருடம் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதுதான் தெரியும். அதிலும் மிகவும் கடுமையான முறையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவ்வாறானதொரு போட்டியில் நான் வெற்றியீட்டியிருக்கின்றேன் என்று நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

கேள்வி     :- உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?

பதில்         :- நான் இந்த போட்டியில் வெற்றிபெற்றது என்பது எனக்கு மாத்திரமன்றி என்னுடைய நாட்டுக்கும் ஒரு தமிழன் என்ற ரிதியில் பெருமையாக உள்ளது. இவ்வாறான போட்டிகளில் எமது நாட்டைச் சேர்ந்த பலரும் வெற்றி பெற்று பதக்கம் வென்றெடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதனால், எனக்குள்ள திறமைகளைக் கொண்டு ஒரு குழுவுக்கு பயண வழிகாட்டிக்கான பயிற்சிகளை வழங்கவுள்ளேன். அத்துடன், நானும் எனது நண்பர் திஸாநாயக்காவும் இணைந்து பதுளை மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்க எண்ணியுள்ளோம்.

இதேவேளை, நான் இந்த சர்வதேச விருதினைப் பெற்றமை குறித்து இலங்கை அரசாங்கத்துக்கோ அல்லது சுற்றுலாச் சபைக்கோ எதுவும் தெரியாது. எனக்குள் ஏதோவொரு திறமை இருக்கின்ற பட்சத்திலேயே இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது என நினைக்கிறேன். அதனால் எதிர்கால பயண வழிகாட்டிகளுக்கு சிறந்த உதாரணமாக விளங்கவும் அவர்களுடன் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்த அரசாங்கம் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Pix By :- Indrarathna Balasooriya


  Comments - 2

 • Muhammadh Aadhil Friday, 19 October 2012 05:11 AM

  ஓர் இலங்கையர் இவ்விருதை வென்றது பெருமையாய் உள்ளது. வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  J.M. Azhar Sunday, 20 November 2011 12:08 AM

  வாழ்த்துக்கள் நோயல் - அஸார்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .