‘அதையும் தாண்டிப் புனிதமானது’

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது.  

“புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும் மேலான சமஷ்டித் தன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, அதற்கு மாறாகக் கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.   

ஆறு மாதங்களின் பின்னர், கடந்த மே மாத இறுதியில், கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், “தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளஅரசியல் மாற்றங்களால், அரசியல் தீர்வு விடயம் சவால் மிக்கதொன்றாக மாறியிருக்கின்ற போதிலும், அரசியல் தீர்வுக்குச் சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும்” எனத் தெரிவித்திருக்கிறார்.  

மே மாத இறுதியில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அமெரிக்க காங்கிரஸ் குழுவினரைச் சந்தித்திருந்தார்.  அவர்களிடம், “புதிய அரசமைப்பில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.   

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட, தமிழரசுக் கட்சியினர், இதையே தமிழ் மக்களிடம் சந்தைப்படுத்த முயன்றனர்; தேர்தலில் பேசுபொருளாக்க முயன்றனர். ஆனால், அது தமிழ் மக்களிடம் எடுபடவில்லை என்பதைத் தேர்தல் பெறுபேறுகள் வெளிக்காட்டின.  

‘நேசரி’ உட்பட பாடசாலைக் கல்வியை 12 அல்லது 13 வருடங்கள்  கற்கின்றோம்; பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் கற்கின்றோம். சித்திஅடைகின்றோம். ஆனால், இனப்பிரச்சினையை 70 வருடங்களாகக் கற்கின்றோம்; முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளோம்.   

கடந்த 70 வருட அரசியலில், எமது தலைவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவம் என்ன? ஆகவே, வரப்போகும் அரசமைப்பு சமஷ்டியையும் தாண்டிப் புனிதமானது என எவ்வாறு கூறலாம், என்ன அடிப்படையில் கூறலாம்?  

கொழும்பு அரசியலின் கள யதார்த்தங்களின் அடிப்படையில், இனியும் அரசமைப்பு வரும் என நம்புவது, பிரேதம் பேசப் போகின்றது எனக் கூறுவதற்கு ஒப்பானது. அது இறந்து பல மாதங்களாகி விட்டது. அப்படியாக அரசமைப்பு மறுபிறப்பெடுத்தாலும், அதனூடாகத் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என அறுதியிட்டுக் கூற முடியாது.   

இலங்கையில், ஆட்சியாளர்கள் தங்களது காரியம் நிறைவேறக் காலை வருடுவார்கள். காரியம் நிறைவடைந்தவுடன் அதே காலை வாரிவிடுவார்கள். இதுவே கூட்டமைப்புக்கும் நடந்து கொண்டிருக்கின்றது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திரிசங்கு நிலையில் எம்மவர்கள் உள்ளனர்.   

அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியவர்கள் எனப் பெருமைபேசி, அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அள்ளி வழங்கி, எல்லையற்ற விட்டுக்கொடுப்புகளைச் செய்து, கடைசிப் படிக்கு கீழ் இறங்கிவந்துநின்று, ஏற்கக் கூடிய நீதியான தீர்வை வழங்குவார்கள் எனத் தமிழ்த் தரப்பு கனவு கண்டது. ஆனால், அநீதியானதும் ஏற்க முடியாததுமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் கூறி, நல்லாட்சி காவுகொண்டு விட்டது.  

தமிழ் மக்களிடம் ‘ஆட்சியாளர்களை மலையாக நம்பினோம்; அவர்கள் எங்களுக்கு முழங்கை காட்டி விட்டார்கள்’ எனக்கூறி, கூட்டமைப்பால் இலகுவாக நழுவித் தப்பிவிட முடியாது. ஏனெனில், தற்போது ‘பொறுப்புக் கூறல்’ என்ற வார்த்தை, அதிகமாக உரையாடப்படுகின்றது. ஆகவே, அந்தப் பொறுப்புக் கூறல் தமிழ்க் கூட்டமைப்புக்கும் பொருந்தும்.  

பெரும்பான்மை இன ஆட்சியாளர்களது அனைத்து அசைவுகளும், இலங்கையை முழுமையாகச் சிங்கள பௌத்த நாடு என ஆக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இது, அவர்களது நீண்ட கால நிகழ்ச்சிநிரல். அதற்காக அவர்கள் அல்லும் பகலும் உழைக்கின்றார்கள். பல மூளைசாலிகள் கூடியிருந்து இதற்கான திட்டங்களை தூரநோக்கத்துடன் வகுக்கின்றார்கள்; நன்கு திட்டமிடுகின்றார்கள்; செயற்படுத்துகின்றார்கள்; வெற்றி பெறுகின்றார்கள்.   

அதன் ஓர் அங்கமாக, மே மாதம் 2009ஆம் ஆண்டு வரையும் அதன் பின்னரும் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்த படையினர், தற்போது மனங்களை ஆக்கிரமிக்கும் முகமாகப் பலமுனைகளில் களங்களைத் திறந்துள்ளனர்.  

தமிழ் மக்களது நிலம் பறிக்கப்படுகின்றது; கடல்வளம் சூறையாடப்படுகின்றது; சிங்கள மயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, முன்னாள் போராளிகள் பிரச்சினை, நுண்நிதிக் கடன் பிரச்சினை,பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை என முற்றுப்புள்ளி இல்லாத பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சீவிக்கின்றனர்.   

ஆனால், இவை அனைத்தையும் தாண்டிய முக்கிய பிரச்சினையாகத் தமிழ் அரசியல் தலைவர்களது ஒற்றுமையின்மையைத் தமிழ் மக்கள் எண்ணித் தினம் தினம் கவலை கொள்கின்றனர். மக்களுக்காக அரசியல் செய்ய வந்தவர்கள், தங்களுக்குள் முட்டிமோதுகின்றார்களே என வருத்தப்படுகின்றார்கள்.  

தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை ஓங்கக் கூடாது; நேர்மையான கொள்கைப் பற்றுள்ள வலுவான தலைவன் உருவாகக் கூடாது; அவர்கள் தங்களது சுதந்திரம் தொடர்பில் எதுவும் நினைக்கக் கூடாது; பேசக் கூடாது; கொழும்பு சொல்வதை அப்படியே கேட்கவேண்டும். மொத்தத்தில் வெறும் ஜடங்களாகத் திரிய வேண்டும் என்பனவே, சிங்கள பௌத்தவாதத்தின் அவாவாகும்.   

தமிழ் அரசியல் தலைவர்களது ஒற்றுமையின்மை என்ற மிகப் பெரிய பலவீனத்தைக் கொண்டு, ஏனைய சமூகங்கள் நிறையப் பலமும் பயனும் அடைவதையிட்டு, இவர்கள் ஏன் எள்ளளவும் சிந்திக்கவில்லை எனத் தமிழ் மக்கள் ஆழ்ந்த துயர் கொள்கின்றார்கள்.   

இதற்கிடையில், மாகாணசபைத் தேர்தல்கள் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஒற்றுமை மிகமிக அவசியம்; ஐக்கியம் முக்கியம் என்பனவாகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.   

தேர்தல் வேளைகளிலும் தேர்தல் மேடைகளிலும் ஒற்றுமை பற்றிக் கதைக்கும் அல்லது கதைவிடும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்தவுடன் ஒற்றுமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என, அவர்களுக்கு மட்டுமே தெரியும்.   

தமிழ் மக்களின் வாழ்வியல், அழிவின் விளிம்பில் ஊசலாடுகின்றது. நீண்ட வரலாற்றைக் கொண்ட இனத்தின் வரலாற்றை, நீண்டு விடாமல் மாண்டு போவதற்கு, கூர்மையான தயார்படுத்தல்கள் தீட்டப்படுகின்றன. 

இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் வெற்று அரசியல் செய்யக் கூடாது. மாறாக, அரசியலைப் புனிதப் பணியாகச் செய்ய முன்வர வேண்டும்.   

இனத்தின் விடிவு கருதி தங்களுக்குள் ஒழிந்திருக்கும் ‘ஈகோ’வை துறந்து, திறந்த மனத்துடன் மனம் விட்டு உரையாடத் தயாராக வேண்டும். தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் எனின், தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும்.   

இவை, ஈழத் தமிழ் மக்கள், தங்களது எதிர்காலச் சுதந்திர வாழ்வு தொடர்பில், தங்கள் அரசியல் தலைவர்களிடம் முன்வைக்கும் தயவான வேண்டுகோளாகும். 

 தமிழர்களின் ஒற்றுமை கண்டு எதிரி பறந்து ஓடு(ழி)வான்.   ஏனெனில், தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் உள்ள வேற்றுமை காரணமாகத்தான், தமிழ் இனத்துக்குள்ளும் வேற்றுமைகள் வருகின்றன. 

வேற்றுமைகள் பாராட்டியதாலேயே கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்குகள் சிதறின; பெருந்தேசியக் கட்சிகள் பலம் பெற்றன; தமிழர் பலம் குன்றியது; ஏகபிரதிநிதித்தும் கேள்விக்குறியானது.   தமிழ் மக்களுக்கு உருவம் கொடுக்க வேண்டியவர்கள், துருவங்களாக இருக்கக் கூடாது.   

நாவற்குழியில் கருங்கல்லால் அமைக்கப்பட்ட ‘திருவாசக அரண்மனை’யின் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அங்கு திருகோணமலையிலிருந்து முதியவர் ஒருவர் வந்திருந்தார். பூஜைகள் நடக்கும் போது, கண்ணீர் மல்கி இறைவழிபாடு செய்தார்.   

அருகிலிருந்த என்னைப் பார்த்து, “கடவுளே இன்று ஒரு நிகழ்வில் சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் ஒன்றாகப் பங்குபற்றுகின்றார்களாம். அந்நிகழ்வு, எங்கள் இன அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கு வழி சமைக்கட்டும் எனக் கும்பிட்டேன்” என்றார்.

 தயவு கூர்ந்து, மக்களின் எண்ணங்களை, ஏக்கங்களை, கவலைகளை, வருத்தங்களை தமிழின அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.   


‘அதையும் தாண்டிப் புனிதமானது’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.