2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும்

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.கே. அஷோக்பரன்

பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய  வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். 

‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் புரிந்துவிட முடியும் என்பதை, பெரும் வெற்றிச் சூத்திரமாக முன்னிறுத்துவது, சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள அறிவின், புலமையின் வரட்சியைத்தான் எடுத்துக்காட்டி நிற்கிறது. 

சின்னச் சின்ன சந்தோசங்களும் கிளுகிளுப்புகளுமே அரசியல் வெற்றிகளாக வரையறுக்கப்படுவது, இன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடிணுயும். 

இந்த இடத்தில், ஒரு முக்கிய இடையீடு அவசியமாகிறது. சமூக ஊடக வளர்ச்சியின் விளைவாக, அரசியல் பற்றிய பேச்சு என்பது, இன்று அதிகமாகவே நிகழ்கிறது என்கிற கருத்து பொதுவில் நம்பப்படுகிறது. ஆனால், இது காலங்காலமாகத் தேநீர்க்கடைகளிலும் வீட்டுத்திண்ணைகளிலும் அலுவலக உணவறைகளிலும் இடம்பெற்ற அரசியல் பேச்சுகளின் தொடர்ச்சிதான். ஜனநாயகத்தின் உயிர்ப்புக்கு இது அவசியமானது. 

ஆனால், ஜனநாயகத்தின் நிலைப்புக்கும் அரசியல் வளர்ச்சிக்கும், இந்தச் சாதாரண கதையாடல்களைத் தாண்டிய சிந்தனை வளர்ச்சியும் கருத்தியல் வளர்ச்சியும் அவசியம். அது, புலமைத்தளத்தில் நிகழ்கிற விடயம். புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்கும் இடையேயான இடைவௌியென்பது, வரலாற்றில் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிற ஒரு விடயம்தான். 

வரலாற்றில் இந்த இடைவௌி, சமூக, பொருளாதாரக் காரணங்களால் திணிக்கப்பட்டதொன்றாக இருந்தது. ஆனால், கடந்த தசாப்தங்களில் இந்த நிலை மாறியுள்ளது. புலமைத்தளத்தையும் வெகுஜனங்களையும் இணைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு முதன்மையானது. 

இந்த அரிய வாய்ப்பு, புலமைத்தள விஸ்தீரணத்துக்கும் புலமைத்தளத்தின் வெகுஜனமயமாக்கலுக்கும் வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், சமகால நிலையை அவதானிக்கும் போது, நிலைமை அவ்வாறின்றி வேறுவகையான மாற்றத்தை அடைந்திருக்கிறது.  இன்று, இருவகையான நிலைகள் உருவாகி இருப்பதாக உணரக்கூடியதாக உள்ளது. 

முதலாவது, புலமை நிராகரிப்பு. வெகுஜன அரசியலுக்குப் புலமைத்தளம் அவசியமில்லை; வெகுஜன அரசியலிலிருந்து புலமைத்தளம் அந்நியமானது என்ற நம்பிக்கை வெகுவாக விதைக்கப்படுகிறது. புலமைத்தளத்தின் எல்லாக்கருத்துகளும் வெகுஜனங்களால் இலகுவில் கிரகிக்கப்படவும் புரிந்துகொள்ளவும் முடியாதுள்ளமையானது, புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்கும் இடையேயான இடைவௌியொன்றை ஏற்படுத்திவிடுகிறது. 

இந்த இடைவௌிதான், புலமைத்தள நிராகரிப்பின் ஊற்றாக மாறிவிடுகிறது. இரண்டாவது, போலிப் புலமைத்தளமொன்றின் உருவாக்கம். புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்குமான இடைவௌிதான், இந்தப் போலிப் புலமையின் மூலதனம்.அந்த இடைவெளியை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வெகுஜன சிந்தனைகளுக்கு, அதன் விளைவுகளைப் பற்றிய ஆராய்ச்சியெல்லாம் இல்லாமல், வெறுமனே கைத்தாளம் போடும் இந்த போலிப் புலமை, தம்மை, குறித்த வெகுஜனக் கூட்டத்தின் புலமையாளர்களாக முன்னிறுத்துகிறது. 

இந்தப் போலிப் புலமைதான், உண்மையான புலமைத்தளத்தை, வெகுஜனங்களிடமிருந்து விலத்தி வைக்கும் கைங்கரியத்தையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் போலிப் புலமைதான், புலமையாளர்களை வெகுஜனங்களிலிருந்து நீக்கம் செய்வதற்கான பிரசாரங்களை, மிகத் தீவிரமாக முன்னெடுப்பதோடு, புலமைத்தளம் வெகுஜன அபிப்பிராயங்களோடு முரண்படும் பொழுதுகளில், வெகுஜனங்களின் கருத்துகளுக்குக் கைத்தாளமிட்டு, புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

புலமை நிராகரிப்பு, போலிப் புலமையாளர்களின் எழுச்சி என்ற இரண்டு நிலைகளிலும் சிக்கிக்கொண்டுள்ள ஒரு வெகுஜனக்கூட்டத்தின் அரசியல் பயணம், அதளபாதாளத்தை நோக்கியதாகவே அமையும். இந்த இடத்தில், மேற்கூறியதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதில், புலமைத்தளத்தின் தவறு ஒன்றுகூட இல்லை என்றும் கூறிவிட முடியாது. புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்குமான இடைவௌியை, புலமைத்தளம் அறிந்தும், உணர்ந்தும் இருக்கிறது. ஆனால், அந்த இடைவௌியை இணைப்பதற்கான காரியங்களை முன்னெடுப்பதில், புலமைத்தளம் மெத்தனமாக இருக்கிறது. அதன் விளைவுதான் போலிப் புலமை அந்த இடத்தை நிரப்பிக்கொள்ள வழிவகுத்திருக்கிறது. 

ஆகவே, வெகுஜனம், புலமைத்தளத்தோடு தொடர்பை ஏற்படுத்துவதிலும், புலமைத்தளம் தன்னை வெகுஜனத்தோடு இணைத்துக்கொள்ள முயற்சிப்பதுதான், சாத்தியமான முன்னகர்வாக இருக்கும். அதைப் புலமைத்தளம் செய்யாது விடின், அது, புலமைத்தளத்தின் தோல்வியாகவே அமையும். கொம்யூனிசச் சிந்தனை என்பது, புலமைத்தளத்தில் பிறந்தது. அதை வெகுஜன இயக்கமாக மாற்றியது, அந்தப் புலமையாளர்களின் வெற்றி. ஆகவே புலமைத்தளத்தையும் வெகுஜனத்தையும் இணைக்கவே முடியாது என்ற கருத்தில் உண்மையில்லை.ஆனால், இதைச் சாத்தியப்படுத்துவதில், வெகுஜனத்தின் பங்கைவிட, புலமைத்தளத்தின் பங்கே முதன்மையானதும் முக்கியமானதுமாகும். அதுபோலவே, இதைச் சாத்தியப்படுத்த முடியாதிருப்பதற்கும் புலமைத்தளமே முக்கிய காரணமாகவும் அமைகிறது. 

புலமையாளர்கள் தமக்கென ஒரு வட்டத்தை வைத்துக்கொண்டு, அந்தக் ‘குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருப்பதால்’ எந்த விளைபயனும் ஏற்படப்போவதில்லை. அரசியல் புலமை என்பது, வெகுஜனங்களில் இருந்து அந்நியப்பட்டிருப்பதால், எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதை விட, அது அரசியல் புலமையின் மிகப் பெரிய தோல்வியாகும். தன்னை வெகுஜனத்திடம் கொண்டு போய்ச் சேர்ப்பதும், அரசியல் புலமைத்தளத்தின் முக்கிய நோக்கமாக அமையவேண்டும். 

மறுபுறத்தில், வெகுஜனத்துக்கு இடையேயும் சில சிந்தனை மாற்றங்கள் அவசியமாகிறது. 20ஆம் நூற்றாண்டின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான பேட்ரண்ட் ரஸல்,‘மாறும் உலகத்துக்கான புதிய நம்பிக்கைகள்’ என்ற தனது நூலில் “ஒரு புத்திசாலித்தனமான மனிதனை விட, ஒரு முட்டாள் மனிதன் நேர்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று, நம் ஜனநாயகங்கள் இன்னும் நினைக்கின்றன. ஆகவே, இயற்கை தம்மை உருவாக்கியதை விட, முட்டாள்தனமாக நடித்து, நமது அரசியல்வாதிகள் ஜனநாயகம் கொண்டுள்ள இந்தத் தப்பெண்ணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார். 
வெகுஜனங்களுக்குப் புலமைத்தளம் சிலவேளைகளில் அந்நியமானதாகக் கூடத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல என்ற யதார்த்தத்தை, உணர வேண்டும். 

அறிவு என்பதுதான், மனிதக் கூட்டம் சேர்த்து வைத்துள்ள பெரும் செல்வம். அதைக் கண்டு அஞ்சாது, அதைச் சுவீகரிக்கும் மனநிலையை, நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகி இருப்பதானது, பெருஞ்செல்வத்தை நீங்கியிருப்பதற்கு ஒப்பானது. மேலும், போலிப் புலமையாளர்கள் பற்றிய விழிப்புணர்வையும் வெகுஜனங்கள் கொண்டிருப்பது மிக அத்தியாவசியமாகிறது.

புலமைத்தளத்துக்கும்  வெகுஜனத்துக்குமான இடைவௌி என்பது, பாதகமானது என்றால், அந்த இடைவௌியைப் போலிப் புலமை கைப்பற்றி, நிரப்பிக்கொள்வது மிக மிக ஆபத்தானது. 

போலிப் புலமை, வெகுஜனங்களைக் கவர்வதையே நோக்கமாகக் கொண்டு செயற்படும். இதற்காக, வெகுஜன ஈர்ப்பு மிகுந்த விடயங்களை, அது மீள உரைக்கும்.வெகுஜனத்திடையே ஒரு விடயம் பிரபல்யமாக இருக்கும் போது, அதைப் பாராட்டிப் புழுகித்தள்ளும்; வெகுஜன நாடித்துடிப்பின் தாளத்துக்கு அது நர்த்தனமாடும்.

 ஆகவே, வெகுஜனத்துக்கு அதைப் புரிந்துகொள்வதும், அதோடு இணங்கி இயைவதும் இலகுவானதாக இருக்கும். வெகுஜனங்களின் ஏற்பும் அங்கிகரிப்பும்தான், போலிப் புலமையின் ஒரே நோக்கம்; அதற்கேற்றாற் போலவேதான், அது தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. போலிப் புலமைக்கு, நேர்மை என்பது கிடையாது. அதற்குத் தனது சுயநலத்தைத் தாண்டிய நோக்கமும் கிடையாது. ஆனால், அது கவர்ச்சியானது. சொல்வதைக் கேட்கும், அழகான நாய்க்குட்டியைப் போல, அது வெகுஜனங்களின் செல்லப்பிராணியாகவே, தன்னை உருவாக்கிக்கொள்ளும். ஆனால், அதனால் ஒருபோதும் வெகுஜனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது. 

ஏனென்றால், அது வெகுஜனங்கள் காட்டும் வழியில் பயணிக்கக் கற்றுக்கொண்டுள்ளது. அதுதான் அதன் தன்மை. வெகுஜனங்கள் எந்தப் பாதையில் போகிறதோ, அதையே சரியான பாதையாக அது முன்னிறுத்தும். அதற்குத் தேவை, வெகுஜனங்களின் அங்கிகாரம் மட்டும்தான். அதைத் தாண்டிச் சிந்திக்கும் இயலுமை கூட, அதற்கு இருக்குமோ தெரியாது. 

இது பற்றி வெகுஜனங்கள் எச்சரிக்கை கொள்வது அவசியம். உண்மையான புலமைத்தளமானது, வெகுஜனத்தின் அங்கிகாரத்தை வேண்டி நிற்காது. அது, புலமையின் தன்மையல்ல; அப்படி இருந்தால் அது புலமையும் அல்ல. இதையும் வெகுஜனம் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

ஜனநாயக அரசியல் என்பது, மிகச் சிக்கலானது. இதில் புலமைத்தளம் மிக முக்கியமானதொன்று. புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்குமான  பாலத்தைக் கட்டியமைப்பது, இந்த இரண்டு தரப்பினதும் கடமை. அது சரிவரச் செய்யாவிட்டால், அது அனைவருக்கும் பேரிழப்பாகவே அமையும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X