2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா?

எம். காசிநாதன்   / 2020 பெப்ரவரி 17 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது.   

முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார்.   

ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் நீடிப்பதற்கு, மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  
சசிகலா வெளியில் இருந்த நேரத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு முதல், “ஸ்டாலினைப் பார்த்துச் சிரித்தார்” போன்ற குற்றச்சாடுகளைச் சுமத்தி, வெளியேற்றப்படும் சூழலுக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.   

ஜெயலலிதாவின் சமாதியில், ‘தர்மயுத்தம்’ நடத்திய அவர், இன்றைக்குச் சசிகலா உருவாக்கிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். காரணம், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, யோகம் என்பது ‘சிறை’ வடிவில் கிடைத்தது.   

அதாவது, ஜெயலலிதா- சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில், நான்கு வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். அவரது சிறைவாசம், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.   

அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலின், ‘கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு, எவ்வித தொந்தரவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.  

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த ‘சசிகலா ஆபத்தும்’ ‘ஸ்டாலின் ஆபத்தும்’ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஆகவே, “நான் முதலமைச்சர்; இல்லையேல் தேர்தல்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தையே, தனது தலைமையை ஏற்றுக் கொள்ள வைத்தார்.   

கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்று வரை அ.தி.மு.கவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுக்க முழுக்க, எடப்பாடி பழனிசாமி கையிலேயே இருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத அமைச்சர் மணிகண்டனைப் பதவியை விட்டு நீக்குவதாக இருக்கட்டும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவிகளுக்கு தன் விசுவாசிகளுக்கு இடம் வழங்குவதாக இருக்கட்டும் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வட்டத்துக்குள் மட்டுமே நடந்தது. ஏன், ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவையே கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தைக் கூட, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை.   

இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சிக்குள் இருந்த அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறி விட்டார்கள். அல்லது, “இனி நம் அதிகாரம் எடுபடாது” என்று அமைதியாகி விட்டார்கள் என்றே எண்ண இடமிருக்கிறது.  

அ.தி.மு.கவுக்குள் இனி ‘ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம்’ என்று எதுவும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியிலும் அவருக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை.   

அதனால்தானோ என்னவோ, ‘நிதி நிலை அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய ஜெயலலிதா குறித்து, எப்படித் தனது ‘பட்ஜெட்’ உரையில் ஓ.பன்னீர்செல்வம்’ குறிப்பிடுவாரோ அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சிறந்த ஆலோசனைகள் என்று பட்ஜெட்டில் பாராட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.   

ஆகவே, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அ.தி.மு.கவின் தலைவர் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்பது நூற்றுக்கு இரு நூறு சதவீதம் உறுதியாகி விட்டது.  ஆட்சியைப் பொறுத்தமட்டில், 16,382 கோப்புகளை மூன்று வருடங்களில் பார்த்துக் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக, ‘மூன்று ஆண்டு சாதனை’ பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.   

அந்தக் பட்டியலில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸாரை நிம்மதியிழக்க வைத்துள்ளன.   

தொடர் போராட்டங்களில் நிம்மதியிழந்த பொலிஸார், சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தடியடி நடத்த, இப்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நியமித்து, சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.   

ஆகவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது மிகப்பெரிய தலைவலியாக அக்கட்சிக்கு தமிழகத்தில் மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறுபான்மையினர் வாக்குகளை இனிமேல் அந்தக் கட்சி கனவிலும் பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது.   

இதேபோன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘காவிரி டெல்டா’வை அறிவிக்கப் போகிறேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அந்தக் காவிரி டெல்டா பகுதிகளில், ஏற்கெனவே செயல்படும் அல்லது, புதிதாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களின் நிலை என்ன? தொடருமா, அதற்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ், இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.   

மாநில அரசாங்கம், தனது அதிகாரத்தின் கீழ் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா? அப்படி நிறைவேற்றப்படும் சட்டத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? இதெல்லாம் மில்லியன் டொலர் கேள்விகளாக வலம் வருகின்றன.  

இது போன்ற சூழ்நிலையில், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க ஆட்சியின் ‘கடைசி முழு நிதி நிலை அறிக்கை’, தேர்தல் நிதி நிலை அறிக்கையாகவோ தேர்தலை மனதில் வைத்தோ வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநிலம் 4.56 இலட்சம் கோடி கடனில் சிக்கிக் கொண்டிருப்பதே ஆகும்.   

மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், தேர்தல் வருடத்தில் செலவிட முடியாத அளவில், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இன்றைக்கு உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, நிதி மேலாண்மை மிகப்பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகிறது.   

எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள், இதைச் சரியான பாதையில் திருப்பி விட முடியும் என்று, பொருளாதார நிபுணர்களாலும் நம்பிக்கை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது.  

அரசாங்க நிர்வாகத்தில் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ‘சுதந்திரம்’ கிடைத்துள்ள காலகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலம் இருக்கிறது. அமைச்சர்களுக்குச் ‘சுதந்திரம்’ இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் ‘நிர்வாகத் திறமைகளாக’ அ.தி.மு.க ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதாக இருக்கிறதா என்றால், “இல்லை” என்றே கூறிவிட வேண்டும்.  

ஏனென்றால், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு, பல்வேறு ஊழல் புகார்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள், ஊழல் வழக்குகள் அமைச்சர்கள் மீதே தொடரப்படுவது எல்லாம், இந்த மூன்றாண்டு கால ஆட்சி வெளியிட்டுள்ள ‘சாதனைப் பட்டியலுக்கு’ வேதனை அளிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன.  

ஆகவே, தேர்தல் வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்கு இப்போதைக்கு கட்சிக்குள் பிரச்சினை இல்லை; ஒற்றைத் தலைமை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல், சட்டமன்றத் தேர்தலில், ‘முதலமைச்சர் வேட்பாளர்’ யார் என்பதில், அடுத்த குழப்பம் வரலாம் என்பது மட்டுமே இப்போதுள்ள பிரச்சினை.   

ஆனால், ஆட்சி நிர்வாகத்தில், மத்திய அரசு கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் கொடுத்து விட்டதா என்று கேட்டால், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில், அதற்கு ஆதரவான காட்சிகளைக் காணமுடியவில்லை.   

அதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும், அப்படியோர் உறுதிமொழியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘மூன்றாண்டு சாதனை’, இனி அடுத்துச் சந்திக்கப் போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்குச் சாதகமான ‘ஆதரவு அலை’ வீச வைக்கும் சாத்தியகூறுகள் காணப்படவில்லை என்பதே தற்போதைய நிலைமை.   

ஒருவேளை இன்னும் இருக்கின்ற ஒரு வருடத்தில் அந்த ஆதரவு அலையை, அ.தி.மு.கவால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? அது மிகப்பெரிய சவால் என்றே அ.தி.மு.கவினருக்கு இப்போது தெரிகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .