‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’

சங்ககால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலத்துக்கே உரித்தான சகல பண்புகளையும் தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடைய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது.    

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா மாவட்டத்தின் பெரும் பகுதியையும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு, 1978ஆம் ஆண்டடில் உருவாக்கப்பட்டதே, இந்த முல்லைத்தீவு மாவட்டமாகும்.   

கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய், மணலாறு (சிங்கள குடியேற்றத்தால் வெலிஓயா) என ஆறு (06) பிரதேச செயலாளர்கள் பிரிவுகளையும் 136 கிராம சேவையாளர்கள் பிரவுகளையும் கொண்டதுமான வடக்கு மாகாணத்திலேயே உள்ள மிகப்பெரிய மாவட்டமாக, இம்மாவட்டம் விளங்குகிறது.    

அந்நியர் ஆட்சியில், அவர்களுக்கு எதிராக சளைக்காது, இறுதி மூச்சு உள்ளவரை போரிட்ட வன்னி இராச்சியத்தின் பெரும் பகுதியை, இந்த மாவட்டமே கொண்டுள்ளமை, சிறப்பான அம்சமாகும்.  

தமது தாயகப் பிரதேசத்தில் வளமாக வாழ்ந்த தமிழ் மக்கள், தனி ஒரு கிராம சேவையாளர் பிரிவான முள்ளிவாய்க்கால் என்ற பகுதியில், ஆயுதப் போரின் அந்திம வேளையில், அடைக்கலம் கோரினர். அவ்வாறு, 2009ஆம் ஆண்டு மே மாதம், தமிழ் மக்களது ஆயுதப் போராட்டம் மௌனம் கண்டதும், இந்த மாவட்டத்தில் எனலாம்.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்ற மணலாறு என்ற கிராமம், தமிழர் வாழ்வியலின் அடையாளச் சின்னமாகும். நீர் வளம் - நில வளமென அனைத்து அம்சங்களுடனும், தமிழ் மக்கள் செல்வச் செழிப்பாக வாழ்ந்த பூமியே மணலாறாகும்.   

தமிழ் மக்களின் இதய பூமியாக அமையப் பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவுப் பாலமாக விளங்கிய, முற்றிலும் தமிழ் மணம் வீசிய, முல்லை மாவட்டத்தின் பழம்பெரும் கிராமமே மணலாறு ஆகும்.  

 மாவிட்டபுரம் முதலாளியின் 500 ஏக்கரிலான ‘டொலர் ஃபாம்’, கொழும்புத் தமிழ் முதலாளியின் 500 ஏக்கரிலான ‘கென்ட் ஃபாம்’, தம்பு றொபினுடைய 1,000 ஏக்கரிலான சிலோன் தியேட்டர், வடமராட்சி அல்வாய் முதலாளியின் 1,000 ஏக்கரிலான சரஸ்வதி ஃபாம் என, தமிழ் முதலாளிகளின் தொழிற்பேட்டைகள், பலருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கிச் சிறப்பாக இயங்கிய வசந்த காலம் அது.   

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தால் 1949ஆம் ஆண்டு தொடக்கம், தமிழர் பிரதேசங்களைக் கூறுபோடும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றத் திட்டத்தில், இந்த வளமான கிராமம் பலியானது.   

1980ஆம் ஆண்டு தொடக்கம், இந்தப் பகுதிக் கிராமங்களான பட்டிக்குடியிருப்பு மற்றும் ஒதியமலை போன்ற தமிழ்க் கிராம மக்களுக்கு, பல வழிகளிலும் பெரும் நெருக்குதல்கள், சிங்களவர்களால்  கொடுக்கப்பட்டன. தமிழர்கள் மீதான வேட்டைகளும் தொடர்ந்தன.   

 ஒதியமலை கிராமத்தில், 1981 மற்றும் 1982ஆம் ஆண்டுகளில், தமிழ் மக்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் ஆரம்பித்தன. இவ்வாறு ஆரம்பித்த சூறையாடல்கள், அடுத்து வரும் ஆண்டுகளில், திருகோணமலை மாவட்டத்தின் தென்னைமரவடி கிராமத்துக்கும் தொற்றிக்கொண்டன. அதையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், முகத்துவாரம், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்குத்தொடுவாய் வரை வேகமாகப் பரவிக்கொண்டது.   

இந்தக் கிராமங்களில், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து உறவாடிய தமிழ் மக்களது இல்லங்கள் எரியூட்டப்பட்டன. வீட்டை விட்டு வெளியேற மறுத்தவர்கள், அவர்களது மனையுடன் சேர்த்து எரித்து சாம்பராக்கப்பட்டனர்.   

அடுத்த நாள் மலரப் போகும் நத்தார் தினத்தை வரவேற்க, முழு உலகமுமே தயாராக இருந்தது. புலரும் நாளில் (1984 டிசெம்பர்-25) பாலன் பிறப்பு. துன்பம் நீங்கி, இன்பம் பெருக அவர் பிறப்பு வழிசமைக்கட்டுமென, அனைவரும் பிரார்த்தனை செய்த வேளையில்தான், வெளிச்சம் மறைந்து, கடும் இருள் முழுமையாகச் சூழ்ந்துகொண்டது.   

இவ்வாறு தொடர்ந்த இடைவிடாத வன்முறைகளால், 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24ஆம் திகதியன்று, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள், தமது வாழ்விடங்களுக்குத் துறவறம் பூண்டு வெளியேறினர் (வெளியேறச் செய்யப்பட்டனர்). அதாவது, அங்கு அவர்களால் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டது.   

இவ்வாறாக நன்கு திட்டமிடப்பட்டு, அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஆட்சியாளர்களின் அரசாங்க ஆசிர்வாதத்துடன், வெலிஓயா எனக் கபளிகரம் செய்யப்பட்டது.   

தமிழ் மக்களது ஆயுதப் போராட்டம், 18 மே 2009இல் மௌனம் கண்டது. அதையடுத்து, தமது ஊர்களில் இருந்து, தமக்கான பாதுகாப்பின்றி வெளியேறிய தமிழ் மக்கள், 2011ஆம் ஆண்டு மூன்று தசாப்தங்களுக்கு (30 வருடங்கள்) பின்னர் ஊர்த் திரும்பினர்.  

அங்கு, அனைத்துமே முழுமையாக மாறியிருந்தன. ஆயிரம் அழகுகள் அமையப் பெற்ற தமிழ்க் கிராமங்கள், குறிச்சிகளின் பெயர்கள் என்பன, சிங்களத்துக்கு மாற்றப்பட்டுக் காணப்பட்டன.   

புதிதாகப் பல சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதையும் கடந்து, தமிழ் மக்களுக்கே உரித்தான காணி உறுதிகள் கூட, சிங்கள மக்களது கைகளுக்கு உரிமம் மாற்றப்பட்டிருந்தன.   

மயிலங்குளம் என்ற தமிழ்ப் பெயர், மொனறவெவ என்றும் சூரியனாறு என்ற கிராமம் கலம்பவெவ என்றும், அவ்வாறு முறையே, ஆமையன்குளம் - கிரபென்வெவ, மண்கிண்டிமலை - ஜனகபுர, உந்திராயன்குளம் (முந்திரியன்குளம்) - நெளும்வெவ, மறிச்சுக்கட்டிகுளம் - குருளுவெவ எனவும் மாற்றப்பட்டிருந்தன.   

தற்போது, வெலிஓயா என அடியோடு மாற்றப்பட்ட மணலாறில், நவகஜபுர, கல்யாணபுர, எகெடுகஸ்வெவ, ஜனகபுர, கிரிப்பன்வெவ, நிகவெவ இடது, நிகவெவ வலது, கஜபாபுர என்றவாறாக ஒன்பது (09) கிராம சேவையாளர் பிரிவுகளில், பல்லாயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.   
இவ்வாறாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கென, கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலடியிலிருந்து 815 ஏக்கர் காணிகளும் கொக்குத்தொடுவாயில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 2,156 ஏக்கர் காணிகளும் அபகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.   

முற்றுமுழுதாக 100 சதவீதத் தமிழ் மக்களால், முழுமையாக அலங்கரிக்கப்பட்ட கிராமம், இவ்வாறாக இன்று, முற்றுமுழுதாக அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுவிட்டது. தமிழ் மக்கள், தாம் இழந்த தமது கிராமங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லையெனக் கூறலாம்.   

என் பாட்டன் எனக்கு அ ஆ இ எழுதி, தமிழ் படிப்பித்த எம்மண்ணில் இன்று ‘எக்காய் தெக்காய்’ என அவர்கள் உரையாடும் ஒலி கேட்கின்றது. எங்கள் வயலில் அவர்கள் நெல் விதைத்து அறுவடை செய்கின்றனர். ஆனால், சமாதானமும் நல்லாட்சியும் இப்பகுதித் தமிழ் மக்களுக்கு, எந்த அறுவடைகளையும் வழங்கவில்லை.  

முன்னர் இங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் மன வலிகள், வழிகள் இன்றி வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டன. இவ்வாறாகப் பல தமிழ்க் கிராமங்கள், வடக்கு, கிழக்கில் இருளில் மூழ்கியுள்ளன.  

அங்கு, தற்போது வதியும் பெரும்பான்மை இன மக்கள், தாம் மாற்றான் காணியில் வசிக்கின்றோமென்ற எள்ளளவு உணர்வுமின்றி, உல்லாசமாக வாழ்கின்றனர்.   

1984இல் யுத்தம், தமிழ் மக்களை அவர்களது நிலத்தை விட்டு விரட்டி அடித்தது. 2009இல் ஏற்பட்ட சமாதானம், அவர்களை வரவேற்கவில்லை. 2015இல், நல்லாட்சிகூட கரம் கொடுக்கவில்லை.   

மாறாக, நல்லாட்சி அரசாங்கம் தற்போது அந்தப் பிரதேசங்களை மேலும் விரிவாக்கி, பல சிங்களக் குடியேற்றங்களை நிறுவி வருகின்றது. ஆனால், இவை தொடர்பில் எதுவுமே தெரியாதவர்கள் போல, ஐனாதிபதியும் பிரதமரும் உள்ளனர்.   

கடந்த ஐந்தாம் திகதியன்று இடம்பெற்ற  வடக்கு மாகாண சபை அமர்வின்போது, வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் சிறப்பு அமர்வு நடைபெற்றது. அங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், “கரைத்துறைப்பற்றிலுள்ள காணிகள், மகாவலியால் விழுங்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.   

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிந்திய குருதி, உடல், உளக் காயங்கள் காயவுமில்லை; ஆறவும் இல்லை. அதற்கிடையில், அவர்களது காணிகளை அபகரிக்கக் கிளம்பிவிட்டனர். ஒரு கையால் போலியாக ஒருமைப்பாடு என அணைக்கப்படும் தமிழ் மக்கள், மறு கையால் பலமாக அடிக்கப்படுகின்றனர்.  

வெளிப்படையில் இன நல்லிணக்கம் எனக் கூறினாலும், அடிப்படையில் அடக்குமுறையின் ஊடாக ஆட்சியாளர்களது நிகழ்ச்சி நிரல் இன்னமும் மாற்றி அமைக்கவில்லை. ஏனெனில், இது சிங்கள பௌத்த நாடு. அவர்களே உடமைக்காரர்கள். ஏனையோர்?   


‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.