2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்திய ஜனநாயகத்தின் ’காணொளி அரசியல்’

எம். காசிநாதன்   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், தினமும் சென்னையில் உச்சநிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில், இந்திய ஜனநாயகத்தின் செயற்பாடுகள், டிஜிட்டல் மயமாகி வருகின்றன.

 வழக்கமான பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்ற விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் போன்றவற்றைத் தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டே, இவ்வாறு டிஜிட்டல் மயமாகி வருகிறது.

 ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும், இந்த நவீன களத்துக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள, கொரோனா வைரஸ் பேரிடர், ஒரு வழியில் உதவியிருக்கிறது என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் பிரசார யுக்திகளில், வரலாறு காணாத மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி மூலமாகவே விவாதித்து, கொரோனா வைரஸ் பற்றிய தேசிய ஊரடங்கின் இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்டார். மாநில முதலமைச்சர்களுடனும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், இது போன்றதோர் ஆலோசனையின் மூலம், நிர்வாக ரீதியாக ஒரு மாற்றத்தை, இந்தியாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அரசியல் களம் மட்டுமின்றி, அரச நிர்வாகக் களமே கானொளிக்கு மாறியிருப்பது, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், மிக முக்கியமான மாற்றம் ஆகும். இது, கொரோனா வைரஸ் தந்த மாற்றம் என்றால் சந்தேகமில்லை.

இந்தியா முழுவதும் அரசியல் போராட்டங்கள் எதையும், பொதுவெளியில் காண முடியவில்லை. தவிர்க்க முடியாமல், ஒரு போராட்டம் நடைபெற்றால், முகக்கவசம் அணிந்து போராடுகிறார்கள்;  உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும், சமூக இடைவெளி விட்டு நின்று போராடுகிறார்கள். 'டிஜிட்டல்' மயமாகி வரும் இந்த அரசியல் நிலைவரத்தால், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க, தனது ஆறாவது ஆண்டு நிறைவுச் சாதனைகளை, 500 டிஜிட்டல் பேரணிகள் மூலம், மக்களிடம் கொண்டு செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, கடிதம் ஒன்றை எழுதி, தனது சாதனைகளை டிஜிட்டல் மயமாக வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாகி இருப்பது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் அரசியல் களத்துக்கு, சற்று ஓய்வைக் கொடுத்திருக்கிறது.

இன்றைக்கு இந்தியாவில் நடைபெறும் 'டிஜிட்டல்' பேரணிகளுக்குப் பொலிஸார் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை; வாகனங்கள் வர வேண்டியதில்லை. அதேபோல், அரசாங்கத்தின் சார்பில் நடக்கும் கலந்தாலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க, அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் பணத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை. மிக முக்கிய முடிவுகளை, இந்த ஊரடங்கு நேரத்தில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள், போராட்டங்கள் இன்றி, ஆட்சியாளர்களால் எடுக்க முடிந்திருக்கிறது. அதனால், தற்போது சட்டமன்றத்தில் வெளிநடப்பு இல்லை; நாடாளுமன்றத்தில் 'கலாட்டா 'இல்லை.

அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, மக்களைத் திரட்டி, வெளியிடங்களில் போராட்டம் இடம்பெறவில்லை. உதாரணத்துக்கு, இந்திய உச்சநீதிமன்றமே அங்கிகரித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதி, இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள, இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தனியார் மயம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது.

 விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கு, புதிய மின்சாரத் திருத்தச் சட்டமூலம் வெளிவந்திருக்கிறது. கொரோனா வைரஸ் இல்லாத நேரத்தில், இதெல்லாம் நடைபெற்றிருந்தால், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய 'கலாட்டா'வை எம்.பிக்கள் செய்திருப்பார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு, எதிர்ப்புப் பேரணிகளை, போராட்டங்களை நாடு முழுவதும் அறிவித்திருக்கும்.

ஏன், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் கூட, கொரோனா வைரஸ் காலம் என்பதால், எதிர்க்கட்சிகள் மத்தியில் அமைதி நிலவுகிறது. சாதாரண காலகட்டமாக இருந்திருந்தால், அரசாங்கத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்; நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று, குரல் எழுப்பப்பட்டிருக்கும். இதற்கு எல்லாம் வேலையில்லாமல், அனைத்துப் பிரச்சினைகளிலும் அரசாங்கமே அமைதியாக முடிவு எடுக்க, இந்தக் கொரோனா வைரஸ் காலம், பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, மாநில முதலமைச்சர்களுக்கும் உதவிகரமாக இருந்திருக்கிறது.

''பொது இடங்களில் எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம்'' என்று, மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சரால் உத்தரவிட முடிகிறது என்றால், அதற்குக் காரணம், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் கிடைத்த வாய்ப்புத்தான். மற்ற நேரங்களில், இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கக் கூடும்.

இதேபோல், தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்குச் சம்பளக் குறைப்பு, பெரிய அளவில் போராட்டங்கள் இன்றி அரங்கேற்ற, கொரோனா வைரஸ் பேருதவியாக அமைந்து விட்டது.

தமிழ்நாட்டில், தி.மு.க-அ.தி.மு.க இடையே, கானொளி அரசியல் சூடுபிடித்து வருகிறது. கொரோனா வைரஸ் பேரிடரில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட, 'ஒன்றிணைவோம் வா' என்ற நிகழ்ச்சியைத் தி.மு.க தொடங்கியது. இதை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், கானொளி மூலம், கட்சி நிர்வாகிகள் தொடங்கி, பாதிக்கப்பட்ட தரப்பினர் வரை பேசியிருக்கிறார். ''ஊரடங்கு நேரத்தில், மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது'' என்றும், ''ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கவில்லை'' என்றும் சமூக இடைவெளி பேணி, முகக்கவசம் அணிந்து போராட்டத்தை நடத்தியிருக்கிறது தி.மு.க. அதேபோல், மற்றக் கட்சிகளும் இது போன்ற போராட்டங்களை நடத்தியிருக்கின்றன.

அ.தி.மு.க சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொளி மூலமாகவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

''பட்டியலின மக்களை விமர்சித்த தி.மு.க எம்.பியைக் கைது செய்'' என்று, ஆளுங்கட்சியான அ.தி.மு.கவே மாநிலம் முழுவதும், சமூக இடைவெளி பேணி, முகக்கவசம் அணிந்து, போராட்டம் நடத்துகிறது.

எதிர்வரும் செப்டெம்பரில், விடுதலையாகி சசிகலா வந்து விடுவாரோ என்ற எதிர்பார்ப்பில், முன் கூட்டியே செயற்படுத்தப்பட்ட வியூகம்தான், 'ஜெயலலிதா நினைவகம்' என்ற அறிவிப்பாகும். ஊழல் வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு, முன்கூட்டிய விடுதலை கிடைப்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும், அவர் விடுதலை ஆவார் என்று வரும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. சசிகலா வெளியில் வந்தால், அ.தி.மு.க புதிய பரிமாணத்தை அடையும்.

 தற்போது கட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து, சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்வார்களா? அதற்கு, டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என, நிபந்தனை வைப்பார்களா? போன்ற கேள்வினளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. எதிர்கால அ.தி.மு.கவின் பலம், ''ஒன்றுபட்ட அ.தி.மு.கவில்தான் இருக்கிறது'' என்று, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க முடிவு எடுத்தால் மட்டுமே, சசிகலாவின் வருகை தமிழக அரசியலில், புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

 ஆனால், சசிகலாவையும் உள்ளடக்கிய, ஒன்றுபட்ட அ.தி.மு.கவை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி விரும்ப வேண்டும். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, இப்படியொரு சிக்கல், அ.தி.மு.கவுக்குள் எழுந்த போது, அக்கட்சி 'ஜெயலலிதா அணி', 'ஜானகி அணி' என்று பிரிந்து நின்றது. அப்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, ''ஒன்றுபட்ட அ.தி.மு.கவுக்கே என் ஆதரவு'' என்று அறிவித்தார். இது போன்ற நிலைப்பாட்டை, பா.ஜ.கவின் தேசியத் தலைமை, இப்போது எடுத்தால் மட்டுமே, சசிகலாவின் வருகை, ஒன்றுபட்ட அ.தி.மு.க உருவாகக் கைகொடுக்கும்.

ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்திலும் அரசியல் வியூகங்கள் தொடருகின்றன. ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லத்தை' நினைவிடமாக அறிவிக்கும் அவசரச் சட்டத்தை, அ.தி.மு.க அரசாங்கம் கொண்டுவந்ததும் இதன் ஓர் அங்கம்தான். இப்படி ஒவ்வொரு மாநில அரசாங்கமும், தங்களுக்கு வேண்டிய நடவடிக்கைகளை மட்டுமின்றி, அரசியல் வியூகங்களையும் கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் தொடருகின்றன.

எதிர்க்கட்சிகளின் தொல்லையின்றி, எடுத்துவரும் நிர்வாக, அரசியல் நடவடிக்கைகள், இயல்பான சூழல் நிலவும் காலத்தில், அவ்வளவு எளிதல்ல. ஆளுங்கட்சிக்கு, காணொளிக்  கலந்தாலோசனைகள் மிகவும் வசதியாக இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் எளிதாக இருக்கும். ஆனால், சின்னச் சின்னக் கட்சிகளுக்கு சுலபமானதாக இல்லை. ஆகவே, கொரோனா வைரஸ் பரவுகை, சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், பிரதான எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள், அரசியல் களத்தில் சமாளித்து நின்றுபிடிக்க முடியும். சிறிய கட்சிகள், எப்படித் தங்கள் செயற்பாட்டை வகுத்துக் கொள்வது என்பதில், மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில், அரசியல் வியூகங்களுக்குப் பஞ்சமில்லாமல், அரசியல் களம் சூடாகவே இருக்கிறது. ஆகவே, இந்திய ஜனநாயகம், 'புத்தம் புது' பிரசாரப் பாதையில் செல்கிறது.

இதன் அடுத்த கட்டம், தேர்தல்களில் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதையும், காணொளி மூலமே நடத்தி விடலாமே என்ற எண்ணத்தை, இந்தக் கொரோனா வைரஸ் விதைத்திருக்கிறது. அது, விருட்சமாகிறதா, மீண்டும் போராட்ட வாழ்க்கைக்கு இந்திய ஜனநாயகம் திரும்புகிறதா என்பது, கொவிட்-19 தொற்றின் வேகம், எவ்வளவு நாளைக்குத் தொடரும் என்பதில் அடங்கியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .