இரண்டு நபர்களின் அதிகாரப் போட்டிக்குப் பலியாகிய ஸ்ரீ ல.சு.க


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் அக்கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அணிக்கும் இடையிலான உறவைப் போன்றதோர் உறவை வரலாற்றில் எப்போதும் நாம் கண்டதில்லை.  

இரு அணிகளும் நண்பர்களா, எதிரிகளா என்று விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், அவை ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன; அடுத்த சந்தர்ப்பத்தில், ஒற்றுமைக்காகப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.   

இந்த அணிகளிரண்டும் ஒரே கட்சியைச் சேர்ந்தவையாயினும், மூன்றாண்டுகளாக இரண்டும் ஒன்றையொன்று எதிர்த்துச் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.   

ஆனால், கட்சித் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி மைத்திரிபாலவோ கட்சியின் மத்திய குழுவோ, மஹிந்த அணியினருக்கு எதிராக எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதில்லை.   

மஹிந்த அணியினரும் தமக்காக வேறு கட்சியொன்றையும் ஆரம்பித்துள்ளனர். 
ஸ்ரீ ல.சு.கவுக்கு எதிராகத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். ஆனால், ஸ்ரீ ல.சு.கவிலிருந்து விலகிப் போகும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை.   

ஸ்ரீ ல.சு.கவில் இரண்டு அணிகள் இருந்த போதிலும், அவை வெவ்வேறாகத் தேர்தலில் போட்டியிட்டாலும் இரு அணிகளுக்கும் இடையே கொள்கைப் பிரச்சினை ஏதும் இல்லை.   
அது, பிரதானமாக இரண்டு தலைவர்களுக்கிடையிலும் அவர்களுக்குச் சமீபத்திலுள்ள நண்பர்களுக்கு இடையிலுமான அதிகாரப் போட்டியேயன்றி, வேறொன்றுமல்ல. நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கிடையிலும் கொள்கை வேறுபாடுகள் இல்லாதபோது, 
ஸ்ரீ ல.சு.கவின் இரண்டு அணிகளுக்கிடையே கொள்கைப் பிரச்சினைகள் இருக்க முடியாது.  
ஸ்ரீ ல.சு.கட்சி 1951 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகவினால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவே இருந்தார்.   

ஐ.தே.கவிலிருந்து விலகும் போது, ஐ.தே.கவின் எந்தவொரு கொள்கையையும் அவர் விமர்சித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷாருக்கு சார்பான முதலாளித்துவ வர்க்கம் ஒன்று அக்காலத்தில் உருவாகியிருந்தது. இந்தச் சக்தி ஐ.தே.கவின் பின்னணியில் இருந்தது. அவ்வர்க்கமே ஐ.தே.கவை வளர்த்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலத்தில் தோன்ற ஆரம்பித்து, சுதந்திரத்தின் பின்னர் தலைதூக்கிய ஒரு முதலாளித்துவ வர்க்கமும் இருந்தது. அது, ஸ்ரீ ல.சு.கவின் பின்புலத்தில் இருந்தது.   

இந்த வர்க்கம் தமது இருப்புக்காகத் தேசியவாதத்தைப் பேசியது. அதன் தூண்டுதலாலேயோ அல்லது அதைத் திருப்திப் படுத்துவதற்காகவோ, பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு, தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தேசியவாதம் தொடர்பான இது போன்றதொரு கொள்கை வித்தியாசம், அக்காலத்தில் ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் இடையில் நிலவியது. 

அதற்கு அமைய, அக்கட்சிகள் தத்தமது சுலோகங்களையும் அமைத்துக் கொண்டன. ஆனால், காலப்போக்கில் இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரவே, இரு கட்சிகளும் இந்த இரு முதலாளித்துவ பிரிவினரையும் ஆதரிக்கத் தொடங்கினர்.  அல்லது இரு முதலாளித்துவ பிரிவினரும் இரு கட்சிகளுக்கும் தமது ஆதரவை வழங்கினர். எனவே, காலப்போக்கில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தேசியவாதம் பற்றிய கொள்கை, வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.   

ஆனால், 1970 ஆம் ஆண்டு, உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, அந்த அரசாங்கம் கடுமையான முறையில் மூடிய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க முற்பட்டது.   

வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்து மிளகாய் போன்றவற்றுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்ட போதிலும், நாட்டில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே, 1977 ஆம் பொதுத் தேர்தலில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் படுதோல்வியடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையிலான ஐ.தே.க, அக்காலத்தில் தாராள பொருளாதாரக் கொள்கையைப் பரப்பி வந்தது.

அந்தநிலையில் அந்தத் தேர்தலில் ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. பிரதமராகப் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தாராள பொருளாதார கொள்கையை அமுலாக்கி, சுதந்திர வர்த்தக வலயங்களையும் ஆரம்பித்து, அந்தப் பொருளாதார முறையின் பாதுகாப்புக்காகத் தனியொருவரின் கையில், அதிகாரம் குவியும் நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் அறிமுகப்படுத்தினார்.  

ஐ.தே.கவே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என நினைத்து, விகிதாசாரத் தேர்தல் முறையையும் கொண்டு வந்தார். இவற்றை ஸ்ரீ ல.சு.க எதிர்த்தது. அதுதான் அக்காலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான கொள்கை வித்தியாசமாக இருந்தது.  பின்னர், இந்த வித்தியாசமும் மறையத் தொடங்கியது. தாராள பொருளாதாரக் கொள்கையைத் திட்டித் தீர்த்த ஸ்ரீ ல.சு.க, 1994 ஆம் ஆண்டு, மீண்டும் பதவிக்கு வந்தபோது, தாமும் தாராளப் பொருளாதாரக் கொள்கையை ஐ.தே.கவை விடச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியது.   

அதற்காகத் தாமும் தனியார் மயப்படுத்தலைத் தொடர்ந்தது. Build Operate and Own (BOO) மற்றும்  Build Operate and Transfer (BOT) எனப்படும் தாராள பொருளாதாரக் கொள்கையின் கீழான, தனியார்மயப்படுத்தல் முறைமைகளை 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகாவின் அரசாங்கமே, முதன்முறையாக அமுலாக்கியது.  

நிறைவேற்று ஜனாதிபதி முறையைத் தொடர்ந்து திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தாலும், அதை ஒழிக்கவும் அக்கட்சி முயற்சிக்கவில்லை. 

ஸ்ரீ ல.சு.கயின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற பின்னர், தாராள பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்தது மட்டுமல்லாது, 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதி முறையை மேலும் பலப்படுத்தினார். பொதுவாகக் கூறுவதாயின், மக்கள் விடுதலை முன்னணி, முன்னணி சோஷலிசக் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சி போன்ற சில சிறிய இடதுசாரி கட்சிகளைத் தவிர்ந்த, நாட்டில் ஏனைய கட்சிகளிடையே எந்தவொரு கொள்கை வேறுபாடும் இல்லை. 

வேறுபாடுகள் இருப்பின், அக்கட்சிகள் அந்தப் பொதுக் கொள்கைகளைச் செயற்படுத்தும்போது கையாளும் தந்திரோபாயங்களில் மட்டுமேதான் வௌிப்படும்.   

எனவே, தற்போது ஐதே.கவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் இடையே எந்தவித கொள்கை முரண்பாடும் இல்லை. அவ்வாறு இருக்க, அதிகாரப் போட்டி காரணமாகப் பிரிந்த, 
ஸ்ரீ ல.சு.கவின் இரண்டு பிரிவுகளுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் இருக்க நியாயமே இல்லை. அவ்வாறான வேறுபாடுகள் அறவே இல்லை.ஆனால், அவ்வணிகள் பிரிந்து செயற்படுகின்றன. 2014 ஆம் ஆண்டிலேயே இந்த நிலைமை ஏற்பட்டது.   

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், பிரதமர் பதவியை எதிர்ப்பார்த்து இருந்த மைத்திரிபால சிறிசேன, தமக்கு அந்தப் பதவி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட போது, விரக்தியடைந்து மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து விலகியதே அந்தநிலைமையின் ஆரம்பத்தைக் குறித்தது.   

ஆனால், மைத்திரிபால தமது பிரச்சினையை மூடி மறைத்து, மஹிந்தவுக்கு எதிரான தமது போராட்டத்தை, மக்களின் போராட்டமாக, மிகச் சாதுரியமாக, மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்.   

அவர், தமது போராட்டத்தை ஜனநாயகத்துக்கான போராட்டமாகச் சித்திரித்தார். ஐ.தே.கவும் மக்கள் விடுதலை முன்னணியும் சிவில் சமூக அமைப்புகளும் சேர்ந்து, அவரது போராட்டத்துக்கு ‘நல்லாட்சி’ போன்ற சுலோகங்களையும் வழங்கின.  

 ஊழல் மோசடிக்காரர்களின் ஆட்சி என்பதற்குப் புறம்பாக ‘கொடுங்கோல்’ ஆட்சியாகவும் இருந்த மஹிந்தவின் ஆட்சியே, மைத்திரியின் போராட்டத்துக்கு அவசியமான ஆயுதங்களை வழங்கி இருந்தது.   

தாம் தனித்து, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவைத் தோற்கடிக்க முடியாது என்றறிந்திருந்த ஐ.தே.கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், மைத்திரியை ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவுக்கு எதிராக நிறுத்தினர். அபாயகரமான அந்தத் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றார். மஹிந்த உள்ளிட்ட ஸ்ரீ ல.சு.க தலைவர்களுக்கு, ஸ்ரீ ல.சு.க மத்திய குழுவில் பெரும்பான்மை பலமிருந்தும், அவர்கள் மைத்திரியைக் கட்சியிலிருந்து நீக்கிவிடாது, அவருக்குக் கட்சியின் தலைவர் பதவியையும் வழங்கினர். ஆனால், அப்போதும் கட்சியின் பெரும்பான்மையினர் மஹிந்தவையே தலைவராக ஏற்றுக் கொண்டு இருந்தனர்.   

இது, இதற்கு முன்னர் காணப்படாத ஒரு நிலைமையாகும். சந்திரிகாவுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில், சந்திரிகாவை ஆதரித்த ஸ்ரீ ல.சு.கவின் பெரும்பான்மையினர், மஹிந்த ஜனாதிபதியாகிய பின்னர், சந்திரிகாவை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மஹிந்தவை ஆதரிக்கத் தொடங்கினர்.   

ஆனால், மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில், மஹிந்தவை ஆதரித்தவர்கள், மைத்திரி ஜனாதிபதியாகிய பின், மைத்திரியை ஆதரிக்க முன்வரவில்லை.  இவ்வாறு, மஹிந்தவின் பின்னால் அணிதிரண்டு இருந்தவர்கள், ஸ்ரீ ல.சு.கவின் தலைவர் பதவியை மைத்திரிக்கு வழங்கியதை அடுத்தே, அக்கட்சி உண்மையிலேயே பிளவுபடத் தொடங்கியது.  

 அதற்கு முன்னர், மைத்திரியோடு ஸ்ரீ ல.சு.ககாரர்கள் சிலர் இருந்த போதிலும், அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்ததனாலும், மைத்திரிக்குக் கட்சியில் எவ்வித அதிகாரமும் இல்லாதிருந்ததனாலும் அது ஒரு பிளவாகக் கருத முடியாது. எனவே, கட்சியின் தலைமையை ஒப்படைத்து, மஹிந்தவும் அவரது நெருங்கிய சகாக்களுமே, ஸ்ரீ ல.சு.கவின் பிளவுக்கு வித்திட்டனர்.

இவர்கள் விரும்பியிருந்தால் ஒட்டுமொத்த மத்திய குழு, தம்வசம் இருந்த அதிகாரத்தைப் பாவித்து, மைத்திரியைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம். அல்லது, கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியானால், அவரே கட்சியின் தலைவராகவும் இருப்பார் என்ற கட்சி யாப்பிலுள்ள குறித்த வாசகத்தைத் திருத்தியிருக்கலாம்.  

ஸ்ரீ ல.சு.கவின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டாலும், மஹிந்தவை வணங்கிக் கொண்டு இருந்த கட்சி உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவதில் மைத்திரி பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கினார்.  

இதனைப் பார்த்த, சிவில் சமூகத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள், அவர் ஸ்ரீ ல.சு.க தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதிட்டனர். ஆனால், பழுத்த அரசியல்வாதியான மைத்திரி, அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது கண்ணோட்டத்தில், உண்மையிலேயே அவரது நிலைப்பாடு சரியானதே.   

அவர், ஸ்ரீ ல.சு.க தலைவராக இருக்காவிட்டால், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பெறுபேறு சிலவேளை மாறியிருக்கும். சிலவேளை, இன்று நாட்டின் நிலைமையும் மாறியிருக்கலாம்.  

உண்மையைக் கூறுவதாக இருந்தால், மஹிந்த பிரதமராவதைத் தடுப்பதற்காக மைத்திரி, அந்தத் தேர்தலின்போது, தாமே தலைமை தாங்கிய ஸ்ரீ ல.சு.கவைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தார்.   

அதற்காக அவர், தேர்தல் நெருங்கி வரும் போது, மஹிந்தவுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த, ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவையும் 
அப் பதவிகளில் இருந்து நீக்கினார். “ஸ்ரீ ல.சு.க தேர்தலில் வெற்றி பெற்றாலும், மஹிந்தவைப் பிரதமராக நியமிப்பதில்லை” எனப் பகிரங்கமாகக் கூறி, ஸ்ரீ ல.சு.ககாரர்களை மனமுடையச் செய்தார்.   

மைத்திரி என்னதான் கூறினாலும், அத்தேர்தலில் ஸ்ரீ ல.சு.க வெற்றி பெற்றிருந்தால் அவர், மஹிந்தவை பிரதமராக நியமித்துத்தான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வென்றவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதுதான் சட்டம்.   

அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டு இருந்தால், மஹிந்த முன்னர் போலவே ஐ.தே.க எம்பிகளை விலைகொடுத்து வாங்கி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தேடிக்கொண்டு, மைத்திரியைக் குற்றப் பிரேரணை மூலம், பதவி நீக்கம் செய்து, ஜனாதிபதி பதவியை மீண்டும கைப்பற்றிக் கொண்டு இருப்பார். பொன்சேகாவைப் பழி வாங்கியதைப் போல், அல்லது அதையும் விட மோசமாக மைத்திரியையும் பழி வாங்கியிருப்பார்.   

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து மைத்திரிபால ஸ்ரீ ல.சு.கவின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர், நாட்டில் ஒரு விசித்திரமான அரசியல் நிலைமை உருவாகியது. ஸ்ரீ ல.சு.கவின் தலைவர் அக்கட்சிக்கு எதிராகச் செயற்படும் ஐ.தே.கவுடன் சேர்ந்து அரசாங்கத்தை நடத்துகிறார்.  மைத்திரியின் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், அவரது தலைமையிலான அரசாங்கத்தை எதிர்த்துச் செயற்படுகிறார்கள். அதற்கு, அவரது பரம எதிரியான மஹிந்த ராஜபக்ஷ முதலில் மறைமுகமாகவும் பின்னர் பகிரங்கமாகவும் அவர்களுக்கு உதவுகிறார்.  

 நிலைமை எவ்வளவு கேலிக்கூத்தாகியது என்றால், 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, ஸ்ரீ ல.சு.க தலைவர் மைத்திரிபால, கட்சியின் செயலாளரையும் ஐ.ம.சு.முவின் செயலாளரையும் பதவிநீக்கம் செய்தும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டும் தாம் தலைமை தாங்கும் கட்சியையே தோற்கடிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்.  

இப்போது, ஸ்ரீ ல.சு.க தெளிவாகவே இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஓர் அணியை மைத்திரிபால தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கட்சியில் இருக்கும் மஹிந்தவின் ஆதரவாளர்களைப் படிப்படியாகத் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார்.   

கட்சிக்குள் அதிகாரத்தைச் செலுத்த முடியாததால், இரவல் வாங்கிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை மஹிந்த வளர்த்து, நடவடிக்கை எடுத்து வருகிறார். இம் முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் மஹிந்த அணி அந்தக் கட்சியின் சின்னத்திலேயே தமது வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தியுள்ளது.  

தெளிவாக ஸ்ரீ ல.சு.க பிளவுபட்டதன் பின்னர், நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதால் இந்தத் தேர்தல் ஸ்ரீல.சு.க, பொதுஜன முன்னணி மற்றும் ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மக்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போதும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள்.

 எந்தக் கட்சி முன்னணியில் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் பக்கமே மக்கள் மென்மேலும் சாய்வார்கள். ஏனெனில், இந்தக் கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் இல்லை. இருந்தாலும், மக்களுக்கு கொள்கை என்பது முக்கியமல்ல; அவர்கள் வெற்றி பெறும் அணியில் இருக்கவே விரும்புவார்கள். எனவே, இந்தத் தேர்தல் தேசிய மட்டத்திலான தேர்தல் ஒன்றைப் போல், பிரதான மூன்று அணிகளுக்கும் முக்கியமாக உள்ளது.

ஸ்ரீல.சு.க அடிமட்டத் தொண்டர்கள், மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள் என்று மஹிந்த அணி நம்புகிறது. ஆனால், மைத்திரி இறுதி நேரத்தில் என்ன தந்திரத்தைக் கையாள்வார் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.  அதேவேளை, தாம் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் மைத்திரி அணிக்கு இருக்கிறது. எனவே, மைத்திரி ஏனைய பல கட்சிகளிலிருந்து, அவற்றின் முக்கியஸ்தர்களை வளைத்தெடுத்து, பொது வாக்காளர்களுக்கு மானசிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.  

 அதன் பிரகாரமே அவர், விமல் வீரவன்சவின் கட்சியிலிருந்து அதன் நான்கு முக்கிய தலைவர்களைக் கழற்றி எடுத்தார். மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவர் சோமவீர சந்திரசிறி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரமவைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார். தேர்தல் மேலும் நெருங்கும் போது, அவர் மேலும் பலருக்கு வலை வீசலாம்.   

தேர்தல் முடிவு எதுவானாலும் ஸ்ரீ ல.சு.கவின் பிளவு நிரந்தரமாகிவிட்டது என்றே தெரிகிறது. இது கொள்கைப் பிரச்சினையல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. இரண்டு மனிதர்களுக்கிடையே பட்டம் பதவிகளுக்காகவென ஆரம்பிக்கப்பட்ட அதிகாரப் போட்டி இப்போது அவ்விருவரின் இருப்புக்காக கட்சியை இரண்டாக பிளந்துவிட்டது. தெளிவான கொள்கை அடிப்படையிலன்றி தனி நபர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு கட்சிக்கும் இது நடக்கலாம்.   


இரண்டு நபர்களின் அதிகாரப் போட்டிக்குப் பலியாகிய ஸ்ரீ ல.சு.க

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.