2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள்

எம். காசிநாதன்   / 2020 ஜூன் 29 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற ‘இரண்டு மரணங்கள்’, தமிழ் நாட்டுப் பொலிஸார், கடந்த நான்கு மாதங்களாகக் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பில் செய்த அரிய சேவைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.  

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் கள வீரர்களாக அதாவது, கொரோனா வைரஸ் போராளிகளாகத் தமிழக பொலிஸார்தான் செயற்பட்டிருந்தார்கள். ஊரடங்கு உத்தரவுகளைச் செயற்படுத்துவதில், மிக முக்கிய பங்காற்றியவர்களும் பொலிஸார்தான்.   

கொன்ஸ்டபிள் முதல் டி.ஜி.பிக்கள் வரை, மிகச்சரியாகச் சொல்வதென்றால், தங்கள் குடும்பங்களை மறந்து, தெருவிலும் வீதிகளிலும் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட அனைவரும் எப்படி உழைக்கிறார்களோ,  அது போன்றதோர் உழைப்பை, தமிழக மக்களின் நலன்களுக்காகப் பொலிஸார்  அளித்து வருகிறார்கள்.   

இப்படிப்பட்ட நேர்மறையான சூழல் நிலவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஆங்காங்கே ஒரு சில பொலிஸ் அதிகாரிகள்,  அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்யும் சில செயல்கள், மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பேய்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் (தந்தையும் மகனும்) பழைய பஸ் நிலையம் அருகில், அலைபேசிக் கடை நடத்தி வருகிறார்கள். 

ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல், கடை திறந்திருக்கிறது என்பதில் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தந்தை மகனுக்கும் இடையில் நடைபெற்ற வாக்குவாதம், வழக்குப் பதிவில் போய், கைதாகி, இன்றைக்கு மரணமும் நிகழ்ந்து விட்டது.   

தந்தையும் மகனும் இறந்தது, ‘பொலிஸ் பாதுகாப்பின் போது இறந்தாரா’, ‘நீதிமன்றக் காவலில் இறந்தாரா’ என்பது, இனி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகும், மருத்துவ உடற்கூறு பரிசோதனை அறிக்கையில்தான் வெளிவரும். 

ஆனால் ஜெயராஜின் மனைவி, மகள்கள் உள்ளிட்ட அந்தச் சமூகத்தினர் மத்தியில், இது பொலிஸ் தாக்குதலால் நிகழ்ந்த மரணம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்து, போராட்டக் களத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

பொலிஸ் பாதுகாப்பில் நிகழ்ந்த மரணம் என்பது, எப்போதுமே சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. அதில், சில பொலிஸ் அதிகாரிகள் தண்டனை பெறுவார்கள்; சிலர் காப்பாற்றப்படுவார்கள். 

ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், ஏழு வருடம் தண்டனை கிடைக்காத வழக்கில்,  அதுவும் ஊரடங்கு நேரத்தில், ஏன் இப்படிக் கைது நடவடிக்கையை பொலிஸ் மேற்கொண்டது, அதன் விளைவாக இந்த மரணங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டதே என்ற ஆதங்கம், எங்கும் பரவி விட்டது. 

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 25 இலட்சம் ரூபாய் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் 20 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குப் பொறுப்பு வகிக்கும் கட்சியான, அ.தி.மு.கவின் சார்பில் 25 இலட்சம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், நிதியுதவி மட்டுமே எங்களுக்கு நியாயத்தை வழங்கி விடும் என்பதை, அந்த மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதனால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் இறந்தவரின் சமூகத்தைச்  சேர்ந்தவர்களும் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.   

சர்ச்சைக்குரிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளும்  இடைநிறுத்தப்பட்டு உள்ளார்கள். அந்தப் பொலிஸ் நிலைய பொலிஸார் பலர் மாற்றப்பட்டுள்ளார். இது போன்ற, பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் மரணம் தொடர்பான விசாரணை, நீதிமன்ற நடுவர் குழாமால் நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் நடந்து முடிந்திருக்கிறது. 

இறந்தவர்களின் உடற்கூறு பரிசோதனையையும் உயர்நீதிமன்ற உத்தரவின்படியே மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு செய்திருக்கிறது. அந்த அறிக்கையில் வெளிவரும் தகவல்களை வைத்து, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது, அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைப்பது போல், கொலை வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது தெரியவரும்.   

இந்தத் தாக்குதலை, பொலிஸ்-பொதுமக்கள் நல்லுறவில் ஏற்பட்டுள்ள ஒரு சறுக்கலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இது ஊரடங்கு நேரம். கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில், தொடர்ந்து பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் மன அழுத்தத்தில் அவர்களும் சிக்கித் தவித்திருக்கலாம்.  அதே போல் மக்களும் ஊரடங்கால் வியாபாரம் இல்லாமல் வேலைகளுக்கும் செல்ல முடியாமல் வருமானத்தை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழல். 

இருதரப்பிலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்ற ஓர் அசாதாரணமான சூழலில், இது போன்ற தவிர்க்கப்பட வேண்டிய சம்பவம், நடந்திருக்கவே கூடாது. 

மனித உரிமை மீறல்கள், சட்டத்தின் ஆட்சியைக் கையிலெடுத்து, பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டார்கள் என்றெல்லாம் ஒரு புறம் பேசினாலும், கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஏற்பட்ட விபரீத விளைவுகளில் ஒன்றுதான் இந்த மரணங்களும் என்றுதான் எடுத்துக்கொளள வேண்டும்.   

பொது மக்கள்- பொலிஸார் உள்ளிட்டோரின் உறவுகளை மேம்படுத்த, பல்வேறு உத்தரவுகளை இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் அவ்வப்போது வழி காட்டுதல்கள் அடங்கிய தீர்ப்புகளை அளித்துள்ளன. 

கைது நடவடிக்கைகளை, பொலிஸார் எப்படி மனித உரிமை மீறல்கள் இன்றி,  சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுச் செய்திட வேண்டும் என்று, டி.கே.பாசு வழக்கில், உச்சநீதிமன்றம் மிகத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது. 

நீதித்துறை நடுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் கூட, அவர்களைக் கைது செய்யும் முறை எப்படியென்று, டெல்லி நீதிச் சேவைகள் சங்கத்தின் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கைது செய்தவரை, கைவிலங்கிட்டு எப்போது அழைத்து வரவேண்டும் என்பது குறித்துக் கூட, தெளிவான உத்தரவுகள் உள்ளன. 

பொலிஸாரின் ஒழுக்கக் கோவைகள், உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் இது போன்ற சிறைத்துறை மரணங்களோ, பொலிஸ் நிலைய மரணங்களோ நிகழத்தான் செய்கின்றன.   

இதையும் தடுக்கும் விதத்தில், 2014ஆம் ஆண்டில், ‘ஆர்னிஷ் குமார்’ வழக்கில் உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அதில் மிக முக்கியமாக ஏழு வருடங்களுக்குள் சிறை தண்டனை பெறும் குற்றங்களைப் பொறுத்தமட்டில்,  சம்பந்தப்பட்டவர்களை வழக்குப் பதிவு செய்து விட்டோம் என்பதற்காகவே கைது செய்யக் கூடாது. கைது செய்தால்,  அப்படிக் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக் காவலுக்காக, நீதிமன்ற நடுவரிடம் அழைத்துச் செல்லும் போது, கைதுக்குரிய காரணங்களை விளக்கி, அறிக்கை கொடுக்க வேண்டும். 

அந்த அறிக்கையை, நீதிமன்ற நடுவர் படித்துப் பார்த்து, கைது தேவைதானா,  இந்த நபரை நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டுமா என்று தன்னைத்தானே திருப்திப் படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான், நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட வேண்டும். அந்த நபரைக் கைது செய்ய வேண்டியதில்லை என்று நீதிமன்ற நடுவர் கருதினால், அதற்கான உத்தரவைப் பிறப்பித்து, சம்பந்தப்பட்ட நபரை சொந்தப் பிணையிலோ, பிணையிலோ விடுவிக்கலாம். 

அது மட்டுமின்றி, இந்த நீதிமன்ற காவல் குறித்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் பொலிஸ்  அதிகாரியோ, நீதிமன்ற நடுவரோ துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான தண்டனைக்கும் உள்ளாவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாகவே எச்சரித்திருந்தது. 

ஆனால், இது போன்ற கைதுகளிலும் நீதிமன்ற காவல் வழக்குகளிலும் ஏறக்குறைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, ஆறு வருடங்களுக்குப் பிறகும் முன்னேற்றம் இல்லை. ‘பிரகாஷ் சிங்’ வழக்கில் பொலிஸ் சீர்திருத்தத்தத்தக்குப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்து 24 வருடங்களுக்குப் பிறகும், எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது பொதுமக்கள், பொலிஸாருக்கு இடையிலான உறவில் மிகப்பெரிய பின்னடைவாகவே அமைந்துள்ளது.  

தூத்துக்குடியில் பொலிஸாரால் தாக்கப்பட்டு, சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறந்துள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்கள் தமிழகத்தை உலுக்கி விட்டன. 

கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் முன்னணி கள வீரர்களாக நின்ற இலட்சத்துக்கும் அதிகமான தமிழகப் பொலிஸாரின் நற்பெயர், சாத்தான் குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகளால் களங்கப்பட்டு நிற்கிறது. 

இனி வரும் காலங்களிலாவது, வழக்குப் பதிவு செய்வது, கைது, நீதிமன்றக் காவலில் அடைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம், பொலிஸ் நிலையங்களில் உள்ள நிலைய அதிகாரிகளுக்கும் அந்தந்தப் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீதிமன்ற நடுவர்களுக்கும் (MAGISTRATE) ஏற்பட வேண்டும். அதற்கான பயிற்சிகளை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளும் நீதித்துறை பயிற்சி நிறுவனங்களும் முன்னின்று நடத்தி, நீதித்துறைக்கும் பொலிஸ் துறைக்கும், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான், தற்போது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .