2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எங்கள் காலத்தில் தேசியவாதம்

Ahilan Kadirgamar   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்புக் குறிப்புகள்

நவீன உலகத்திலிருந்து, பெருங்குழப்பமான தேசங்களின் இயல்பிலிருந்து பெறக்கூடிய பாடங்கள், அநேகமாக மறக்கப்படுகின்றன. ஆபத்தான தேசிவாத இயக்கங்களின் பிடியில் நாம் மீண்டும் சிக்கியுள்ளோம். அவ்வாறான கொள்கைகளுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும், பொருளாதார நெருக்கடிகள் பங்களித்திருக்கலாம் என்ற போதிலும், தேசியவாதத்தின் எழுச்சிக்கு, அதை மாத்திரம் குறிப்பிட முடியாது.   

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கிறுக்குத்தனமான வசவுரைகளாக இருக்கலாம்; ஐரோப்பாவிலுள்ள இனவாத அலையாக இருக்கலாம்; சீனாவிலும் இந்தியாவிலும், அபிவிருத்தியிலும் இராணுவமயமாக்கலிலும் அதிகரித்த தேசிய வேலைத்திட்டங்களாக இருக்கலாம், அவை அனைத்துமே, கலாசார தேசியவாதம், இனவாதம், வெளிநாட்டவர் வெறுப்பு ஆகியவற்றின் வரலாறுகளைக் கொண்டிருக்கும்.   

அவ்வாறான கலாசார தேசிய வாதத்திலிருந்து, இலங்கையும் கூட தப்ப முடியாமலிருக்கும். வெளிநாட்டுப் போர்களை ஆரம்பிக்கவோ அல்லது ஏனைய நாடு மீது படையெடுக்கவோ, இலங்கை சிறிய நாடாக இருந்த போதிலும், அழிவுதரக்கூடிய இந்தத் தேசியவாத அலையில் சிக்கி, எமது நாட்டைப் பிளந்தெடுக்க முடியும். பிளந்தெடுத்தல் என்பது மூலமாக, பிரிவினையை நான் குறிப்பிடவில்லை. மாறாக, அதிகரிக்கும் துருவப்படுத்தல்; வர்க்க, இன, சாதி, பாலின, சமய ஒடுக்குமுறை மூலமாக, ஆழமாகும் வன்முறையைக் குறிப்பிடுகிறேன். அவ்வாறான ஒடுக்குமுறையும் துருவப்படுத்தலும், சமூகத்தைப் பிரித்து, சமூக அரசின்மையையும் வன்முறையையும் நோக்கி எடுத்துச் செல்லும்.   

இராணுவ மயமாக்கல்   

தேசியவாதத்தினதும் இராணுவமயப்படுத்தலினதும் மோசமான வரலாறு, உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்களுடன் அதிகரித்தது. இலங்கையில்  சிவில் யுத்தம், இராணுவமயமாக்கலின் ஆபத்துக் குறித்து, கேள்வி கேட்கவாவது செய்திருக்க வேண்டும்.

ஆனால் நாங்கள், தெற்கில் “போர் நாயகர்கள்” என்ற கலந்துரையாடலிலும், வடக்கில் “தியாகிகள்” என்ற கலந்துரையாடலிலும் இன்னமும் சிக்கிக் காணப்படுகிறோம். இதனால், போருக்கு நாம் எப்படிச் சென்றோம் என்பதை, விமர்சன ரீதியாகப் பின்னோக்கிப் பார்ப்பதற்கு முடியாமலிருக்கிறோம்.   

எங்கள் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, வடக்கில் இன்னொரு கிளர்ச்சியோ அல்லது சிவில் யுத்தமோ, எட்டக்கூடிய தூரத்தில் இல்லை. அவ்வாறான ஆயுதமேந்திய போராட்டத்தைத் தாங்க முடியாதளவுக்கு, தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்தும் பலவீனமடைந்தும் காணப்படுகிறது. வடக்கின் அண்மைக்கால தேசியவாதக் கூச்சல்கள், முதுகெலும்பற்ற அரசியல் மேல்தட்டினரின் சந்தர்ப்பவாதக் கருத்துகளே ஆகும்.   

இருந்தபோதிலும், தமிழ் அரசியல் வட்டத்தை, அவ்வாறான குறுகிய தேசியவாதக் கலந்துரையாடல் கைப்பற்றியிருப்பது என்பது, போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீளெழுச்சியைப் பாதிப்பதோடு, கோஷ்டிகளிலிருந்து வீட்டு வன்முறைகள் தினசரி வன்முறைகளில், மக்களை ஆழ்த்துகிறது.   

நாடென்ற வகையில் முழுமையாக, ஏற்றுக்கொள்ளத்தக்க வாழ்க்கை, சமூக நீதி ஆகியவற்றுக்கான மக்களின் எதிர்பார்ப்பென்பது, போர் வரலாற்றின் அடிப்படையிலான கலாசார தேசியவாதக் கருத்துகளால் மறைக்கப்பட்டுள்ளது. வடக்காக இருக்கலாம், தெற்காக இருக்கலாம், “போர் நாயகர்கள்” என்பதன் தெரிவுசெய்யப்பட்ட கொண்டாட்டம் ஆகியன, எமது சமூகத்தில் ஊன்றிப் போயுள்ள போரின் துயரங்களை அவமதிப்பதாகும்.   

“போர் நாயகர்கள்” மீதான கொண்டாட்டங்களும், “தியாகிகளின்” விமர்சனமற்ற கொண்டாட்டங்களும், இராணுவமயமாக்கல் பற்றி அவசியமாகத் தேவைப்படும் கலந்துரையாடலுக்கு, பிரதான தடங்கலாகும். தொடர்ந்து வந்த அரசாங்கங்களும், இராணுவமயமாக்கலை நீக்குவதற்கான தூரநோக்கை வெளிப்படுத்தியிருக்கவில்லை. மாறாக, இராணுவத்தைப் பாதுகாப்பவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டன.   

மிகப்பெரிய இராணுவத்தின் உருமாற்றத்துடன், இராணுமயமாக்கலின் நிறுத்தம் காணப்பட வேண்டும். குறிப்பாக, இராணுவத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பலர், பொருளாதார வாய்ப்புகளுடன்கூடிய சாதாரண வாழ்க்கைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட, ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த முன்னாள் ஆயுததாரிகளின் வாழ்க்கை, தமிழ்ச் சமூகத்தால் கூடக் கைவிடப்பட்ட நிலையில், துயரகரமானதாக உள்ளது. இறந்தவர்களுக்கான அஞ்சலியென்பது, அரசியல் முன்னுரிமையான விடயமாக மாறியமைக்கும் நடுவிலேயே இந்நிலை காணப்படுகிறது. இந்தப் பின்னணியில், எமது அரசியல் கலாசாரத்திலிருந்தும் எமது உலகப் பார்வையிலிருந்தும் இராணுவமயமாக்கலை நீக்குதல் என்பது அவசியமானது. இதற்கு, தேசியவாதத்தை நிராகரித்தல் அவசியமாகிறது.   

வன்முறை   

தேசியவாதமென்பது, இறுதியில் வன்முறையையே பிரசவிக்கிறது. கொலனித்துவத்துக்கு எதிரான தேசியவாத இயக்கங்கள் போன்று, சில நேரங்களில் வன்முறை அவசியமானது என, சிலர் வாதிடக்கூடும். ஆனால், என்னுடைய கருத்து என்னவெனில், தேசத்திலும் தேசம் உருவாக்கலிலும் மாத்திரம், தேசியவாதம் மட்டுப்படுத்தப்படாது என்பதாகும்.

மாறாக, சமூகங்கள், பாடசாலைகள், ஏன் குடும்பங்களில் கூட வன்முறைகள் ஏற்படும். சமூகங்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு மேலாக, தேசத்தை முன்னிறுத்துவதால், தேசியவாதமென்பது ஜனநாயக விரோதமானது.   

உலகம் முழுவதிலும், அதேபோல் இலங்கையிலும், தேசியவாதத்தின் அண்மைக்கால எழுச்சியென்பது, முஸ்லிம்களுக்கு எதிரான அல்லது இஸ்லாத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளது. தேசியவாதத்துக்கு, எதிரியொன்று தேவைப்படுகிறது.

வெளியே எதிரி இல்லாவிடின், எதிரியை உள்ளே தேடுகிறது. எங்களது காலத்தில் முஸ்லிம்கள், “ஏனையோர்” என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றனர். இந்த “எதிரி” மீது தான், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.   

வன்முறையென்பது, தேசியவாதத்துடன் சேர்ந்தது. நவீன தேசங்களின் உருவாக்கத்தின் போது, அவ்வாறான வன்முறைகள் இருந்தன, விரிவுபடுத்துவதற்கான போர்களில் அவை இருந்தன. முன்னைய நூற்றாண்டுகளில் இடம்பெற்ற உலகப் போர்களில் அவை இருந்தன. தற்போது எங்கள் காலத்திலுள்ள தேசியவாத நடவடிக்கைகளில் அவை வேறு வடிவில் காணப்படுகின்றன.   

எதிர்ப்பு   

தேசியவாதமானது சமூகங்களை, தனது கலந்துரையாடலினதும் வன்முறையினதும் பலத்தால் ஆள முற்படுகிறது என்றால், அத்தேசியவாதத்துக்கான எதிர்ப்பும், அதே சமூகங்களிலிருந்து தான் வருகிறது. தமிழ் இலக்கியத்தின் முன்னணி விமர்சகர்களுள் ஒருவரான பேராசிரியர் க. கைலாசபதி, “தமிழ்ச் சமூகத்தின் கலாசார, மொழிச் சுயவுணர்வு” என்ற தலைப்பில், சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் 1979ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில், பின்வருவதைக் கூறினார்:   

“தமிழர்களில் கலாசார தேசியவாதம், இன்று முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. அதற்கு முன்னால், இரண்டு தெரிவுகள் உள்ளன. கலாசாரத் தனிமைப்படுத்தல், ஆதிக்க மனப்பாங்கையின் பாதையில் செல்வது. இல்லாவிடின், பெரும்பான்மையான சமூகத்துக்குப் பொருத்தமானதான விடயங்களைக் கண்டறிந்து, ஜனநாயக வாழ்க்கைக்கான தெரிவொன்றை மேற்கொள்வது.   

“இதில் தெரிவு, வெளிப்படையானதாகத் தெரியும். ஆனால் அதைச் செய்வதற்கு, ஒடுக்கமான இன நலன்களைக் கொண்டிருப்பதுவும், அதேபோல மனிதனால் மனிதனைச் சுரண்ட முடியாத சமூக ஒழுங்குமுறையொன்றை நோக்கிச் செல்கின்றதுமான, இரண்டு சமூகங்களும், தேசிய ரீதியில் போராடுவது என்பதுவும் தேவைப்படும்.”   

அந்த எச்சரிக்கை, தமிழ்ச் சமூகத்தால் செவிமடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, அதன் பின்னர் துயரமே ஏற்பட்டது. தசாப்தங்கள் கடந்தும், பேராசிரியர் கைலாசபதியில் சொற்கள், எங்களுடன் பேசுகின்றன; தமிழ்ச் சமூகத்துக்கு மாத்திரமன்றி, முழு நாட்டுக்குமே அவை பேசுகின்றன. எழுபதுகளைப் போலவே தற்போதும், கலாசார தேசியவாதம் மீளெழுச்சிபெற்று, ஆதிக்க மனப்பாங்குடன் நாட்டைத் துருவப்படுத்தும் ஆபத்துக் காணப்படுகிறது.    

தேசியவாதத்தின் இருநூறு ஆண்டுகால சூறையாடலுக்குப் பின்பு, தேசியவாதத்தில் முன்னேற்றகரமான ஒன்று கிடையாது என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். உண்மைதான், தேசியவாதமென்பது வன்முறையை விரைவுபடுத்துவதோடு, ஜனநாயகத்தை மறுப்படையச் செய்கிறது. அவ்வாறான தேசியவாத சக்திகளைச் சவாலுக்குட்படுத்தி, சமவுரிமைக்கும் சுதந்திரத்துக்கும் நாங்கள் போராடுகின்ற அதேவேளையில், சமூகங்களுக்கு இடையிலும் நாடுகளுக்கு இடையிலும் உறவுகளைக் கட்டியெழுப்பக்கூடிய மாற்று வழியிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .