2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எங்கே செல்லும் இந்தப் பாதை?

காரை துர்க்கா   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு" என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார்.   

மேலும் அமைச்சர், தான் சொன்னது என்னவென்று முழுமையாக ஆராய்ந்து பாராமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன எனவும் மறுப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். ஆனாலும் அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார், யாழ்ப்பாணத்தில் இருந்து வௌிவரும் ஊடகம் ஒன்று, தனது பக்கத்து நியாயப்பாடுகளை வெளியிட்டுள்ளது.   

அமைச்சரது இந்தக் கருத்துக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதை வன்மையாகக் கண்டிப்பதாக, இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.  
ஆக, அமைச்சர் அவ்வாறு கூறினாரா அல்லது கூறவில்லை என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு, விடயத்துக்கு வரின்...   

இலங்கையில் மாகாண அடிப்படையிலான ஒன்பது நிர்வாகங்கள் உள்ளன. வடக்கு மாகாணம் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பதாவது இடத்திலேயே தொடர்ந்து துயரத்துடன் பயணிக்கின்றது. 

குண்டுகள் வெடித்து, எறிகணை மழை பொழிந்த காலப் பகுதியில், குப்பி விளக்கில் சளைக்காது படித்துச் சாதனைகள் பல குவித்த தமிழ்க் கல்விச் சமூகம், இன்று அமைதி, சமாதானம் நிலவுவதாகக் கூறப்படும் காலத்தில், கல்வியில் கடைநிலை வகிப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.   

நகரமயமாதல்  

தற்காலத்தில், பொதுவாக ஒரு சமூகக் கட்டமைப்பு எதிர்நோக்கும் பல்வேறான பிரச்சினைகளில், மக்கள் நகரத்தை நோக்கி குடிபெயரும் நகரமயமாதல் என்பது பெரும் பிரச்சினை ஆகும். 

நகரமயமாதல் காரணமாக, ஒன்றின் பின் ஒன்றாகப் பல சிக்கல்கள் நாளாந்தம் ஏற்பட்டு வருகின்றன. மண் வாசனையுடனும் பெயருடனும் புகழுடனும் விளங்கிய பல பழம்பெரும் கிராமங்கள், சோபை களைந்து, முகவரி இழந்து தவிக்கின்றன. 

இவ்வாறு இருந்த போதிலும், மக்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களில், கிராமங்களில் சில பல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத வேளைகளிலேயே நகரத்தை நோக்கிப் படை எடுக்கின்றனர்.  

இந்த வகையில், மக்கள் நகரத்தை நோக்கிப் படை எடுக்கப் பல காரணங்கள் உள்ள போதிலும், தமது பிள்ளைகளை நகரத்துப் பிரபல பாடசாலைகளில் சேர்த்து விட வேண்டும் என்பது முதன்மையான விடயம் ஆகும். 

பெற்றோர்கள் தமது உச்சக் கட்ட முயற்சிகளைப் பயன்படுத்தி அல்லது இலஞ்சம் கொடுத்தாவது நகர்ப்புற பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர்.   

இதனால், கிராமப்புற பாடசாலைகளில் போதிய மாணவர்கள் இன்றி, வெறுமை நிலை காணப்படுகின்றது. சில பாடசாலைகளில் தரம் 1 அனுமதிகளில் பத்து (10) பிள்ளைகள் இல்லாத சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. இதனால் பாடசாலைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.   

‘ஒரு பாடசாலையைத் திறப்பது ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமம்’ எனக் கூறுவது உண்டு. இந்நிலையில் வளப்பற்றாக்குறை காரணமாகப் பாடசாலைகளை மூடின், மீள் ஆரம்பிப்பது மிகவும் சவாலான விடயம் ஆகும். உண்மையில் வளப்பங்கீட்டில் நகர்ப்புற, கிராமப்புற பாடசாலைகளுக்கு இடையில் ஏற்ற தாழ்வுகள் காணப்படுகின்றன.   

பல பெற்றோர்கள், தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காகப் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே நகரில் வாழ்கின்றனர். பலர் விருப்பம் இன்றியே, நகருக்குள் தள்ளப்படுகின்றனர். 

என்னால் எனது கிராமிய வாசனையை அனுபவிக்க முடியாமல் போய் விட்டதே எனப் பல பெற்றோர்கள் நாளாந்தம் ஏங்கித் தவிர்க்கின்றனர். இருந்தும் எனது மகனி(ளி)ன் கல்வி உயர்வானது முக்கியமானது என்ற வார்த்தைகள், இவர்களின் ஏக்கத்தைச் சற்றுத் தீர்ப்பதாக உள்ளது.   

பறிபோகும் கிராமங்கள்  

அடுத்து, இவ்வாறாக கல்வி மற்றும் இதர தேவைகளின் பொருட்டு நகரத்தை நோக்கி நகரநகர, நம் எல்லைக் கிராமங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்கிளாய் தமிழ் மக்களது பூர்வீக கிராமம். இன்று இக்கிராமம், விரைவாகப் பறிபோகும் நிலையில் உள்ளது.  

தென்னிலங்கை மீனவர்களது அதிகரித்த வருகை, அவர்களின் அதிகரித்த அத்துமீறல்கள், இதை எள்ளளவும் கண்டு கொள்ளாத மறைமுகமாக ஊக்குவிக்கும் கொழும்பு, தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எனத் தொடரும் நடவடிக்கைகள், கொக்கிளாய் தமிழ்க் கிராமத்துக்கு ஆபத்து மணி அடித்துள்ளன.   

இந்த நிலையில், கொடிய யுத்தத்தால் பல பாதிப்புகளைச் சந்தித்து, மீள முடியாமல் இருக்கின்றன இக்கிராமங்கள். அதற்குள் இக்கிராமங்களை முழுமையாக விழுங்க மும்முரமாக முயன்று கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறான விடயங்களைப் பல முறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கைகளையும் வடக்கு மாகாண சபை எடுக்கவில்லை என மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன் அண்மையில் கொக்கிளாய் பகுதி பாடசாலை ஒன்றுக்கு நியமனம் கிடைக்கப் பெற்ற ஆசிரியர் ஒருவர், உடனடியாகவே பிறிதொரு பாடசாலைக்கு மாற்றலாகிச் சென்று விட்டதாகத் தனது ஆதங்கத்தையும் மாகாண சபையில் வெளிப்படுத்தி உள்ளார்.  

இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழ் மக்கள், தம் பிள்ளைகளின் கல்வியையும் இழக்கக் கூடாது என நகரத்தை நோக்கி இடம் பெயரலாம். அதன் நீட்சியாகத் தமிழ்க் கிராமங்களின் இருப்புகள் இயல்பாகவே சுலபமாகக் கை நழுவும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.   

அவை விரைவில், அழகான சிங்களக் கிராமங்களாகத் தோற்றம் பெறும். ஆகவே இவ்வாறான பிரச்சினைகள், தமிழ் இனத்தின் இருப்பையே வேரோடு சாய்த்து விடக் கூடியதாக உள்ளதையும் அவதானிக்க வேண்டி உள்ளது.  

ஆகவே, இவை சிவப்பு சமிக்ஞைகள். இவ்வாறான, ஆபத்தான கை நழுவ ஏதுவாக உள்ள இடங்களை நோக்கிய, வள ஒதுக்கீடு, வளப்பங்கீடு மற்றும் அவை தொடர்பான தொடர் கண்காணிப்புகள் விரைவு படுத்தப்பட வேண்டும்; ஆக்கபூர்வமாக்கப்பட வேண்டும். பிரேரணைகள் பல முன்மொழிவதில் காட்டப்படும் ஆர்வங்கள் போல, நடைமுறைப்படுத்துவதிலும் காட்டப்பட வேண்டும்.   

அறப்பணி  

ஆசிரியப் பணி அறப்பணி ஆகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். ஆகவே, பெற்றோர்களுக்கு அடுத்த படியாக குருவுக்குக் கௌரவம் வழங்கப்படுகின்றது. வன்னிப் பகுதியில் பல சிறார்கள், யுத்தத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கின்றனர்.   

இந்நிலையில், மாதா, பிதா, குரு என அனைத்தும் அவன(ள)து ஆசிரியரே ஆவார். ஆகவே, அங்கே சராசரி கற்றல் செயற்பாடுகளுக்கு அப்பால், அன்னையாகவும் அந்த பிள்ளையை அணைக்க வேண்டிய பெரும் பொறுப்பை ஆசிரியர் பணி தாங்கி உள்ளது.   

இறுதிக் கட்ட யுத்தத்தில், தனது பெற்றோரை இழந்த முல்லைத்தீவு ஒலுமடுவைச் சேர்ந்த சிறுவன் (வயது 13) தனது மாமனாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், திடீரென மயக்கி விழுந்து, மரணமான சம்பவம் பதிவாகி உள்ளது.   

பரீட்சை பெறுபேறு  

வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் 891 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. நடப்பு வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து வலயங்களிலும் இருந்த 20 ஆயிரத்து 506 மாணவர்கள் தோற்றி உள்ளனர். அவர்களில் 1,727 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர். அதாவது எட்டு (8) வீதமானோரே சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 513 பாடசாலைகளில் ஒருவர் கூட சித்தி பெறவில்லை.   

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மட்டும் மையமாகக் கொண்டு மாணவர்களின் திறமையை அளவிட முடியாது. இருப்பினும் எட்டு சதவீதமான மாணவர்களே சித்தி அடைந்துள்ளனர் என்ற செய்தி கல்விக் கண்களை அனைவரும் விரைவாக திறக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.   

சுகாதார சேவை  

அடுத்து, வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சினை ஆகும். இதற்கான பிரதான காரணமாக, வடக்கு மாகாண பாடசாலைகளில் உயர்தரத்தில் உயிரியல், பௌதீக விஞ்ஞானப் பாடங்களுக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளமை ஆகும்.   

அதிலும், கிராமப்புற பாடசாலைகளில் உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் மருந்துக்கும் இல்லாத நிலை நீடிக்கின்றது.   

சில மாணவர்களுக்கு விஞ்ஞான பாடங்கள் கற்க விருப்பமும் ஆர்வமும் தகுதியும் இருந்தாலும் தொடர முடியாத நிலை. ஆகவே, அம்மாணவன் நகரத்துக்குச் செல்ல வேண்டும் அல்லது கலை, வர்த்தகப் பாடங்களைப் பயில வேண்டிய ஒரு வித துயர நிலை. 

எனவே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடநெறியைப் பயில ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். அதன் ஊடாக, உயிர் காப்புப் பணிக்கு, உயிர் கொடுக்க வேண்டிய தலையாய பொறுப்பும் உள்ளது.   

கணிசமான வடக்கு மாகாண பாடசாலைகள், பௌதீக வள அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், மறுபுறத்தே ஆசிரியர் பற்றாக்குறையும் ஆசிரியர் வளப் பங்கீட்டுச் சீரின்மையும் என மனித வள பிரச்சினை நீண்ட கால சிக்கலாகவே உள்ளது.   

வடக்கு மாகாண சபை, கடந்த நான்கு வருடங்களாக ஆட்சியை ஆள்கின்றது. துறை சார்ந்த அனுபவம் பெற்றோர் அமைச்சுப் பதவியை அலங்கரித்தனர்; அலங்கரிக்கின்றனர். 

வெறுமனே தமது இருப்புக்காகவே மாத்திரம் முட்டி மோதும் இவர்கள் தம் இனத்தின் இருப்புக்காக என்ன செய்தார்கள் என வாக்களித்த மக்கள் சலித்துக் கொள்கின்றனர்.   

எனவே, தமிழ் இனத்தின் விடிவுக்காக வெறுமனே மாகாண சபையில் மாத்திரம் தங்கியிராது, ஒட்டு மொத்தமாக அனைவரும் அறிவார்ந்த ரீதியாகவும் செயல் திறன்மிக்கதாகவும் விரைவாகவும் சிந்திக்க வேண்டியதுமான விடயம்; இது சிந்திக்க வேண்டிய தருனம் இது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X