2020 நவம்பர் 28, சனிக்கிழமை

எண்பதுகளில் சண்டை

காரை துர்க்கா   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை. 

நல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது. 

இதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடலாம். கோர யுத்தம், தமிழ் மக்களில் பலரை, யாருமற்ற அனாதைகள் ஆக்கியது. அதுவே, முழுத் தமிழர்களையும் அரசியல் அனாதைகள் ஆக்கிவிட்டது. ஈழத் தமிழ் மக்களது நிம்மதியான சுதந்திர வாழ்வு, காலதாமதமாகிக் கொண்டே செல்கின்றது.

இதற்குப் பல காரணங்கள் காணப்பட்டாலும், தமிழ் மக்களிடையே (அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே) ஒற்றுமை இன்மையை முதன்மைக் காரணங்களில் ஒன்று எனக் கூறலாம். 

“எண்பதுகளில் எங்கட இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை இருந்திருந்தால், அப்பவே சுலபமாக அடிச்சுப் பிடிச்சிருக்கலாம்.” இது எனது நண்பர் ஆழ்ந்த கவலையோடும் ஏக்கத்தோடும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்.

இது எப்படிச் சாத்தியமாகும்? ஈழத் தமிழ் மக்களது வாழ்வியல், இன்று பல கோணங்களிலும் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது.  இந்த நேரத்தில் கூட, எண்பதுகளைத் தாண்டிய எண்பதுகளை அண்மித்த ஈழத் தமிழ் மக்களது அரசியல் தலைவர்களுக்கிடையே, ஒற்றுமையைக் காண முடியவில்லை. 

தமிழ் மக்களை ஒற்றுமையாக வழிநடத்த வேண்டிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களுக்கிடையே முரண்பாடுகளும் முறுகல்களும் நிறைந்து உள்ளன. அவர்கள், பொது வெளியில் மற்றவர்களை போட்டுத் தாக்குவதும் ஏட்டிக்குப் போட்டியாக அம்புகளை எய்துதலும், வழமையான நிகழ்வு என்றாகிவிட்டது. 

இந்நிலையில், இளமையுடன் கூடிய வீரம் பொருந்திய இருபது வயதுகளில், கையில் நெருப்பைக் கக்கும் துப்பாக்கிகளுடன் வலம் வந்த இளைஞர் (இயக்கங்)களுக்கிடையே, எப்படி ஒற்றுமை ஏற்படும்? அக்காலத்தில் ஒற்றுமை தோன்ற மறுத்தமையினாலேயே, பல இயக்கங்கள் தோன்றின. முரண்பாடுகளும் கூடவே தோன்றின. அவற்றின் தொடர்ச்சியாக, தங்களுக்குள் வேட்டுகள் தீர்க்கப்பட்டன. இன்னுயிர்கள் இரையாக்கப்பட்டன. உயர் மனிதங்கள் மரணித்தன. உடல்கள் எரிக்கப்பட்டன, புதைக்கப்பட்டன.

இவ்வாறாக இழந்தவைகள் ஏராளம். இவை, ஈழத் தமிழ்ச் சமூகம் சந்தித்த ஆறா(காயா)த வடுக்கள். ஆழமான அன்பான புரிந்துணர்வு இன்மையால், எமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட 
அலங்கோ(அவ)லமான துன்பியல் நிகழ்ச்சிகள். மனம், வன்மம் பெற்றமையால், வன்முறை நடைமுறை ஆகியது. 

ஆனாலும், எதிரிக்குக் கூட ஏற்படக்கூடாத இழப்புகளைச் சந்தித்த பின்னரும், தற்போது கூட தமிழ்த் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது, கானல் நீராகவே உள்ளமை சாபக்கேடாகும். அவர்களது நோக்கிலும் போக்கிலும், நாக்கிலும், தமிழ் மக்களுக்கு விடியலைத் தரக்கூடிய மாற்றங்களைக் காண முடியவில்லை.

அத்துடன், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் பேண அல்லது இதிலும் பாதகமான நிலையை ஏற்படுத்த, பேரினவாதம் கடுமையாக உழைக்கின்றது. இந்த வரிசையில், தற்போது பேசப்படுகின்ற பனிப்(போராக) எதிர்க்கட்சித் தலைவர் - வடக்கு மாகாண முதல்வர் (சம்பந்தன் - விக்னேஸ்வரன்) விவகாரம் உள்ளது.

2013ஆம் ஆண்டில், சம்பந்தனாலேயே விக்னேஸ்வரன் அழைத்து வரப்பட்டார். இந்த அண்ணளவாக உள்ள ஆறு ஆண்டுக் காலப்பகுதியில், ஆறு தடவைகளாவது இவர்கள் ஆற அமர்ந்திருந்து, தமிழர் அரசியல் பற்றிப் பேசியிருப்பார்களோ தெரியவில்லை. 

நீண்ட காலமாவே, சம்பந்தன் - விக்னேஸ்வரன் உறவு, தாமரை இலையின் நீர் போலவே இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களுக்கான உறவு, நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு போலவே இருந்திருக்க வேண்டும். அவ்வாறான உறவு இருந்திருந்தால், தமிழ் மக்களுக்கான பல அனுகூலங்களை அனுபவித்து இருக்கலாம். 

கூட்டமைப்பின் தலைமை தோல்வி அடைந்து விட்டதென விக்னேஸ்வரன் கூறியமை, நேரடியாகச் சம்பந்தனையே நோ(தா)க்குகின்றது. உண்மையிலேயே, இன்று வரை கூட்டமைப்பின் தலை(வர்)மை என்பது, ஒற்றைச் சொல்லில் சம்பந்தன் அவர்கள் மட்டுமே குறிக்கின்றது. 

இந்தச் செய்தியைச் சொல்ல விரும்பின், கூட்டமைப்புத் தலைமை, தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறாது, கூட்டமைப்பின் தலைமையால், தமிழ் மக்களது வெற்றியை வென்றெடுக்க முடியவில்லை என்றாவது, விக்னேஸ்வரன் கூறியிருக்கலாம்.

இந்நிலையில், கூட்டமைப்புத் தலைமை தோல்வி அடைந்து விட்டதென விக்னேஸ்வரன் வெளியில் கூறியமையானது, ஏற்கெனவே உள்ள சம்பந்தன் - விக்னேஸ்வரன் இடைவெளியை, மேலும் அதிகரிக்கவே வழிசமைத்திருக்கிறது. இவ்விருவருக்குமான இடைவெளியை அதிகரிக்க வேண்டுமெனக் காத்திருந்தவர்களுக்கு, பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த மாதிரியாகி விட்டது. 

அதேவேளை, விக்னேஸ்வரனைத் தபால்காரர் என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியமை கூட, ஆரோக்கியமான அரசியல் போக்கு அல்ல. ஏனெனில், சுமந்திரன் தனியே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர். மறுபுறத்தே, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஆவார். ஆகவே, இக்கருத்து சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தல்லாமல், கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கருத்து போலவும் ஆகிவிடும்.

இதற்கடையில், கூட்டமைப்பு கூட்டமைப்பு எனக் கூறினாலும், இக்கருத்து தனியே தமிழரசுக் கட்சியின் கருத்தாகவே இன்னொரு பக்கத்தால் பார்க்கப்படுகின்றது. 

விக்னேஸ்வரனுக்கு எதிரான இவ்வாறான கருத்துச் சமர்களை, சுமந்திரன், நீண்ட காலமாகவே தொடர்ந்து நடத்தி வருகின்றார். ஆகவே இது, கூட்டமைப்புக்கும் வடக்கு முதல்வருக்குமான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றதென்பதை எடுத்துரைக்கிறது.

தமிழர் அரசியலைப் பாதுகாக்கும் பொருட்டு, சுமந்திரனின் இச்செயலை, சம்பந்தன் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தொடர்ந்து அனுமதித்து அழகானதல்ல. 

இல்லையெனில், இரண்டு விதமாக ஊகங்கள் தோன்றலாம். முதலாவது, சம்பந்தனின் அறிவுறுத்தலை அலட்சியம் செய்து, விக்கி மீதான விமர்சனத்தைத் தொடருதல்.

இரண்டாவது, சம்பந்தனின் அனுமதியுடன், விக்கி மீதான விமர்சனத்தைத் தொடருதல்.

ஆனாலும், விக்கி மீதான விமர்சனத்தை, சுமந்திரன் தொடங்கிவிட்டார். ஆகவே தொடருகின்றார்.

எது எவ்வாறாக இருந்தாலும், இவ்வாறான நெருக்கடியான வேளையில், வேண்டப்படாததும் விரும்பப்படாததுமான விமர்சனங்கள், தமிழ் மக்களுக்கு, எக்காலத்திலும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரப்போவதில்லை. 

அடுத்து, விக்னேஸ்வரனும் சுமந்திரனும், குருவும் சீடனும் ஆவர். இது நிற்க, சம்பந்தன்னே, விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் அரசியல் வழிசமைத்தார். இன்று, இவர்கள் இருவருமே சம்பந்தனுக்கு அரசியல் வலியைக் கொடுத்துள்ளனர். 

ஆகவே, இவர்களது இந்தத் தொடர்பறுந்த நிலை மேலும் அதிகரிக்க. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், இது ஊரில் கந்தசாமிக்கும் வேலுப்பிள்ளைக்கும் இடையிலான சராசரி முரண்பாடு அல்ல. மிழ் மக்களது தலைவிதி சம்பந்தப்பட்ட விடயம் ஆகும்.

தற்போதைய தமிழ் மக்களது பலவீனமான அரசியலை, இது மேலும் பழுதாக்கி விடும். இவர்கள், சட்டம் கற்றவர்கள். தத்தமது பக்கங்களில் நியாயம் உள்ளதென, மக்களுக்கு விளக்கம் தருவார்கள். தருகின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், யாரின் பக்கம் நியாயம், யாரின் பக்கம் அநியாயம் என்பதற்கு அப்பால், இவர்களது பிடுங்குப்பாட்டால், தங்களுக்கு அநியாயம் நடந்துவிடுமோ என அச்சப்படுகின்றார்கள். 

கூட்டமைப்பு, பல காரணங்களைக் கூறி விக்கினேஸ்வரனை கூட்டமைப்பி(கூட்டி)லிருந்து கலைக்கலாம். அவை, கூட்டமைப்பின் தரப்பிலிருந்து நோக்குகையில் சரியானவையாகவும் இருக்கலாம்.

ஆனால்,  வெளியே(ற்றப்பட்ட)றிய விக்கினேஸ்வரன், மீண்டும் தேர்தலில் களமிறங்கலாம். அவ்வாறு அவர் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராக மோதும் போது, மீண்டும் கூட்டமைப்பின் வாக்குகளே சிதறும். இடையில் போட்டியிட்ட ஏனைய தரப்புகள், உதிரிகளாக வாக்குகளைப் பெறுவர். ஆசனங்களை அலங்கரிப்பர். பலமான ஆளும் தரப்பாகக் கூட்டமைப்பு வருவதற்கான வாய்ப்புள் அருகும். தமிழர்களது அபிவிருத்தியும் அரசியலும் கருகும். இவ்வாறான நிலையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பேரினவாதம், துள்ளிக் குதிக்கும்.

ஆகவே,  தமிழ்த் தலைவர்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமையின்மையை, கடந்த காலங்களில் பயன்படுத்தி சுவை கண்ட பேரினவாதம், மீண்டும் சுவைக்க வலை விரித்துள்ளது. விழத் தயாராகின்றார்களா? அல்லது சுதாகரிப்பார்களா? காலமே பதில் 
சொல்லும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--