2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

எழுக தமிழ்

என்.கே. அஷோக்பரன்   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பகுதி - 01)

இன்றைய தினம், 2019 செப்டெம்பர் 16ஆம் திகதி, காலையில் யாழ். முற்றவௌியில், தமிழர் மரபுரிமைப் பேரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.   

இந்நிகழ்வு தொடர்பில், குறித்த பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில், சமகாலத்தில் இலங்கை வாழ் தமிழினம் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சினைகளையும் சவால்களையும் அது கோடிட்டுக்காட்டி நிற்கிறது.   

‘தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள், விளைபுலங்கள், வன்கவர்வு செய்யப்பட்டு, தமிழர் மரபில் அந்நிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த, காரண இடுகுறிப் பெயர்கள் மாற்றப்பட்டு, சிங்களப் புனை பெயர்கள் இடப்பட்டு, திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், கேட்பாரற்று மேற்கொள்ளப்பட்டு, இதன் மூலம் இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில், தமிழரின் இனப்பரம்பல் கோலம், இன விகிதாசாரம் என்பவை, திட்டமிடப்பட்டு சிதைக்கப்படுகின்றன.   

தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சாட்சிகளான, வணக்கத்தலங்கள் தகர்க்கப்பட்டு, பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்க முடியாத அரசியல் கையறு நிலையில், தமிழினம் தவிக்கின்றது.   

தமிழர் தாயகப் பிரதேசத்துடன் இணைந்த கடற்பரப்பில், அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களின் தான்தோன்றித் தனத்தைக் கட்டுப்படுத்தாது, அதற்கு தூபமிடுவதாகவே அரசியந்திரம் செயற்பட்டு வருகின்றது. இதனால், தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வு வினாக்குறியாகி உள்ளது.   

தசாப்தங்கள் கடந்தும், அரசியல் கைதிகள் கேட்பாரற்று, சிறைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வர, இறுதி யுத்தத்தின் இனப்படுகொலைஞர்கள் தண்டனைகள் எதுவுமின்றி, ஆட்சி பீடத்தின் அதிகாரக் கதிரைகளை அழகுபடுத்துகின்றனர்.   

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள், 931 நாள்களைக் கடந்துவிட்ட போதும், காத்திரமான முடிவுகள் எதுவும் கிடைத்து விடாத கையறு நிலையில், இலங்கைத்தீவின் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றுக்கு உட்படுத்தப்பட்டு, தான் வாழும் தன் மரபுசார் நிலத்தில், மெல்ல மெல்ல இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற அபாய நிலையின் விளிம்பில், தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.   

நிரந்தரமான, காத்திரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டாலன்றி, இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு, இல்லாமலாக்கப்பட்டு விடும் என்பது, அரசியல் பொதுவெளியில் அனைவராலும் உணரப்படுகின்றது. இருந்தபோதிலும், போர் ஓய்ந்து போன கடந்த ஒரு தசாப்த காலம், ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆறப்போடல்கள், இழுத்தடிப்புகளுடன் கடந்து போகின்றது.   

எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும், ‘தமிழினம் வீழ்ந்து விடாது; விழவிழ எழும்’ என்பதைச் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு உணர்த்தவும் தமிழ் இனத்தின் நிலையையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்துக்கு இடித்துரைக்கவும், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, தமிழினம் இந்த எழுக தமிழில், ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இந்தப் பத்தியின் நோக்கம், ‘எழுக தமிழ்’ என்ற இந்த நிகழ்வைப் பற்றிய விமர்சனமோ, இதன் பின்னால் உள்ளவர்களின் அரசியல் பற்றிய விமர்சனமோ, ஆய்வோ அல்ல; அதைச் செய்வதற்கு, இங்கு பல அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் பத்தியாளர்களும் உளர். இந்தப் பத்தியின் நோக்கம், ‘எழுக தமிழ்’ என்ற, தமிழினத்தின் எழுச்சிக்கான அறைகூவல் என்பது, வெறும் அறைகூவல் என்ற பகட்டாரவாரப் பேச்சுகளின் எல்லைகளைத்தாண்டி, தமிழ்த்தேசம் பலம்பெறுவதற்கும் அர்த்தமுள்ள ரீதியில் எழுச்சி பெறுவதற்குமான அடிப்படைகளைப் பலப்படுத்துவது எப்படி என்பது பற்றியதொரு பார்வையை முன்வைத்தலாகும்.  மேற்குறித்த அறிக்கையில், தமிழர் மரபுரிமைப் பேரவை, தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், சமகாலத்தில் எதிர்நோக்கும் முக்கியமானதும் உடனடியானதுமான பிரச்சினைகள் சிலவற்றைச் சரிவர அடையாளம் கண்டுள்ளது.   

இந்தப் பிரச்சினைகளை, வடக்கு, கிழக்கு சார்ந்து இயங்கும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மிக நீண்ட காலமாகவே அடையாளங்கண்டு குரலெழுப்பி வருகின்றன. ஆகவே, இந்தப் பிரச்சினைகள் பற்றிய பிரக்ஞை, தமிழ் மக்களிடம் நிறையவே உண்டு என்பதுடன்  ஆளும் அரசாங்கங்களும் இதனை அறிந்தே வந்திருக்கின்றன.   

ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வுதான் கிடைத்தபாடில்லை; பிரச்சினையை அடையாளம் காண்பதில் அக்கறை காட்டும் அமைப்புகள், அதற்கான தீர்வு என்ன என்பதை ஆராய்வதில் அத்தனை அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகிறது.   

அனைத்தையும் தீர்க்கக்கூடியதான ‘அரசியல் தீர்வை’ முன்னிறுத்துவதும், அந்த அபிலாசைமிக்க ‘அரசியல் தீர்வை’ ஒரே இரவில் அடைந்து கொள்வதற்கான ‘இலட்சியப் புரட்சி’ப் பாதையைத் தான், அரசியல் மய்யவோட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் முன்வைத்து வருகின்றன.   

இந்த அணுகுமுறையின், யதார்த்த ரீதியான சாத்தியப்பாடுகள் எவ்வாறு இருந்தாலும், தாக்க வரும் நூறு சண்டியர்களை, ஒற்றையாளாக அறுபது வயதுடையவர் அடித்து நொறுக்கும் போது, அதன் யதார்த்தப் போலியை கருத்தில் கொள்ளாது, உணர்ச்சி வசமாகிக் கைதட்டி மகிழும் மக்களின் ஜனரஞ்சக மனத்துக்கு, மேற்கூறிய ‘வெட்டுவோம், விழுத்துவோம்’ வகையிலான பகட்டாரவார அரசியல், கவர்ச்சிமிக்கதாக அமைகிறது.   

 ஆகவேதான், யதார்த்த ரீதியிலான சாத்தியப்பாடுகளைக் கடந்து, வெறும் பகட்டாரவாரப் பேச்சு அரசியலை மட்டும் மூலதனமாகக் கொண்டு, நடைமுறையில் பெறுபேறுகளையோ, அடைவுகளையோ பெற்றுக்கொள்ளாத அரசியலை, மிக நீண்டகாலமாகத் தமிழ் அரசியல் தலைமைகளால் கொண்டு நடத்தக் கூடிய துரதிர்ஷ்ட நிலை இன்றும் தொடர்கிறது.   

இது தமிழர் அரசியலையும் அரசியல் தலைமைகளையும் தமிழ்க் கட்சிகளையும் எழுந்தமானமாகச் சாடும் பதிவல்ல; இந்தப் பத்தியின் நோக்கமும் அதுவல்ல. மாறாகத் தமிழ்த்தேசம், அர்த்தமுள்ள அரசியல் பாதையை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான, அழைப்பு மணியாகவே இதனைக் கருதிக்கொள்ள வேண்டும்.   

இலங்கை வாழ் தமிழ் மக்களை, ஒரு தனித்த ‘தேசமாகக்’ கருதி, ‘தமிழ்த்தேசம்’ என்ற அடையாளப்படுத்தலை, மிகுந்த வேட்கையோடு முன்வைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், அந்தத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய உறுதியான, கணிசமான ‘தேசக் கட்டுமான’ நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமாகிறது.   

வெறுமனே, மூச்சுக்கு முந்நூறு தடவை, நாம் தமிழ்த்தேசம், தனித்தேசம் என்று உரைப்பதால் மட்டுமே, ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியுமா? வெறுமனே பதாகைகளாலும் ஆர்ப்பாட்டங்களாலும் அறிக்கைகளாலும் மட்டும், ஒரு தேசம் மற்றும் தேச உணர்வு கட்டியெழுப்பப்பட்டுவிடுமா?   

ஆகவே, இவற்றைத் தாண்டி உறுதியான, கணிசமான, அர்த்தமுள்ள ‘தேசக் கட்டுமான’ப் பணிகளை, “தமிழர் ஒரு தனித்த தேசம்” என்று கூறும் தலைமைகள், முன்னெடுத்திருக்கின்றனவா என்றால், அதற்கான பதில், எதிர்மறையாகவே இருக்கிறது என்பது கவலைக்குரியது.   

தேசமொன்றைக் கட்டியெழுப்புவதில், அடையாளப் பிரக்ஞையை வளர்த்தெடுத்தல் சார்ந்த செயற்பாடுகள் முக்கியமானதே; ஆனால், அடையாளப் பிரக்ஞையும் தேசஅடையாள உணர்வும் மட்டுமே, ஒரு தேசம் பலம்பெறுவதற்குப் போதுமானதல்ல.   

ஜோசப் ஸ்டாலினின் வரைவிலக்கணத்தின்படி, ‘வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்’ என்கிறார்.   

ஆகவே இந்த வரவிலக்கணத்தின் படியான, புறநிலை அம்சங்கள் உள்ளதாலும் அகநிலையில் இம்மக்கள் தம்மைத் தனித்த தேசமாக உணர்வதாலும், தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை வரையறுக்கலாம். ஆனால், வெறும் தேச அடையாளமும் உணர்வும் ஒரு தேசத்துக்கான அடிப்படையாக அமைந்தாலும், அது வலுப்பெறுவதற்கும், தேசமாகக் கட்டியெழுப்பப்படுவதற்கும் அவை மட்டும் போதுமானவையல்ல.   

அதைத்தாண்டி, யதார்த்தத்தில் தொட்டுணரக்கூடிய விடயங்களும் தத்துவார்த்த அம்சங்களும் தேசமொன்று பலமானதாகக் கட்டியெழுப்பப்பட அவசியமானதாகும். இந்த விடயங்களில் ‘தமிழ்த் தேசம்’ எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி இங்கு முக்கியமானது.  

தத்துவார்த்த ரீதியாகப் பார்ப்பின், ‘தமிழ்த் தேசியம்’ என்பது காலங்கடந்த, சமகாலத்துக்கு ஒவ்வாத, ஸ்டாலினிய ‘தேசிய’த் தத்துவார்த்த அணுகுமுறையைத்தாண்டி, பெருமளவுக்குப்  பரிணாமம் அடையவில்லை என்றே, குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.   

‘க்யுபெக்’ தேசியம், ‘ஸ்கொட்லாந்து’ தேசியம் போன்றவை, தத்துவார்த்த ரீதியில் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிக்கு ஒப்பாக, ஆறு தசாப்தங்களைக் கடந்தும், ‘தமிழ்த்தேசியம்’ அருகில்கூட இல்லை என்பது வருந்தத்தக்கதே. 

‘சிங்கள-பௌத்த’ தேசியத்தைத் தத்துவார்த்த ரீதியில் கட்டியெழுப்புவதில் புத்திஜீவிகளின் பங்களிப்புகள் இன்றுவரை பெருமளவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வெறுமனே அரசறிவியல் அடிப்படையில் மட்டுமல்ல, வரலாறு, மானுடவியல், சமூகவியல், புவியியல், மொழியியல், மதம், சட்டம் என அனைத்து அடிப்படைகளிலும் அறிவுத்தளத்தில், ‘சிங்களப் பௌத்த’ தேசியத்தைத் தத்துவார்த்த ரீதியில் பலப்படுத்தும் செயற்பாடுகள், தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.   

ஆனால், இதற்கு ஒப்பான செயற்பாடுகள் இலங்கை தமிழ் அறிவுத்தளத்தில் நடைபெறுவது மிக அரிது; நடைபெறுவதே இல்லை எனலாம். 

ஆகவே, அரைத்த மாவை அரைப்பது போன்று, ஐம்பதுகளில் பேசிய அதே தேசியவாதத்தை, ஆறு தசாப்தங்கள் கடந்தும், பரிணாம வளர்ச்சியேதுமின்றிப் பேசிக்கொண்டிருப்பதானது, தமிழ்த் தேசியத்தின் தத்துவார்த்த ரீதியிலான தேக்கநிலையைத்தான் சுட்டி நிற்கிறது.   

 ‘தமிழ்த்தேசியம்’ என்பது, அர்த்தமுள்ள ரீதியில் கட்டமைய வேண்டுமானால், அது பற்றிய தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்கள் அறிவுத்தளத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

வெறுமனே, ‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுவது போலான, ‘தற்காப்புத் தேசியவாதமாக’ மிகக் குறுகிய எல்லைக்குள், தமிழ்த் தேசியம் தன்னைச் சுருக்கிக்கொண்டால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, நியாயப்படுத்தவதற்குக் கூட, அதன் தத்துவார்த்த அடிப்படைகள் போதாது போய்விடும்.   

ஆகவே, இதனைத்தாண்டி ‘தமிழ்த் தேசியம்’ நிறுவப்பட வேண்டுமானால், அதற்கான பலமான அத்திவாரம் அறிவுத்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஆய்வுகளும் பிரசுரங்களும் வாதப்பிரதிவாதங்களும் கணிசமானளவில் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.  

இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டதும் ‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்துக்குள்ளது  போன்ற அரச ஆதரவு ‘தமிழ் தேசியத்துக்கு’ இல்லாமையை இங்கு சிலர் காரணமாகச் சுட்டக் கூடும். அரச இயந்திரத்தின் ஆதரவு என்பது முக்கியமானதுதான்; ஆனால், இந்தச் சவால், ‘தமிழ்த் தேசியத்துக்கானது’ மட்டுமல்ல; உலகின் பல தேசங்களும் அரச இயந்திரத்தின் ஆதரவின்றியே வளர்ச்சி கண்டுள்ளன.   

இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பபைப் பொறுத்தவரையில், தமிழ்த் தலைமைகள் தேர்தல் வெற்றிக்காகத் ‘தமிழ்தேசியத்தை’ப் பயன்படுத்துகின்றனவேயன்றி, அர்த்தமுள்ள ரீதியில், ‘தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதில், அக்கறை காட்டவில்லை. இங்கு ‘தமிழ்த்தேசியம்’ பேசும் எந்தக் கட்சி, தத்துவார்த்த ரீதியில் ‘தமிழ்த்தேசியத்தை’ வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது? குறைந்தபட்சம், தமக்கான ஒரு பத்திரிகையையாவது தத்துவார்த்த நோக்கத்துடன் நீண்டகாலமாக நடத்திவருகிறதா?   

‘தமிழ்த்தேசியம்’ பேசும் எத்தனை கட்சிகள், தமக்கான தத்துவ அறிஞர் குழுக்களைக் கொண்டுள்ளன? எத்தனை கட்சிகள் ‘தமிழ்த்தேசியம்’ சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்க முயற்சிகளையோ, ஆதரவையோ, பங்களிப்பையோ வழங்கியிருக்கிறது? ‘தமிழ்த்தேசியம்’ பற்றிய எத்தனை நூல்கள், உள்ளிட்ட பிரசுரங்கள் இங்கு வௌியாகின்றன?    இவற்றை வௌிக்கொண்டுவர, இந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஏதாவது நடவடிக்கை எடுக்கின்றனவா? 

‘தமிழ்த்தேசியம்’ பற்றிய பொது உரையாடல், வாதப்பிரதிவாதங்கள் எவ்வளவு தூரம் நடத்தப்படுகின்றன? குறைந்தபட்சம் இவற்றையாவது, இந்தக் கட்சிகள் செய்கின்றனவா?   
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X