2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க தான் எமக்கான தீர்வா?

Gopikrishna Kanagalingam   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காணப்பட்டுவந்த அரசியல் நெருக்கடி, மேலோட்டமாகத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கும்வரை, இப்பிரச்சினை தொடருமென்பது வெளிப்படையாக உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், நிலையானவை என்று அர்த்தப்படுத்த முடியாது.  

ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து காணப்பட்ட தேசிய அரசாங்கம், சு.கவின் வெளியேற்றத்தால் உடைந்து போனாலும், அவ்வாறு உடைவதற்கு முன்னரே, அவ்வரசாங்கம் மீது அதிகபட்சமான விமர்சனங்கள் காணப்பட்டன. ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற, கேலிக்கூத்தான அரசியல் மாற்றம் இடம்பெற்றிருக்காவிட்டால், பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் பட்சத்தில், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனித்து அறுதிப் பெரும்பான்மையைப் பெறுமென்று தான் எதிர்பார்க்கப்பட்டது.  

இத்தனைக்கும், மஹிந்த காலத்தில் காணப்பட்ட தவறுகளையும் குற்றங்களையும் குற்றச்சாட்டுகளையும் மோசடிகளையும் மக்கள் மறந்துவிடவில்லை. மாறாக, அவற்றையெல்லாம் இல்லாது செய்யப்போவதாகக் கூறிவந்த அரசாங்கக் காலத்திலும் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றதோடு, நாட்டின் தலைமைத்துவம் தொடர்பில், உறுதியான நிலைமையொன்று இல்லை என்ற பார்வையும் காணப்பட்டது. ஜனாதிபதியாக சிறிசேன வருவதற்கு, முக்கியமான பங்களிப்பை வழங்கிய தமிழ் மக்களில் ஒரு பகுதியினர், ஒரு கட்டத்தில், “மஹிந்தவின் காலத்தில் சிறிதளவு அபிவிருத்திகளாவது நடந்தன” என்று சொல்லுமளவுக்குத் தான், நிலைமை காணப்பட்டது.  

எது எவ்வாறு இருந்தாலும், சட்டப்படியான, அரசமைப்புக்கு அமைவான அரசாங்கமொன்று இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழுமையான குழப்பங்களையும் தீர்ப்பதற்கு, பொதுத் தேர்தல் ஒன்று தான் வழியென்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், 52 நாள்கள் நீடித்த கேலிக்கூத்தான “அரசாங்கத்தை” தொடர்ந்து, நாட்டின் நிலைத்தன்மையை ஏற்படுத்திய பின்னர் தான், அவ்வாறான தேர்தலுக்குச் செல்லுதல் பொருத்தமானது. இந்த நிலையில், புதிதாக ஆட்சியமைத்திருக்கிற ஐ.தே.க தான், இப்பிரச்சினைகளுக்கான தீர்வா என்ற கேள்வியை எழுப்புதல் அவசியமானது.  

ஏனெனில், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவோ அல்லது மைத்திரிபால சிறிசேனவோ தீர்வில்லையென்பது, ஓரளவுக்குத் தெளிவானது. அந்த நிலைமையை அவர்கள், அந்த 52 நாள்களில் தெளிவாகவே காண்பித்துவிட்டார்கள். இப்படியிருக்கையில், பிரதான கட்சிகளில் அடுத்ததாக இருப்பது, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தான். அண்மைய அரசியல் குழப்பங்கள், பலவீனமாக இருந்த ஐ.தே.கவையும், சிறிதளவுக்குப் பலப்படுத்தியிருக்கின்றன. எனவே தான், ஐ.தே.கவைத் தீர்வாக எண்ணுவதற்கான சூழலொன்று ஏற்பட்டிருக்கிறது.  

ஆனால், உண்மையில் பார்க்கப் போனால், ஐ.தே.கவின் தற்போதைய கட்டமைப்பு, உண்மையான செழிப்பையும் அபிவிருத்தியையும் கொண்டுவருவதற்கான விருப்பையோ அல்லது திறனையோ கொண்டிருக்கிறதா என்பது சந்தேகமே. ரணில் மீது, அண்மைய பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை, அப்படியே மீண்டும் முன்வைக்கத் தேவையில்லை. ஆனால், தனது கட்சியை, வெற்றியை நோக்கி வழிநடத்தும் திறனை அவர் கொண்டிருக்கிறாரா என்பது, முக்கியமான சந்தேகமே.  
அவர் மீதான விமர்சனங்கள் ஒரு பக்கமாகவிருக்க, அவர் பதவி விலகினால் கூட, இப்பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா என்பது, அதற்கடுத்த முக்கியமான விடயம். ஏனெனில், அடுத்தகட்டத் தலைவர்களென, சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, ஹர்ஷ டி சில்வா, அகில விராஜ் காரியவசம் போன்றோர் உள்ளனர். இவர்களும், போதியளவு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்பது, இங்கு முக்கியமான கேள்வி.  

இதில், ரவி கருணாநாயக்க மீதான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் அனைவரும் அறிந்தன. ஜனாதிபதி சிறிசேனவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐ.தே.கவின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில், இவரும் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்ட ஒருவர், ஜனாதிபதியின் அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகளுக்கெதிரான போராட்டங்களில் முக்கியமான பங்கை ஆற்றினார் என்பது, ஐ.தே.கவின் மீதான கேள்விகளை எழுப்புகிறது. அத்தோடு, பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு, அக்கட்சி எந்தளவுக்குத் தயாராக இருக்கிறது? ஐ.தே.க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஆதரவு வீழ்ச்சியடைந்தமைக்கு, பிணைமுறி மோசடி தான், பிரதான காரணியாக அமைந்தது. தங்களது பிரதான சர்ச்சையைத் தீர்த்துக்கொள்ளவே அக்கட்சி தயங்குகிறது என்பது, அக்கட்சி மீதான கேள்விகளை எழுப்புகின்றது.  

அகில விராஜ் காரியவசம், வளர்ந்துவரும் தலைவராக இருந்தாலும், ரணிலுடன் நெருக்கமான ஒருவராகக் கருதப்படுகிறார். ஆகவே, ரணிலைத் தாண்டிய ஐ.தே.க என்று வரும் போது, அகில விராஜ் எந்தளவுக்குப் பொருத்தமானவர் என்ற கேள்வி இருக்கிறத. அத்தோடு, அவருக்கு எந்தளவுக்குத் தலைமைத்துவ அனுபவம் இருக்கிறது என்பதுவும், இன்னொரு முக்கியமான கேள்வியாக உள்ளது.  

மக்களிடத்தில் ஆதரவுபெற்ற ஒருவராக, சஜித் கருதப்படுகிறார். ஆனால், அவர் மீதான சந்தேகங்கள், இன்னமும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, தன்னை அவர் முழுமையாக நிரூபித்துவிட்டாரா என்ற கேள்வி முக்கியமானது.  

இதில் இன்னொரு விடயமாக, இலங்கையில் இருக்கின்ற ஊடக வலையமைப்பொன்றின் கைப்பொம்மையாக சஜித் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. குறித்த வலையமைப்புக்கு (அல்லது அவ்வலையமைப்பின் தலைவருக்கு), ரணிலைப் பிடிக்காது என்பதாலேயே, தலைமைத்துவம் கொண்ட ஒருவராக சஜித் காண்பிக்கப்படும், அது வெறுமனே ஒரு விம்பமே என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும்.   

சஜித் மீதான அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல, சஜித்தும் இன்னொரு முக்கியஸ்தருமான ஹர்ஷ டி சில்வாவும் அண்மையில் நடந்துகொண்டிருந்தனர். இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றி, ஜனாதிபதியுடன் முரண்பட்டு, தனது பதவியிலிருந்து விலகிய முகுந்தன் கனகே, குறித்த வலையமைப்பின் தலைவர் தொடர்பாகவும் அவ்வலையமைப்புத் தொடர்பாகவும், தனது டுவிட்டர் கணக்கில் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இலங்கையின் அரசியல் நெருக்கடியின் பின்னணில் அவர்களே இருந்தனர் என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவருடைய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், சமூக ஊடக வலையமைப்புகளில், இந்தக் குற்றச்சாட்டு, ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றிருந்தது.  

ஆனால், குறித்த டுவீட்டில், ஐ.தே.கவினதோ அல்லது அக்கட்சி முக்கியஸ்தர்களினதோ டுவிட்டர் கணக்குகள் தொடுக்கப்படாமல் இருந்த போதிலும், சஜித் பிரேமதாஸவும் ஹர்ஷ டி சில்வாவும், அவருக்குப் பதிலளித்து, அவருடைய குற்றச்சாட்டுப் பொய்யானது என்று குறிப்பிட்டனர். அதில் சஜித், குறித்த வலையமைப்பைப் புகழந்து, அதை நியாயப்படுத்தியிருந்தார். அவர்களுடைய இந்த நிலைப்பாடுகள், தனிப்பட்ட கருத்துகளாக இருக்கலாம். ஆனால், குறித்த வலையமைப்பின் பிடியில் அவர்கள் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை மேலும் அதிகரிக்கவே இவை வழிவகுத்தன.  

“இல்லை, இல்லை. ஊடகங்களை அவர் நியாயப்படுத்துகிறார்கள்” என்று கூறப்படக்கூடும். ஆனால், ரணிலின் முன்னைய பிரதமர் பதவிக் காலத்தில், ஊடகங்கள் மீது கடுமையான பிரசாரங்களை ரணில் முன்வைத்திருந்தார். சில சந்தர்ப்பங்களில், ஊடகப் பிரதானிகளின் பெயர்களைக் கூறி, அவர்கள் பதவி விலக வேண்டுமென்றெல்லாம் பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அப்போதெல்லாம், ஊடகங்களை இவர்கள் நியாயப்படுத்தியதில்லையே?  

எனவே தான், ரணிலுள்ள ஐ.தே.கவும் பிரச்சினையாக இருக்கிறது; ரணிலில்லாத ஐ.தே.கவும் பிரச்சினையாக இருக்கிறது. இவ்வாறு, பிரதான கட்சிகள் அனைத்துமே, சந்தேகத்துக்குரியனவாக இருக்கும் போது, மக்கள் என்ன செய்வது என்பது தான், இங்குள்ள கேள்வியாக இருக்கிறது. மூத்த தமிழ்த் தலைவரான தந்தை செல்வா தெரிவித்த, “தமிழர்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்பதை மாற்றி, “இலங்கையர்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தான் சொல்ல முடிகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X