2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 மே 20 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் உச்சம் பெற்றிருந்த தருணத்தில், தமிழ்த்
தொலைக்காட்சியொன்றின், அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த
ஆயுத இயக்கமொன்றின் தலைவர் ஒருவர், வெளியிட்ட கருத்தோடு, இந்தப் பத்தியை
ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்.

 ''...தம்பி பிரபாகரனின் தமிழீழத்துக்கான அர்ப்பணிப்புப் பெரியது;
நாங்களும், தமிழீழத்தை இலக்காகக் கொண்டே ஆயுதங்களைத் தூக்கினோம். ஆனால்,
ஆயுதத்தால் இலக்கை அடைய முடியாது என்று உணர்ந்த போது, அதைக்
கைவிட்டோம்...'' என்று அந்தத் தலைவர் கூறினார்.

அப்போது, அவரது இயக்கம், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டோர்
தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் அந்த இயக்கத்தின் பெயரும் உண்டு. அந்த
இயக்கம், வவுனியாவில் நிலைகொண்டிருந்த தருணத்தில், அரங்கேற்றிய ஆயுதவழி
வன்முறைகளின் நேரடிச் சாட்சிகள், இன்றும் உயிர் வாழ்கின்றார்கள்.

பின்னரான தருணமொன்றில், அந்த ஆயுத இயக்கம், தமிழ்த் தேசிய
கூட்டமைப்புக்குள் கலந்துவிட்டது. அந்த இயக்கத்தின் தலைவர், கடந்த
நாடாளுமன்றத்தில் உறுப்பினராகக் கூட இருந்தார். எதிர்வரும் தேர்தலிலும்
போட்டியிடுகிறார்; தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய தலைவர்களில்
ஒருவராகவும் இருக்கிறார்.

இப்போது, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சிங்கள
'YouTube' தளம் ஒன்றுக்காக வழங்கிய நேர்காணல் தொடர்பில், கவனத்தில்
கொள்ளலாம். அந்த நேர்காணல் வெளியாகி, சில நாள்களின் பின்னர், தமிழ்த்
தொலைக்காட்சியொன்று, பேட்டியின் பாகங்களை வெட்டி ஒட்டி, திரித்த
மொழிமாற்றத்துடன் வெளியிட்டது. குறிப்பாக, ''தமிழீழ விடுதலைப் புலிகளின்
ஆயுதப் போராட்டத்தைத்  தவறு'' என்று, சுமந்திரன் கூறியிருக்கிறார்
என்பதுதான், சர்ச்சைகளின் ஆரம்பம். ஆனால், அந்தப் பேட்டியில், ''ஆயுதப்
போராட்டத்தை, நான் ஆதரிக்கவில்லை'' என்றுதான், சுமந்திரன்
குறிப்பிட்டார்; எந்தவொரு தருணத்திலும், ஆயுதப் போராட்டத்தைத் தவறு என்று
அவர் கூறியிருக்கவில்லை.

வெட்டி ஒட்டிய பேட்டியின் கட்டம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சில
மணித்தியாலங்களில், டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,
சுமந்திரனுக்கு எதிரான முதலாவது கண்டன அறிக்கையை வெளியிட்டார். அத்தோடு
ஆரம்பித்த அறிக்கைகளின் போராட்டம், இன்னும் நின்றபாடில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, புளொட் அமைப்பின்
தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈறாக, சி.வி. விக்னேஸ்வரன், சுரேஷ்
பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'கருணா அம்மான்' என்கிற வி.
முரளிதரன், சதாசிவம் வியாழேந்திரன் என்று, கிட்டத்தட்ட தமிழ் அரசியலில்
இருக்கும் பெரும்பான்மையானோர், சுமந்திரனுக்கு எதிராக அறிக்கையை
வெளியிட்டும், ஊடக சந்திப்புகளை நடத்தியும் கருத்து வெளியிட்டு
விட்டார்கள்.

கடந்த வாரத்தின் நடுப்பகுதியில், சுமந்திரனின் நேர்காணல் தொடர்பிலான
சர்ச்சைகளுக்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை,
ஓரளவுக்கு முடிவொன்றை எழுதியிருக்கின்றது. அதாவது, '...குழப்பத்தை
ஏற்படுத்தும் நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சுமந்திரன்
நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கின்றார்..' என்று,
சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். இதற்கு மேலும், கூட்டமைப்பின்
பேச்சாளர் பதவியை, சுமந்திரனிடம் இருந்து பறிக்க வேண்டும்; அவரைக்
கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று விடுக்கப்படும் அறிக்கைகள்,
அரங்காற்றுகைகள் எதுவும் எடுபட வாய்ப்பில்லை.

சுமந்திரனைச் சுற்றி, கடந்த வாரங்களில் எழுந்த சர்ச்சை, இரண்டு
காரணங்களால் நிகழ்ந்தது. முதலாவது, தேர்தல் விருப்பு வாக்குச் சண்டை.
அடுத்தது, தமிழ்த் தேசியத்தின் காப்பாளர்கள் அல்லது, தரநிலை அரசியல்
சார்ந்தது..

ஆயுதப் போராட்டத்தில், நம்பிக்கையில்லை என்கிற கருத்தைச் சுமந்திரன்,
தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்த நாள் முதல் கூறிவருகிறார். அதாவது,
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிய, 2010ஆம் ஆண்டு முதல் அவர்
கூறி வருகின்றார். அதற்காக அவர், விமர்சனங்களையும்
எதிர்கொண்டிருக்கின்றார்.

இப்போது, அறிக்கையை வெளியிட்ட சுமந்திரனது கட்சிக்காரர்கள்,
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் உள்ளிட்டவர்கள், ஒரே
மேடையில் இருக்கும் போதே, ''ஆயுதப் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை; அது
எதிர்காலத்துக்கான தெரிவு அல்ல'' என்று சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
அப்போதெல்லாம், இந்த அறிக்கைப் போர் வீரர்களுக்கு, அந்தக் கருத்துகள்
பிரச்சினைக்கு உரியதாகத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு சுமந்திரனின்
கருத்துகளைப் பெரும் சர்ச்சையாக்க வேண்டிய தேவை, தேர்தல் விருப்பு
வாக்கைக் கருத்தில் கொண்டு எழுந்திருக்கின்றது. ஏனெனில், தோல்விப் பயம்
என்பது, அவர்களைப் பெரும் அரங்காற்றுகைகளைச் செய்ய வைக்கின்றது.

கூட்டமைப்பின் ஆரம்பத்திலும், அதன் பெரு வெற்றியிலும் விடுதலைப்
புலிகளின் பங்கு கணிசமாக இருந்திருக்கின்றது. கூட்டமைப்பு
ஆரம்பிக்கப்படும் தருணத்தில், புளொட் இயக்கத்தையும் உள்வாங்குவது
தொடர்பில் பேசப்பட்டது. ஆனால், புளொட் இயக்கத்தின் தலைவரான
சித்தார்த்தன், ''என்னுடைய இயக்கம், அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குவதால்,
புலிகளின் பின்புலத்துடன் தோற்றுவிக்கப்படும் கூட்டமைப்போடு, இணைய
முடியாது'' என்று, அந்தப் பேச்சுகளை முன்னெடுத்தவர்களிடம் கூறி, விலகிக்
கொண்டிருந்தார். அவர், புலிகள் அழிக்கப்படும் வரையில், கூட்டமைப்பில்
இணைந்திருக்கவில்லை. அதன் பின்னரேயே, கூட்டமைப்புக்குள் வந்தார்;
பேரவைக்குள்ளும் வந்தார்.

சித்தார்த்தன், ஆயுதங்களால் இலக்கை அடைய முடியாது என்று கைவிட்டு,
ஜனநாயக(!) அரசியலுக்குத் திரும்பியவர்களில் ஒருவர். அவரால், ஆயுதப்
போராட்டத்தை, இன்று ஆதரிக்க முடியாது. அப்படியான நிலையில், ஆயுதப்
போராட்டத்தில் என்றைக்கும் நம்பிக்கை கொண்டிருக்காத ஒருவர், அதை ஏற்க
முடியாது என்று கூறுவது, எவ்வாறான சிக்கல் என்று, சித்தார்த்தன்
வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், ஆயுதத்தால் இலக்கை அடைய முடியாது என்று
கூறும் சித்தார்த்தன், அவரது இயக்கம், ஆயுதங்களைப் புலிகள் உள்ளிட்ட
சகோதர இயக்கங்கள் மீதும், தமிழ் மக்களின் மீதும் திருப்பிய
வரலாற்றையெல்லாம், இலகுவாக் கடந்து நின்று, ஆயுதப் போராட்டம் குறித்த
வகுப்பைத் தமிழ் மக்களுக்கு எடுக்க நினைக்கின்றார்.

தமிழ்த் தேசிய போராட்டக் களம், அஹிம்சைப் போராட்டக் கட்டங்களைக் கடந்தே,
ஆயுதப் போராட்டங்களுக்குள் நுழைந்தது. நாற்பது வருடங்களாக, அதற்குள் நிலை
கொண்டது. அதுபோல, முள்ளிவாய்க்கால் முடிவுகளோடு, ஆயுதப் போராட்டங்களின்
கட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. அதுதான், உண்மை. ஆயுதப்
போராட்டங்களின் கட்டத்தில், இன்றைக்கு யாரும் இல்லை.

அப்படியான நிலையில், அடுத்த கட்டங்கள் குறித்த சிந்தனையை நோக்கி
நகர்வதுதான், அரசியல் அறம். அந்த அறத்தை உரையாடுவதும் அவசியமாகின்றது.
அஹிம்சைப் போராட்டங்களை, மக்களைத் தவிர்த்துக் கொண்டு, தலைவர்கள்
முன்னெடுக்கவில்லை. அங்கும், மக்களின் பங்களிப்புத்தான் அதிகமாக
இருந்தது. ஆயுதப் போராட்டத்திலும், அதுதான் நிகழ்ந்தது.
மக்களுக்காகத்தான் போராட்டமே இடம்பெற்றது. மக்களின் பங்களிப்போடுதான்,
நிகழ்ந்தாக வேண்டும்.

இன்றைக்கு அந்த மக்கள், அடுத்த கட்டங்களை நோக்கிச் சிந்திக்கிறார்கள்.
ஆயுதப் போராட்டங்கள், தொடர்பிலான வரலாறு மக்களுக்குத் தெரியும்;
கூட்டமைப்பின் வரலாறும், மக்களுக்குத் தெரியும்; அதை யாரும் கற்றுத்தர
வேண்டியதில்லை.

கூட்டமைப்புக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பது, விருப்பு வாக்குகளுக்கான
அரங்காற்றுகை என்பதும் மக்களுக்குத் தெரியும். தகுதியற்ற, ஆளுமையற்ற
வேட்பாளர்களை முன்னிறுத்திக் கொண்டு, கூட்டமைப்பு ஆடிக்கொண்டிருப்பது,
ஒருவிதத்தில் அயோக்கியத்தனமான ஆட்டமே. அதில், ஆயுதப் போராட்டத்தைத்
தாங்களே தோள்களில் சுமந்து கொண்டிருப்பதாகக் காட்டிக்கொண்டு, ஆடும்
ஆட்டத்தை, மக்கள் இரசிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படியானவர்களை,
தேர்தல்களில் மக்கள் கவனித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே உண்டு.

தமிழ்த் தேசியத்தின் காப்பாளர்களாகத் தங்களை வரிந்து கொண்ட தரப்புகள்
வெளியிடும் தரநிலை அறிக்கைகள், பெரும் குழப்பகரமானவை. தமிழ் மக்கள் பேரவை
ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில், 'தமிழ்த் தேசியத்தில், தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் சிவில் சமூக அமையமுமே உண்மையான
அக்கறையுள்ள அமைப்புகள்' என்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரநிலை
அறிக்கையொன்றை வெளியிட்டார். இன்றைக்கு, பேரவை தொடர்பில் நிலைப்பாடுகளை,
அவர் மாற்றிக் கொண்டுவிட்டார். சித்தார்த்தனை, ஆயுதக் குழுவின் தலைவராகக்
குறிப்பிட்டு விமர்சிக்கின்றார். பேரவைக்குள் சித்தார்த்தனோடு
இருக்கவும், 'எழுக தமிழ்' மேடைகளில் ஏறவும், அவரால் முடிந்திருக்கின்றது
என்பது, அண்மைக்கால வரலாறுதான்.

தமிழ்த் தேசிய அரசியலில், 'தூய்மைவாதிகள்' என்கிற அடிப்படைகளைக் கொண்டு
சுமக்கும் தரப்புகள், எப்போதுமே இருந்திருக்கின்றன. ஆனால், உண்மை
என்னவென்றால், அரசியலில் தூய்மைவாதத்துக்கு வேலை இருப்பதில்லை. அரசியல்
என்பது, சந்தர்ப்பங்களைக் கையாளும் வித்தை; இராஜதந்திரம். ஆனால்,
தூய்மைவாதம் பேசும் தரநிலை வழங்குநர்கள் யார் என்று பார்த்தால்,
அவர்களுக்கும் கடந்த கால, கறுப்பு வரலாறுகள் உண்டு. அவற்றை, மக்கள்
கண்டும் வந்திருக்கிறார்கள். அவற்றை மறைத்துக் கொண்டும், தங்களுக்கு
வெள்ளையடித்துக் கொண்டும் புதிய வரலாறுகளை எழுதி, தங்களைப் புனிதர்கள்
ஆக்கலாம் என்று யோசிப்பதெல்லாம் அபத்தமே.

சுமந்திரன், தன் மீதான விமர்சனங்கள், சர்ச்சைகளின் வழியாகத் தமிழ்த்
தேசிய அரசியலில், மேல் எழுந்து வந்தவர். இந்தச் சர்ச்சைகளின் வழியாகவும்
அதையே அவர் நிகழ்த்தி இருக்கின்றார். இந்தச் சர்ச்சைகளைத்
தோற்றுவித்தவர்களுக்கு, அது பலனளிக்குமோ இல்லையோ தெரியாது; ஆனால், அது
சுமந்திரனுக்கு நிச்சயம் பலனளிக்கும். அதை எதிர்வரும் காலங்களும்
காட்சிகளும் பதிவு செய்யும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X