2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணி விடுவிப்பு; பொருத்து வீடு; காடழிப்பு

புருஜோத்தமன் தங்கமயில்   / 2017 ஜூலை 26 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் 613 ஏக்கர் காணிகளையும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதியிருக்கின்றார்.  

இந்தக் காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதற்கான இணக்கம் ஜனாதிபதி, இராணுவத் தளபதி(கள்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் கடந்த மே மாதத்தில் காணப்பட்டிருந்தது. அதில், ஒரு சில பகுதிகளைக் கூட இதுவரை விடுவிக்காத நிலையில், மக்களின் போராட்டம் இன்று 143 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது.  

கடந்த வாரம் கேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவிக்கவுள்ளதாகப் பெரியளவில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், கலந்து கொள்வதற்காக மீள்குடியேற்றத்துறை அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதனும் அங்கு சென்றார்.   

ஆனால், அந்தக் காணிகள், “பொதுமக்களின் காணிகள் அல்ல; காட்டுப்பிரதேசம்” என்பது அங்கு வந்த அமைச்சருக்கு கேப்பாபுலவு மக்களினால் தெளிவுபடுத்தப்பட்டது. அதையடுத்து, அந்த நிகழ்வு கைவிடப்பட்டது.   

மீள்குடியேற்றத்துறையைக் கையாளும் அமைச்சர் ஒருவருக்கோ, அந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் அரச அதிகாரிகளுக்கோ இராணுவத்தினால் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட காணிகள் உண்மையிலேயே பொது மக்களின் காணிகள் இல்லை என்பது தெரியாமல் இருப்பது வேடிக்கையானது.   

தொடர் போராட்டங்களில் ஈடுபடும் மக்களை, அலைக்கழித்து களைப்படைய வைக்கும் திட்டங்களின் போக்கிலானது.   

காணி மீட்புப் போராட்டங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மூர்க்கம் பெற்றன. அதுமுதல், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் பல தடவைகள் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.   

அந்தச் சந்திப்புகள் அனைத்திலுமே, இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளில் 90 சதவீதமானவற்றை விடுவிக்க முடியும் என்றே ஜனாதிபதியினாலும், இராணுவத் தளபதிகளினாலும் கூறப்பட்டு வந்திருக்கின்றன.   

காணிகள் விடுவிப்புக்கான கால அவகாசமும் இராணுவத்தினால் கோரப்பட்டு, திகதிகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வழங்கப்பட்ட கால அவகாசங்களில் அநேகமானவை முடிந்துவிட்டன.  

இன்னொரு பக்கம், வடக்கு - கிழக்கின் தட்ப வெப்ப நிலைக்கு சிறிதளவிலும் பொருத்தமில்லாத பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கின்றது.   

பொருத்து வீடுகளுக்கு எதிராகப் பெரும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்ற நிலையில், மீள்குடியேற்றத்துறை அமைச்சு, மக்களை நோக்கி, பிரசாரத் தொனியில் பேச ஆரம்பித்திருக்கின்றது.   

அந்தத் தொனியைக் கண்டுகொள்ளாது மக்கள் விலகும்போது, மிரட்டல் தொனியில் விடயங்களைக் கையாள ஆரம்பித்திருக்கின்றது. அதாவது, “பொருத்து வீட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், வீடுகளே இல்லாது போகும்” என்கின்றது அரசாங்கம். போரினால் வீடுகளை இழந்துவிட்டு, கொழுத்தும் வெயிலில் தகரக் கொட்டில்களின் கீழும் குடிசைக்குள்ளும் எட்டு ஆண்டுகளைத் தாண்டியும் அல்லற்படும் மக்களை நோக்கிய இந்த மிரட்டல் தொனி, மனிதாபிமானங்கள் தாண்டியது.  

 பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களைக் காட்டி, தமது பொக்கற்றுகளை நிறைத்துக் கொள்ளும் புல்லுருவிகளுக்கு ஒப்பான நிலையொன்றையோ அரசாங்கம், பொருத்து வீட்டுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்ற எத்தனிக்கின்றது.  

வடக்கு - கிழக்கில் போரினால் வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை மீள அமைப்பதற்காக வழங்கப்பட்ட அதிக பட்சத் தொகை 8.5 இலட்சம். ஆனால், பொருத்து வீடொன்றுக்கு செலவாகும் தொகையாகத் தெரிவிக்கப்படுவது 16 தொடக்கம் 22 இலட்சம். ஒரு வீட்டுக்காக 22 இலட்சத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக இரு வீடுகளை சிமெந்தினால் அமைப்பதற்குப் பங்கிட்டுக் கொடுக்க முடியும் என்பது தமிழ் மக்களினதும் கூட்டமைப்பினதும் வாதம். இந்த வாதத்தின் நியாயத்தன்மை தொடர்பில் எவராலும் கேள்வியெழுப்ப முடியாது.  

இந்த இழுபறி ஆரம்பித்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்குடியேற்றத்துறை அமைச்சு ஆரம்பித்துவிட்டது.   

இந்த நிலையிலேயே, பொருத்து வீடுகளை அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார்.  

கடந்த இரு ஆண்டுகளாக இலங்கை அரசியலில் நம்பிக்கையான ஒரு சில மாற்றங்களாவது நிகழ்ந்துவிடும் என்கிற நம்பிக்கையோடும், அதீத பொறுமையோடும் காத்திருப்பவர்கள் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும்.   

எனினும், அவர்களின் பொறுமையை தென்னிலங்கை அதிக தருணங்களில் சோதித்திருக்கின்றது. அப்போதும் அவர்கள் இருவரும் தம்மை நோக்கியும் தமிழ் மக்களை நோக்கியும் ‘பொறுமை பொறுமை’ என்று சொல்லிக் கொண்டார்கள்.  

புதிய அரசியலமைப்பினூடு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு பகுதியளவான தீர்வொன்றையாவது சட்ட ரீதியாகப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பதில், ஆரம்பத்திலிருந்து உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காக, அவர்கள் பொறுமையின் அடிவேரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள்.   

ஆனால், புதிய அரசியலமைப்பு என்கிற ஒன்றை மாத்திரம் தமிழ் மக்கள் பிரதானமாகக் கொண்டு விடயங்களைக் கடந்து சொல்லவோ, பொறுமை பேணவோ முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.  

அதாவது, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பதில், அரசியல் கைதிகளில் விடுதலை, வீட்டுத் திட்டங்களில் பேணப்பட வேண்டிய அடிப்படைத் தார்மீகம், மற்றும் வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பில் ஒவ்வொரு கணமும் கவனம் செலுத்த வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு.   

ஏனெனில், அந்தப் பிரச்சினைகளின் தாக்கத்தினால் ஒவ்வொரு நாளும் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். நிலைமை அப்படியிருக்க, புதிய அரசியலமைப்பு என்கிற ஒரு விடயத்தை மாத்திரம் முன்வைத்துப் பொறுமையோடு இருக்க முடியாது. ஆட்சி மாற்றத்துக்குப் பங்களித்த மக்கள், நல்மாற்றங்கள் சிலவற்றையாவது எதிர்பார்த்தார்கள்.  

 ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அளவிலிருந்து மிகவும் குறைந்த அளவிலான மாற்றங்களே நடைபெறுகின்ற போதும், மக்கள் பொறுமையின் எல்லையைக் கடப்பது இயல்பானது. கடந்த ஏழு மாத காலமாக வடக்கு ஒட்டுமொத்தமாகப் போராட்டங்களினாலேயே நிறைந்திருக்கின்றது.  

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச நாடுகளின் தூதுவர்களும் இலங்கைக்கு வருகின்றார்கள். வடக்கைப் பிரதான களமாகவும் கொள்கின்றார்கள். ஆனால், மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கான நியாயப்பாடுகளை, இலங்கை அரசாங்கத்திடம் அழுத்தமாக வலியுறுத்தும் அளவுகளைக் காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுமையைப் பேணுமாறு வலியுறுத்தும் தன்மையே அதிகரித்துள்ளது.   

இதுவே, இன்னும் இன்னும் மக்களை எரிச்சலின் பக்கத்துக்குத் தள்ளியிருக்கின்றது. அந்த எரிச்சலின் வெம்மையைச் சம்பந்தனும் சுமந்திரனும் உணர்ந்து கொள்ளாமல் இல்லை. அதன்போக்கில்தான், பொறுமையை வலியுறுத்துவதிலிருந்து மெல்ல நகர்ந்து, அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை மெல்லிய அளவில் காட்டியிருக்கின்றார்கள். 

அதையே, சம்பந்தனின் ஜனாதிபதிக்கான கடிதமும் சுமந்திரனின் பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிரான வழக்கும் எடுத்துக் காட்டுகின்றன.  

நிலைமைகள் இவ்வளவோடு நிற்கவில்லை. மாறாக, தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் திட்டங்களையும் அரசாங்கம் மீண்டும் நிறைவேற்ற எத்தனிப்பதை முல்லைத்தீவின், கூழாமுறிப்பு காடழிப்பு சம்பவங்கள் முன்கொண்டு வருகின்றன.  

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதை தமிழ் மக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மீள்குடியேற்றம் என்பது தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறதோ, அதேமாதிரியான திட்டங்களினூடே முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.   

அப்படிப்பட்ட நிலையில், ஒரு நிலப்பரப்பின் அடிப்படைகளையே அழிக்கும் வகையிலான காடழிப்பினூடு, அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதை ஏற்பதில் சிக்கல் இருக்கின்றது. அதுவும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு ‘மீள்குடியேற்றம்’ என்கிற அடையாளம் இன்னும் சிக்கலானது.  

முல்லைத்தீவின் காடுகள் எரியூட்டப்பட்டு, அழிக்கப்படுகின்றமை அத்துமீறலின் வடிவம். ஏற்கெனவே, முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அதையே, முஸ்லிம் மக்களை, முன்வைத்தும் முன்னெடுக்க முயல்வது, இன ரீதியான சிக்கல்களை வடக்கில் மீண்டும் மீண்டும் விதைக்கும் போக்கிலானது.  

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது தெளிவான உரையாடல்களோடும் சரியான வழியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதையே, வடக்கு மாகாண சபையும் வலியுறுத்தியிருக்கின்றது. ஆனால், வடக்கு மக்களின் முழுமையான அங்கிகாரத்தோடு தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையின் குரலைப் புறந்தள்ளி, கொழும்பிலிருக்கும் அமைச்சர்கள் முடிவுகளை எடுப்பது நிலைமைகளை சிக்கலாக்கியிருக்கின்றது. அது, சந்தேகத்தின் அளவை அதிகப்படுத்தவே செய்யும்.  

நில அமைப்பைக் கருத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எல்லாமும் தீய விளைவுகளையே கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன. அவ்வாறானதொரு நிலையை, போரினால் சிதைத்து போயிருக்கின்ற வடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால், அதன் பாதிப்பை அந்தப் பகுதி மக்களே எதிர்கொள்வார்கள்.   

அப்படியான நிலையில், அந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதைக் கணக்கெடுக்காது கடக்க முடியாது. அது, விளைவுகளை இன்னமும் மோசமாக்கவே செய்யும். இப்படியான இடத்தில், சம்பந்தனும் சுமந்திரனும் கூட இன்னும் வேகமாக அழுத்தம் வழங்கும் முகமாக அரசாங்கத்தை நோக்கிச் செயற்பட வேண்டும். அது, காலத்தின் தேவை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .