2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -156)

அரசும் மதமும் 

ஒரு நாட்டை ஆள்வதற்கான உரிமையை, ஓர் அரசன் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்பது, அரசாட்சி பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று.

மேற்குலகைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துதற்கான ஏற்புடைமை பற்றிய நியாயப்படுத்தல், பல நூற்றாண்டுகளுக்கு, “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமை” என்ற ரீதியில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தது.

அதாவது, அந்த உரிமை இறைவனால் நேரடியாக அரசனுக்கு வழங்கப்பட்டது என்று நம்பப்பட்டது. இதனால் அரசன், இறைவனுக்குக் கீழ்ப்பட்டவனாகவும், மக்களுக்கு மேற்பட்டவனாகவும் கருதப்பட்டான். ஆகவே அவன், இறைவனைத் தவிர வேறெவர்க்கும் பொறுப்புடையவன் அல்லன் என்றும் கருதப்பட்டான். 

பழங்காலத் தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசன் “இறையனார்”, “கோ”, “கோன்” என்று விழிக்கப்பட்டான். ஆகவே அரசனை, இறைவனாக அல்லது இறைவனின் ரூபமாகக் காணும் மரபிருந்தது என்று சிலர் குறிப்பிடுவர். 

நிற்க, ஐரோப்பாவைப் பொறுத்தவரை “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமையினூடாக” அரசாட்சி நியாயப்படுத்தப்பட்டதானது, கத்தோலிக்கத் திருச்சபைக்கும், இறைவனின் முகவராகக் காணப்பட்ட போப்பாண்டவருக்கும், அரசின் மீது அதீத செல்வாக்கை வழங்கியது. இதன்படி, ஐரோப்பிய மத்தியகாலங்களில் போப்பாண்டவர், பல கிறிஸ்தவ இராச்சியங்களின் மன்னர்களைப் பதவிநீக்கிய வரலாறும் உண்டு. இந்தக் காலப்பகுதியில், மதமும் திருச்சபையும், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதோடு, அரசைக் கட்டுப்படுத்தத்தக்க பலத்தை, மதமும் திருச்சபையும் கொண்டிருந்தன. 

இந்தப்போக்கில் முதல் தத்துவார்த்த மாற்றம், 16ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியோடு தொடங்கியது. அரசனுக்கும் திருச்சபைக்குமான முதல் முறிவு, இங்கிலாந்தின் எட்டாவது ஹென்றி மன்னன், தன்னுடைய மனைவி கத்தரீனை விவாகரத்துச் செய்ய போப்பாண்டவர் மறுத்ததில் ஏற்பட்டது. அம்முடிவை ஏற்க மறுத்த மன்னன், தன்னுடைய தலைமையில் இங்கிலாந்துக்கான தனித்த இங்கிலாந்து திருச்சபையை ஸ்தாபித்தான். அத்தோடு நிற்காது, தன்னுடைய அதிகாரத்தின் இரும்புக் கரம் கொண்டு, இங்கிலாந்துத் திருச்சபையை நாடு முழுவதும் பரப்பினான். இதனால் கத்தோலிக்கர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தம்முடைய நம்பிக்கையைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பியவர்கள், இங்கிலாந்தை விட்டு பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்தார்கள். மக்களின் நம்பிக்கையில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற எண்ணம் துளிர்விட்ட முக்கிய சந்தர்ப்பம் இது எனலாம். 

இதன் பின்பு 17, 18ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பா, அறிவொளி எழுச்சியைக் கண்டது. ஜோன் லொக், ஜோன் ஜக் ரூஸோ ஆகியோரிடமிருந்து, சமூக ஒப்பந்தக் கோட்பாடு என்ற தத்துவம் பிறந்தது. அரசாட்சியின் ஏற்புடைமை, சமூகத்தின் ஒப்புதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டது.

தனிமனித உளச்சான்று, சுதந்திரம் போன்ற கருத்துகள் பலம்பெற்றன. தொடர்ந்து வந்த ஃபிரெஞ்சுப் புரட்சியோடு ஏற்பட்ட மொன்டெஸ்க்யு, வோல்டேயர், டிடெறோ உள்ளிட்டவர்களது தத்துவார்த்த எழுச்சி, மதம்சாரா அரசின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அதாவது, திருச்சபையின் கட்டுப்பாட்டிலிருந்து அரசு விலக்கப்பட்டது. அரசு, முற்றிலும் மதம் சாராததானது.

அரசில் திருச்சபைக்கு நேரடிப் பங்கு எதுவுமில்லை என்ற அடிப்படையிலான மதச்சார்பற்ற ஃபிரெஞ்சு தேசிய-அரசு உருவானது. இதே சமகாலத்தில்தான், பிரித்தானிய கொலனித்துவத்தை விரட்டியடித்தபின், அமெரிக்கா என்ற அரசும் தோற்றம் பெற்றது. ஃபிரெஞ்சுப் புரட்சியில் பிறந்த தத்துவங்களின் ஆதிக்கத்தில், அமெரிக்காவும் மதம்சாரா அரசாக, அமெரிக்க அரசமைப்பின் உருவாக்கத்தோடு தோற்றம் பெற்றது.

அரசு என்ற ஆட்சி அதிகாரத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதற்கு, பல நூற்றாண்டுகால போராட்டம் அவசியப்பட்டிருக்கிறது. மதம்சாரா அரசு என்பது, மதங்களுக்கு எதிரான அரசு என்று அர்த்தமல்ல. அரசுக்கு மதமில்லை; அது நடுநிலையானது; பக்கச்சார்பற்றது என்று அர்த்தம்.

சுதந்திர இலங்கையில் அரசும் மதமும் 

இலங்கையைப் பொறுத்தவரை, கொலனித்துவத்திலிருந்து நாம், தேசிய-அரசு என்ற கட்டமைப்பைச் சுவீகரித்துக்கொண்டோம்.

1947இல் பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் முறையின்பாலான சோல்பரி அரசமைப்பை நாம் பெற்றுக்கொண்ட போது, அது மதம்சாரா இலங்கைத் தேசிய-அரசை ஸ்தாபிக்கும் வகையிலான கட்டமைப்பைக் கொண்டிருந்தது.

ஆனால் அடுத்த கால் நூற்றாண்டுக்குள் இந்த நிலை மாறியது. இனங்களை, மதங்களைக் கடந்த ஒற்றைத்தேசிய அடையாளம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, பெரும்பான்மை மக்களது இன-மத அடையாளத்தை, இலங்கை அரசு பூசிக்கொண்டது.

மத்தியகால மேற்குலகில், அரசுகள் மீது கத்தோலிக்க திருச்சபை கொண்டிருந்த ஆதிக்கத்தோடு ஒப்பிடத்தக்க வகையில், இலங்கை அரசின் மீது, பௌத்த மகா சங்கத்தின் ஆதிக்கம் வலுப்பெறத் தொடங்கியது. 

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவோடு ஆரம்பித்த இந்த ஆதிக்கம், அதன் உச்ச நிலையை, ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சியில் அடைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. அரசியலுக்கும் மதத்துக்குமான உறவு மிக நெருக்கமானது, அதேவேளை மிகச் சிக்கலானது.

ஏனெனில், ஒன்று மற்றொன்றுக்குப் பயன்தரும் பலமான கருவியாகிறது. இங்கு, எது எதைக் கட்டுப்படுத்துகிறது என்பது முக்கியம்.

சுதந்திர இலங்கையின் மூன்றாவது பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல, “அரசியலில் பிக்குகள் ஈடுபட்டால், அவர்களது தலையில் தார் பூசுவேன்” என்று முழங்கியிருந்தாரென, தன்னுடைய நூலில் பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார். அதாவது, பௌத்த துறவிகள் அரசியல் ஈடுபடுதல் என்பது, பௌத்த ஒழுக்கத்துக்கு முரணானது என்பதை, சேர் ஜோன் கொத்தலாவல காரணமாகக் கோடுகாட்டியிருந்தார். 

ஆனால், பண்டாரநாயக்கவோடு இந்த நிலை மாறியது. “பண்டா-செல்வா” ஒப்பந்தத்தை எதிர்த்துப் பிக்குகள் போராடிய போது, அங்கு கைகட்டி நின்ற பண்டாரநாயக்க, அதன் பின்னர் “பண்டா-செல்வா” ஒப்பந்தத்தைக் கைவிட்டதானது, இங்கு அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்பதை உணர்த்துவதாக அமைந்தது. இதுபோன்ற நிலையில்தான், தற்போது ஜே.ஆரும் இருந்தார்.

ஜே.ஆரின் முடிவுக்கு வலுத்த எதிர்ப்பு 

சிறில் மத்யூவை பதவி விலக்கியதால், பிரச்சினை முடிந்துவிடவில்லை. ஜே.ஆரின் ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை முன்மொழிவுக்கு, சிறில் மத்யூவிடமிருந்து வந்த எதிர்ப்பை விடப் பலமான எதிர்ப்பு, பௌத்த பிக்குகளிடமிருந்து வந்தது.

சர்வகட்சி மாநாடு என்பது, அரசியல் கட்சிகளுக்கானது. அதில் மகா சங்கத்தினரையும் மதத்தலைவர்களையும் ஜே.ஆர் தான் உள்ளீர்த்திருந்தார். அதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. 

இன்று ஜே.ஆர் சிக்கியிருந்த நிலைக்கு, ஜே.ஆர் தான் காரணம். இதனை, இரண்டு விதமாகப் பார்க்கலாம். 

ஒன்று, ஜே.ஆர் இப்போது எழுந்திருந்ததை விரும்பியிருந்தார். அதாவது, தான் கொடுக்க முயன்றாலும், பௌத்த பிக்குகள் தடுத்துவிட்டார்கள் என்ற விம்பத்தை ஜே.ஆர் உருவாக்க விளைந்திருக்கலாம். அந்தப் பெருந்திட்டத்தின் அடிப்படையிலேதான் அவர், சர்வகட்சி மாநாட்டில் பிக்குகளைப் பங்குபெறச் செய்திருந்தார்.

இரண்டு, நல்லெண்ணத்துடன் ஜே.ஆர் செயற்பட்டிருந்தாலும், அவரது நல்லெண்ணமே அவருக்கு எதிராக அமைந்திருந்தது. தான் நல்லெண்ணத்துடன் அமைத்த வியூகத்தில், தானே சூழ்நிலைக்கைதியாகச் சிக்கிக்கொண்டார்.

இதில் எந்தப் பார்வையை நாம் எடுத்துக்கொண்டாலும், அது பௌத்த பிக்குகளுக்கு, இலங்கை அரசில் அதீத செல்வாக்கை வழங்குவதாகத்தான் அமைகிறது.

இங்கு பௌத்த பிக்குகள் எதிர்த்தது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்மொழிவையோ, இந்தியாவினுடைய முன்மொழிவையோ அல்ல; மாறாக, ஜே.ஆரினுடைய முன்மொழிவை.

கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத ஜே.ஆர், அந்த எதிர்ப்புக்குக் கீழிறங்கிச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அதற்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் காரணமாகச் சொன்னதுதான், இதில் நகைப்புக்குரிய விடயம். 

கைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு

அதன்படி முன்மொழிவுகளைக் கைவிடவும், சர்வகட்சி மாநாட்டைக் கைவிடவும் தான் முடிவெடுத்திருப்பதாக, 1984 டிசெம்பர் 26ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜே.ஆர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வௌியிட்ட அரசாங்க அறிவிப்பொன்றில் “சர்வகட்சி மாநாட்டின் பெரும்பான்மையினரின் பார்வையைப் பிரதிநிதித்துவம் செய்த முன்மொழிவுகள் சில, 19 டிசெம்பர் 1984 அன்று, அமைச்சரவையின் முன்பு கலந்துரையாடலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவை தொடர்பில், மீண்டும் 1984 டிசெம்பர் 26 அன்றும் கலந்துரையாடப்பட்டன. இதேவேளை, டிசெம்பர் 21ஆம் திகதி வரை அரசாங்கக் குழுவோடு குறித்த முன்மொழிவுகளிலுள்ள அரசாங்கக் கட்டமைப்பு முறை, அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றின் விவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, இது பற்றி மேலதிகமாகக் கலந்துரையாடுவதால் பயனில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஆகவே இந்த முன்மொழிவுகள் பற்றிக் கலந்துரையாடுவதாலோ அல்லது முடிவெடுப்பதோ எந்தப்பயனையும் தரப்போவதில்லை என்று, அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அமைச்சரவையானது, அதிமேதகு ஜனாதிபதியிடம் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவருடைய சகல முயற்சிகளையும் எடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளதுடன், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் வேண்டிக்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

சர்வகட்சி மாநாடு என்ற நாடகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் என்பது எடுக்கப்பட்டதோ இல்லையோ, “பயங்கரவாத ஒழிப்பு” தொடர்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கை, வடக்கில் டிசெம்பர் 30ஆம் திகதி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. 

மீண்டும் சங்கடத்தில் அமீர்

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்லிங்கம், கடும் அதிர்ச்சியிலிருந்தார்.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சர்வகட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருந்தார். இது, ஜே.ஆர் அரசாங்கத்தின் காலங்கடத்தும் செயற்பாடு என்று அக்குழுக்கள் எடுத்துரைத்த போது, அதை மீறியும் அவர் இந்த செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தார்.

ஒரு வருட முயற்சி இப்படி ஒன்றுமில்லாமற் போனது நிச்சயம் துரதிர்ஷ்டவசமானதே. மிகுந்த ஏமாற்றத்துடன் அமிர்தலிங்கம் சென்னை சென்றிருந்தார்.

அமிர்தலிங்கத்தைப் பொறுத்த வரையில், இனி ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அது அரசியல் தற்கொலைக்குச் சமமானதாகும். பேச்சுவார்த்தை மூலமான தீர்வு முயற்சி தோல்வி கண்டநிலையில், அவர் முன் அதிக தெரிவுகள் இருக்கவில்லை.

மீண்டும் தமிழகம் சென்றிருந்த அமிர்தலிங்கம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த சத்தியாக்கிரகப் போராட்ட அறிவிப்பு, வடக்கிலும் கிழக்கிலும், அதுவும் இளைஞர்களிடையே, அதிருப்தியையும் விசனத்தையும் சினத்தையும்தான் தோற்றுவித்தது.

“நாங்கள், பல முறை இந்த சத்தியாக்கிரகத்தைப் பார்த்துவிட்டோம். ஒரு கோவிலுக்கு முன்னாள் உட்கார்ந்துகொள்வார்கள்; மங்கையற்கரசி அமிர்தலிங்கம் பாட்டுப்பாடுவார். பிறகு மாலையானதும், பழச்சாறு குடித்துவிட்டுக் கலைந்துவிடுவார்கள். இது ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்பது, அமிர்தலிங்கத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க விமர்சனமாகும்.

இப்போது அமிர்தலிங்கத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்தது, இந்தியாவும் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியுமே.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .