2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது.

கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென்றவர்களின் தவறா, முண்டியடித்து நிவாரணத்துக்குச் செல்வதற்கான நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தின் தவறா?

இலங்கை அரசாங்கம், மிகவும் மோசமான முறையில் இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைக் கையாளுகிறது. கொவிட்-19 பெருந்தொற்றை விட, பொதுத்தேர்தலே அரசாங்கத்துக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதிகாரத்துக்கான அவா, அப்பாவிகளைக் காவு கொள்கிறது. கொரோனா வைரஸிடமிருந்து தப்பி, பட்டினியால் மரணிக்கும் கதைகளை, நாம் கேட்க நேருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதைப் போர் என்று அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களை அந்தரிக்க வைத்துள்ளது. இப்போது, நாம் பேசும் கதை, எல்லோரும் அறிந்த கதை. இந்நிகழ்வு, அடுப்பெரியா வீடுகள் எத்தனை, பாலறியாக் குழந்தைகள் எத்தனை, உணவறியாக் குடும்பங்கள் எத்தனை போன்ற கேள்விகள் பதிலின்றி, அரசாங்கத்தைச் சுட்டியபடியே உள்ளன. இந்தக் கேள்விகளைக் கேட்போர் யாருமில்லை. சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கை நிறைக்கையில், இந்தக் கேள்விகள் அர்த்தம் இழக்கின்றன.

'கொரோனா வைரஸ் பரவுகைக்கு எதிரான போர்' என்று, ஊடகங்கள் உரக்கக் கத்துகின்றன. தமிழ் ஊடகங்களும் இந்தக் கோஷத்தில் இணைகின்றன.

இலங்கையில் வறுமை ஒழிப்புப் பற்றி, அரசியல்வாதிகளிடம் பேசுவதில் பயனில்லை. ஏனெனில், 'பொருளாதார நெருக்கடிதான் வறுமைக்குக் காரணம்' என்று, சில அரசியல்வாதிகள் காற்றில் கத்திவீசுகிறார்கள். இன்னும் சிலர், 'இது உலகப் பிரச்சினை' என்று நழுவுகிறார்கள். இன்னும் சிலர், 'முதலாளிகளை அரசு பிணையெடுத்தால், வறுமை ஒழியும்' என்று வாதிடுகிறார்கள்.

வறுமையின் கொடுமையை உணராதவர்களிடம், வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம். இன்னொருபுறம், கொரோனா வைரஸ் தான், வறுமையை உருவாக்கியது என்ற மாயையையும், எல்லோரும் சேர்ந்து உருவாக்குகிறார்கள். மொத்தத்தில், பிரச்சினையின் அடிப்படைகளை ஆராயாமல், 'மடைமாற்றும்' வேலைகள் வெற்றிகரமாக நடக்கின்றன. வறுமையும் அரசியலாகிறது; எதிர்வரும் தேர்தலுக்கான பயனுள்ள பிரசாரக் கருவியாகிறது.

இன்று, இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, நேர்நிலையாக நின்று எதிர்கொண்டாக வேண்டும். அதற்குத் தகுதியான தலைமையோ, அரசியல் பண்பாடோ இல்லை; அதை வளர்த்தெடுப்பதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை.

இலங்கை அரசியலின் வங்குரோத்து நிலையின் உச்சபட்ச வெளிப்பாடே, இன்று நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இலங்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றாகவன்றி, அரசியல் ஆயுதமாகவே வலிமையுடன் வெளிப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளைப் பொது வெளிக்குக் கொண்டு வந்துள்ளது. நீண்டகாலமாக, மக்கள் நலன்சாரா அரசியல் பொருளாதாரத்தின் கோர விளைவுகளையே மக்கள், இன்று எதிர் நோக்குகிறார்கள். 1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை, இலங்கை அறிமுகப்படுத்தியது முதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. கடந்த பத்தாண்டுகளில், அவை உச்சம் தொட்டுள்ளன.

கொரோனா வைரஸும் எமது வாழ்க்கை முறையையும் பொருளாதார முறையையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. கேள்வி கேட்காமல், போராடாமல் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற உண்மையை, உரக்கச் சொல்லியுள்ளது.

நாம் கேள்வி கேட்க வேண்டியது, இந்த அரசாங்கத்தை மட்டுமல்ல, மக்களைத் தொடர்ந்து பட்டினியாய் வைத்திருக்கும் பொருளாதார முறையையும் சேர்த்துத்தான். மக்கள் விழிப்படைவதற்கான இன்னொரு வாய்ப்பை, இந்தக் கொவிட்-19 தொற்று தந்துள்ளது. நாம் போராடாவிடின், கொரோனா வைரஸிடமிருந்து தப்பி, வறுமையால் இறப்பதைத் தடுக்க இயலாமல் போகலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X