2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர்.

இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது, அவரின் தந்திரோபாயம் என்று, சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். தனது தலையில், தானே மண்ணை வாரிக் கொட்டுவதில் என்ன தந்திரோபாயம் இருக்கப் போகிறது என்றுதான் தெரியவில்லை.

முரண்நகை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் ஏழாவது நபர் ரணில் விக்கிரமசிங்க. இவரைப் போல், முன்னிருந்த எந்தத் தலைவரும், தமது யானைக் கட்சியை வழிநடத்துவதற்கு, ஒரு ‘பாகன்’ ஆக,  இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்திருக்கவில்லை. 

இந்த நாட்டைப் பலமுறை ஆட்சி செய்த, ஒரு மிகப் பெரும் கட்சியின் தலைவராக இருந்து கொண்டே, அந்தக் கட்சி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதளவு இயலுமையற்றவராக இருப்பது, ரணில் விக்கிரமசிங்கவின் மிகப்பெரும் பலவீனமாகும்.

ஜனாதிபதித் தேர்தலொன்றில், ரணில் களமிறங்கினால் தோற்றுவிடுவார் என்று, அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களே அச்சப்படுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் “ரணில் வேண்டாம்” என்கின்றனர். இத்தனை பலவீனமாக இருக்கும் ஒருவர், தனது கட்சிக்குள் ‘பலம்’ காட்டிக் கொண்டிருப்பது பெரும் முரண்நகையாகும்.

தலைமைத்துவ வறுமை

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குரிய பலமான வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத்தான் அந்தக் கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மையானோர் பார்க்கின்றனர். ஐ.தே.கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களில் பலரும், சஜித் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், ரணில் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தங்களுக்குப் பலன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போலவும் தெரிகின்றது. அதனால்தான், சஜித் பிரேமதாஸவை முன்னர் கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்து வந்த, ரவி கருணாநாயக்க போன்றோர், இப்போது அடக்கி வாசிக்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பிடும் போது, சஜித் பிரேமதாஸ மிகவும் ‘பாரம்’ குறைந்தவராவார். 

ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத் திறன், அவருக்குள்ள சர்வதேச உறவு, அவரின் மொழியாளுமை, அனுபவம் போன்றவற்றின் முன்னால், சஜித் பிரேமதாஸ மிகவும் சின்னவராகவே தெரிகின்றார். ஆனாலும், ரணிலின் ‘தோல்வி முகம்’ என்பது, ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் களமிறங்க முடியாதளவுக்கு அவரைப் பலவீனமானவராக்கி வைத்திருக்கிறது. 

இன்னொருபுறம், ரணிலுக்கு மாற்றீடாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யார் உள்ளார் என்பதும், மிகப் பெரியதொரு கேள்வியாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு வகையான தலைமைத்துவ வறுமை நிலவுகின்றமையே அதற்குக் காரணமாகும். 

இந்த வறுமை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், ரணில் விக்கிரமசிங்க என்பதுதான் இங்கு கவலைக்குரிய செய்தியாகும். அந்தக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர்கள் எவரையும் ரணில் விக்கிரமசிங்க, தட்டிக்கொடுத்து வளர்த்து விடவில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனது தலைமைத்துவத்துக்கு யாரும் போட்டியாக வந்து விடக் கூடாது என்று ரணில் நினைப்பது, அதற்குரிய பிரதான காரணமாகும். அதன் விளைவைத்தான், இப்போது ஐக்கிய தேசியக் கட்சி அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.

சஜித் பொருத்தமானவரா?

ரணில் விக்கிரமசிங்க ‘தோல்வி முகம்’ கொண்டவர் என்பதற்காகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அந்தக் கட்சிக்குள் பலரும் விரும்புகின்றனர் என்கிற யதார்த்தத்தையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும். 

சஜித் பிரேமதாஸவை, அந்தக் கட்சிக்குள் பெரும்பாலானோர் ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்புகின்றனர் என்பதற்காக, ஜனாதிபதி வேட்பாளருக்கான ‘பத்து’ப் பொருத்தங்களும் சஜித் பிரேமதாஸவுக்கு அச்சொட்டாக  இருக்கிறது என்று பொருள் கொள்ள முடியாது. 

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்றவர்களில் சஜித் ‘பரவாயில்லை’ என்கிற இடத்தில்தான் உள்ளார். 

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ என்கிற பெரும்  ஆளுமையின் பின்னணியுடன் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் மோதுவதற்கான பலம், சஜித் பிரேமதாஸவுக்கு இருக்கின்றதா என்கிற கேள்வியும் அரசியலரங்கில் உள்ளது.

சிறுபான்மை வாக்குகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் இல்லாமல், எவரும் வெற்றிபெற முடியாது என்கிற யதார்த்தத்தைப் பலரும் பேசுகின்றனர். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெரும்பான்மையான வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றமை போல், வருகின்ற தேர்தலில் யாராலும் பெற முடியுமா என்கிற கேள்வியும் உள்ளது.  

சிறுபான்மை இனத்தவர்களின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் கவனிக்கையில், இம்முறை ஐக்கிய தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளரையே தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதான அரசியல் கட்சிகள் ஆதரிக்கும் என ஊகிக்க முடிகிறது.  

ஆனால், இம்முறை சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அளிப்பார்களா என்கிற கேள்வியும் உள்ளது. 
குறிப்பாக, முஸ்லிம் மக்கள், தமது அரசியல் கட்சிகளின் தீர்மானங்களுக்கு இணங்கச் செயற்படுவார்களா என்பது முக்கியமான கேள்வியாகும்.   

ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம்களும்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ‘முஸ்லிம்களின் கட்சி’ என்கிற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. முஸ்லிம்களுக்கு அந்தக் கட்சிக்குள், அப்படியோர் இடமும் மரியாதையும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலையில்லை. 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை விடவும் பலமடங்கு அநியாயங்களும் அக்கிரமங்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முஸ்லிம்களின் ஆதரவுடன்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது. 

அந்த வகையில் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை விடவும், மஹிந்த ஆட்சியிலிருந்த போது, ஒப்பீட்டு ரீதியாகத் தமக்குப் பெரிய அநியாயங்கள் நடந்து விடவில்லை என்று, முஸ்லிம்களில் ஒரு தரப்பார் வாதிடத் தொடங்கியுள்ளனர். 

மறுபுறம், “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் மஹிந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு அக்கிரமம் இழைத்துள்ளன. எனவே, இந்தத் தரப்பில் இருந்து களமிறக்கப்படும் எவருக்கும் வாக்களிப்பதில்லை. இந்த இரண்டு தரப்பினருக்கும் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், மூன்றாவது தரப்பாகக் களமிறங்கும் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்போம்” என்றும், முஸ்லிம்களில் மற்றொரு தரப்பு, இப்போதே தீர்மானித்துக் கூறிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால், இம்முறை முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லைப் போலவே தெரிகிறது. முஸ்லிம்களின் வாக்குகள், அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகும் நிலைதான் ஏற்படும். 

தமிழ்க் கட்சிகள் என்ன செய்யும்?

இதேவேளை, தமிழ் மக்களும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர். இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொருட்டு, புதிய அரசமைப்பைக் கொண்டு வரப்போவதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. 

ஆனாலும், இந்தப் பழியை ஜனாதிபதி மைத்திரியின் தலையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தும். “புதிய அரசமைப்பை உருவாக்குவதற்குத் தடையாக மைத்திரிதான்  இருந்தார்” எனக் கூறியே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாக்குக் கேட்கும். 

ஆனால், இதேகுற்றச்சாட்டைக் கூறி, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு, தமிழ்க் கட்சிக்கு கேட்க முடியாது. அப்படிக் கூறுவது தமிழ் மக்களிடம் எடுபடாது. 

எனவே, கோட்டாவைச் சாடி, “கோட்டா ஒரு போர்க் குற்றவாளி” என்றும், “தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தவர் கோட்டா” என்றும் பழி கூறித்தான், தமிழ் மக்களின் வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்குத் திருப்பிவிடும் வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்ய வேண்டும். அதற்கான அத்திபாரங்கள் இடப்படுகின்றமையை, இப்போதே காணக்கிடைப்பதை வைத்தே, இந்த ஊகம் பதிவு செய்யப்படுகிறது.

கட்சியா, பதவியா?

இப்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய எக்கச்சக்க பிரச்சினைகளும் சவால்களும் இருக்கத்தக்க நிலையில்தான், தமது கட்சி சார்பான வேட்பாளரை அறிவிப்பதில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இத்தனை இழுத்தடிப்புகளைச் செய்து, மக்களைச் சலிப்பூட்டி வருகிறார். 

ஐக்கிய தேசியக் கட்சியில், தான் வகிக்கும் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ரணில் விக்கிரமசிங்க எதையும் செய்வார்;  செய்யாமல் விடுவார் என்கிற பார்வையும் பேச்சும் அரசியலரங்கில் உள்ளது; அது பொய்யுமில்லை. 

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, தனது கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைக்கும் நிலைக்கு, ரணில் விக்கிரமசிங்க செல்வாரா என்கிற கேள்விக்கான பதிலை, ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கும் ஆள், யார் என்கிற தீர்மானம் நிச்சயம் சொல்லிவிடும்.

சிலவேளை, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்க அறிவிக்காமல் வேறொரு நபரை அறிவித்து விட்டால் மட்டும், ரணிலின் தலைமைப் பதவிக்கு பிரச்சினைகள் எதுவும் வந்து விடாது என்று, சொல்லி விடவும் முடியாது. 

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படாமல் விட்டால், சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் போர்க்கொடி உயர்த்துவார்கள். 

சிலவேளை, வேறு அணி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால், ஐக்கிய தேசியக் கட்சி சுக்குநூறாக உடையும். ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறு உடையும் என்பதை, மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்கெனவே ஊகித்துச் சொல்லியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளைச் சமாளிப்பதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதிலும் மிகத் திறமைசாலி என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

அவரின் தலைமைத்துவத்துக்கு மிகப் பெரும் சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவற்றைத் துணிந்து நின்று, எதிர்கொண்டு வென்றவர் என்பதையும் இங்கு பதிவுசெய்ய முடியும். 

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதை, ஒரு தலைவராக அவரால் தடுக்க முடியவில்லை. ‘நேற்று முளைத்த’ பொதுஜன பெரமுன கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற பெருவெற்றியை வைத்தே,   ஐக்கிய தேசியக் கட்சியின் மிக மோசமான வீழ்ச்சி என்ன என்பதைக் கண்டு கொள்ள முடியும். 

எனவே, கட்சி முக்கியமா? அல்லது கட்சித் தலைவர் பதவி முக்கியமா? என்பதை ரணில் விக்கிரமசிங்கதான் முடிவு செய்ய வேண்டும். 

‘யானை’யை இழந்து விட்டு, அங்குசத்தை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாகன், ‘மாடு’ மேய்ப்பதற்கும் லாயக்கற்றவன் என்பதை, ரணில் புரிந்து கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி, தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்’ எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், தனது கருத்துகளை அண்மையில் பதிவு செய்திருந்தார். அதனை, இங்கு சற்றுச் சுருக்கி வழங்குகின்றோம்.

1. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், ஐ.தே. கட்சி இழுபறிப்படுவது, அக்கட்சி தடுமாறுகிறது;தவறி விழவும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது. ஏற்கெனவே, சுதந்திரக்கட்சி வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவிட்டது. ஐ.தே. கட்சியில் சாய்ந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது தடுமாறி நிற்கிறது. இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலைமையால், ஐ.தே. கட்சி தோல்வியைத் தனது தோளில் சுமக்க, த.தே. கூட்டமைப்பு மேலும் செல்வாக்கிழக்க, முஸ்லிம் கட்சிகள் சிதைய வாய்ப்புண்டு. ஆயினும், ஐ.தே. கட்சி, சில வருடங்களில் மீளக் கட்டி எழுப்பப்படும். த.தே. கூட்டமைப்பு அழிந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல் அழியாது. ஆனால், முஸ்லிம் அடையாள அரசியல் கட்சிகள் சிதைந்தால், முஸ்லிம் அடையாள அரசியல் முகமழிந்து போய்விடும் ஆபத்து உள்ளது.

2. ஐக்கிய தேசியக் கட்சி மூன்று வேட்பாளர்களை மானசீகமான அடிப்படையில் முதன்மைப் போட்டியாளர்களாக முன்நிறுத்தியுள்ளது. இவர்கள் சஜித், கரு, ரணில் ஆகியோராவார்.  இவர்களில் எவர் வேட்பாளரானாலும் கட்சியின் ஒருமித்த ஆதரவு எவருக்கும் கிடைக்காது. பிரிவினை ஆழமாகி உள்ளதால், ஏதோ ஒரு தரப்பு முன்நிலையாகும் வேட்பாளருக்கு எதிராக, இரகசியமாக இயங்கும் அல்லது தேர்தல் வேலைகளில் ஈடுபடாதிருக்கும்.

இந்த நிலையால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இரண்டு முஸ்லிம் கட்சிகளுமே, மோசமாகப் பாதிக்கப்படும். இதனை இரண்டு கட்சிகளும் நன்குணர்ந்துள்ளன. ஆகவே, வெற்றி பெற வாய்ப்புள்ள பொதுஜன பெரமுனவுடன் எந்த முஸ்லிம் கட்சியாவது முதலில் இணையுமா, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பை இழக்க விரும்பாமையால் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சியுடன்தான் இருக்குமா என்பது இன்றைய முக்கிய கேள்வியாகும்.

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் ஒன்றாக இருப்பது போல், வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், அவை எதிரிக் கட்சிகளாகவே இருக்கின்றன. ஐ.தே. கட்சியின் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக மக்கா சென்று உம்றா செய்தாலும், அங்கு ஒன்றாக நின்ற புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டாலும் பரஸ்பரம் அக்கட்சிகளின் தலைவர்கள்,  உறுப்பினர்களின் மனங்களில் பதிந்திருக்கும் வேற்றுமையையும் போட்டி மனப்பான்மையையும் எவரும் மறைக்க முடியாது. இதனை, அண்மையில் ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல் நிரூபிக்கிறது.

2015ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்போடு ஊறிக் கிடந்த ரிஷாட் பதியுதீன் முதலில் வெளியேறி, மைத்திரியுடன் இணைந்தார். மஹிந்த தரப்புடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த ரவூப் ஹக்கீம் தாமதமாகி மைத்திரியுடன் சேர்ந்தார்.

கடந்த வாரம் பசில் ராஜபக்‌ஷவும் ஹக்கீமும் இரகசியமாகப் பேசியதாக ஊடகங்களில் செய்தி கசிந்திருந்தது. இச்சந்திப்பு, இம்முறை முதலில் மஹிந்த தரப்புடன் ஹக்கீம் இணையும் ஏற்பாடா? அல்லது என்றென்றைக்குமான நண்பர்களான பசில் - ரிஷாட் ஆகியோர் திட்டமிட்டு ஹக்கீமை இழுத்தெடுக்கும் ஏற்பாடா என்பதும் சிந்திக்கவேண்டியதாகும்.

3. மஹிந்தவின் புதிய வியூகம் என்பது, தானாக கிடைக்கும் சிறுபான்மை வாக்குகளை வரவேற்று மதிப்பளிப்பது. மேற்குலகின் கதைகளைக் கேட்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை கணக்கில் எடுப்பதில்லை; இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களாக சிங்கள மக்கள் நம்பும் முஸ்லிம் அடையாள அரசியல்வாதிகளின் ஆதரவை நேரடியாகப் பெறுவதில்லை என்பதோடு, ஏற்கெனவே தம்மோடு ‘இருந்த’ சிறுபான்மை அரசியல்வாதிகளோடு புரிந்துணர்வுடன் வேலை செய்வது என்பதாக இருப்பதை உள்ளார்ந்து அறிய முடிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--