2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழர் அரசியலும் தமிழ்த் தேசியமும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடுப்பார் கைப்பிள்ளையாகத் தமிழர் அரசியலும் தமிழ்த் தேசியமும்

 தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்

பகுதி - 03

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது, அன்றைய காலத்தின் தேவையால் ஏற்பட்டதொன்று. அதை வெறும் ‘தேர்தல்க் கூட்டாக’ப் பார்ப்பது பொருத்தமானதொரு பார்வையாக அமையாது.  தேர்தலில் ஓர் அணியாக நிற்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான அம்சமாக இருந்தாலும், அதைத்தாண்டி, ‘திம்புக் கோட்பாடுகள்’ அடிப்படையிலான, தமிழ்த் தேசிய அரசியலின் ஒன்றுபட்ட ஜனநாயகக் குரலாக இருப்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை நோக்கம் ஆகும்.  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாகிய சூழலும் காலகட்டமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய சூழலும் காலகட்டமும் அவற்றுக்கான காரணங்களும் வேறுபட்டவை. அரசியலில் அவற்றின் வகிபாகமும் வேறுபட்டதாகவே அமைந்திருந்தது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாகிய போது, தமிழர்களின் அரசியல் பலத்தின் ஏகபோக கூட்டணியாக, அது மாறியிருந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. அதற்குக் காரணம், அன்றைய சூழலில் தமிழ் அரசியலின் மிகப் பலமான, செல்வாக்கான சக்திகள் அதில் ஒன்றிணைந்திருந்தன என்பதே ஆகும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களின் ஏகபோக குரலாக மாறியிருந்ததுடன், அவ்வாறே அடையாளம் காணப்பட்டது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாகிய போது, தமிழர் அரசியலின் ஏகபோகமாகவோ, அதைத் தீர்மானிக்கும், கொண்டு நடத்தும் பலமான சக்தியாகவோ அது இருக்கவில்லை.   

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இரண்டாம் பட்சமான, விடுதலைப் புலிகள் பங்குபெறாத, பங்குபெறுவதைத் தவிர்த்த ஜனநாயக அரசியல் வௌியை நிரப்புவதற்கு, ‘தமிழ்த் தேசியத்தின்’ அடிப்படைகளை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.   

இதன் முக்கியத்துவம் கருதியே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, இதன் உருவாக்கத்தை எதிர்க்கவில்லை. சிலகாலங்களிலேயே அது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஜனநாயக அரசியல் முகமாக, முகவராக மாறியிருந்தது; மாற்றப்பட்டிருந்தது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில், சில மிக முக்கிய மைற்கற்கள் இருப்பதையும் இங்கு கருத்திற் கொள்வது அவசியமாகிறது. அது, எதிரெதிர் துருவங்களாக நின்ற அரசியல் கட்சிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்த ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைத்த மிக முக்கிய சந்தர்ப்பமாகும்.   

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அரசியல் வைரிகள்; அவர்கள் முதன்முறையாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்ட ஒற்றுமைகூட, பலகாலம் நிலைக்கவில்லை.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியதும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தது. அதில் சில பலமான முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் அங்கம் வகித்தாலும், நடைமுறையில் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகவே கருதப்பட்டது.   

மறுபுறத்தில், அரசியலில் ஈடுபட்டுவந்த ஆயுதக் குழுக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), டெலோ, புளோட் என்பன விடுதலைப் புலிகளின் பரம வைரிகளாகவே செயற்பட்டு வந்தன. அத்தோடு, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்பனவற்றோடு, அவற்றுக்கு நல்ல உறவு இருக்கவில்லை. இதற்குக் குறித்த ஜனநாயகக் கட்சிகள், இந்த ஆயுதக் குழுக்களை விரும்பாமையும் மிக முக்கிய காரணமாகும்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்க முயற்சிகளின் போது, ஆயுதக் குழுக்களோடு ஒன்றிணைந்து செயற்படுவதைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைகள் சில விரும்பியிருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், இந்த ஆயுதக் குழுக்கள் செய்து வந்த படுகொலைகள். குறிப்பாக, தமிழ் மக்களிடையே இவை நடத்தி வந்த படுகொலைகளும் வன்முறைத் தாக்குதல்களும் தமிழ் மக்களிடம் கடுமையான கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன.   
இந்தநிலையில், அத்தகைய ஆயுதக் குழுக்களுடன் கைகோர்ப்பது, தமிழ் மக்களால் வரவேற்கப்படுமா என்ற ஐயம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சில தலைமைகளுக்கு இருந்தது.   

இது மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றுபட்ட இந்தக் கட்சிகள், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளில் ஒன்றுபட்டிருந்தாலும் விடுதலைப் புலிகள், தமிழர்களின் ‘ஏக பிரதிநிதிகள்’ என்பதை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.   

இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வலியுறுத்திய வேளையில், “விடுதலைப் புலிகள் தான், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றால், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் யார், அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையா” என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர் ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியதாகவும் இதேபோலவே, டெலோ அமைப்பின் முக்கியஸ்தர் என். ஸ்ரீகாந்தாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் சிலர் பதிவு செய்கிறார்கள்.  

இத்தனை சிக்கல்களையும் சவால்களையும் தாண்டித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. ஆரம்பத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) ஆகிய நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபித்திருந்தன.  

காலவோட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல சவால்களையும் மாற்றங்களையும் சந்தித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு, முதன்முறையாகத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, தேசியப்பட்டியல் ஆசனம் உட்பட 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது.   

அடுத்த மூன்று வருடங்களில் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பால் தமது ஜனநாயக அரசியல் முகவராக உத்தியோகப்பற்றற்ற முறையில் சுவீகரிக்கப்பட்டிருந்தது என்றால் அது மிகையல்ல.  

இந்தக் காலகட்டத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக, ஆனந்த சங்கரி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தன்பால் வைத்துக் கொண்டதுடன், அந்தக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் விலகியது.   

இதன் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, மீள உயிரூட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.   

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் உருவாக்கத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்ததாகப் பலரும் பதிவு செய்கிறார்கள். அந்தத் தேர்தலில், விடுதலைப் புலிகள் நேரடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.  2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்புத் தன்னுடைய வரலாற்றிலேயே, அதிகமாகப் பெற்ற 6.84 சதவீத வாக்குகளையும் 22 நாடாளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.   

அடுத்த தேர்தல் இடம்பெற்ற 2010 இற்குள், நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பு, யுத்தத்தில் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தனித்து இயங்கத் தொடங்கியது.   

2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), டெலோ என்ற மூன்று கட்சிகளாகச் சுருங்கியிருந்தது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமாரோடு செல்லாமல், கூட்டமைப்பிலேயே தொடர்ந்திருந்தார். இது 2010இன் நிலை.   

2010 இலிருந்து இன்று வரை, கூட்டமைப்பின் நிலை இன்னும் மாறியிருக்கிறது. கூட்டமைப்பின் இன்னொரு ஸ்தாபக அமைப்பான ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), கூட்டமைப்பிலிருந்து விலகித் தனித்தியங்கி வருகிறது.   மறுபுறத்தில், அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதியுத்தம் வரையிலும் கூட, இராணுவத்தோடு இணைந்து செயற்பட்டுவந்த புளோட் அமைப்பு, இறுதி யுத்த நிறைவுக்குப் பின்னர் கூட்டமைப்போடு இணைந்து கொண்டது.   இன்று, டெலோ தொடர்ந்து கூட்டமைப்பின் பங்காளியாக இருந்தாலும், டெலோவில் இருந்தும் கூட்டமைப்பில் இருந்தும் பிரிந்து, டெலோ முக்கியஸ்தர்களான ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிங்கமும் தனிக்கட்சியொன்றை அண்மையில் ஆரம்பித்திருக்கிறார்கள்.   

மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்த நீதியரசர். சீ.வி. விக்னேஸ்வரன், தற்போது தனிக்கட்சி அமைத்துச் செயற்பட்டு வருகிறார்.  

டெலோ, புளொட் ஆகியவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தாலும், கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளில், அவர்களால் எந்தளவு தூரம் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.  

இன்றைய சூழலில், நடைமுறை யதார்த்தத்தில் ‘கூட்டமைப்பு’ என்பது, தமிழரசுக் கட்சிதான் என்ற நிலைதான் உண்மை. டெலோவோ புளொட்டோ கூட்டமைப்பில் இருந்து விலகாமல் இருப்பதற்கு, இருக்கக்கூடிய ஒரே நியாயம், கூட்டமைப்பில் இருந்து விலகிய எந்தவொரு கட்சியும் தேர்தலில் பெருவெற்றியை ஈட்டியதில்லை என்பதுதான்.   

ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாகத் தனித்தியங்கி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால், உள்ளூராட்சி மன்றுகளில் சில ஆசனங்களை வென்றதைத் தாண்டி, வெற்றிபெற முடியவில்லை.   

இந்த யதார்த்தம் தான், தமிழரசுக் கட்சி கூட ‘கூட்டமைப்பை’ தனது இஷ்டத்துக்கு கொண்டு நடத்த வழிசமைத்திருக்கிறது. ‘நாடாளுமன்றம் போக வேண்டுமா, நான் சொல்வதைக் கேட்டு அமைதியாக இருந்தால், கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடலாம்; நான் செய்வது பிடிக்கவில்லையா, நீங்கள் விலகிப்போகலாம்’ என்ற ‘நாட்டாமை’ இராஜ்ஜியம், தமிழரசுக் கட்சியால், கூட்டமைப்புக்குள் நடத்தப்படுவது, யாரும் அறியாத பரம இரகசியம் அல்ல.   

தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ்த் தேசியத்தின் ஜனநாயகக் குரலாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வடக்கு-கிழக்கில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மேடை என்ற அளவுக்குச் சுருங்கியிருக்கிறது; சுருக்கப்பட்டிருக்கிறது.  

மறுபுறத்தில், தமிழ்த் தேசியத்தைக் காக்கும் பெயரில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, பல உதிரிக் கட்சிகள் உருவாகியிருக்கின்றன. அவை, பயணிக்கும் வழி தெரியாது, ஆளுக்கொரு திசையில் போய்க்கொண்டிருக்கின்றன.   

இவையெல்லாம் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. தமிழ் மக்களிடையே, தமிழ் அரசியலில் பரப்பில் பலமானதோர் அரசியல் தலைமை இல்லை. அதன் விளைவுதான் இன்று, தமிழர் அரசியலும் தமிழ்த் தேசியமும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.   

தமிழ்த் தேசியம், ஒரு புறத்தில் தாயகம், சுயநிர்ணயம், சுயாட்சி என்பவற்றையும் பேசும்; மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆதரிக்கும். இதில் எது தமிழ்த் தேசியம், இரண்டும் தமிழ்த் தேசியமாக இருக்க முடியாதா, தமிழ்த் தேசியம் என்பது ஒன்றானால், அதனைக் காக்க எதற்கு இத்தனை உதிரிக்கட்சிகள், தலைமை என்பது எப்போதும் ஏகமானதாகத்தான் இருக்க வேண்டுமா? எனப் பல கேள்விகள் இன்று எழுந்துகொண்டிருக்கின்றன.   

தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரலை, நாம் இந்தப் பின்புலத்தில் இருந்துதான் ஆராய வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .