2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் - முஸ்லிம் இனவுறவு: பிள்ளையை கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் அரசியல்

மொஹமட் பாதுஷா   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கு இடையிலான உறவு பற்றி, ஒவ்வொரு பருவகாலத்திலும் பேசப்படுகின்றது.  

குறிப்பாக, தமிழ்பேசும் சூழலில், தமிழர் - முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு பற்றிய கருத்தாடல்கள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.  

உண்மையில், பெரும்பாலான சாதாரண, அடிமட்டத் தமிழ், முஸ்லிம் மக்களிடையே, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித இனமுறுகலும் குரோதமும் கிடையாது.   

இவ்வாறிருக்கையில், அரசியல், மார்க்கம், இயக்கம் ஆகிய பின்னணிகளைக் கொண்ட, இனக் குழுமத்தினரிடையே, மேலும் இனவுறவைப் பலப்படுத்துவதற்காக, உண்மைக்கு உண்மையாக, விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில், சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், பல அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக, இன நல்லிணக்கம் பற்றி, அதிகளவு பேசுவோர், ‘தொட்டிலைத் தாமே ஆட்டிவிட்டோம்’ என்று, நல்ல பெயர் எடுப்பதற்காகவே, ‘பிள்ளையைக் கிள்ளிவிடுகின்றார்கள்’. நடப்பு நிலைவரங்களைத் தொடர்ச்சியாகக் கூர்ந்து நோக்கி வருவோரால், இவ்வாறான செயற்பாடுகளை, இலகுவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

தமிழ் - முஸ்லிம் உறவில், நம்பிக்கை இன்மையை அடிப்படையாகக் கொண்ட தேக்கநிலையில், ஏதாவது ஒரு விரிசல்  இருக்கின்றதென்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இரண்டு முழுமுதல் காரணங்களைக் குறிப்பிடலாம்.   

முதலாவது, ஆயுதக் கலாசாரம்; இரண்டாவது, இன ரீதியான அரசியல் போக்கு ஆகியவையே அவையாகும்.   

இந்த அடிப்படையில், ஆயுததாரிகளும் அரசியல்வாதிகளுமே இதற்குப் பிரதான பொறுப்பேற்க வேண்டிய தரப்பினராக இருக்கின்றனர்.  

தமிழ், முஸ்லிம் உறவு, எல்லா அடிப்படையிலும் (இப்போதிருப்பதை விடச் சிறப்பாக) பின்னிப் பிணைந்ததாக முன்பிருந்தது. மதத்தாலும் இனத்தாலும் வேறுபட்டாலும், பல விடயங்களில் பரஸ்பர ஒற்றுமையும் கலாசார வாழ்வியல் படிமானமும் இன்றுவரையும் இருக்கின்றன.   

இந்த நாட்டின் இறைமையை, முஸ்லிம்கள் பாதுகாத்த சமகாலத்தில், தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்துக்கும் எப்போதும் துணை நின்றிருக்கின்றனர். பெருந்தேசிய அரசியலோடும், தமிழர் அரசியலோடும் பயணித்துக் கொண்டு, சமகாலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கும் பங்களிப்பு வழங்கிய ஒரேயோர் இனம், முஸ்லிம்கள்தான் என்பதை, மறந்து விடக் கூடாது.  

தமிழர்களின் உரிமைகள், நிலைப்பாடுகளுக்கு, முஸ்லிம்கள்  எதிரானவர்கள் என்ற ஒரு பொய்யான தோற்றப்பாட்டை, சில தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்ச் சமூகத்துக்கு மத்தியில் இப்போது ஏற்படுத்தி இருக்கின்றனர். இது மிகத் தெளிவான, அரசியல் அவதந்திரமாகும்.  

தமிழர்களின் ஆயுதப் போராளிகளை, சிலபொழுதுகளில் முஸ்லிம்கள்  காட்டிக் கொடுத்தார்கள் என்றும், விடுதலைப் போராட்டத்துக்குப் பங்களிப்பு வழங்கவில்லை என்றும், வரலாற்றை மறந்த சில கதைகள், அண்மைக் காலமாகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பரப்பப்பட்டு  வருவதைக் கவனிக்கக் கூடியதாகவுள்ளது.   

இந்த இடத்தில், தமிழ்ச் சகோதரர்கள், குறிப்பாக இளைஞர் சமுதாயம், சில விடயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதே அறிவு, முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவசியமாகின்றது.  

முஸ்லிம் அரசியல்வாதிகளில் கணிசமானோர், பெரும்பான்மைக் கட்சிகளோடு பயணித்துக் கொண்டிருக்க, சுதந்திரத்துக்குப் பிறகு, முஸ்லிம் அரசியலானது, தமிழர் அரசியல் சார்பு நிலையைக் கொண்டதாகவும் சமாந்திரமாகவும் பயணிக்க ஆரம்பித்தது. 

இந்தப் புரிதலுக்கும் அந்நியோன்னியத்துக்கும், அப்போதிருந்த முற்போக்கான தமிழ்த் தலைமைகளே, அடிப்படைக் காரணம் எனக் கூறலாம்.   

தமிழரசுக் கட்சியோடு இணைந்து, முஸ்லிம்கள் பலர் அரசியல் கற்றார்கள்; அரசியல் செய்தார்கள்; செனட்டர் மசூர் மௌலானா முதல் எம்.எச்.எம். அஷ்ரப் மட்டுமன்றி, வேறுபலரும் இந்த வழித்தடத்திலேயே பயணித்திருந்தனர்.  

இதேவேளை, முஸ்லிம்களுக்குத் தனிநாடு தேவைப்படவில்லை; அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. இருப்பினும், தமிழர்களின் சுதந்திர தாகத்துக்காகப் பல முஸ்லிம் இளைஞர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடங்கலாகப் பல விடுதலைப் போராட்ட ஆயுத இயக்கங்களில் இணைந்து போரிட்டனர். அவர்களில் பலர், தமிழர்களின் சுதந்திர தாக உணர்வுக்காகத் தமது இன்னுயிரைத் தியாகமும் செய்திருந்தமையை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் மாத்திரம், 35 இற்கும் மேற்பட்டவர்கள், மாவீரர்களாக அறிவிக்கப்பட்டமை, இதற்கு நல்ல சான்று.  

இந்தக் காலகட்டத்தில், குறிப்பாகத் ‘தமிழர் அரசியல்’, ‘முஸ்லிம் அரசியல்’ என இருபக்கங்களில் இருந்தும், நல்ல சமிக்ஞைகள் வெளிப்பட்டதை மறக்க முடியாது. 

இவ்வேளையிலேயே, மூத்த தமிழ் அரசியல்வாதிகள், உயர்ந்த பட்ச நல்லெண்ணத்தை முஸ்லிம்களுக்கு வெளிக்காட்டி, அவர்களது அபிலாஷைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.  

அந்தவகையில், இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.எச். சேகு இஸ்ஸதீன், தனது நூலில், ‘1956ஆம் ஆண்டு, தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாட்டிலும், 1961இல் அக்கட்சியின் ஒன்பதாவது மாநாட்டிலும் அதேபோன்று, 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தமிழர்களைப் போலவே, முஸ்லிம்களுக்கும் ஒரு சுயாட்சி, முஸ்லிம் அரசை நிறுவுவது தொடர்பான முன்மொழிவுகளைத் தாமாகவே முன்வந்து, தமிழ்த் தரப்பு முன்வைத்தது நினைவு கொள்ளத்தக்கது, எனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.   

மறுபுறத்தில், தமிழர்களோடு சேர்ந்து இயங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தனர். “அண்ணன் அமிர்தலிங்கம், தமிழீழத்தைப் பெற்றுத்தரவில்லை என்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்னது, ஒரு வரலாற்று அறிவிப்பாகவும் அமைந்திருந்தது.  

இப்படியாக, ஒரு சமரசத்தோடு, இரு வழிகளிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே, இன விரிசலுக்கான அடித்தளம் இடப்பட்டது எனலாம்.   
அதாவது, எந்தத் தருணத்தில் முஸ்லிம்களை நோக்கி, ‘விடுதலைத் துப்பாக்கி’கள் திரும்பியதோ, அந்த வேளையில்தான், இனநல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்கப்பட்டது. 

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டும், பள்ளிவாசல்களில் பலியெடுக்கப்பட்டுக் கொண்டும் இருந்த வேளையில், தமிழ் அரசியல்வாதிகள் கடைப்பிடித்த அச்சம் கலந்த மௌனவிரதம், ‘இனி இவர்களோடு சேர்ந்தியங்க முடியாது’ என்ற உணர்வுத் தூண்டுதலை, முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியது.  

அதன்பிறகுதான், அஷ்ரப் தலைமையில், புதிய முஸ்லிம் கட்சியொன்று உருவாக்கப்பட்டு, முஸ்லிம்களின் அரசியல், தனித்துவ வழியில் பயணிக்கத் தொடங்கியது. அரசியல் உறவு இல்லையென்ற நிலையும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ் மக்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலையும் ஏற்பட்ட பிறகுதான், சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட அந்நியோன்யம், குறைவடையத் தொடங்கியது.   

இதுதவிர, தமிழர்களின் நியாயமான உரிமைக் கோரிக்கைகளுக்காகவோ, முஸ்லிம்கள் தங்களைத் தனியோர் இனமாக அடையாளப்படுத்த முனைந்த முன்னெடுப்புகளின் காரணங்களாலோ, இவ்விரு இனங்களுக்கும் இடையில், இனவிரிசல் ஏற்படவில்லை. 
அத்துடன், அண்மைக்காலம் வரை, அது மத அடிப்படையிலான முரண்பாடாக, உருமாற்றப்படவும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கின்றது.  

ஆனால், இந்த இனமுறுகல் நிலை இன்னும் தொடர்ந்து, அப்படியே இருப்பதற்கும்  இன உறவு மீளக் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கும் பிரதான காரணம், இரு பக்கங்களிலும் உள்ள சுயலாப அரசியல்வாதிகளும் பிரித்தாளும் பெருந்தேசிய அரசியலும்தான் என்பதை, வலியுறுத்தியும் அடிக்கோடிட்டும் குறிப்பிடாமல் விட முடியாது.   

இப்படியான அரசியல்வாதிகளே பெரும்பாலும், ‘நாங்கள்தான் தொட்டிலை ஆட்டுகின்றோம்’ என்பதை, வெளியுலகுக்குக் காண்பிப்பதற்காக, இரகசியமாகப் ‘பிள்ளையைக் கிள்ளிவிடும்’ கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர்.   

இனவாதத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்ட, அரசியல்வாதிகளின் வயிற்றுப் பிழைப்பு என்பது, தமிழ், முஸ்லிம் பகைமை பாராட்டுதலிலேயே முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றது.  

அதுமாத்திரமன்றி, தமிழர்களுக்குள் ஊருடுவியுள்ள ‘இந்துத்துவா’ போன்ற இயக்கங்களும் முஸ்லிம்களுக்குள் மார்க்கத்தின் பெயர் சொல்லி உருவெடுத்துள்ள, புதுப்புது கொள்கைகளும் இயங்கங்களும், மேற்படி இனஉறவை, விரிசல் நிலையில் வைத்திருப்பதற்கே பெரிதும் முயற்சி செய்து, பங்களிப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பின்னால், பெரும் உள்நாட்டு, சர்வதேச அரசியலும் வணிகமும் இருக்கின்றன.  

ஆனால், இனமுரண்பாடு என்றும் இனவிரிசலை நீக்கி, இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும், நாங்கள் பேசிக் கொள்கின்ற அதேநேரத்தில், இன நல்லிணக்கம் பற்றி, எந்தப் பிரக்ஞையும் இல்லாத மக்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள்.   

அவர்களுக்கு, இனமுரண்பாடு பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளவோ, பழகுவதற்கோ இனமோ மதமோ அரசியல் நிலைப்பாடுகளோ, தடையாக இருப்பதில்லை என்பதே, யதார்த்தமான நிலைமையாகும்.   

முஸ்லிம்களிலும் தமிழர்களிலும் இப்படியான மனநிலையில் உள்ள மக்கள்தான், நாட்டில் அதிகம் எனக் கணிக்க முடிகின்றது. அவர்களுக்கு இனநல்லிணக்கமோ, நல்லுறவுக் கோட்பாடுகளோ அவசியமில்லை. ஏனெனில், அவர்கள் எப்போதும் போல, நல்லுறவாகவே இருக்கின்றார்கள். அன்றாட வாழ்க்கையில் தொடர்புபட்டும், முஸ்லிமும் தமிழனும் ஒருவரை ஒருவர் கண்டு, ஓடிவிடாதவாறும் அனுசரித்து வாழ்கின்றார்கள்.  

அப்துல்லாவின் கடையில்தான் ஐயாதுரை பொருள்களைக் கொள்வனவு செய்வார்; அப்துல்லாவுக்கு வீடுகட்ட ஐயாதுரைதான் அழைக்கப்படுவார். இவர்களுக்கு இடையில் இனம், மதம், அரசியல் சார்ந்த எந்த வாதங்களும் தாக்கம் செலுத்துவதில்லை. இவ்வகையாக, இலட்சக்கணக்கான தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டில் இருக்கின்றார்கள்.  

இது, ‘பகைமறப்புக் காலம்’ என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல, ‘உண்மையிலேயே இன முரண்பாட்டினாலும் போராலும் இலங்கைச் சமூகங்கள், ஆழமாகப் பிளவுபட்டு, துருவங்களாகி உள்ளன என்பது யதார்த்தமே. அதனை மீறிச் செல்வதற்கான வழிமுறைகளே, இன்று அவசியமாகின்றன. அதற்குத்தான், ‘பகைமறப்பு’ச் செயற்பாடுகளை, மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது, என்கிறார்.   

மேற்குறிப்பிட்டவாறு, இனநல்லுறவுடன் இன்னும் இருக்கும் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களை, இந்த இனமுரண்பாடு எனும் நச்சு வட்டத்துக்குள் விழுந்து விடாது பாதுகாப்பதுடன், ஏற்கெனவே இந்த நச்சு வட்டத்துக்குள் இருக்கின்ற மக்கள் கூட்டத்தாரை, வெளியில் கொண்டு வரவேண்டிய முக்கிய கடமையும் தேவையும் இருக்கிறது.   

அந்தவகையில், முஸ்லிம்களும் தமிழர்களும் முன்னைய காலங்களில் எவ்வாறு உறவாக இருந்தார்கள் என்பதையும் எங்கே அது விரிசலடைந்தது என்பதையும் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.   

குறிப்பாக, முஸ்லிம்கள் செய்த பங்களிப்பைச் சில அரசியல்வாதிகள் கேலிக்குள்ளாக்கத் தமிழ்ச் சமூகம் இடமளிக்கக் கூடாது. அதேபோன்று, இவ்விரு சமூகங்களும் தமக்கிடையில் இடம்பெற்ற, சரி பிழைகளைச் சரியாக மீட்டுப் பார்ப்பதுடன், பிழைகளைப் பிழை என்றும் சரியைச் சரி என்றும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வது, பகைமறப்புக்கு அவசியமாகும். அரசியல், ஆயுதம்சார் சிந்தனைகளுக்காக, யதார்த்தங்களை, இருட்டிப்புச் செய்யத் தேவையில்லை.  

‘ஒரு மனிதன், இன்னொரு மனிதனை, அவனது தோலின் நிறம், அவனது பின்னணி, அவனது மதம் காரணமாகப் பிறப்பிலிருந்தே வெறுப்பதில்லை; மாறாக, மக்கள்தான் வெறுப்பதற்குக் கற்றுக் கொள்கின்றார்கள்’ என்று, நெல்சன் மண்டேலா கூறினார். ‘வெறுக்கக் கற்றுக் கொள்ள முடியுமாயின், அதனைவிட அவர்களுக்கு, அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுக்க முடியும்’ என்றும் அவர் சொல்லியுள்ளார்.   

ஆனால் அதைவிடுத்து, நல்லிணக்கம் பற்றிப் பேசிப் பேசியே, இனவாதத்தைக் கற்பிக்கும் பெருந்தேசிய, குறுந்தேசிய அரசியல்வாதிகளிடம், எச்சரிக்கையாக இருப்பது மட்டுமன்றி, இன்னும் இனநல்லுறவுடன் இருக்கும் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களையும் இந்த இனமுரண்பாடு எனும் நச்சுவட்டத்துக்குள் விழுந்து விடாது, பாதுகாக்க வேண்டியுள்ளது; அது நம் எல்லோரினதும் நியாயபூர்வமான கடமையாகும்.   

 

‘பெற்றிகலோ கெம்பஸ்’
ஆதாரமற்ற கதைகளால் தொடரும் சர்ச்சைகள்

‘பெற்றிகலோ கெம்பஸ்’ எனப்படும் கல்வி நிறுவகம் பற்றிய சர்ச்சைகளும் உருப்பெருப்பிக்கப்பட்ட, கட்டுக் கதைகளும் இன்னும் தீர்ந்தபாடில்லை.  
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், அதாவது பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து, சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள புணானை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகக் கல்லூரியை “மூட வேண்டும்; தடைசெய்ய வேண்டும்; அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும்” என்ற குரல்கள், தொடர்ச்சியாகக் கேட்ட வண்ணமே இருக்கின்றன.  
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இந்தக் கல்வி நிறுவகத்தை நிறுவுவதற்கு, அரபு நாடொன்று நிதி (கடன்) வசதியளித்துள்ளது. இது தொடர்பாக, ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற தெரிவுக்குழு, தொலைக்காட்சி விவாதங்கள் உட்படப் பல இடங்களிலும் பதிலளித்து விட்டார்.  
எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க ஆதாரங்களாக அவர், தம்மிடமுள்ள சட்டவலுவுடைய ஆவணங்களைக் காண்பித்து, போலிக் குற்றச்சாட்டுகள் என்பதை உறுதிப்படுத்தி வருகின்றார். “இது தனியே முஸ்லிம்களுக்கான ஒரு பல்கலைக்கழகமோ, ஷரிஆ சட்டத்தைப் போதிப்பதற்காகவோ நிறுவப்படவில்லை” என்பதைப் பல தடவைகள் சொல்லிவிட்டார்.  
ஆனால், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இக்கல்வி நிறுவகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் முடிச்சுப் போடுவதை விடுத்து, குற்றச்சாட்டுகளை நிரூபித்துக் காட்டுங்கள் என்று இனவாத சக்திகளிடம் கோரப்பட்டது.  
ஆனால், அரச உயர்மட்டக் குழுவினராலோ அன்றேல் பாதுகாப்புத் தரப்பினராலோ, அவர்கள் சொல்வதைப் போன்ற, ஓர் அடிப்படைவாதக் கல்லூரிதான் இது என்பதை, நிரூபிப்பதற்கு இந்த வினாடி வரையும் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.  
ஆனால், ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலைப்பாட்டிலேயே, இனவாதிகள் இன்னும் இதுபற்றிப் புதுப்புதுக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இப்பல்கலைக்கழகம் பற்றி ஆராய, நான்கு அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவும் இப்போது நியமிக்கப்பட்டுள்ளது.  
இந்தக் கதைகளில் மிகப் பிந்தியதாக, அத்துரலிய ரத்தன தேரர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “ஹிஸ்புல்லாஹ் உருவாக்கும் இந்தப் பல்கலைக்கழகம், தற்கொலைதாரிகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை” என்று, அவர் குறிப்பிட்டுள்ளார். 20 முஸ்லிம் எம்.பிகளைக் கொண்ட உயரிய சபையான நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதைக் கூறியுள்ளார்.  
இந்தப் பல்கலைக்கழகம் ஏன், எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று ஹிஸ்புல்லாஹ் தரப்பு விலாவாரியாகக் கூறிவிட்டது. ஆனால், ஆதாரத்தை முன்வைக்க முடியாத தரப்பினரால், சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், இன்னும் விசாரணைகள், கள ஆய்வுகள் தொடர்கின்றன.  
இந்தப் பல்கலைக்கழகத்தை, ஒரு முறை சென்று பார்ப்பவர்கள், இது எந்தளவுக்குப் பிரமாண்டமான வேலைத்திட்டம் என்று, புரிந்து கொள்வார்கள். ஹிஸ்புல்லாஹ் சொல்வதில் நம்பிக்கையில்லை என்றாலும் கூட, இத்தனையும் நடந்த பிறகு, இப்பல்கலைக்கழகத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு பல்கலைக்கழகமாக, அடிப்படைவாதக் கல்வி மய்யமாக நடத்திச் செல்ல, எந்த முட்டாளும் முன்வரமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதில், சில அதிபுத்திசாலிகள் பிடிவாதமாக இருக்கின்றனர்.  
இனவாதம் தவிர, அரசியல், பொறாமை, வஞ்சகப் புத்தி, குறுகிய மனப்பாங்கு எல்லாம் இந்தச் சர்ச்சைகளுக்குத் தூபமிட்டுக் கொண்டிருக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .