2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

நேட்டோ உச்சி மாநாடு 2019

Editorial   / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (நேட்டோ) 70 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்டிருந்தது. 1992ஆம் ஆண்டில் இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், நேட்டோவின் தேவை குறித்து வெகுவாக கேள்விகள் இருந்தாலும், கொஸோவாவில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை, 2001ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் நேட்டோ பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைந்துக் கொண்டமை, தொடர்ச்சியான ரஷ்யாவின் இராணுவ மற்றும் இணையத் தாக்குதல்கள் என்பன, நேட்டோவின் இருப்பு அத்லாண்டிக் நாடுகளுக்கு அவற்றின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்பதையே பறைசாற்றுகின்றது. இந்நிலையிலேயே வருடாந்த உச்சிமாநாடும், நேட்டோ உருவானதன் 70ஆம் ஆண்டு நினைவும் கடந்த வாரம் பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்றிருந்தது.

 

குறித்த நேட்டோ உச்சி மாநாடு, பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கின் செய்தியாளர் சந்திப்புடன் கடந்த புதன்கிழமை முடிவடைந்துள்ளது. பொதுக் கூட்டம் மற்றும் நேட்டோவை உருவாக்கி 70 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் சங்கத்தால் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், நேட்டோவின் அனைத்து தலைவர்களும் கையெழுத்திட்ட அறிவிப்பின் இரண்டு பக்கங்களின் சுருக்கம் வெளியிடப்பட்டது. கூட்டத்தின் முடிவுகள் மற்றும் முன்னுரிமைகளில், ரஷ்ய இராணுவம் மற்றும் இணையத் தடுப்புக்கு எதிராக எதிர்ப்பது, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துதல் மற்றும் நேட்டோவின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகியன தமது உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை கண்டிப்பாக இணைந்த பாதுகாப்புக்கு வழங்குதல் ஆகியவை அடங்கும்.

 

ரஷ்யாவைப் பொறுத்தவரை, நேட்டோ நாடுகள், புதிய இடைநிலை தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதன் மூலம் ரஷ்யா முன்வைக்கும் இருத்தலியல் அச்சுறுத்தலை அங்கிகரிக்கின்றன. அதனை எதிர்கொள்ள, அணுசக்தி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு திறன்களின் சரியான கலவையுடன் தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள நேட்டோ நாடுகள், கலப்பின தந்திரோபாயங்கள் மற்றும் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக போராடுதல், அதனை தடுக்க மற்றும் உள்நாட்டு கட்டமைப்புக்களை பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. எவ்வாறாயினும், நேட்டோவின் பொதுச் செயலாளரும், குறித்த பிரகடனமும், ரஷ்யாவின் நடவடிக்கைகள் சாத்தியமானபோது அதனுடன் ஒரு திறந்த உரையாடலை மேற்கொள்ளல் மற்றும் ஆக்கபூர்வமான உறவைக் கொண்டிருப்பதற்கு நேட்டோ நாடுகள் எப்போதும் முன்னுரிமை கொடுக்கும் என்பதனை பிரதிபலித்திருந்தன(ர்). இருப்பினும், குறித்த உரையாடலைப் மேற்கொள்வதற்கு, ரஷ்யா மீது உறுப்பு நாடுகள் எந்தவிதமான நேரடி விவரக்குறிப்புகள் அல்லது கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

படைகளின் தயார்நிலையின் முன்னேற்றத்தை பொறுத்தவரையிலும், சர்வதேச பாதுகாப்பு குறித்த நேட்டோ நாடுகளின் நோக்கத்தை விரிவுபடுத்துதலிலும் நேட்டோ நாடுகள் வினைத்திறனுடன் வேகமாக செயலாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளன. அதன்படி, 30 பற்றாலியன்கள், 30 எயார் ஸ்குவாட்ரான்கள் மற்றும் 30 போர் கப்பல்கள் ஆகியவை நேட்டோவுக்கு அடுத்த மாதமளவில் செயற்பாட்டுக்கு அனுப்ப நேட்டோ நாடுகள் இணங்கியுள்ளன. இந்த முயற்சியில் 360 பாகை அணுகுமுறைக்கு ஏற்ப இராணுவத் திறன்கள், மூலோபாயம் மற்றும் நேட்டோ கூட்டணி முழுவதும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நேட்டோவின் திறனை தொடர்ந்து கட்டியெழுப்ப, உறுப்பு நாடுகள் திறந்த-கதவுக் கொள்கையை தொடர்ச்சியாகக் கொண்டிருப்பதில் உறுதியாக இருக்கின்றன. அதன்படி, புதிய மசிடோனியாவை புதிய உறுப்புரிமை நாடாக நேட்டோ அங்கிகரித்துள்ளது. மேலும், நேட்டோவின் ஐந்தாவது செயற்பாட்டுக் களமாக வானியல் அமையும் என்றும் அறிவித்துள்ள நேட்டோ, பாதுகாப்பு முதலீட்டு உறுதிமொழியின் படி நேட்டோ உறுப்புரிமை நாடுகள் அதன் இரண்டு சதவீதம் மற்றும் 20 சதவீதம் வழிகாட்டுதல்களின்படி தொடர்ந்து பாதுகாப்பு முதலீட்டை அதிகரிக்கும் என்றும் இணங்கியுள்ளன. இதனோடிணைந்து, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகையில், குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில், முயற்சிகளை முடுக்கிவிட ஒரு புதிய செயற்றிட்டத்தை உருவாக்க நேட்டோ உறுதிபூண்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சிப் பணியை தொடர்ந்து வைத்திருப்பதும் இச்செயற்பாட்டில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறாக பாதுகாப்பு கட்டமைப்பை மீள் புணருத்தானம் செய்வதை அடிப்படையாக கொண்டதாக இவ்வாண்டு நேட்டோ உச்சிமாநாடு விளங்கியிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--