நிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள்

வடமாகாண சபையின் பதவிக் காலம், இன்னும் இரண்டு மாதங்களில், அதாவது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடைகிறது.  

இந்த நிலையில், சில சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தமிழ் அரசியலில் நிலவி வரும் குழப்பமான நிலைமை காரணமாகவும் வடமாகாண சபையின் எதிர்காலம் தொடர்பாகப் பல பிரச்சினைகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பே.   

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், அரசாங்கம் சர்ச்சைக்குரிய முறையில் நிறைவேற்றிக் கொண்ட மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தத்தின் காரணமாக, ஏற்கெனவே பதவிக்காலம் முடிவடைந்து, கலைந்திருக்கும் மாகாண சபைகளுக்கும், இந்த வருடம் பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கும் உடனடியாகத் தேர்தல்களை நடாத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது.   

இதனால் அரசாங்கம், பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதோடு, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலைமை, வடமாகாண சபைத் தேர்தலையும் பாதிக்கிறது.  

மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், வடமாகாண சபை நிர்வாகம் தொடர்பாகவும் அடுத்த, வடமாகாண முதலமைச்சர் யார் என்ற விடயம் தொடர்பாகவும் உருவாகியிருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அடுத்த வடமாகாண சபை உறுதியற்ற, நிலைத்த தன்மையற்ற ஒன்றாகிவிடும் அபாயத்தையும் எதிர்நோக்கியிருக்கிறது.   

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதற்கு முதல் மாதத்திலேயே, அரசாங்கம் மேற்படி மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை, நிறைவேற்றிக் கொண்டது.   

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு, அந்த மூன்று மாகாண சபைகளுக்கும் புதிதாகத் தேர்தல்களை நடாத்துவதற்காக, வேட்புமனுக்களை உடனடியாகக் கோரவில்லை. அத்தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டன.   

அதாவது, அத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அத்திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறையில் தேர்தல்களை நடாத்துவதென்றால், உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய பிரதேசங்களில் செய்ததைப் போல், ஒவ்வொரு மாகாண சபைக்குரிய பிரதேசத்திலும், தேர்தல் தொகுதிகளை உருவாக்க வேண்டும். அதற்குக் காலம் தேவைப்படுகிறது. அதற்காகவே, தேர்தல்கள் ஆணைக்குழு கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது.   

மாகாண சபைப் பிரதேசங்களில், தேர்தல் தொகுதிகளை உருவாக்குவதற்காக, எல்லை நிர்ணய சபையொன்று நியமிக்கப்பட்டது. அச்சபை, தமது பணியை முடித்து, தமது அறிக்கையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்துவிட்டது.   

அவ்வாறாயின், தேர்தல்களை மேலும் தாமதப்படுத்த என்ன காரணம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடைந்த போதிலும், சில எல்லைகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. சிலர், சில எல்லைகளை எதிர்ப்பார்கள்.   

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயப் பணிகள், மூன்றாண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டன. ஆனால், மாகாண சபைத் தொகுதிகளின் எல்லைகள் அவ்வளவு சர்ச்சைக்குரியதாகவில்லைப் போல்தான் தெரிகிறது.   

எனினும், அந்தப் பணிகள் காரணமாகவே மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களுக்கான திகதியை நிர்ணயிக்கத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முடியாமல் இருக்கிறது.   
கடந்த வாரம் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி, எப்போது மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தலாம் எனக் கலந்துரையாடின. அதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதமே, தேர்தலை நடாத்த முடியும் என்ற முடிவுக்கு அவை வந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.  

உண்மையிலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தத் தயங்குகிறது. ஏற்கெனவே அரசாங்கம், 2015 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டும் நடாத்த வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தப் பயந்து, எல்லை நிர்ணயப் பணிகளைக் காரணம் காட்டி, அவற்றை ஒத்திப் போட்டது.   

பின்னர், நிர்ப்பந்தம் காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதம் அத்தேர்தல்களை நடத்தியது. அப்போது அரசியல் அலை திரும்பியிருந்தது. எனவே, அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும், அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் படுதோல்வியடைந்தன.  

 கடந்த, ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்த கையோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் நடாத்தியிருந்தால், அந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த, மேலும் பயப்படுகிறது என்பது தெளிவான விடயம்.  

 எனவே அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், நடாத்த முயல்கிறது போலும். ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலகுவாக வெற்றிபெற முடியாது.  

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, தேர்தல் நடைபெற்ற 340 சபைகளில், 231 சபைகளின் அதிகாரத்தைப் பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.   

ஆனால், அம்முன்னணி நாட்டில் 50 சதவீத வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. பொதுஜன பெரமுன, 49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற போதிலும் ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.கவும் கூட்டாகப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 50 இலட்சமாக இருந்தது.   

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.கவும் கூட்டாகப் போட்டியிடும் எனக் கூற முடியாது. ஏற்கெனவே, ஐ.தே.க தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ ல.சு.க தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே, கடும் முறுகல் நிலைமை நிலவி வருகிறது.   

எனவே, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைவார் எனக் கூற முடியாது. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற, அவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வாக்கேனும் பெற வேண்டும். அதை, பொதுஜன பெரமுன வேட்பாளர் பெறுவாரா என்பது சந்தேகமே.   

எனவே, ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி, ஐ.தே.க சிறியதோர் எதிர்பார்ப்பை வைத்திருக்கக் கூடும். அந்த நிலையில், முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி, வெற்றி பெற்று பின்னர், அந்தச் சூட்டோடு, மாகாண சபைத் தேர்தலை நடாத்தி, அதிலும் வெற்றி பெறலாம் என ஐ.தே.க கணக்கு போடுகிறதாக இருக்கலாம்.  

அதேவேளை, மாகாண சபை தேர்தலையும் புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடாத்துவதற்காகவும் மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தற்போது சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆயினும், கலப்புத் தேர்தல் முறையும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பது, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது தெளிவாகியது.   

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களைப் புதிய முறையில் நடாத்துவதா அல்லது சட்டத்தில் மீண்டும் சில மாற்றங்களை மேற்கொண்டு பழைய முறையிலேயே நடாத்துவதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.   

எனவே, ஏற்கெனவே பதவிக் காலம் முடிவடைந்த மூன்று மாகாண சபைகளுக்கும் வடமாகாண சபை உள்ளிட்ட மேலும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை, ஜனவரி மாதத்திலாவது நடாத்த முடியுமா என்பது சந்தேகமே.   

கலப்புத் தேர்தல் முறையால் உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட பாதகமான விளைவுகளில், உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தமை பிரதானமாகும்.   

உள்ளூராட்சி மன்றங்களில், முன்னர் மொத்தம் 4,000 உறுப்பிர்களே இருந்தனர். கலப்புத் தேர்தல் முறையின் காரணமாக, அந்த எண்ணிக்கை 8,000க்கும் அதிகமாகியது.   

மக்களின் தேவைக்காகவன்றி, வெறும் தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 4,000 உறுப்பினர்களுக்கு, மக்களின் வரிப் பணத்திலிருந்து சம்பளம், ஏனைய சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது. இது பெரும் அநீதியும் வீண் விரயமுமாகும்.  

அதேபோல், கட்சிகள் பெற வேண்டிய குறைந்த பட்ச வாக்குகளைக் குறிக்கும் வெட்டுப்புள்ளி, கலப்புத் தேர்தல் முறையின் கீழ் அகற்றப்பட்டது. இதனால், சிறுசிறு கட்சிகளெல்லாம் போட்டியிடுவதால் அவையும் ஆசனங்கள் ஒன்றிரண்டைக் கைப்பற்றிக் கொள்கின்றன.   

இது ஜனநாயக உரிமை என்ற போதிலும், இதனால் சில சபைகளில் குறிப்பிட்டதொரு கட்சி, அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது கடினமாகிறது.   

ஏனெனில், ஏனைய கட்சிகள் பெறும் ஆசனங்களின் கூட்டு எண்ணிக்கை, முதலாம் இடத்துக்கு வரும் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கின்றது.   

இது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது தெளிவாகியது. இது அந்தச் சபைகளின் சீரான நிர்வாகத்தை நடாத்தத் தடையாக அமைகிறது. கலப்புத் தேர்தல் முறையில் தேர்தல் நடாத்தப்பட்டால், மாகாண சபைகளிலும் இந்தக் குழப்பநிலை உருவாகாது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை.  

இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குச் சமாளிப்பதற்காக, பழைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ், வெட்டுப் புள்ளிக்குப் புறம்பாக, போனஸ் ஆசன முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது தேர்தலின் போது, ஒரு கட்சி ஏனைய கட்சிகளை விட, ஆசனங்களைப் பெற்று முதலிடத்துக்கு வந்தால், அக்கட்சிக்கு மேலும் இரண்டு ஆசனங்கள் போனஸாக வழங்கப்படும். அதன் மூலம் எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள், ஆளும் கட்சியில் உள்ள கட்சிகளை விட, ஆசனங்களைப் பெறுவதைத் தடுப்பதே எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த போனஸ் ஆசன முறையும் கலப்புத் தேர்தல் முறையின் கீழ், இரத்துச் செய்யப்பட்டுள்ளது.   

எனவேதான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்ற போதிலும், கலப்புத் தேர்தல் முறை பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த உடன் கூறியிருந்தார்.   

வடக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிய தேர்தல் முறையால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியது. பொதுஜன பெரமுனவைப் போலவே, பல சபைகளில் முதலிடத்துக்கு வந்தும், சபையை நிறுவ முடியாமல், ஏனைய கட்சிகளுடன் பல வாரங்களாகப் பேரம் பேச வேண்டிய நிலை எற்பட்டது.   

இவ்வாறான பின்னணியில் தான், வட மாகாண சபையின் நிலைமையை நோக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குப் புறம்பாக, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராவது யார் என்ற பிரச்சினையும் எழுந்துள்ளது.   

தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு முரண்பட்டுச் செயற்பட்டு வருவதாலும் ஏனைய சில தமிழ்க் கட்சிகள், அவரைத் தமது அணியில் வைத்திருக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாலும் அநேகமாகக் கூட்டமைப்பு அவரை அடுத்த முறை தேர்தலில் நிறுத்தும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே தெரிகிறது. அவ்வாறானதொரு நிலையில், அவர் ஏனைய கட்சிகளின் உதவியுடன் தனியாகப் போட்டியிடவும் கூடும்.   

இது சிலவேளை, பலமானதோர் எதிர்க்கட்சியை வடமாகாண சபையில் உருவாக்கிவிடும். பலமான எதிர்க் கட்சியொன்று இருப்பது ஜனநாயகத்துக்கு சாதகமான நிலைமையாகும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். ஆயினும் தமிழ்க் கட்சிகள் பிரிந்து, ஒன்றையொன்று விமர்சித்துக் கொண்டும், காட்டிக் கொடுத்துக் கொண்டும் செயற்படும் பட்சத்தில், அது அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில், மத்திய அரசாங்கத்துக்கு வாய்ப்பாகிவிடும் அபாயமும் உள்ளது.   


நிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.