நீர்த்துப் போகும் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் மீண்டும் நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது.  

போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக இந்தப் போராட்டங்கள், காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருக்கின்றன.  

அவ்வப்போது, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக உச்சநிலைக்குச் செல்வதும், வடக்கிலோ, அல்லது வடக்கு, கிழக்கிலோ முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்படுவதும், யாழ். பஸ் நிலையம், புறக்கோட்டை ரயில் நிலையம் என்பவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்துவதும் இவற்றையும் தாண்டி, சில கூர்மையான போராட்டங்கள் நடத்தப்படுவதும் வழக்கம்.  

மிக அண்மையில், அரசியல் கைதிகளின் விடுதலை சார்ந்த போராட்டங்கள் முன்னிலை பெற்றமைக்கு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து, அநுராதபுர மேல் நீதிமன்றத்துக்கு வழக்குகள் மாற்றப்பட்ட மூன்று அரசியல் கைதிகள், தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கே மாற்றப்பட வேண்டும் எனக்கோரி, நடத்திய உண்ணாவிரதப் போராட்டமே முக்கிய காரணம்.  

இந்த உண்ணாவிரதப் போராட்டம், ஒரு மாத காலத்துக்கு மேலாக நடத்தப்பட்டும், எந்தப் பயனும் கிட்டவில்லை. வடக்கில் முழு அடைப்புப் போராட்டம், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின், ஒரு வாரகால நிர்வாக முடக்கப் போராட்டம் எதுவுமே வெற்றியைத் தேடித் தரவில்லை.  

சம்பந்தன், விக்னேஸ்வரன் என்று தமிழர் தரப்பில் உள்ள தலைவர்கள் அனைவரும் இதுகுறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி விட்டனர். இந்த விடயம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் என்று பல தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து நிலைமைகளையும் விளக்கி விட்டனர்.  

உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து ஒரு வாரத்தை கடந்திருந்தபோது, அமைச்சர் மனோ கணேசனிடம், “எனக்கு ஒன்றும் தெரியாது”     என்று ஜனாதிபதி கூறியது போல, அதற்குப் பின்னரும் ஜனாதிபதினால் அப்படிக் கூற முடியாதளவுக்கு, அவரிடமும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.  

ஆனாலும், எதுவுமே பலன் தரவில்லை. அரசியல் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு, சட்டமா அதிபர் திணைக்களம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கமும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை.   

“எத்தகைய போராட்டத்தை நடத்தினாலும், அரசியல் கைதிகளை விடுவிக்கப் போவதில்லை” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கூறியிருந்தார்.  

எதை வேண்டுமானாலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டுத் தீர்வைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்ற தொனியில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாகவும் தகவல்.  

பெரியளவில் போராட்டங்களை நடத்தியும், அரசியல் ரீதியாக வேண்டுகோள்கள் விடுத்தும், அழுத்தங்களைக் கொடுத்தும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.  

அரசாங்கமோ, இது சட்டமா அதிபர் திணைக்களம் சார்ந்த விவகாரம் என்றும், அந்தத் திணைக்களம் சுதந்திரமாகச் செயற்படுகிறது என்பது போன்றும் காரணம் கூறி, நழுவிக் கொள்ள முனைகிறது.  

ஆனால், இது அரசியல் ரீதியாகவும் கூட எடுக்கப்பட வேண்டிய முடிவு என்பது, தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்தாக உள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 
இரா.சம்பந்தன் எழுதிய கடிதத்திலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்திலும், இதில் அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தனர்.  

ஆனாலும், அரசாங்கமோ இந்த விடயத்தில், அரசியல் ரீதியாக முடிவெடுப்பதற்கு எதுவுமில்லை என்ற தொனியில் செயற்பட்டு வருகிறது. போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  

அரசியல் கைதிகள் சிறைகளுக்குள் நடாத்தும் போராட்டங்களும், சிறைக்கு வெளியே அவர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்களும், முழுமையாக வெற்றியைத் தேடித் தருவதில்லை. அதற்கு முன்னர், எப்படியோ நீர்த்துப் போய்விடும் அல்லது நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிடும். இது பலமுறை பார்த்து விட்ட நிகழ்வு.  

இப்போதும்கூட, அப்படித்தான் நடந்திருக்கிறது. அநுராதபுர சிறையில் ஒரு மாதத்துக்கு மேல், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த அரசியல் கைதிகள், அதைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.   

பல்கலைக்கழக மாணவர்களும், நிர்வாக முடக்கப் போராட்டத்தைக் கைவிட்டு, வேறு வழியில் போராடுவது பற்றி முடிவெடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.  

ஆக, எந்தப் போராட்டங்களும், கொழும்பின் முடிவுகளின் மீது தாக்கத்தைச் செலுத்தவில்லை. அவர்களின் நிலைப்பாட்டை அசைக்கவில்லை. அவ்வாறாயின்,  

-அரசியல் கைதிகளுக்கான போராட்டம், நடத்தப்பட்ட முறைகளில் தவறுகள் உள்ளதா?  

-அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படவில்லையா?  

-அரசியல் ரீதியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் போதவில்லையா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.  

சில மணிநேர எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி, முழு அடைப்புப் போராட்டம் வரை நடத்தி, மக்களின் உணர்வுகள் அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அதை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை.  

அப்படியாயின், ஒன்றில் இந்த விடயத்தில் விசமத்தனத்துடன் முடிவுகளை எடுத்திருக்கிறது என்று கருத வேண்டும். அல்லது, எங்கோ ஓரிடத்தில் ஓட்டை இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும்.  

‘இதுதான் முடிவு; எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும் விடுவிக்க முடியாது’ என்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் நிலைப்பாடு தான், அரசாங்கத்தின் முடிவு என்றால், அதை எந்தச் சூழ்நிலையிலும் மாற்ற முடியாது.  

ஆனால், பல்வேறு விடயங்களில் கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் ஆதரவில் தங்கியுள்ள அரசாங்கம், அத்தகைய நீண்ட ‘பிடிச்சிராவி’த்தனத்துடன் இருக்க முடியாது. 

அவ்வாறாயின், கொடுக்கப்பட்ட அழுத்தங்களில் குறைபாடுகள் உள்ளன என்றோ, எங்கோ ஓர் ஓட்டை இருக்கிறது என்றோதான் சிந்திக்கத் தோன்றுகிறது.  

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர், அநுராதபுர மேல்நீதிமன்றத்தில் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.  

அதில், “அரசியல் கைதிகள் வழக்குத் தவணைக்காலத்தில் மாத்திரம் உணவுகளைத் தவிர்க்கின்றனர். பின்னர், மீண்டும் வழக்கம் போல உணவை எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் வழக்கை இழுத்தடிக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.   

இது சரியா தவறா என்பது ஒருபுறமிருக்க, சிறைக்கைதிகள், அதிகாரிகளின் கண்காணிப்பில் தான் இருக்கின்றனர் என்பதையும், அவர்களுக்குத் தெரியாமல் எதையும் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

அரசியல்கைதிகள், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி, தமது உடலை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதோ, உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதோ இந்தப் பத்தியின் கருத்தல்ல.  

ஆனால், சாகும்வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை ஆரம்பித்தால், அதை முறையாக முன்னெடுக்க வேண்டும். அரைகுறையானதும், நெகிழ்வுப் போக்கானதுமான போராட்டங்களால், வெற்றியை நோக்கி நகர முடியாது.அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், அரசாங்கத்தினால் கருத்தில் கொள்ளப்படாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.  

அதுபோலவே, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போராட ஆரம்பித்தனர்.   

முதலில் வகுப்புப் புறக்கணிப்பை தொடங்கிய அவர்கள், வடக்கு, கிழக்கில் வீடுவீடாகக் கையெழுத்துக்களைத் திரட்டப் போவதாக அறிவித்தனர். ஆனால், அது எந்தளவு முன்னெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.  

அதன் பின்னர், பல்கலைக்கழகத்தை இழுத்து மூடி, நிர்வாக முடக்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஒரு வாரத்துக்கு மேல் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. 

எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களை அழைத்து, ஆலோசித்தனர். கடைசியாக, நிர்வாக முடக்கப் போராட்டத்தைக் கைவிட்டு, அரசியல் கைதிகளை உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கோர முடிவு செய்தனர்.  

இப்போது எல்லா போராட்டங்களும் முடிவுக்கு வந்திருக்கின்றன. வேறு வடிவில் போராடப் போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், அது என்ன வழி என்று இனித்தான் முடிவு செய்யப் போகிறார்கள்.   

என்ன வழியில் போராடலாம் என்ற பிரச்சினைதான், இப்போது எல்லோருக்கும். இது அரசாங்கத்துக்குச் சாதகமான நிலை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

தமிழர் தரப்பில் இருந்து, அரசியல் ரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானதல்ல; கூட்டமைப்பு இன்னும் வலுவான அரசியல் முடிவை எடுக்க வேண்டும் என்பது பலருடைய நிலைப்பாடு.  ஆனால், கூட்டமைப்போ, வெறும் கடிதங்களுக்கு அப்பால்ச் சென்று, இந்த விவகாரத்தைப் பூதாகாரப்படுத்தத் தயாரில்லை. அது அரசமைப்பு உருவாக்க விடயத்தில், குழப்பங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் சம்பந்தனுக்கு இருக்கிறது.  

அரசாங்கத்தின் மீது வலுவான அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய சாத்தியங்கள் இருந்தும், அதைத் தமிழர் தரப்பு சரியான முறையில் முன்னெடுக்கத் தவறுவது தான், அரசியல் கைதிகள் விவகாரம் தவணை முறைப் போராட்டங்களாக நீட்சி பெறுவதற்கு காரணமாக இருக்கிறதோ என்று சந்தேகிக்க வைக்கிறது.  


நீர்த்துப் போகும் போராட்டம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.