2025 ஜூலை 02, புதன்கிழமை

பகடிவதை: இனியாவது புனிதங்களை களைவோமா?

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:12 - 1     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்கள் பற்றி, எமது சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புனிதங்கள் பல. அவையே, பல்கலைக்கழக சமூகத்தை, அனைத்துக்கும் மேலானதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியுள்ளன.  

 ‘கற்றோருக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோநிலை, தமிழ்ச் சமூகத்தை ஆண்டாண்டு காலமாகப் பீடித்த நோய். அது, படித்தவர்கள் அரசியல் செய்தால், உரிமைகள் கிடைக்கும் என்று நம்பி, வாக்களிக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்து வரும் ஒன்று. ‘அப்புக்காத்து’ அரசியலின் அடிப்படையும் இதுதான்.   

இன்றுவரை, பல்கலைக்கழகங்களை அதுசார்ந்த சமூகங்களைக் கேள்வி கேட்காத, விமர்சிக்காத ஒரு சமூகமாக, நாம் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், எமது சமூகத்தில் புரையோடிப் போயுள்ள அனைத்துத் தீவினைகளின் இருப்பிடங்களாகப் பல்கலைக்கழகங்களே திகழ்கின்றன. இதன் ஒரு பகுதியே பகடிவதை. இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.   

வெறுமனே குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதன் மூலமோ, அரசாங்கம் சொல்கிறபடி ஆணைக்குழுக்கள் அமைப்பதன் மூலமோ, எதுவும் மாறப்போவதில்லை. ஏனெனில், இதற்கு முன்னும், சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள. பகடிவதைக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், பகடிவதை இன்னும் மோசமான வடிவங்களில் நடந்தேறுகிறது.   

இன்றுவரை, பல்கலைக்கழகங்களில் பதவிகளில் உள்ளவர்களிடம் வினவினால், பெரும்பாலானோர் சொல்கின்ற பதில், “இப்போது பல்கலைக்கழகங்களில் பகடிவதை இல்லை” என்பதே.

“உங்களது பீடத்தில் பகடிவதை நடக்கிறது” என்று, ஒரு பீடாதிபதிக்கோ, துறைத்தலைவருக்கோ சொன்னால், உங்களுக்குக் கிடைக்கும் பதில், “இல்லை, அப்படி எதுவும் நடப்பதில்லை” என்பதே ஆகும்.   

இது எதைக் காட்டுகிறது என்றால், பகடிவதை நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அங்கிகாரமும் ஒப்புதலும் நிர்வாக மட்டங்களில், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற மட்டங்களில் இருக்கிறது. 

இன்றும், பல்கலைக்கழகங்களில் பகடிவதைக்கு எதிரான குழுவைச் (anti-raggers) சேர்ந்தவர்கள், பழிவாங்கப்படுகிறார்கள். முதலாம் ஆண்டு மாணவர்கள் பலர், அவர்தம் ஆசிரியர்களாலேயே பகடிவதை நோக்கித் தள்ளப்படுவதும் நடக்கிறது.   

பகடிவதையை அறிக்கையிடும் முறையில், இரகசியத் தன்மை பேணப்படுவதில்லை. அதற்கான வாய்ப்புகள் அற்ற ஒரு முறையே நடைமுறையில் உள்ளது. 

இலங்கைப் பல்கலைக்கழகங்கள், திறமையின் அடிப்படையிலன்றி, ‘ஜால்ரா’வின் அடிப்படையில் அமைந்துவிட்டதன் பின்னணியில், புரையோடிப்போன பல்கலைக்கழகக் கல்வியின், கேடுகெட்ட விளைவுகளில் ஒன்றே, இந்தப் பகடிவதை.   

தங்கள் பதவிகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் போராடும், பொதுவெளியில் கருத்துரைக்கும் அத்தனை புத்திஜீவிகளும், இப்போது மௌனம் காக்கிறார்கள். கருத்துப் போராளிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எல்லோரும் அமைதியைக் கடைப்பிடிக்கிறார்கள். 

சில நாள்களுக்கு முன்னர், பகடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வெகுசிலரே. இன்னமும் வாய்மூடி மௌனம் காக்கவே, யாழ்ப்பாணச் சமூகம் விரும்புகிறது.   

பல்கலைக்கழகத்தின் மீது கட்டப்பட்டுள்ள பரிவட்டத்தைக் கழற்றியெடுக்கவோ, புனிதங்களைக் களையவோ யாழ்ப்பாணச் சமூகம் இன்னமும் தயாரில்லை. ஆனால், அந்தப் பல்கலைக்கழக சமூகத்தின் யோக்கியதை, சமூக வலைத்தளங்களின் ஊடு, ‘சந்தி சிரிக்கிறது’. 

இதையும், கேள்விகளற்றுச் சமூகம் கடந்து போகுமாயின், அதை வெட்கமற்ற, சமூக அக்கறையற்ற, சுயநலம் பிடித்த, கீழ்த்தரமான செயல்களை அங்கிகரிக்கின்ற ஒன்றாகவே பார்க்கத் தோன்றுகிறது.   

புனிதங்களால் விளைந்த பயன் யாதெனில், அறிவு பரவலாகாமல் பார்த்துக் கொண்டதும் அறிவின் பெயரால் அதிகாரத்தையும் அகங்காரத்தையும் ஒரு கும்பல் செலுத்தியதுமே ஆகும். தமிழ்ச் சமூகம், இவற்றால் இழந்தது அதிகம். 

இந்தப் பகடிவதை, எங்கள் எதிர்காலக் குழந்தைகளின் கனவை மட்டுமல்ல வாழ்க்கையையும் கெடுக்கிறது. குற்றங்களைக் குற்றமென உணராத, ஒரு கற்ற சமூகத்தால் விளைவது, கேடன்றி நற்பலனல்ல.   

இனியாவது, எமது குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காய், பல்கலைக்கழக சமூகம் பற்றிய புனிதங்களைக் களைய வேண்டும். அவர்கள், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. சமூகத்துக்குப் பயனில்லாத கல்வியாலும் கற்பித்தலாலும் விளையும் பயன் ஏதுமில்லை.   


You May Also Like

  Comments - 1

  • MK Friday, 14 February 2020 09:18 PM

    தமிழ் மிரரில் வந்தவற்றில் பெறுமதி கொண்ட ஆசிரியர் கருத்து இதுவாகும் நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .