2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல்

கே. சஞ்சயன்   / 2020 ஜூன் 05 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது.

சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம்.

உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன.

ஒரு நாளைக்கு 150 கி.மீ வேகத்தில், பெருங்கூட்டமாக இவை பயணிக்கின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம், சிலவேளைகளில் பல கி.மீ பரப்பளவைக் கொண்டதாகவும் இருப்பதுண்டு.

இவ்வாறான வெட்டுக்கிளிகள் தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்குப் படையெடுத்துள்ளன.

இலங்கையிலும் ஆங்காங்கே, வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாகச் செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களில், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்ற போதும், அவை ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் உள்ளூர் இனங்களே என்றும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கிறார். எவ்வாறாயினும், இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக, அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான இரசாயனங்களை இனங்காணவும் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவால், கட்டுப்படுத்த முடியாது போனால், படையினரின் உதவியும் பெறப்படும் என, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வீரகோன் கூறியிருக்கிறார்.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், படையினரை ஈடுபடுத்துவதற்கான எத்தனங்களில், அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பதையே, அவரது இந்தக் கருத்து வெளிக்காட்டுகிறது.

விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், படையினரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடிய அதிகாரம் படைத்தவரோ, அதுபற்றித் தீர்மானிக்கக் கூடியவரோ அல்ல.

இந்த நிலையில், அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்ற இந்தக் கருத்தை, இரண்டு வகையாக நோக்கலாம்.

ஒன்று, அரசாங்க மேலிடத்தில் இருந்து, இவ்வாறான நிலை ஏற்பட்டால், படையினரின் உதவியைப் பெறலாம்; அல்லது, பெறவேண்டும் என்ற அறிவுறுத்தல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.

அதன்படி, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பாதுகாப்புப் படையினரின் உதவி பெறப்படும் என்று, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கலாம்.

இரண்டாவது, எந்தத் துறையை எடுத்தாலும், படையினரை ஈடுபடுத்துவது ஒரு நோயாக மாறி விட்ட நிலையில், அரச அதிகாரிகள் மட்டத்துக்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றாக மாறியிருக்கலாம். அதன் அடிப்படையில் கூட அவர், இவ்வாறு கூறியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காகக் கட்டியெழுப்பப்பட்ட இராணுவக் கட்டமைப்பை, இப்போது எதற்கெல்லாம் பயன்படுத்துவது என்ற வரையறையே இல்லாமல் போய் விட்டது.

போர் முடிவடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினர் கொழும்பில், கால்வாய் சுத்திகரிப்புப் பணிகளில் தொடங்கி, ரதுபஸ்வெலவில் குடிநீருக்காகப் போராட்டம் நடத்தியவர்களை அடங்குவது வரையான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

இதனால், இராணுவத்தினருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதுடன், அவர்களின் மதிப்பும் குறைக்கப்பட்டதாக, தற்போதைய எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம், மீண்டும் இராணுவத்தினரை டெங்கு ஒழிப்பு, கொரோனா வைரஸ் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு என்று களமிறக்கி, கடைசியாக அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிப் பார்த்து விட்டது.

நுகர்வோர் அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாந்த திஸநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கையாண்ட தவறான அணுகுமுறைகளால், அரிசி விலையை அரசாங்கமே உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்தை இறக்குவதற்கும் அரசாங்கம் தயாராகிறது; அதற்கேற்ற மனநிலைக்கு, அதிகாரிகளைக் கொண்டு வந்திருக்கிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தும் போது, கொஞ்சம் திறமையாகச் செயற்பட்டால், அத்தனை வேலைகளிலும் அவரையே ஈடுபடுத்தும் ஒரு வழக்கம் இருக்கிறது.

துறைசார் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய ஊதியம், வசதிகளைச் செய்து கொடுப்பதை விட, குறைந்த செலவில் அந்த வேலையை முடிக்கலாம் என்றே அவர்கள் பார்ப்பார்கள்.

போரில் திறமையாகச் செயற்பட்டனர் என்பதற்காக, இராணுவத்தினரையே எல்லாப் பணிகளிலும் ஈடுபடுத்தி, வெற்றி காணலாம் என்ற மனோநிலையும் அது போன்றது தான்.

எல்லா மட்டங்களிலும், இராணுவத் தலையீடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம், அரச அதிகார மட்டங்களும் நாட்டு மக்களும், அதற்குப் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக மாற்றப்பட்டு விட்டனர்.

கடந்த வாரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில், ஓர் ஊடக மாநாடு நடத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அந்தச் செய்தியாளர் சந்திப்பில், இராணுவச் சீருடையிலேயே பங்கேற்றிருந்தார்.

ஆனால், அவர் சேவையில் உள்ள இராணுவ அதிகாரி அல்ல; ஓய்வுபெற்று விட்ட அவர், இராணுவச் சீருடையில் அந்த ஓடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

சேவையில் உள்ள ஓர் இராணுவ அதிகாரி, சீருடையுடன் பங்கேற்பதற்கும், ஓய்வுபெற்ற ஒருவர் சீருடையுடன், சிவில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

இது, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும், ஒருவித உளவியல் நிகழ்ச்சி நிரலாகவும் கூட இருக்கக் கூடும்.

ஆரம்பத்தில், கொரோனா வைரஸை ஒழிப்போம் என்று சூளுரைத்தவர்கள் எல்லோருமே, ஒரு கட்டத்துக்கு மேல், அது சாத்தியமற்றது என்று உணர்ந்தவுடன், ''கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்'' என்று, ஆலோசனை கூறத் தொடங்கினார்கள்.

அதுபோலத் தான், சிவில் அதிகாரிகளைச் சீருடையினருடன் இணைந்து பணியாற்றப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறும் வகையில் தான், சிவில் பணிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள், வலுவாகக் கூறப்பட்டு வருகின்ற போதும், அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் இராணுவத்தை ஈடுபடுத்துவதில், உறுதியாக இருக்கிறது.

அதற்கேற்ற வகையிலேயே, முக்கியமான துறைகளை இலக்கு வைத்து, சீருடை மயப்படுத்தும் போக்குத் தீவிரம் பெற்று வருகிறது.

அண்மையில், விவசாய மற்றும் மகாவலி அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குக் கீழ் உள்ள விவசாயத் திணைக்களப் பணிப்பாளரிடம் இருந்து, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் படையினரின் உதவியைப் பெறப்படும் என்ற கருத்து வெளியாகியிருப்பது ஆச்சரியமில்லை.

ஆனால், இது ஓர் ஆபத்தான போக்கு என்பதில் சந்தேகமில்லை. சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் தான், நாட்டில் எல்லாத் துறைகளிலும், இராணுவ ஆதிக்கம் இருக்கும்.

அரசியல் தொடக்கம், அடி மட்டம் வரை அங்கு இராணுவ செல்வாக்குப் பரவியிருக்கும். அதுபோன்ற நிலைக்கு, இலங்கையும் மிகவேகமாக மாறி வருகிறது.

அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில், முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையானது, கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர், தனக்கு நெருக்கமான, தமக்கு நம்பிக்கையானவர்களின் மூலம், நாட்டை நிர்வகிக்க விரும்புகிறார். தனக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்று நம்புகிறவர்களை மாத்திரம், அதிகாரத்தில் அமர்த்துகிறார்.

இதன் மூலம், இராணுவ அதிகாரத்தின் மூலம் ஆட்சி நடத்தும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெயரை, அவர் பெறப்போவது, தவிர்க்க முடியாததாகி வருகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் ஜெனரல்களான ஷியா உல் ஹக், பர்வேஸ் முஷரப் போன்றவர்களும் கூட, மக்களால் தெரிவு செய்யப்பட்டு, இராணுவ ஆட்சியை நடத்தியிருந்தனர்.

ஒரே வேறுபாடு, அவர்கள் இராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்து, பின்னர் தேர்தலின் மூலம் தம்மை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொண்டனர்.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து, இராணுவ ஆட்சி மூலம் நாட்டை நிர்வகிக்க முனைகிறார்.

இந்த இரண்டுக்கும் இடையில், பெரிதாக எந்த வேறுபாட்டையும் உணரமுடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .