2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முடிவுகாண முடியாத பிரெக்சிற்

Editorial   / 2017 நவம்பர் 20 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை, இரு பகுதியினரதும் பேரம்பேசும் நிலையில் மாற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், வாக்களித்தோரில் 51.9 சதவீதமானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வாக்களித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் 50ஆவது உறுப்புரையை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து, குறித்த திகதியிலிருந்து 2 வருட காலத்துள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பொருட்டு, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர், ஒற்றைச் சந்தை முறைமையிலிருந்து ஐ.இராச்சியம் வெளியேறும் எனவும், 1972 ஐரோப்பிய ஒப்பந்தத்திலிருந்து விலகும் எனவும், ஆயினும் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை இங்கிலாந்தின் உள்நாட்டு சட்டத்திற்குள் ஏற்கப்பட்ட நிலைமை மாறாது எனவும் தெரிவித்திருந்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுதலுக்கான ஐ.இராச்சிய அரசாங்கத் திணைக்களம் (DEXEU), 2016 ஜூலையில் உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது செயலாளராக டேவிட் டேவிஸ், பிரதமரால் நியமிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள், இவ்வாண்டு ஜூனில், உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த சர்வஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான அடிப்படை எதிர்பார்ப்புகளை, ஐ.இராச்சியத் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் அறிவித்திருந்தனர். கடந்தாண்டில், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்கு சுதந்திரக் கொள்கைகளை ஐ.இராச்சியம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஐரோப்பிய ஒற்றைச் சந்தை முறைமையுள் (ESM) தொடர்ந்து இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் தெரேசா மே இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருதல், ஐ.இராச்சியத்தின் பிரெக்சிற் நடைமுறையின் ஒரு பகுதி எனவும், ஆயினும் குறித்த விடயமானது, ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள், ஐ.இராச்சியத்தில் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு ஏற்றதாகவே அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர், ஐ.இராச்சியத்தில் தற்போது குடிகொண்டுள்ள 3.3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்ந்தோரின் குடியேற்ற உரிமைகள், ஐ.இராச்சியத்தில் இருந்து வெளியேறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 1.2 மில்லியன் ஐ.இராச்சியப் பிரஜைகள், அவர்களது பரஸ்பர உரிமைகள், தொடர்ச்சியாக இப்போதுள்ளவாறே பேணப்படலாம் எனக் கூறியிருந்திருந்தார். இதற்கு, பெரும்பான்மை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள், ஆரம்ப ஒப்புதல் வழங்கியிருந்த போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க், சான்செலர் மேர்க்கெல் ஆகியோரால் இது நிராகரிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 2017 ல், பிரதம மந்திரி மே, 12 இலக்குகளை ஐ.இராச்சிய - ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகளுக்காக முன்வைத்திருந்தார். அவ்விலக்குகள், ஐரோப்பியாவில் நிரந்தர ஒற்றைச் சந்தை உறுப்பினராக ஐ.இராச்சியம் தொடர்ச்சியாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தியிருந்தன.

இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள், ஜூலை நடுப்பகுதியில் தொடங்கியிருந்தன. பல விடயங்கள் இன்னுமே விரிவாகப் பேசப்பட்டிருக்காத இந்நிலையில், வட அயர்லாந்து எல்லை, இங்கிலாந்தின் உள்ள ஐரோப்பியர்களின் குடியுரிமை உரிமைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கான உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், தொடர்ச்சியாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவேண்டும் என, பிரெக்சிற் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கேல் பார்னியர் கோரியிருந்தார். இது தொடர்பில் ஐ.இராச்சியம், இது தொடர்பான நீதிமன்றம் ஒன்று, தொடர்ச்சியாக இருக்குமாயின், அதில் ஐ.இராச்சிய நீதிபதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அக்கோரிக்கையானது, ஐரோப்பிய உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய நீதிமன்ற ஆதிக்கத்திலிருந்தும் ஐ.இராச்சீயம் விலகும் என, இதைத் தொடர்ந்து மே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே பிரதமர் மே-க்கு, வட அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய - ஐ.இராச்சிய வர்த்தகம் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கு, 2 வார காலப்பகுதியை ஐரோப்பிய ஒன்றியம், நவம்பர் 17ம் திகதியை நிர்ணயித்துள்ளது. இது நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னரான முடிவாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தமை, ஜேர்மன், பிரான்ஸ் நாடுகளின் உந்துதலே ஆகும் என, டேவிட் டேவிஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாமே, குறித்த பிரெக்சிற் பிரிவானது, மிகவும் சுலபமானதல்ல என்பதையே காட்டுவதாய் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .