2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

வழித்தடம் மாறிய முஸ்லிம் அரசியல்:

மொஹமட் பாதுஷா   / 2020 மே 23 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு தசாப்தங்களாக, முஸ்லிம் மக்கள், கிட்டத்தட்ட ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 'முஸ்லிம்; சமூகத்துக்கான அரசியல் சீரழிந்துள்ளது; பிழையான வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றது; அரசியல் தலைமைகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர், சமூக அக்கறையும் துணிச்சலும் அற்றவர்களாக இருக்கின்றார்கள்' என்றெல்லாம், அந்த ஒப்பாரியும் குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில், நிறையவே நியாயங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இங்கு பிரதான தவறுகளைச் செய்தவர்கள், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் என்றாலும், மறைமுகமாக, முஸ்லிம் சிவில் சமூகம், ஜம்மியத்துல் உலமா சபை போன்ற அங்கிகரிக்கப்பட்ட மத அமைப்புகள், புத்திஜீவிகள், படித்தவர்கள், அந்தந்த ஊர்களின் பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புகளும் இந்த விடயத்தில் தவறிழைத்து இருக்கின்றன.

மிக முக்கியமாக, முஸ்லிம்களுக்கான அரசியல், இவ்வாறு தடம்மாறிப் போனமைக்கும், இன்னும் சரியான வழிக்குத் திரும்ப எத்தனிக்காமைக்கும், முஸ்லிம் வாக்காளப் பெருமக்களும், பெரும் பொறுப்பை, ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஓர் உள்ளுராட்சி சபை உறுப்பினரில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் வரைக்கும், எல்லாப் பதவிகளுக்குமான அரசியல்வாதிகள், வேறு யாராலும் தெரிவுசெய்யப்படுவதும் இல்லை; வானத்தில் இருந்து இறங்குவதும் கிடையாது.

ஒவ்வொரு தேர்தலிலும், மக்கள் பிரதிநிதிகளை இந்தச் சமூகம்தான், வாக்குப் போட்டுத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றது. சமூக சிந்தனை அற்றவர்கள், மதுப் பிரியர்கள், சபலப் புத்திக்காரர்கள், போதை வியாபாரத்துக்கு உதவுபவர்கள், பணத்தைச் சுருட்டிக் கொள்பவர்கள், சுயநலவாதிகள், பயந்தாங்கொள்ளிகள் என்று, மக்களால் அடையாளப்படுத்தப்பட்டு, விமர்சிக்கப்படுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை, அடுத்த தேர்தலிலும் வாக்குப் போட்டு அனுப்புகின்றவர்கள் முஸ்லிம் சமூகம்தான்.

அதேபோன்று, இலங்கையில் வாழ்கின்ற 22 இலட்சம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டிய அதேநேரத்தில், முஸ்லிம் சமூகத்தின் பலமான தளமான வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களின் உரிமைசார்ந்த விடயங்களில், அதீத அக்கறை காட்டுகின்ற, நெஞ்சுறுதியும் நேர்மைத் திறனும் கொண்ட அரசியல் தலைமைத்துவம் ஒன்றை, இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்றது. அதேவேளை, ஏதாவது ஓர் அரசியல் கட்சியின், குழுவின் பொருத்தமற்ற தலைவர்களை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் என்று கொண்டாடுகின்ற பெரும் தவறுக்காகவும் இந்த முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இன்றைய காலகட்டம், சிந்திப்பதற்கு மிகப் பொருத்தமான காலமாகும். கொரோனா  வைரஸ் பரவியதன் காரணமாகவும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலான வழக்குகள் காரணமாகவும் தேர்தல் இன்னும் தள்ளிப்போகும் என, எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் சமூகம், தமது அரசியல் தலைமைகள், மக்கள் பிரதிகள் முதல் இந்தத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் வரை, மீள் வாசிப்பொன்றை நிகழ்த்த வேண்டியிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த நாட்டில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம், இயல்பு வாழ்க்கைக்குள் மக்களை வலிந்து தள்ளுவது மட்டுமன்றி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான முன்-களநிலைகளையும் ஏற்படுத்துவதற்கு, அரசாங்கம் எடுத்த முயற்சிகள், இதுவரை திட்டமிட்டபடி கைகூடி வரவில்லை.

மார்ச் இரண்டாம் திகதி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையால் அரசியலமைப்பின்படி மூன்று மாதங்களில் அதாவது, ஜூன் இரண்டாம் திகதி, புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால், கொவிட்-19 தொற்றுப் பரவியதால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால், தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் இதுவரை உருவாகவில்லை. இந்த நிலையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழு ஏப்ரல் 25ஆம் திகதி, தேர்தல் நடைபெறாது என அறிவித்ததுடன், பின்னர் புதிய வாக்கெடுப்பு தினமாக, ஜூன் 20ஆம் திகதியை அறிவித்தது.

மூன்று மாதங்களுக்கு அப்பால், காலத்தை இழுத்தடிக்க முடியாது என்றும் எனவே, பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் ஒரு தரப்பினர் அரசாங்கத்தைக்  கோரி வருகின்றனர். ஆனால், அரசாங்கத்துக்கு முன்னைய எம்.பிக்களைக் கொண்ட நாடாளுமன்ற அமர்வைக் கூட்டுவதில், ஒரு துளியளவு கூட, விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில், ஆளும் தரப்பு, நிச்சயிக்கப்பட்ட பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

எனவேதான், எப்பாடுபட்டாவது தேர்தலை நடத்துவதற்கு, அரசாங்கம் பகிரதப் பிரயத்தனங்களை எடுக்கின்றது. ஆனால், ஜூன் 20ஆம் திகதி, நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலைச் சவாலுக்கு உட்படுத்தியும் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரியும் பல மனுக்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள், திங்கள்கிழமையில் (18) இருந்து, உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில், மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், 'தற்போது நாடு இருக்கின்ற நிலையில், ஜூன் 20ஆம் திகதி, தேர்தலை நடத்த முடியாது' எனத் தெரிவித்தார். இதனால், தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில், நீதிமன்றம் கரிசனை செலுத்தும் வாய்ப்புள்ளது.

முன்னதாக, ஜூலை 11இல், தேர்தல் நடக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் கூட, நாடாளுமன்றத் தேர்தலானது செப்டெம்பர் வரையும் தள்ளிப் போவதற்குச் சாத்தியங்கள் உள்ளதாக, தற்போது அனுமானங்கள் வெளியாகியுள்ளன.

இன்னும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, மக்கள் மீண்டு, முற்றாக வழமைக்குத் திரும்பாத சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவானது தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதும், அதில் மக்கள் கணிசமானளவு வாக்களிப்பதும் சவால்மிக்க விடயங்களாகும். அத்துடன், சாதாரண மக்கள், தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் மனநிலையிலும் இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இருப்பினும், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி, ஜுன் இரண்டாம் திகதிக்கு  முன்னர், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு முடியாமல் போனால், அரசாங்கம்தான் இவ்வாறு தேர்தல் தள்ளிப் போவதால், பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கப் போகின்றது. தேர்தலை நடத்தவும் முடியாத, ஆனால், நாடாளுமன்றம் செயற்படாத நிலையில், நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் முடியாத ஓர் இக்கட்டான சந்தில், அரசாங்கம் நிறுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிகின்றது.

நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமையால், அரசாங்கமும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும், கொவிட்-19 தொற்று ஒழிப்பு விடயத்தில், இவ்வளவு நாளும் கூடுதலான கவனத்தைச் செலுத்த முடிந்ததோ, அதுபோல, இலங்கை முஸ்லிம் சமூகம், தேர்தல் தாமதத்தின் காரணமாகத் தமக்குக் கிடைத்திருக்கின்ற காலஅவகாசத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம் அரசியல்,  அரசியல்வாதிகள் பற்றிய மீள்பரிசீலனை ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நாட்டின் இன்றைய அரசியல் சூழல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள இனவாத, மதவாத மற்றும், அரசியல் நெருக்கடிகள், முஸ்லிம் தலைமைகளின் கொள்திறன் ஆற்றல், அரசியல் பிரதிநிதிகளின் பண்புகள், முஸ்லிம் அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்ற வழித்தடம் ஆகிய விடயங்களை, முஸ்லிம் மக்கள் சிந்திக்க, இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், அது இன்றியமையாததும் கூட.

தேசிய அரசியலைப் பாருங்கள்; தமிழர் அரசியலைப் படியுங்கள்; முஸ்லிம் அரசியலைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்ப்பதற்குத் தவற வேண்டாம். விடுதலைப் போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைத்தளங்களில் பிதற்றும் பத்தாம்பசலிகள் போல, அரசியல் பற்றிய தெளிவான நடுநிலைப் பார்வையின்றி, சமூகத்துக்கான அரசியல் என்ற போர்வையில், கட்சிசார், ஆள்சார் அரசியலைப் பேசுகின்ற சிறுபிள்ளைத் தனங்கள், முஸ்லிம் அரசியலில்  நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் தேசிய அரசியலை, சுதந்திரத்துக்கு முன்னரான, பின்னரான அரசியலாக வேறுபடுத்தி நோக்குவதைப் போன்று, முஸ்லிம்களின் அரசியலையும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபுக்கு முன்னர் - பின்னரான அரசியலாக நோக்க முடியும்.

சுதந்திரத்துக்கு முன்பிருந்து, 70கள் வரையும் முஸ்லிம் அரசியல் என்பது, பெரும்பாலும் நேரடியாகச் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற பெரும்பான்மைக் கட்சிகளை மய்யமாகக் கொண்டிருந்தது.

பாக்கீர் மாக்கார், பதியுதீன் மஹ்மூத், ஏ.சீ.எஸ். ஹமீட், எம்.எச். மொஹமட், ரி.பி.ஜயா போன்ற புத்திசாலித்தனமான அரசியல் மேதைகளும் அதேபோன்று அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் போன்ற நிர்வாக அதிகாரிகளும் முஸ்லிம் சமூகத்துக்கு, இன்றிருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொடுத்ததை விடவும், பலமடங்கு அதிகமானதும் காலத்தால் அழியாததுமான உரிமைகள், அபிவிருத்திகளைச் சத்தமின்றிப் பெற்றுக் கொடுத்தனர். அதற்காக, அவர்கள் தங்களை முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்று அழைத்துக் கொள்ளவும் இல்லை; மூலைமுடுக்குகள் எல்லாம், வாக்குக் கேட்டு வரவும் இல்லை.

இதற்குச் சமாந்திரமாக, செனட்டர் மசூர் மௌலானா உள்ளிட்ட ஓரீர் அரசியல்வாதிகள், 1960 இலிருந்தே, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டனார. இதில், பிற்காலத்தில் அஷ்ரப்பும் இணைந்து கொண்டார். தமிழ் ஆயுதக் குழுக்களாக அறியப்பட்ட அரசியல் இயக்கங்கள் பலவற்றில் இணைந்து, பஷீர் சேகுதாவூத் உள்ளடங்கலாக, மேலும் பலரும் பிரதிநிதித்துவ அரசியலைச் செய்தனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் தங்களுக்குப் பிரத்தியேகமான ஒரு தனித்துவ அடையாள அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணரத் தலைப்பட்டனர். அதற்குக் காரணமாக அமைந்த களநிலைமைகள், நாம் அறிந்தவை என்பதுடன், இப்பத்தியில் பல தடவை விவரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதங்களின்பால் செல்லாமல் தடுப்பது மட்டுமன்றி, சமூகத்தை அரசியல் மய்யப்படுத்தி, இன அடக்குமுறையை எதிர்கொள்வதும் இச்சிந்தனையின் ஆணி வேராக இருந்தது எனலாம்.

சமூக சிந்தனையாளரும் முன்னோடி அரசியல் செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம். மொஹிதீனே, இந்தத் தனித்துவ அடையாள சிந்தனையின் பிறப்பிடமாகக் கருதப்படுகி;ன்றார். அவரிடமிருந்து, அச்சிந்தனையைக் கொண்டு வந்து, அஷ்ரபிடம் சேர்;த்தவர் எம்;.எச். சேகு இஸ்ஸதீன் எனலாம்.

மு.காவை ஸ்தாபித்த அஷ்ரப், அதை மிகத் திறமையாக மக்கள் மயப்படுத்தினார் என்பதே உண்மையாகும். அன்றைய காலகட்டத்தில், அதற்குச் சாதகமான பின்புலச் சூழலும், முஸ்லிம் சமூகத்தில் இருந்தது.

இப்படியாக, ஓர் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட 'முஸ்லிம் கட்சி' அரசியலானது, ஸ்தாபகத் தலைவரின் மறைவுக்குப் பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல, உருக்குலைந்து போயிருக்கின்றது என்பதற்கு, நீங்களும் நானுமே சாட்சியாளர்கள்.

ஒன்றில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் போல அல்லது, அதைவிடவும் சிறப்பாக முஸ்லிம்களுக்கான, தனித்துவ அடையாள அரசியலைச் செய்ய வேண்டும். இச் சமூகத்துக்கு இருக்கின்ற அடிப்படை, உரிமைசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் காத்திரமான அரசியல் நகர்வுகளைச் செய்ய வேண்டும். அவ்வாறில்லாவிடின், அஷ்ரபுக்கு முன்னைய முஸ்லிம் அரசியல்வாதிகள் சாதித்ததைப் போல, இணக்க அரசியல் ஊடாக, சமூகத்துக்கு அவசியமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனால், இன்று இந்த இரு பண்புகளும் அற்ற, 'இரண்டும் கெட்டான்' ரக அரசியலையே, முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மைக் கட்சிகளுக்கு, 'பணிவிடை' செய்கின்ற கட்சிகளாகவே, முஸ்லிம் கட்சிகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, சமூகத்தின் குரலாக அல்லளூ ஆட்சிக்கு வெளியில் இருந்தாலும், உள்ளே இருந்தாலும் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய கட்டத்தில் ஆதரிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. 'வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை' என்ற அணுகுமுறையின் காரணமாகவே, முஸ்லிம்களுக்கான அரசியல், நடுத்தெருவில் நிற்கின்றது.

இவ்வாறு சமூகத்துக்கு உதவாத அரசியலாக, முஸ்லிம்களின் அரசியல் மாறிப் போனதற்கு, பின்வந்த அனைத்து சிறிய, பெரிய முஸ்லிம் கட்சித் தலைவர்களும் செயலாளர்களும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அரசியல் தலைமைகளும் அரசியல் பிரதிநிதிகளும் மாத்திரமே இந்த நிலைக்குக் காரணமானவர்கள் அல்லர். ஏனெனில், ஒவ்வொரு தேர்தலிலும் (தேசியப் பட்டியல் தவிர) உறுப்பினர்களை மக்கள்தான் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றார்கள்ளூ பொருத்தமற்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதும் மக்கள்தான்.

இப்பத்தியின் ஆரம்பத்தில், குறிப்பிடப்பட்டதைப் போன்ற பல்வேறு மோசமான பண்புகளைக் கொண்ட, எத்தனையோ அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலை நிரப்பி இருக்கின்றார்கள். ஆனாலும், அவர்கள் ஒருபோதும் மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதற்காகவோ, சமூகத்துக்காக உரிய தருணத்தில் குரல் கொடுக்கவில்லை என்பதற்காகவோ, மானக்கேடான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவோ, அதைச் சொல்லிச் சம்பந்தப்பட்டவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்ட வரலாறு கிடையாது.

குறிப்பாக, இதுபற்றி உலமா சபையோ, பிராந்திய அமைப்புகளோ, பள்ளிவாசல்களோ குறிப்பிட்;ட அரசியல்வாதிகளிடம் பகிரங்கமாக ஒரு விசாரணையை நடத்தி, அவர்கள் சமூக அரசியலுக்குப் பொருத்தமற்றவர்கள் என்றால், அவர்களது முகத்திரைகளைக் கிழித்து, அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டிய பாரிய பொறுப்பைக் கூடச் செய்யத் தவறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், இதைச் செய்யாமல், முஸ்லிம் மக்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பேர்வழிகளுக்கு வாக்குப் போட்டு, உள்ளுராட்சி சபைக்கு, மாகாண சபைக்கு, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சமய அமைப்புகளும் சிலபோதுகளில் யாரோ ஓர் அரசியல்வாதிக்காக 'கூஜா' தூக்குவதைக் காணக்கின்றோம்.

இப்படி நடந்தால், எந்த அரசியல்வாதியாவது திருந்துவாரா? முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல், முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலாக மாறுமா?

மக்களாகிய நீங்கள், இப்போது சொல்லுங்கள்..... முஸ்லிம் அரசியல் பொருத்தமற்ற தலைவர்கள், அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக ஆக்கப்பட்டு, இந்தளவுக்கு வழித்தடம் மாறிப் பயணிக்கின்றமைக்கு யார் காரணம் எனச் சொல்லுங்கள். எனவே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தாமதமாகிக் கொண்டிருக்கும் இந்தக் கால இடைவெளியைப் பயன்படுத்தி, அது பற்றிச் சிந்தியுங்கள்.

மாற்றம், மக்களில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X