விக்னேஸ்வரனின் விலகல் உறுதி

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது.  

ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார்.  

அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது; புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது; மற்றொரு கட்சியில் இணைவது; நான்காவதாக, கட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது.  

முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து நடந்த, ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட இரண்டு தெரிவுகள், பேரவையின் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.  
அவற்றில் ஒன்று, விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்க்கைக்குச் செல்வது. இரண்டாவது, கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கி, மக்கள் அரசியலை முன்னெடுக்கும் அவரது யோசனை. இந்த இரண்டும் பொருத்தமற்றது என்று, தமிழ் மக்கள் பேரவையால் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முதலமைச்சர் தனிக் கட்சியை அமைப்பது பற்றிய யோசனைக்கு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் கூட, ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.  

எது எவ்வாறாயினும், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, இன்னமும் எந்த முடிவையும் எடுக்காத முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்பது பற்றியோ, அதிலேயே மீண்டும் போட்டியிடுவது பற்றியோ பேசவேயில்லை.  

இதற்கு முன்னர், மூன்று தெரிவுகள் பற்றி, அவர் ஊடகங்களிடம் பேசியிருந்தார். அதில், ஒன்று கூட்டமைப்பிலேயே தொடர்ந்து போட்டியிடுவது என்ற தெரிவு.  

 ஆனால், இப்போது அவர், அதைத் தனது ஒரு தெரிவாக முன்வைக்கவில்லை. அதைவிட, 2009இல் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டுவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இனிமேலும் ஒட்டியிருக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார்.   கூட்டமைப்பு ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டு விட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு, மீண்டும் அவரால், கூட்டமைப்புடன் இணைந்து, தேர்தல்களில் நிற்க முடியாது; அது அறமும் அல்ல.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை, முன்னரேயே எடுத்து விட்டார். அண்மையில், வல்வெட்டித்துறையில் அவர் உரையாற்றிய போது, தமிழ்த் தலைமைகளின் மீது, ஒட்டுமொத்தமாகப் பழியைப் போட்டு, குற்றம்சாட்டியிருந்தார்.  

அதுபோதாதென்று, முதலமைச்சரின் சகபாடிகளில் ஒருவரான, மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், “கூட்டமைப்பு ஒரு கூழ் முட்டை” என்றும், “அதை இனி அடைகாப்பதில் பயனில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் வழியே தான், இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தோல்வி கண்டுவிட்டது என்ற பிரகடனத்தைச் செய்திருக்கிறார்.  

அவ்வாறாயின் அதன் அர்த்தம், புதியதொரு தலைமை தமிழ் மக்களுக்குத் தேவை; புதியதோர் அணுகுமுறை தேவை என்பது தான்.  

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அந்த தலைமைத்துவ வகிபாகத்தை விக்னேஸ்வரன் இப்போது கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.  

தமிழ் மக்களின் ஒற்றுமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து, கடந்த ஒரு தசாப்த காலமாக, பரவலாக வலியுறுத்தப்பட்டு வந்தது. பல்வேறு தவறுகள், குறைபாடுகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் இருந்த போதும், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் கூட்டமைப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பது, பொதுவான நிலைப்பாடாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் என்ற நிலையைத் தான், விக்னேஸ்வரன் உடைப்பதற்கு எத்தனித்திருக்கிறார்.   

கூட்டமைப்பு தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டுவிட்டது என்று அவர் பிரகடனம் செய்துள்ளதன் மூலம், இன்னொரு தலைமையைத் தெரிவு செய்யத் தயாராக வேண்டும் என்பதை அறிவித்திருக்கிறார். இது மாற்றுத் தலைமை பற்றி வலியுறுத்தி வந்த தரப்புகளின் கருத்துகளுடன் அவர் நெருங்கிச் சென்று விட்டார் என்பதைப் புலப்படுத்தி இருக்கிறது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான, தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், விக்னேஸ்வரனை மீண்டும் போட்டியில் நிறுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.  

ஒருவேளை, தமிழரசுக் கட்சியே கூட, அவரை மீண்டும் களத்தில் இறக்க நினைத்தாலும், அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால், தோல்வி கண்டு விட்ட கூட்டமைப்பின் சார்பில், அவரால் போட்டியில் நிற்க முடியாது. அவ்வாறு நின்றால், அது விக்னேஸ்வரன் என்ற ஆளுமையின் தோல்வியாகவே விமர்சிக்கப்படும்.  

விக்னேஸ்வரனின் இந்த முடிவு, சரியா - தவறா என்பதற்கு அப்பால், அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள், அவரை மீண்டும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது, இரண்டு தரப்புகளுக்குமே ஏற்றதாக இருக்காது.  அண்மையில், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணி விடயத்தில் கூட்டமைப்புக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்தார் என்று கூறினால் அது தவறு; அந்த முடிவு அவரால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது.  

முன்னர், தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்ற அடிப்படையில் தான், அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். இப்போது, அவர், ‘அணுகுமுறை’ என்ற விடயத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.  

அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவற்றுக்குத் தீர்வு காணும் விடயங்களில், கூட்டமைப்பின் அணுகுமுறையைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். செயலணிக் கூட்டத்தின் பிரதிபலிப்பு அதில் தெரிகிறது.  

அதேவேளை, கூட்டமைப்பு, தோல்வி கண்டு விட்டது என்று தெரிந்த பின்னரும், எதற்காக அவர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகிய முதலமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி நியாயமானது.  

ஏற்கெனவே அவரைப் பதவியில் இருந்து விலகுமாறும், அது அனுதாப வாக்குகளைப் பெற்றுத்தரும் என்றும் சிலர் ஆலோசனைகளைக் கூறியிருந்தனர்.  

ஆனாலும், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர அவர் தயாராக இல்லை. முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன், தனக்கு எழுதித் தரப்பட்ட ஓர் ஒப்பந்தம் போலவே பார்க்கிறார்.  

இன்னும் சில வாரங்களில், வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து விடும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், அதற்குப் பின்னரே, தனது முடிவை அறிவிப்பார் என்பது திண்ணம்.  

கூட்டமைப்பு தான், அவரை அரசியலுக்கு அழைத்து வந்து, முதலமைச்சர் பதவியையும் பெற்றுக் கொடுத்தது. அந்த முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, கூட்டமைப்பை விமர்சித்து, அரசியல் செய்த விக்னேஸ்வரன், அந்த முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, தனது அடுத்த கட்ட அரசியலுக்கும் தளம் அமைப்பது தார்மீகமாகப் பார்க்கப்படாது.  

அதாவது, கூட்டமைப்பால் கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து கொண்டே, இன்னொரு கட்சியை ஆரம்பிப்பது, இன்னொரு கட்சியுடன் இணைவது, அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்தி விடும்.  

அதைத் தவிர்க்கவே, கூட்டமைப்பின் ஒப்பந்தம் முடியும் வரையில், அதாவது மாகாணசபையின் ஆயுள் பூர்த்தியாகும் வரையும் அவர் பொறுத்திருக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு முன்னர், அவரது வாயை எப்படித் தான் கிளறினாலும், சுற்றி வளைத்து எதையோ சொல்லி விட்டு, நழுவிக் கொள்வார் என்றே தெரிகிறது. ஆனாலும், தமிழ்த் தேசிய அரசியலின் வரலாறு, தனக்குக் கொடுத்துள்ள பொறுப்புக் குறித்து, ஆராய்வதாகக் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.  

அதாவது, கட்சி அரசியலின் ஊடாக மீண்டும் மாகாண சபையைக் கைப்பற்றும் இலக்குடன் நகர்வதா மக்கள் அரசியலின் ஊடாகத் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாஷைகளுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதா என்ற இரண்டு தெரிவுகள் தான், அவரிடம் உண்மையாகவே உள்ளன போல்த் தெரிகிறது. அதில் அவர் எந்த முடிவை எடுத்தாலும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிக்கலானது தான். கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, தமிழரின் அரசியல் அடையாளம் என்ற நிலையை, இல்லாமல் செய்யும் அரசியல் நகர்வுக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், பாதை அமைக்கத் தொடங்கி விட்டார்.  
‘எலி கொழுத்தால் வளையில் தங்காது’  என்பது பழமொழி. அப்படிப்பட்ட  நிலையில்தான் விக்னேஸ்வரன் இருக்கிறார்.  

தெரிந்தோ தெரியாமலோ, அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த கூட்டமைப்பு, தனக்குத் தானே புதைகுழியைத் தோண்டியிருக்கிறது.    


விக்னேஸ்வரனின் விலகல் உறுதி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.