2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

வெறும் விழலுக்கு இறைத்த நீர்

காரை துர்க்கா   / 2018 ஜனவரி 30 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில், தற்காலிக கொட்டிலில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு, சிறிலங்கா பொலிஸார் வீடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீட்டைப் பொலிஸ் மா அதிபர், நாடாவை வெட்டித் திறந்து வைத்து, வீட்டின் திறப்பையும் குடும்பத்தினரிடம் கையளித்தார்.   

யாழ்ப்பாணத்தில் படைத்தளபதியின் ஏற்பாட்டில், இரண்டு நிறுவனங்கள் இணைந்து, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு, வருடாந்தம் ஐயாயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்குப் புலமைப்பரிசில் வழங்க உள்ளது.   

படையினரால் வன்னியில் வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பவற்றைப் புனரமைக்கும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. படையினர் குருதிக் கொடைகளை வழங்கி வருகின்றனர்.  
 அண்மைய நாட்களில், இவ்வாறான செய்திகளே ஊடகங்களை ஊடறுக்கும் புதினங்களாகக் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் நன்மை பெறும் நல்ல விடயங்கள் நடக்கின்றன. நடக்கட்டும்; யார் குற்றியும் அரிசி ஆகட்டும்.   

இத்தகைய நன்மைகளைப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போரை நடாத்தி, வெற்றி அடைந்தவர்கள் செய்யும் பிரதியுபகாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது, குற்றஉணர்ச்சி குடைந்து எடுப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு விதத்தில், தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றுச் சபை ஏறியோர், உறங்குவதால், இவர்கள் விழித்திருக்கின்றனர் எனவும் எடுத்துக் கொள்ளலாம். சரி! எப்படியாவது இருக்கட்டும்.  

ஆனால், மறுவளமாகப் பார்த்தால், தமிழ் மக்கள் முப்பது வருட காலமாகப் பெரும் கொடும் போரை, அதன் நீட்சியான சேதாரங்களை, அழிவுகளை எதிர்கொண்டவர்கள்.   

மரணங்கள் மலிந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். சொந்தவாழ்க்கையிலும் மற்றும் தமது சமூகக் கட்டமைப்புகளிலும் நிறுவன அமைப்புகளிலும் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தவர்கள். 

சிதைந்த உடல்கள், உருக்குலைந்த உறவுகளின் உடல்கள் ஆகியவற்றின் ஓயாத இரத்த வாடைக்குள் வாசம் செய்தவர்கள்.   

காயப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாது, கைவிட்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்; இறந்தவர்களின் இறுதிக்கிரியைகளைச் செய்ய முடியாது, பதறியோட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்; வாழ்வைப் பாதுகாக்கப் பதுங்குகுழிகளை நாடி, அவையே அவர்களின் புதைகுழிகளாக மாறிய சம்பவங்கள் நிறையவே உள்ளன. இவ்வாறாகத் துன்பியலுக்குள் துவண்டவர்கள்.  

இவைகள் வெறுமனே இலகுவாகக் கடந்து செல்லக் கூடிய, மறந்து அல்லது மறைத்து விடக் கூடிய விடயங்கள் அல்ல. அது அவர்களின் மனதில் ஆழ அகலமாக ஊடுருவி, அழிக்க முடியாத படிமங்களாகப் பதிந்து விட்டன; உறைந்து விட்டன. மீண்டும் மீண்டும் கனவுகளில் வந்து உரத்து உறுத்துகின்றன.   

தாம் அதிஷ்டவசமாக அல்லது தெய்வாதீனமாகப் போர் அனர்த்தத்திலிருந்து உயிர்தப்பியிருந்தாலும் தம் உறவுகளை மீட்க முடியாத பாவிகளாகி விட்டோமே என்று, நாளாந்தம் குற்றஉணர்ச்சியில் உள்ளனர். 

அதனால், ஒருவித கையறு நிலையில் காணப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, குறித்த குடும்ப உறவுகள், நண்பர்கள், சொந்தபந்தங்கள் என மொத்த சமூகமும் மீள முடியாத துயரத்தில் மூழ்கி உள்ளது.   

போரின் பாதிப்புகளிலிருந்து இன்றும் வெளிவர முடியாது தவிக்கும் இலட்சக்கணக்கானோர், வீட்டில் தனியே ஒதுங்கி இருத்தல், சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல், தற்கொலைக்கு முயற்சி செய்தல், நம்பிக்கை இழத்தல், வாழ்க்கையை அர்த்தமற்ற நிலையில் நோக்குதல் எனப் பல்வேறு உளநெருக்கீட்டு நிலையில் நாட்களைக் கடத்துகின்றனர்.   

இதனால் இவர்கள், தனிமனித கௌரவம், மரியாதை, மானம் இழந்து ஒட்டு மொத்தத்தில் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.   

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டில் ஆயுதப் போர் மௌனிக்கப்பட்டது.

அவ்வேளையில், மக்கள் அடுத்து என்ன செய்வது என அறியாது காணப்பட்டனர். இந்நிலையில், வவுனியா, செட்டிகுளம் இடைத்தங்கல் முகாம்களுக்குப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.   

இக்காலப்பகுதியில், புலிகளுடன் தொடர்பு உடையவர்களை விசாரனைக்காக, சரணடையுமாறு படையினர் கோரினர். விசாரனைகளின் பின், மீண்டும் விடுவிப்பார்கள் என்று நம்பிய அப்பாவி மக்களும், நம்பிக்கையுடன் தங்கள் கண் முன்னே தம் உறவுகளைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளித்தனர்.   

சிறியவர்கள் என்றாலென்ன, இளைஞர்கள் என்றாலென்ன, எங்களின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலே பதறுகின்றோம். பெரும் வருத்தங்கள் எனின் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து எடுக்கின்றோம். கோயிலுக்கு நேர்த்தி வைக்கின்றோம்.   

இவ்வாறான சூழ்நிலையில், தங்கள் உறவுகளைக் கையளித்தவர்கள் இன்று வரை மீண்டும் மீண்டு வருவார்களா என்ற ஏக்கத்துடன் தம் உறவுகளைத் தேடி வருகின்றனர். படையினரோ அல்லது அவ்வாறு செய்யுமாறு பணித்தவர்களோ அதனுடன் எந்த விதத்திலும் எள்ளளவும் சம்பந்தம் இல்லாதவர்கள் போல உள்ளனர்.   

மக்கள் அவர்களை விடுவிக்குமாறு கோரித் தெருவோரங்களில் அழுதும் புரண்டும் ஓயாத போராட்டம் நடத்தி, ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தும் உள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்தும் வருகின்றனர்.   

இவ்வாறாகத் தன் அப்பாவை, சித்தப்பாவை, மாமாவை எட்டு வருடங்களாகக் காணாது சதா அழுது வாழும் ஒரு மாணவனுக்கு, இவ்வாறான புலமைப்பரிசில்கள், அவர்களைத் ஈட்டித் தருமா? அவர்களின் பாசத்தை அல்லது நேசத்தை அது வழங்குமா? அவனுக்கு அவனின் இரத்த உறவுகள் இருந்தால் ஏன் மாற்றாரின் உதவிகள் தேவை?   

கோப்பாபுலவில் தமது காணிகளைப் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்குமாறு மக்கள் பல மாதங்களாக வீதியில் போராட்டம் நடத்துகின்றனர். வெயில், பனி, மழை எனப் பலவற்றுக்கு மத்தியில் சளைக்காது, எவ்வித அரசியல் ஆதரவும் இல்லாது தற்போதும் அவல அகதிகளாக அல்லல்படுகின்றனர். இதனை அகிலமே அறியும்.  

தமிழ் மக்களது பண்பாட்டுத் திருவிழா எனப் போற்றப்படும் பெருநாள் தைப்பொங்கல் ஆகும். தங்களது உயர்வான வேளாண்மைச் செய்கைக்குப் பல வழிகளிலும் உதவிய, சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செய்தியை, உணர்த்தும் பெரு விழாவாகத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது.  

தமது வீட்டு முற்றத்தில், சுற்றுச்சூழலுடன் பிள்ளைகுட்டிகளுடன் மிகவும் சிறப்பாகச் சிறுவர்களின் பட்டாசு முழங்க, பொங்கி, பகவானுக்குப் படைத்து, உறவுகளுக்குப் பரிமாறி, மகிழ்ச்சியுடன் உண்டார்கள்.   

இவ்வாறான பெரும் விழாவை, இந்தத் தடவை மக்கள் வீதியில் கொண்டாடி (?) உள்ளனர். யாரும் அற்ற அநாதைகளாகத் தெருவில் குடும்பம், தெருவில் பொங்கல், தெருவில் படிப்பு, தெருவில் வாழ்க்கை எனத் தாம் பிறந்த தாய் நாட்டின் தெருவில் சீவிக்கின்றனர்.   

ஆனால், அவர்களின் பூர்வீக அல்லது சொந்த மண்ணைப் பெரும் இராணுவக் குடியிருப்புகள், படையினருக்கான விளையாட்டுத்திடல்கள், நீச்சல்தடாகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் என்பன அலங்கரிக்கின்றன. ‘தேசிய பாதுகாப்பு’ என்ற ஒற்றை வரியுடன், பல ஆயிரம் படையினர், பல ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தைப் பரிபாலனம் செய்கின்றனர்.   

படைக்குறைப்பு மற்றும் படை விலகல் என்பவற்றை மேற்கொள்ளுமாறு பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து அழுத்திக் கூறி வந்தாலும், படையினரின் பாணியில், இலங்கை அரசாங்கத்தின் போக்கில், மாற்றம் எதையும் இதுவரை கண்டறிய முடியவில்லை.   

பெரும் போர், தமிழ் மக்கள் மீது, உடல் காயங்கள், மரணங்கள், இழப்புகள்,பேரழிவுகள் எனப் பல்வேறு வகையிலான தொடர் துன்பங்களைத் திணித்தது. இவையெல்லாம் வெளியே பேசப்படும் விடயங்கள் ஆகும்.   

ஆனால், இவற்றினால் ஏற்படும் உளத்தாக்கங்கள் தனிநபர், குடும்பம் என அதன் வழியே தமிழ்ச் சமூதாயத்தையே தினம் தினம் உலுப்பி எடுத்தக் கொண்டிருக்கின்றது.   

 வடக்கு, கிழக்கு வாழ் முழுத் தமிழ்ச் சமூதாயமுமே இந்த நிலைமைக்குள் 
மு​ழுமையாக மூழ்கடிக்கப்பட்ட நிலையில் இருந்து, மீண்டௌ முடியாத நிலையில் திணறிக் கொண்டிருக்கின்றது. அதாவது, கடந்த காலத்தில் தான் இழந்தவற்றின் மூலம் இயற்கையாகத் தோன்றும் துன்ப நிலையைக் காட்டிலும் வேறோரு விதமான நோய்த்தன்மை கொண்ட பலவீனமான நிலையில் தமிழ்ச் சமூகம் உள்ளது.   

ஆகவே, இவை எல்லாவற்றுக்கும் கடந்த காலத்திலும், ஏன் நிகழ்காலத்திலும் எதிர்கொண்ட, படை நடவடிக்கைகளே காரணமாக அமைகின்றன.   

‘பஞ்சம் மாறும் ஆனால் பஞ்சத்தில் பட்ட வடு மாறாது’ என்பார்கள். அதேபோல, போர் ஓய்ந்தாலும் அதன் எதிர்வினைகள் (விளைவுகள்) ஓயவில்லை. அதுபோலவே, தமிழ் மக்களின் மனங்கள் அமைதி பெறவில்லை. மனங்கள் ஒவ்வொன்றும் உள்ளூறப் பெரும் சமர் புரிந்து கொண்டிருக்கின்றது.   

நமது தாய் நாடு, எழுபது வருட சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் பிறிதொரு சமூகம், எழுபது வருட அவல வாழ்வு எப்போது நீங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.  

 ஆகவே, படையினரும் அவர்களை ஏவிய அரசாங்கமும் இதய சுத்தியோடு, தமிழ் மக்கள் முழுமையாக நம்பும்படியான நிரந்தரத் தீர்வுகளை நோக்கிப் நகர வேண்டும்.   

அவர்கள் கடந்த காலத்தில் இழந்த உலகத்தை, மீள உருவாக்க, நம்பிக்கை தரக் கூடிய வகையில் பயனிக்க வேண்டும். இல்லையேல், இவர்களின் இவ்வாறான முயற்சிகள் எல்லாம், வெறும் விழலுக்கு இறைத்த நீரேயாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X