2019 நாடாளுமன்றத் தேர்தல்: மோடி கணக்கும் சோனியா கணக்கும்

பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நான்காவது நிதி நிலை அறிக்கை என்றாலும்- இதுதான் இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் முழு நிதிநிலை அறிக்கை. 

2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அடுத்த வருடம் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த நிதிநிலை அறிக்கை தேர்தலைச் சந்திப்பதற்கான களத்தைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்தப் பொறுப்பை, அவர் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றே கூற வேண்டும். ‘சூட் பூட் சர்க்கார்’ என்று பிரதமர் நரேந்திரமோடியை விமர்சித்து வந்தார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அந்த விமர்சனத்துக்கு முக்கிய காரணம், நிதியமைச்சராக இருக்கும் அருண்ஜேட்லி கோர்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதற்கு முன்பு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அளித்த சலுகைகள்தான். 

அந்தப் பாதையிலிருந்து விலக, இந்த நிதி நிலை அறிக்கையில், நிதியமைச்சர் முயற்சி செய்திருக்கிறார்.  
பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் சார்பிலான ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும், ஒவ்வொரு முத்தாய்ப்பான அறிவிப்பு இருக்கும். 

அந்த மாதிரி அறிவிப்பு, முதல் முறையாக மத்திய அரசாங்கம், ஏழைகளின் மருத்துவச் செலவுக்காக குடும்பத்துக்கு ஐந்து இலட்சம்’ வருடத்துக்கு வழங்கும் திட்டம். மருத்துவச் செலவுகளுக்காக மக்கள், குறிப்பாக கீழ்தட்டு மக்கள், தங்கள் பெரும்பகுதி வருமானத்தை செலவழிக்க வேண்டிய நேரத்தில், அதுவும் குறிப்பாகத் தங்கள் சொத்துகளைக் கூட விற்று செலவழிக்கும் சூழலில், மத்திய அரசாங்கம் இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது, சிறப்பான அம்சம் என்பதில் சந்தேகமில்லை. 

பத்துக் கோடி குடும்பங்களுக்கு இந்த உதவி என்றும், இதனால் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என்பதும், இந்திய மக்கள் தொகையான 120 கோடியில், 50 கோடிப் பேரின் மருத்துவச் செலவை ஏற்க, அரசாங்கம் முன்வருவது தேர்தலைச் சந்திப்பதற்கான முதல் பிரசார வியூகமாகவே கருதப்படுகிறது. ஆனால், பொருளாதார நிபுணரும் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருமான சி. ரங்கராஜன், “சுகாதாரத் திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் செலவாகும்” என்று குறிப்பிட்டிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.   

பா.ஜ.க தலைமையேற்கும் மத்திய அரசாங்கம், விவசாயிகள் நலனைக் கையிலெடுத்து இருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை, இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று அறிவித்து, அது தொடர்பான பல்வேறு சலுகைகளை வெளியிட்டிருக்கிறது. 

விவசாயிகள் தற்கொலைகளை மத்திய- மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஏற்கெனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்கு 11 இலட்சம் கோடி, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்துத் தரப்பட்ட விளை பொருளுக்கும் 1.5 சதவீத குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க வழி செய்வது, கிசான் கார்டுகளை மீன் மற்றும் கால்நடை விவசாயிகளுக்கும் அளிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் ‘பத்மாவதி’ திரைப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, வட மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

என்றாலும், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை என்றால், அரசாங்கமே குறைந்த பட்ச விலையைக் கொடுக்க முன் வர வேண்டும் என்று, விவசாய விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அறிவித்திருப்பதும் புறக்கணிப்பதற்கு இல்லை. என்றாலும், விவசாயிகள் நலன் என்பது, இரண்டாவது வியூகமாக இருக்கிறது.  

அடுத்து, 2022 ஆம் வருடத்துக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என்ற வீட்டுத் திட்டம் மக்கள் மனதைத் தொடும் ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது. 

ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு, வீடுகட்டும் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம், மானியங்கள் வழங்கி வருகிறது. என்றாலும், இது மத்திய அரசாங்கத்தின் பிரத்தியேகத் திட்டமாக இருப்பதால், வாக்காளர் மத்தியில் வரவேற்பு கிடைக்கக்கூடும். 

இதேமாதிரியொரு திட்டத்தைத் தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது, ‘கலைஞர் வீட்டு வசதித் திட்டம்’ என்றே அறிவித்து, 2016இல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த அவர், அதற்குப் பிறகும் வீடுகள் வழங்குவதற்கான ‘டோக்கன்களை’ அளித்தார். ஆகவே, வீடு வழங்கும் திட்டம், நிச்சயம் மூன்றாவது பிரசார வியூகம் என்றே கருத வேண்டும். ஆகவே, பா.ஜ.க அடுத்து வரும் 2019 தேர்தலுக்கான மூன்று பிரசார வியூகங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் முன் வைத்திருக்கிறது. 

இந்த வியூகங்கள், பா.ஜ.கவுக்கு வெற்றி வாகை சூடுமா என்பதுதான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி. தேர்தலுக்கு முன்பு வரும் நிதி நிலை அறிக்கை, தேர்தலை மனதில் வைத்தே இருக்கும் என்பது இதுவரை எழுதப்படாத விதி. என்றாலும், இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டில், தேர்தல் கால சலுகைகள், நிதிநிலைப் பற்றாக்குறையை சமாளிக்கும் வியூகங்கள் என்று ‘கத்தி மேல் நடப்பது போல்’ நிதியமைச்சர் அருண்ஜேட்லி நடந்துள்ளார். 

ஆகவே, நான்கு வருடங்களாக ‘சூட் பூட் சர்க்கார்’ என்று இருந்த இமேஜை மாற்றி, இது ஏழைகளுக்கான ‘சர்க்கார்’ என்ற செய்தியை வாக்காளர்களுக்குக் கொண்டு செல்ல முயன்று இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. 

இந்த முயற்சி பலனளிக்குமா என்பது அறிவிப்புகள் எந்த அளவுக்கு உறுதியுடன் செயல்படுத்தப்படுகின்றன என்பதை வைத்தே அமையும்.  

பா.ஜ.கவின் வியூகம், நிதிநிலை அறிக்கை மூலமிருக்க, காங்கிரஸ் கட்சியின் சார்பிலோ அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் செயலில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தினத்திலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறார், சோனியா காந்தி. 

பா.ஜ.கவை வருகின்ற தேர்தலில் எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லை என்ற கருத்துப் பரவலாகச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, “காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை” என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  உயர்மட்டக் கூட்டத்தில் ‘வரைவு தீர்மானம்’ உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கருத்து மேலும் வலுப்பெறுகிறது. 

அதற்கு அடுத்தாற்போல், மஹாராஷ்டிரா மாநிலத் தலைவர் சரத்பவார், எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியது. ராகுல் காந்தி, காங்கிரஸின் தலைவராகியுள்ள நிலையில், தேசிய வாதக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு, ராகுல் தலைமையில் பா.ஜ.கவை எதிர்க்க விருப்பமில்லை என்ற தோற்றத்தை உருவாக்கியது. 

இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி, பா.ஜ.கவுக்கு எதிராக அமைக்க முடியும் என்ற செய்தி சொல்லவே, சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தைக் கூட்டினார். 17 கட்சித் தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நாமெல்லாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

இதன் மூலம் பா.ஜ.கவுக்கு எதிரான, தேசிய அளவிலான எதிரணிக்கு, நான்தான் தலைவராக இருப்பேன்; ராகுல் காந்தி அல்ல என்ற செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் மூன்றிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கின்ற தினத்தில் நடைபெற்ற இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் முயற்சி. 

இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், சோனியா காந்தி தலைமையில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திரமோடிக்குத் தேர்தல் களம் தயாராகி விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் இருந்த மஹாராஷ்டிரா சிவசேனா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். 

ஆகவே, சோனியா தலைமையில் ஒரு வலுவான எதிர்க்கட்சிகள் நிரம்பிய அணியை உருவாக்க காங்கிரஸ் கட்சி, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிகிறது.  

நிதி நிலை அறிக்கையில் மூன்று முக்கிய பிரசார வியூகங்களை வைத்து, பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக எப்போது தேர்தல் வந்தாலும் வாய்ப்புக் கோருவோம் என்று பிரதமர் மோடி கணக்குப் போட்டிருக்கிறார். அதே வேகத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒற்றுமையான ஓர் அணியை உருவாக்கி, பா.ஜ.கவின் கடந்த கால மதவாத அரசியலை முன்னெடுத்துச் செல்லவும் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். 

ஆகவே, நிதிநிலை அறிக்கை என எதிர்க்கட்சிகள் தலைமையில் வலுவான அணி என்ற 2019 நாடாளுமன்றத் தேர்தல் திசையை நோக்கி, இந்திய அரசியல் படு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 

‘நம்மிடம் வரட்டும். அப்போது யார் பிரதமர் என்று முடிவு செய்வோம்’ என இந்திய வாக்காளர்களும் தனிக் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 


2019 நாடாளுமன்றத் தேர்தல்: மோடி கணக்கும் சோனியா கணக்கும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.