‘உங்களுடைய ஆசைக்கு இடையூறாக இருக்கமாட்டேன்’

-அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடித்திருந்தாலும், சரசவிய விருது வழங்கும் விழாவே, காதோடு காதுவைத்தாற் போல பேசப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுடன், திருப்பதி கோவிலுக்கு கடந்த 2ஆம் திகதியன்று சென்று, விசேடபூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அங்கிருந்து விசேட ​ஹெலி​கொப்டரின் மூலமாக, சென்னைக்குத் திரும்பிய அவர், அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கவை வந்தடைந்தார். 

அதன்பின்னர், பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், 3ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விருதுவழங்கும் விழாவில், பிரதம அதிதியாகவும் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.  

இலங்கையின் பிரபலமான இந்திய நடிகையான பூஜா உமாசங்கருக்கும், இந்த விருதுவழங்கும் விழாவின் போது, பிரதமரின் கைகளால் விருதுவழங்கப்பட்டது.  

அந்த விருதுவழங்கும் விழாவில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டொன்று, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருந்தது. அதற்கடுத்த இரண்டு நாள்களும் விடுமுறை தினங்கள் என்பதால், அவ்விரண்டு புகைப்படங்களின் மீதிருந்த ​விமர்சனங்கள் மற்றும் எதிர்மறையான கருத்துகள் யாவும், என்றுமில்லாத வகையில் அதிகரித்திருந்தன.  

அதற்கான வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பிலேயே, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை, பிரதமருக்கு ஏற்பட்டிருந்தது.  

கடந்த 9ஆம் திகதியன்று, பிரதமர் ரணில், நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது, பிரதமர் காரியாலயத்துக்குள் ​அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பிக்கள் பலரும் கூடியிருந்தனர்.  

“குற்றவியல் கருமங்களின் பரஸ்பர உதவியளித்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குச் சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், எங்களைச் சேர்ந்த பலரும் சபையில் பிரசன்னமாய் இருக்கவில்லை. இது பாரிய தவறாகும். சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, சூட்சுமமான முறையில் ஒத்திவைக்கவில்லையெனில், சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்” என, அங்கிருந்தவர்கள் எடுத்துரைத்தனர். 

லக்ஷ்மனின் செய்பாட்டுக்கு பிரதமர் ரணில், இதன்போது நன்றி தெரிவித்தார். அதனையடுத்தே, அன்றையதினம் சபைக்கு வருகைதராமல் இருந்த, அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களின் விவரங்களை, பிரதமர் காரியாலயத்துக்கு அனுப்பிவைக்குமாறு, சபை முதல்வர் காரியாலயத்துக்குப் பணிக்கப்பட்டுள்ளது.  

“அதுமட்டுமா, 100 நாள்கள் அரசாங்கத்தில், நிதிச் சட்டமூல வாக்கெடுப்பின் போது, அரசாங்கம் தோல்வியைத் தழுவிக்கொள்ளவிருந்த வேளையில், எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவருக்கு, கையால் சமிக்ஞை காண்பித்த கிரியெல்ல, ஆசனங்களிலிருந்து அவர்களை எழும்பச்செய்து, சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற்று, அரசாங்கத்தை அன்று காப்பாற்றினார்” என, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நினைவுபடுத்தினார்.  

சஜித்தின் நினைவூட்டலுக்கு கிரியெல்ல நன்றி தெரிவித்துக்கொண்டார்.  

அதன்போது அவ்விடத்திலிருந்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரத்தை, ஐக்கிய தேசியக் கட்சி, முதன்முதலாக எதிர்க்காவிடின், மக்கள் எங்களுடைய தலையிலேயே அந்த விவகாரத்தையும் சுமத்தியிருப்பர்” என்றார்.  

“ஆம், ஆம், அந்தப் பிரச்சினையை மிகவும் ஆழமாகப் பார்க்கவேண்டும். 2006ஆம் ஆண்டு, ராஜபக்‌ஷ ஆட்சியின் போது, அமைச்சர் ஜெயராஜின் ஊடாக, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும் போது, அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் சம்பளமும் அதிகரிக்கப்படவேண்டுமென, கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது” என்றார் லக்ஷ்மன் கிரியெல்ல.  

இதற்கிடையில், சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய படம் தொடர்பில், அங்கிருந்தவர்கள் ஏதேதோ முணுமுணுத்தனர். அதுவரையிலும் அமைதியாக இருந்து, செவிசாய்த்துக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  

இந்திய நடிகை பூஜா உமாசங்கரைக் கட்டியணைத்த விவகாரத்தை, விளக்கமாகத் தெளிவுபடுத்தினார். அப்போது, அவ்விடத்திலிருந்த அனைவரும் மிகவும் அமைதியாக இருந்து, பிரதமரின் குரலுக்கு மட்டுமே, தங்களுடைய காதுகளைக் கொடுத்தனர்.  

சிறிது புன்முறுவல் பூத்த பிரதமர், “உங்களை கட்டியணைப்பதற்கு எனக்கு ஆசை, உங்களைக் கட்டியணைக்கவா?” என பூ​ஜா கேட்டார்.  

“உங்களுடைய ஆசைக்கு, நான் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டேன். நான், உங்களை இன்னும் தைரியமூட்டுவேன் என நான் தெரிவித்தேன்” என்றார் பிரதமர்.  

“அணைப்புக் கிடைத்தது. பதில் அணைப்புக் கொடுத்தேன், அவற்றுக்கு மத்தியில், இருவருக்கும் நல்ல கைதட்டல்கள் கிடைத்தன. அவையாவும் சமூக வலைத்தளங்களுக்குத் தீனிபோட்டுவிட்டன” எனக்கூறி அவ்விடத்திலிருந்து பிரதமர் சென்றுவிட்டார்.   


‘உங்களுடைய ஆசைக்கு இடையூறாக இருக்கமாட்டேன்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.