2025 ஜூலை 12, சனிக்கிழமை

எம்.பிக்களின் சொத்து விவரங்களை வெளியிட மறுத்தது பாராளுமன்றம்

Nirosh   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்
பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை எனத் தெரிவித்த பாராளுமன்றம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தகவலறியும் விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களைக் கோரி, கடந்த வருடம் செப்டெம்பர் 28ஆம் திகதியன்று, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பாராளுமன்றத்திடம் தமிழ்மிரர் தகவல் கோரி விண்ணப்பித்திருந்தது. 

இதற்கு பதிலளித்துள்ள பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் பாராளுமன்றத் தகவல்கள் உத்தியோகத்தருமான டிக்கிரி கே.ஜயதிலக்க, 1975இன் 1ஆம் இலக்கச் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்துகை சட்டத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் உள்ள சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்தியுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரைத் தவிர, அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்துகை, பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்குச் செய்யப்படுதல் வேண்டுமெனவும் எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களைப் வெளிப்படுத்தவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம், சபாநாயகரும் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்,  வெவ்வேறாகவும் சுயாதீனமாகவும், தங்களுடைய அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1975ஆம் ஆண்டு 1ஆம் இலக்கச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகை சட்டத்தின் 5 (3) பிரிவிலுள்ள ஏற்பாடுகளின்படி, சபாநாயகருக்கு முறையான ஒரு கோரலை விடுப்பதனூடாக மாத்திரமே, பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .