2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

’கட்டை சம்பலுக்கு பிட்டு சுவை புரியாது’

Editorial   / 2020 நவம்பர் 24 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டை சம்பல் சாப்பிடும் யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரசாத் பெர்ணான்டோவுக்கு, தமிழ் மக்களின் பாரம்பரிய உணவு தொடர்பில் தெரியாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், இது விவகாரத்தில், மட்டுவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு தொடர்ந்துரையாற்றிய அவர், “பிட்டு என்பது, தமிழர்களின் வாழ்வில் பாரம்பரிய தேசிய உணவாக இருந்து வருகிறது. இதனை அவமதிக்கும் வகையில், யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கருத்துத் தெரிவித்திருந்தார். இதுவொரு தவறானக் கருத்து. அவரின் மனநிலையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

“தமிழர்களின் பாராம்பரியம் பற்றி, கட்டை சம்பல் சாப்பிட்ட பிரசாத் பெர்ணான்டோவுக்குத் தெரியாது. அவரின் முதுகை அவர் தடவிப்பார்த்தால், பாண்டிய மன்னனின் அடி அவருக்குத் தெரியும்.

“தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் தொடர்பில், அப்போதைய கெப்டன் கொத்தலாவல உள்ளிட்டவர்களுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றப் பேச்சுவார்த்தையின் போது, தயிர் வடையே உணவாக வழங்கப்பட்டிருந்தது. அதன் ருசியை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

“நாம் சிங்கள மக்களை மத்திக்கிறோம். அவர்களின் கலாசாரப் பண்பாட்டை மதிக்கிறோம். அவ்வாறிருக்கையில், தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரத்தை ஏன் வேண்டா வெறுப்புடன் பார்க்கறீர்கள்?

“இது விடயத்தில், மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரும், அவரது குடும்பத்தினரும், தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். ஊடகவியலாளர்கள் அடக்கப்படுவது ஜனநாயக நாட்டுக்குரிய பண்பல்ல. இது தொடர்பில் செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுக்கும் பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, ஓர் அரச நிறுவனம் என்பதால், அரசாங்கத்துக்குச் சார்பாகவே செயற்படுகிறது” எனவும், சிறிதரன் எம்.பி சாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .