Kogilavani / 2021 மே 03 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனித் தமிழ் தொகுதி அல்லது முஸ்லிம் தொகுதி என்ற அடிப்படையிலான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சவாலை வெற்றிகொள்ள முடியாதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இத்தேர்தல் முறைமை மாற்றத்தில், தமிழ்ப் பேசும் சிறுபான்மைச் சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது என்றார்.
இன்று இந்த நாட்டில், புதிய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருக்கின்ற நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முறைமையாக மட்டும் இதனை நோக்க முடியாது என்றும் மாகாண சபை தேர்தலுடன், இனி வரும் பொது த் தேர்தலுக்கான தேர்தல் முறைமையும் இதனுடன் தொடர்புபடுகின்றது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இத்தேர்தல் முறைமை மாற்றத்தில், தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. மறுபக்கம், பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள நாட்டின் சிறு கட்சிகளும், அதே சவாலுக்கு உள்ளாகின்றன.
“தேர்தல் முறைமை தொடர்பாகப் பேசுகின்ற போது, அடிப்படையில் மூன்று முறைமைகளை எடுத்துக்காட்டலாம். தொகுதிவாரியான முறைமை, விகிதாசார முறைமை மற்றும் கலப்புத் தேர்தல் முறைமை. இவற்றில், பல்லினங்கள் வாழ்கின்ற நாடுகளில், அதுவும் செறிந்து அல்லாது பரந்து வாழுகின்ற போது, விகிதாசார தேர்தல் முறைமையே அனைத்துச் சமூகங்களினதும் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும்.
“அத்தகைய ஜனநாயக விழுமியம் கொண்ட அனைத்துச் சமூகங்களுக்கும், அதே போன்று பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் விகிதாசார முறைமையே இன்று நடைமுறையில் உள்ளது. இதனுடைய மாற்றம், ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தல்களுக்கு தடையான ஒன்றாக அமைவதற்கு இடமளிக்க கூடாது.
“நடந்து முடித்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல், கலப்பு முறைமையில் தொகுதிவாரியாக 60%, விகிதாசார அடிப்படையில் 40% என்ற அடிப்படையில் நடைபெற்றது. இன்று, மாகாண சபைத் தேர்தலுக்கு, அதே அடிப்படையில் 70%க்கு 30% என்பது முன்மொழியப்பட்டிருக்கின்றது. இதனை, பல பெரும்பான்மைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டும் இருக்கின்றன. ஆனாலும், இத்தகைய ஒரு முறையிலே ஏற்படும் விளைவுகள் தொடர்பாகப் பெரும்பான்மைக் கட்சிகள் இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
“இச்சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விகிதாசார தேர்தல் முறைமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, கோட்பாட்டு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், தமிழ் முற்போக்கு கூட்டணியானது, அதன் தலைவர் மனோ கணேசன் தலைமையில், விகிதாசார தேர்தலை, வளைய முறையில் (Zonal System) நடத்துவதற்குரிய முன்மொழிவுகளை செய்திருக்கின்றது. இம்முறை இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது.
“எனவே, குறுகிய வட்டத்துக்குள் இருந்து, இன ரீதியான அடிப்படைகளை மையப்படுத்தி, எம்மை நாமே ஓரங்கட்டிக்கொள்ளக் கூடாது. மாறாக, முழு நாட்டினதும் நலனை அடிப்படையாகக் கொண்டு, அதிலே தமிழ் பேசும் சமூகத்தினது அரசியல் பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, பெரும்பான்மைச் சமூகம் சார்ந்த பெரிய கட்சிகள் போலவே சிறிய கட்சிகளையும் நாம் சரியான முறையில் அணுக வேண்டியுள்ளது. இந்நிலைமையைச் சரியான முறையில் உணர்ந்து, தமிழ் முற்போக்குக் கூட்டணி தனது நகர்வுகளைக் கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றது. இதனைப் புரிந்துகொண்டு, குறுகிய வட்டத்தில் இருந்து விடுபட்டு, பரந்த அடிப்படையில் நோக்கி, புதிய தேர்தல் முறைமை தொடர்பான முன்மொழிவுகளைச் செய்யவும் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்” என, வேலுகுமார் எம்.பி மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .